Advertisement

மறப்போம்... மன்னிப்போம்...

'அழுக்காறு அவா வெகுளி
இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்'


பொறாமை, ஆசை, கோபம், தீயசொற்கள் எனும் நான்குகேடுகளை விடுத்தால் அறம்
உருவாகும். அன்பும், பொறுமையும் முகிழ்ந்து அங்கே மறப்போம்,மன்னிப்போம் என்ற உன்னதமான பண்பு உருவாகும். எல்லாசமயங்களும் இப்பண்பையே மனித குலத்தில் உயர் பண்பாக கூறுகிறது. பூமியில் வாழும் பொழுதே நன்மையை செய்து, பொறுமையைக் கடைபிடித்து மன்னிக்கும் மனதை விரிவாக்கிக் கொள்ள வேண்டும் என்று பைபிள் கூறுகிறது.
அறம் என்பது எழுதப்பட்டசட்டங்களில் இல்லை. கூறப்பட்ட மறைகளில் இல்லை. வாழும் வாழ்வின் ஆதாரத்தில் என்று இந்து சமயம் கூறுகிறது. சமயத்தில் மட்டுமல்ல உளவியலும் மறக்கும் தன்மையை பற்றி விளக்கமாக கூறப்பட்டு உள்ளது. மறந்து விடுவதே
என்னுடைய மிகப்பெரிய நினைவுத் திறனாக உள்ளது என்று ராபர்ட் லுாயிஸ் ஸ்டீவன்சன் கூறுகிறார். தீயவற்றை மறக்கும் ஆற்றல், நன்மைக்கு உறவாகும். மறப்போம், மன்னிப்போம் என்ற பண்புக்கு அடித்தளமாக அமைவது அன்பும், கோபமில்லா குணமும் ஆகும்.

அன்பும், பண்பும் : அன்பையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் அறியும் பண்பு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. இறைவன் அனைத்து உயிரிடத்தும், பெற்றோர் பிள்ளைகளிடத்தும், காட்டும் அன்பில் பிழைஇருக்காது. தவறே இழைப்பினும் மறந்து, மன்னித்து விடும் பண்பு
நிறைந்திருக்கும். அன்பு என்னும் அச்சாணியைப் பற்றினால்
மன்னிக்கும் குணம் தானாக வந்தடையும். ஒவ்வொரு குழந்தை யும் முதலில் காணும் உலகம்
பெற்றோர்கள். பெற்றோர்களிடம் இருந்து ஆதார பண்புகளை கண்டு அறிந்து கொள்கிறது. ஆகையால் பெற்றோரே குழந்தைகளுக்கு அன்பு எனும் காற்றை சுவாசிக்க கற்றுத்தர வேண்டும்.

வாழ்வு புகட்டும் பாடம் : இளவயதில் பெண்ணுக்கும், ஆணுக்கும் மணமுறிவு ஏற்பட்டு குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துவிடுகிறார்கள். அச்சிறு குழந்தை துணியை கூட துவைக்க தெரியாத வயதில்தன்னுடைய துணியை துவைத்து முள்வேலியில் காயப்போடுகிறது. முள்வேலியில் துணியை காயப்போட்டால் துணியும் கிழிந்து, கையும் கீறப்பட்டு ரத்தம் வரும் என்று அறியாத வயது. அந்த பிஞ்சு உள்ளத்தில், நஞ்சை விதைத்தால், நற்பண்பு என்ற பயிர் எப்படி விளையும். பெற்றோர்கள் எண்ணச்சிதறல்களால் பிரியும் எண்ணத்தை விட்டு மறப்போம், மன்னிப்போம் என்னும் பண்பை முன்னுறுத்தினால், நல்ல சமுதாயத்தை
உருவாக்கலாம். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறுவது போல், உயிர்களுக்கு உருகும் உள்ளம் இருந்தால், அங்கே ஊற்றுக் கண்ணாய் அன்பு சுரக்கும். அன்பு இருந்தால் உறவுகளுக்கு உள்ளே பேதம் இருந்தாலும், விவாதமின்றி அரவணைத்து போகும் எண்ணம் ஏற்படும். விரிசல்கள் தோன்றினாலும் அன்பு பிரிந்து செல்லாமல் இருக்க துணை புரியும்.அன்பு வேற்றுமையை வேறுபடுத்தி ஒற்றுமையை பலப்படுத்தி வாழ்வில் அல்லல்களை மறந்து, மன்னிக்கும் குணத்தை விரிவுபடுத்தும். இறைவனுக்கு கண் அளித்தவன் கண்ணப்பன். அதற்கு மேல் கடவுளையே யாசிக்கவைத்தவன் கொடைவள்ளல் கர்ணன்.

மன்னிக்கும் பண்பு : பிறப்பிலே சூர்யவம்சம்,வளர்ப்பிலே தேரோட்டியின் மகன் கர்ணன். மகாபாரத யுத்தத்தின் போது பிறப்பிலேயே தாய்முகம் அறியாத கர்ணன், ஆற்றிலே விட்டு சென்ற தன் தாய் குந்திதேவி கேட்ட வரத்தை மறுக்காமல் அளித்து பலமாகவும் வரமாகவும் வந்த
குண்டலத்தையும் சூரியன் பொறித்த உடலோடு ஒட்டிய கவசத்தையும் யாசிக்க வந்தது இறைவனே என்பதை அறிந்தும் அனைத்தையும் கொடுத்தான். தன் நண்பணுக்காக நல்லுயிரையும் ஈந்தான். கர்ணனின் மன்னிக்கும் பண்பே அனைவரின் உள்ளத்திலும் மலையென உயர்ந்து நிற்கிறது.அன்பு என்ற பண்பால்,மன்னிக்கும் குணம் வளர்கிறது.முக்கியமாக கூட்டுக்குடும்பங்களில் நீதிக்கதைகள் பெரியவர்களால், குழந்தைகளுக்கு கூறப்பட்டுநல்லெண்ணங்கள் ஏற்படுத்தப்படுகிறது. காலத்தின் சூழலால்உருவாக்கப்பட்ட தனிக்குடும்பத்தில் மனித நேயம் சுருங்கி, எண்ணங்கள் குறுகி உறவுகள் குறைந்து தான் எனும் எண்ணப் போக்கு விரிந்து மறப்போம், மன்னிப்போம் என்ற எண்ணம் குறைந்து விட்டது.

'வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அணைய துயர்வு'


வெள்ளத்தின் அளவுப் படி மலர் உயர்வது போல, மனிதனின் உள்ளத்தில் தோன்றும் நல்ல
எண்ணத்தின் அடிப்படையில் உயர்வு பெறுகிறான். உண்மை நெறியை கடைபிடித்த மெய்பொருள்நாயனாரை அறத்திலும், வீரத்திலும் வெல்லுவது இயலாத காரியம் என நினைத்த குறுமன்னன் முத்த நாதன் மெய்யடியார் போல வேடம் பூண்டுபுத்தகத்தில் மறைத்து வைத்து
இருந்த உடைவாளால் கொலை செய்கிறான். முகத்தநாதனை வீழ்த்த வந்த மெயக்காவலாளி தத்தனை தடுத்து தத்தாநமர் என்று கூறி பாதுகாப்பாக எல்லையில் கொண்டு சேர்க்க சொல்கிறார் மெய்பொருள் நாயனார். இதுபோன்ற அறத்தை கூறும் கதைகளை கூறுவதன் மூலம் மறப்போம் மன்னிப்போம் என்ற குணத்தை குழந்தையிலேயே கொண்டு சேர்க்க வேண்டும்.
மன்னிப்பு கேட்ட மாமனிதர் ஆண்டனிராய் என்பவர்அமெரிக்காவின் பிர்மின்ஹாமில் வசித்து வந்தார். அவர் ஒரு நாள் வீட்டுக்கு அருகில் உள்ள உணவு விடுதிக்கு சென்றார். திடீரென்று நடந்த கொலை சம்பவத்தில் உணவு விடுதியில் இருந்த அவரை சம்பந்தப்படுத்தி 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. பிரையன் ஸ்டீவன்சன் என்பவர் ஆண்டனியை நிரபராதி என நிரூபிக்க 30 ஆண்டுகள் போராடி இரண்டு மாதங்களுக்கு முன்பு விடுதலை வாங்கி
கொடுத்து உள்ளார். குற்றமற்றவர் முப்பதாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதை கேள்விப்பட்ட பேஸ்புக் நிறுவனர் மார்க்சுகர் பெர்க், இதில் சம்பந்தமே படாத அவர் மனம் வருந்தி நீதித்துறை இழைத்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டு உள்ளம் உருகி தன்னால் முடிந்த உதவியை செய்வதாக உறுதிஅளித்துள்ளார். செய்த தவறை சொல்லி காட்டுவதால் பயன் இல்லை. மன்னித்து உறவுக்கு கை கொடுத்தால் இன்னல் இன்றி வாழ்வு இனிமையாக செல்லும்.

சினம் தரும் சிக்கல் : கோபம் கொண்டு கூறும் வார்த்தைகளே பல சிக்கல்களை உருவாக்கும்.

'சொல்லுக சொல்லிற் பயனுடைய; சொல்லற்க
சொல்லில் பயனில்லாச் சொல்'

பயனில்லா சொல்லால் மிகச்சிறிய கடுகு போன்ற நிகழ்வு கூட, பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி குடும்ப உறவு,சமுதாய உறவுஅனைத்தையும் பாழ்படுத்தி விடும். உதடு எனும் கதவை, தேவையின்றி திறக்காமல் இருந்தால் பலஇன்னல்களிலிருந்து விடுபடலாம்.சகுனி, கூனி இருவருக்கும் மறப்போம் மன்னிப்போம் என்ற நற்குணங்கள் இல்லாமையாலும், பயனில்லா சொற்களைகூறியதாலும் இரு மாபெரும் யுத்தங்கள் ஏற்பட்டது.இன்றைய தலைமுறையினரை நற்பண்புகளோடு நடத்தி செல்லும் பொறுப்பு பெற்றவர்கள்,ஆசிரியர்கள், சமுதாயம் என அனைவரையும் சார்ந்துள்ளது. அவர்களிடம் அன்பை வளர்த்து சினத்தை நீக்கும் பண்பை உருவாக்கினால் அதுவே அவர்களை மறப்போம், மன்னிப்போம் எனும் பண்புக்கு எடுத்து செல்லும்.

மனத்து விளக்கினை மான்பட ஏற்றிச்
சினத்து விளக்கினை செல்ல நெருங்கி
அனைத்து விளக்கும் திரி ஒக்கத்துாண்ட
மனத்து விளக்கது மாயாவிளக்கே


திருமூலர் மனதில் உள்ளேவுள்ள மங்கல விளக்கு ஒளி பெற சினம் எனும் நெருப்பை விரட்ட வேண்டும் என்றார். காலச்சூழல், இடச்சூழல், புறச்சூழல் என பல சூழல்களினால் மனதில் பல இன்னல்கள் தோன்றினாலும் அன்பு எனும் குணம் விரிந்தால் போதும் மறப்போம் மன்னிப்போம் என்ற பண்பு மலரும்.மலரில் மணமும், காற்றின் அசைவும், பாலில் நெய்யும், கரும்பில் இனிமையும், பாடலில் பண்ணும், உறவில் வாழ்வும் போல மறப்பதில் மன்னிப்பும் அடங்கியுள்ளது.

- முனைவர் ச.சுடர்க்கொடி
கல்வியாளர், காரைக்குடி
94433 63865

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    நல்லதொரு அறிவுரை .... அறவுரை என்றே கூறலாம் ..... முனைவருக்கு நன்றிகள் பல ......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement