Advertisement

நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் இன்று உலகக் குடும்பதினம்

உலகம் மிகப்பெரிய உறவுக்கூடம். அன்பின் ஆலயம். தனியே பிறந்த நாம் குடும்ப உறவு
களோடு சமூகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வலியோடும் வலிமையோடும் வாழக் கற்றுத் தரும் பல்கலைக்கழகமாகக் குடும்பம் இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

நாகரிகத்தின் போக்கில் போவதாய் உலகம் நினைத்துக் கொண்டு நிம்மதியை இழந்து மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாளில்தமிழகத்தின் குடும்பங்களில் நிறைவு தவழ்ந்து கொண்டுஇருக்கிறது. பாதைகளற்ற பயணத்தில் அனுபவங்களே பாதங்கள். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா போன்ற உறவுகள் பயணித்த பாதையில் அவர்களின் பாதச் சுவடுகளை அடியொற்றி நாம் நடத்தும் இந்த வாழ்க்கைப்பயணம் எவ்வளவு சுவாரஸ்யமானது! திருக்கடையூரில் எண்பதுவயதுத் தாத்தாவுக்கும் எழுப்பத்தைந்து வயதுப் பாட்டிக்கும் பேரன் பேத்திகள் சூழ எண்பதுக்கு எண்பது நடைபெறுவதை உலகில் வேறு எந்தப் பகுதியில் காணமுடியும்?

உறவுகளின் உன்னதம்ஒரு குறிப்பட்ட வயதில் நாம் வாழ்ந்த வாழ்வைத் திரும்பிப் பார்க்கிறபோது நிறைவாயிருந்தால் நாம் வாழ்ந்தது சொர்க்கத்தில் அல்லவா?குடும்பம் அனைவருக்கும் நிழல் தரும் ஆலமரம் மட்டுமன்று. ஆண்டாண்டு காலமாய் நீண்ட மரபுகளைத் தாங்கும் காலமரமும் கூட. நாம் தரும் அஞ்சையும் பத்தையும் அஞ்சறைப் பெட்டியில் போட்டு வைத்து பள்ளிகள் திறக்கும் ஜூன் மாதத்தில் பண நெருக்கடியில்இருக்கும்போது பெருந்தொகையைத் தந்துதவும் அம்மா வாழ்க்கை முழுக்கச் சைக்கிளில் பயணித்து நம் தேவைகளுக்காகத் தன் தேவைகளைச் சுருக்கித் தியாகவாழ்வு வாழ்ந்த அப்பா இவர்களை எல்லாம் விட்டுவிட்டுக் கரன்சி
கட்டுகளுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோமே! உறவாயில்லை, பரவாயில்லை என்ற குரல்கள் சமீபகாலமாய் குடும்பங்களில் மிகுந்துள்ளன.

நல்ல குடும்பத்தின் அழகு குடுமிப்பிடிச் சண்டையன்று; குடும்ப ஒற்றுமை குலையும்போது அமைதியிழக்கிறோம். சோப்புக்குமிழிகளைப்போல் காப்பில்லாமல் உடைகிறோம். ஈகோ குடும்பங்களுக்குள் விழுந்து மனித உறவுகளைச் சீரழிக்கிறது.

மாறும் மரபுகள்
பெரியவர்களை மதித்தல் எனும் உன்னதமரபு நம்மைவிட்டுக் கொஞ்சம்கொஞ்சமாய் அப்பால் போய்க்கொண்டிருக்கிறது. விட்டுப்போன மரபுகளால் கெட்டுப்போகலாமா இந்தச் சமூகம்? கடலுக்குள் மறைந்துஇருக்கும் கல்லுப்பு மாதிரி நம் இனிய உறவுகளுக்குள் மறைந்திருக்கிறது உற்சாகமெனும் நீரூற்று. அதைச் சிறிதுசிறிதாய் நாம் தொலைக்க எப்படிச் சம்மதித்தோம்?
இருப்பின் மீது வெறுப்பின் வெந்நீரை ஊற்றுவது ஏன்?

வாழ்வும் தாழ்வும்நல்லதும் கெட்டதுமாய் இணைந்து நகரும் நாட்களில் யாவும் இன்பமா? அல்லது யாவும் துன்பமா? இரண்டையும் இணைத்தே வாழ்வு நமக்கு வரத்தை வழங்குகிறது. வாழ்வும் தாழ்வும் எல்லோர் வாழ்விலும் வருவதுதான் என்று கற்றுத்தருவதே குடும்ப அமைப்புதானே! இன்பதுன்பங்களைச் சரிசமமாய் கருதும் மனதை குடும்ப அமைப்பே நமக்குக் கற்றுத் தருகிறது. கசப்பும் ஓர் சுவைதான் என்று உணர்ந்தவன் வாழ்வின் சுவையை ரசித்துருசிக்கிறான். நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தால் நடக்க இருப்பதை யார் வழிநடத்துவது? கீறிய ரப்பர் மரங்
களிலிருந்து வடியும் ரப்பர் பால் போல் சிலர்கூறிய சொற்களும் மனமரத்தில் பீறிட்டு வடியத்தான் செய்கின்றன. காலம் தந்த காயங் களைக் காலம் முழுக்க நினைப்பதில் அர்த்தமென்ன? மறப்பதும் மன்னிப்பதும் நல்ல குடும்பத்திற்கு மேலும் அழகூட்டும்.

அன்பு இருந்தால்தாத்தா வேட்டியில், கூழ்வத்தல் ஊற்றி,வெயிலைக் கூட வேண்டிய விருந்தாளியாக்க, நம் பாட்டிகளாலேயே முடியும்! நிரம்பிய குளத்திற்கு நிறைய பறவைகள் வருவதைப் போல அன்பாயிருப்போருக்கு அருகில்தான் அனைவருக்கும் இருக்கப் பிடிக்கிறது. நம் பேரன்பு தெரிவதில்லை, பெரும்பாலும் நாம் பேரன்பு வைத்து இருப்போருக்கு. ஆனாலும் அன்பாய் இருப்போம் அனைவர் மீதும்! சுடுசொற்களை யார் மீதும் பாய்ச்சாதிருந்தால் உறவுகள் இனிக்கும். குடும்பம் சிறக்கும். செல்வத்தின் பின் செல்வதே வாழ்வெனத் தவறாகப் புரிந்துஇருக்கிறோம். எல்லாவற்றையும் பணத்தின் கண்களால் பார்ப்பது குடும்ப அமைப்பின் நிம்மதியைக் குலைத்துவிடும்.

உறவுகளை பேணுவோம்இளநீர்க்காய்களை வீசிச் சீவுகிறவரின் நுண்கவனத்தோடே வாழ்வின் நிமிடங்களை நகர்த்த வேண்டியுள்ளது.ஆம்.நம் நாவைக் காக்காமல் நாம் பேசும் சிலசொற்கள் குடும்ப அமைப்பின் ஆணிவேரையே அறுத்தெறிந்துவிடலாம். பிறவினைகளைவிடப் பிரிவினைகள் கொடியன.
கண்ணாடி உடைவது மாதிரிக் கண் எதிரே குடும்ப உறவுகள் உடைவது நல்லதா? தளர்ச்சியிலும் கிளர்ச்சியிலும் இல்லை வாழ்வு; குடும்ப மலர்ச்சியிலும் உறவின் வளர்ச்சியிலும் உள்ளது.

பறவைகளைப் போலிருந்தால் பாசம் வரும் வாழ்வின் மீது. நம்மைப் போல் ஆறறிவு இல்லை பறவைகளுக்கு ஆனாலும் தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவதற்குத் தானியங்களோடும் தாய்மையோடும் பயணிக்கத்தான் செய்கின்றன.

மனம்விட்டுப் பேசலாமேநாம் பொறுப்பாயிருக்கிறவரை எதன்மீதும் வெறுப்பே வராது. ஒருமாதிரியாய் வாழ்வதும் முன்
மாதிரியாய் வாழ்வதும் நம் கையில்தான் உள்ளது. நம் குடும்பத்தில் உள்ளவர்களே நம்மை விரும்பாமல் வாழ்வதா வாழ்க்கை? கையில் சவுக்கு வைத்துக்கொண்டு சிங்கங்களை ஆட்டிப் படைப்பவன் போல் செய்யக் குடும்பம் ஒன்றும் சர்க்கஸ் கூடாரம் இல்லை. பேசித்தீர்க்க இயலாதது ஏதும்இல்லை. மிரட்டல்களுக்கும் விரட்டல்களுக்கும் பணிவதல்ல குடும்ப வாழ்க்கை. இவர்கள் இப்படித்தான் என்று முன்முடிவுகளோடு சகமனிதர்களை அணுகுவதால் நம்மால் மனம்விட்டுப் பேசமுடியவில்லை. அதனால் மூடிய அறைக்குள்ளே பாடிய பாடலாய் நம் சோகங்களை நாமே வைத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.

ஒழுங்குஒழுக்கம் குடும்பத்தின் உன்னதத்தை இன்னும் அழகாக்கு கிறது. கணவன் மனைவியின் அன்பு மாசுமறுவற்றது. இந்த இப்பிறவிக்கு எந்த இரு மாதரையும் சிந்தையாலும் தொடேன் என்று வாழ்ந்த ராமபிரான் பிறந்தநாட்டில் ஒழுக்கம் நம்மை இன்னும் நெருக்கமாக்குகிறது.விரும்பாத பயணத்தில் திரும்பாது கால்களும். மனம் விரும்பாத இருவரைக் குடும்பக் கயிறுகளால் வெகுகாலம் பிணைத்து வைக்க முடியாது என்பதைத் தான் விட்டுக்கொடுத்தல் குறைந்துவரும்

இந்நாளில் சமீபகாலமாய் நீதிமன்றங்களில் அதிகரித்திருக்கும் மணமுறிவு வழக்குகள் காட்டு
கின்றன. கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சந்தேகநெடி குடும்ப அமைப்பையே சிதைத்துவிடும். கனியுடைந்து மண்ணில் விழுந்தாலேயொழிய புதுச்செடிதுளிர்க்க இயலாது. அன்பு முன்னே நிற்கும்போது எந்த வேறுபாடும் விலகியோடும்.

பயிற்சிக் கூடம்குடும்பங்கள் சுருங்கிவிட்டன. பத்து இருபது பேர் இருந்த கூட்டு குடும்பங்கள் சிதைந்து இன்று தனிக்குடித்தனங்களாகிச் சுருங்கிவிட்ட நிலையில் குழந்தைகளை முறை யாக வளர்க்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு இருக்கிறது. உறவுகளைப் புரிந்துகொள்ளும் பயிற்சிக் கூடமாகக் குடும்பமே திகழ்கிறது. வழிகாட்டிகளைவிட வாழ்ந்து காட்டிகள் உன்னதமானவர்கள். வலிமையான வாழ்ந்து காட்டிகளாய் எளிமையான நேர்மையான வாழ்வை வாழ்ந்து வாழ்வுப் பக்கத்தில் இடம்பிடித்த பெரியவர்களை அழகிய முன்மாதிரிகளாகக் கொண்டு வாழும் இளையசமுதாயம் இன்னும் பல நல்ல குடும்பங்களை நிச்சயமாய் உருவாக்கும்.

-முனைவர் சௌந்தர மகாதேவன் தமிழ்த்துறைத்தலைவர்

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி

திருநெல்வேலி. 99521 40275

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement