Advertisement

பறந்து வாருங்கள்...பறவைகளே! இன்று சர்வதேச வலசை பறவைகள் தினம்

இவ்வுலகில் சிறகுடையபிராணிகள் பறவைகள் மட்டுமே. நமது கட்டைவிரல் பருமன் உடைய டகங்காரப் பறவை முதல் குதிரை அளவு உயரம் கொண்ட நெருப்புக் கோழி முதல் பறவை இனங்களில் அடங்கும். இந்தியாவில் ஆயிரத்து 263 பறவை இனங்கள் இது
வரைக்கும் பதிவு செய்யப்பட்டுஉள்ளன. அவற்றில் சுமார் 300 பறவை இனங்கள் வேற்றுப் புவி பிரதேசங்களிலிருந்து வலசை வருபவைகள். வலசை என்பது ஒருஇடத்திலிருந்து மற்றொருஇடத்திற்கு இடம்பெயர்ந்து
செல்வது ஆகும். தமிழ்நாட்டில் இதுவரை 520 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவைகளில் சுமார் 160 பறவை இனங்கள் வலசை வருபவைகள். பறவைகள் வலசை வருவதை பல நுாற்றாண்டுகள் முன்பாகவே நம் தமிழர்கள் கண்டறிந்துள்ளதை சத்தி முத்துப் புலவரின் நாரை விடு துாது பாடல் மூலம் அறிகிறோம்.
பறவைகளின் வலசை என்பது ஒரு அசாதாரணமான செயல், இயற்கையுடன் நடைபெறும் ஒரு வாழ்க்கைப் போராட்டம். பரந்த கடல்களுக்கு மேலும் வானுயர்ந்த மலைச் சிகரங்களுக்கு உயரேயும், கடும் புயல் மற்றும் மழை என பல தடைகளைக் கடந்து பறந்து
குறிப்பிட்ட இடத்தை வந்தடைவதென்பது அசாத்தியமானது. பறவைகள் வலசை வருவதற்கு முன் இரைகளை மிக அதிகம் உட்கொண்டு தன் உடலில் ஓரடுக்கு கொழுப்பைச் சேர்த்து வைத்து நெடுந்தொலைவு பயணத்தை மேற்கொள்கிறது. சில இனப்
பறவைகள் தாங்கள் வலசை மேற்கொள்வதற்கு முன்னால் பறந்து ஒத்திகை பார்த்துக்கொள்கிறது. இளம் பறவைகளும் முதல்
முறையாக பெரிய பறவைகளுடன் சேர்ந்து வலசையில் ஈடுபடும் அதற்கு இவ்வொத்திகை கை கொடுக்கும்.

பறவைகள் வலசைபோவது ஏன்வலசை போதல் பல்வேறு காரணிகளோடு சம்பந்தப்பட்ட சிக்கலான நிகழ்வாக கருதப்பட்டாலும் உணவு கிடைக்கும் தன்மையே முதன்மைப்படுத்தப்படுகிறது. கூளைக்கிடா மற்றும் கொக்கினங்கள் மீன் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து பெரும்நிலப்பரப்பின் பல்வேறு பகுதிகளுக்கு வலசை போகும், இது குறுந்தொலைவு வலசை எனப்படும்.
வரித்தலை வாத்து போன்ற பல வாத்தினங்கள் மற்றும் சிறிய உள்ளான்கள் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து வலசைவருகின்றன.- இதனை குளிர்கால வலசை எனலாம். ஏனெனில் குளிர்காலத்தில் உறைபனியால் மூடப்பட்ட புவியின் வடக்குப்பகுதியில் உணவு கிடைக்காமையால்
பறவைகள் தென்புலத்தின் வெப்ப மண்டலத்தை நாடி வலசை வருகின்றன. ரஷ்யா மற்றும் ஏனைய வடபுலங்களில் கோடைக்காலம் வந்தவுடன் பனி உருகுவதாலும், சூரிய வெளிச்சம் நன்குகிடைப்பதாலும் தாவரங்கள் மற்றும் பூச்சிகள் தோன்றுகின்றன. இக்காலகட்டத்தை எதிர்பார்த்துஇருந்த பறவைகள் தென்புலத்தில் இருந்து வடபுலத்திற்குத் திரும்பி இனப்பெருக்கம் செய்கின்றன. பெரும்பாலான பறவை இனங்கள் ஒவ்வொரு வருடமும் அதே இடத்திற்கு வலசை
வருவது வியப்பிற்குரியது. உங்கள் தோட்டத்தில் திரியும் வாலாட்டிக் குருவி ஒவ்வொரு வருடமும் ரஷ்யாவிற்குச் சென்று பின் மீண்டும் வந்திருக்கும் ஒன்றாகும். ஆண்டாண்டு காலமாகக் குளிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குப் பறவைகள் எவ்வாறு வழி கண்டுபிடித்து வருகின்றன என்பது தெளிவாகத் தெரியாத போதிலும் சூரியன், நட்சத்திரங்கள், காந்தப்புலங்கள் மற்றும் நிலப்பரப்பின் பெரும் அடையாளங்கள் போன்றவற்றினால், வழித்தடங்களை அறிகின்றன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பறவைகள் பயணிக்கும் தொலைவுவரித்தலை வாத்துமங்கோலியாவிலிருந்து 21 ஆயிரத்து 120 அடி உயர இமயமலையைக் கடந்து, சுமார் 8 ஆயிரம் கி.மீ. தொலைவினை இரண்டு மாத காலத்தில் பறந்து நமது கூந்தங்குளத்தை வந்தடைகிறது. இப்பறவை மிக உயரத்தில் பறக்கின்ற பறவை என கருதப்
படுகிறது.வாத்தைவிட அளவில் சிறிய வாலாட்டி மற்றும் உள்ளான் இனப்பறவைகள் மத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான கி.மீ. தொலைவு கடந்து குளிர்காலத்தில் இந்தியாவிற்கு வரு
கின்றன.

தங்கும் கால அளவுபொதுவாக குளிர்கால வலசை வரும் பறவைகள் ஜூலை மாத இறுதியில் இந்தியாவிற்கு வருகை புரிகின்றன. அதிகமான பறவை இனங்கள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வருகை புரிந்து மார்ச் மாதங்களில் திரும்ப ஆரம்பிக்கின்றன. வலசை வரும் பறவைகள்
சராசரியாக 7 முதல் 8 மாதங்கள் வரை இந்தியாவில் தங்குகின்றன.வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகள் இந்தியாவில் இனப்பெருக்கம் செய்வதில்லை. அவை பருவச் சூழல் மற்றும் உணவுத் தேவைகளை சமாளிப்பதற்காக மட்டுமே நமது பகுதிக்கு வருகின்றன. வேடந்தாங்கல், கூந்தங்குளம், வடுவூர், திருப்புடைமருதுார் மற்றும் இன்னபிற பறவைகள்
சரணாலயங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் அனைத்தும் நமது உள்ளூர் பறவைகள்தான்.


நன்மைகள்


வெளிநாடுகளில் இருந்து பறவைகள் நமது நாட்டிற்கு குளிர் காலங்களில் வருகை புரிகிறது, அச்சமயங்களில் அதிகளவில் பூச்சிகள், புழுக்கள் உற்பத்தியாகும். அவற்றைத் தின்று சூழலியல் சமன்பாட்டில் பங்களிக்கின்றன. மேலும் குளங்களில் இரை தேடும் பறவைகளின் எச்சம் மீன்களுக்கு உணவாகிறது. அதனால் மீன்
உற்பத்தி அதிகரிக்கிறது. மேலும் எச்சத்தினால் நீரின் சத்து அதிகரித்து அவற்றை வயல்களுக்கு பாய்ச்சும் போது மகசூல் அதிகரிக்கிறது. மத்திய ஆசியா பகுதிகளிலிருந்து சுமார் 4 ஆயிரம் கி.மீ., கடந்து நமது நாட்டிற்கு வருகை தரும் பூனைப் பருந்தின பறவைகள் விளை நிலங்களில் தீமை விளைவிக்கும் பூச்சியான வெட்டுக்கிளிகளை உட்கொண்டு விவசாயிகளுக்கு இலவசமாக சேவை அளிக்கின்றன.

பறவைகள் சந்திக்கும்இன்னல்கள்வாழிட அழிவு, ரசாயன மருந்துப் பொருட்கள் பயன்பாடு மற்றும் வேட்டையாடுதல், வலசை பறவைகள் சந்திக்கும்முக்கிய பிரச்னைகள். குளங்கள், தரிசு நிலங்கள் அதிகளவு ஆக்கிரமிக்கப்படுவதாலும் அவைகளை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாலும் பறவைகளுக்கான வாழிடம் பறிக்கப்
படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் பருத்திப்பாடு கிராமத்தில் உள்ள நிலங்களில் பல வருடங்களாக மத்திய ஆசியாவிலிருந்து வரும் நுாற்றுக் கணக்கான பூனைப் பருந்தின
பறவைகள் தங்கியிருந்தன. ஆனால் கடந்த வருடம் அவ்விடம் முழுவதுமாக அழிக்கப்பட்டு யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடப்பட்டு விட்டன. இப்பூனை பருந்தின பறவைகள் தரிசு நிலங்களில் உள்ள புற்களுக்கு நடுவில் மட்டுமே தங்கும்.
வலசை வரும் பறவைகள் பெருங்கூட்டமாக வருவதுடன் கூட்டமாகவே இரை தேடும் அதனால் அவைகளை வேட்டையாடுவது எளிது. ஆங்காங்கே பறவைகள் வேட்டையாடுவதும் நடைபெறுகிறது. இதுபோன்ற
பிரச்னைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

நாம் என்ன செய்ய முடியும்தமிழ்நாட்டில் வேடந்தாங்கல், கூந்தங்குளம், வடுவூர் போன்ற பறவைகள் சரணாலயங்கள் ஊர்களுக்கு நடுவில் அமைந்துள்ளது, அவ்வூர் மக்கள் பறவைகளின் முக்கியத்துவத்தைக் கருதி பாதுகாப்பு அளிக்கின்றனர். கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வீடுகளில் உள்ள மரங்களில் தங்குகிறது, அதை அவர்கள் ஒருபோதும் விரட்டியது கிடையாது.
தீபாவளி பண்டிகையின் போது சிறுவர்கள் வெடிகள் கூடவெடிப்பது இல்லை. இது போன்று மற்ற கிராம மக்களும் தங்கள் பகுதிக்கு வரும் சிறகுடைய தோழர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளித்து காத்திட வேண்டும். அரசுத் துறைகள் வேட்டையாடுதல் மற்றும் வாழிட அழிவுகளுக்குதக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--மு.மதிவாணன்ஒருங்கிணைப்பாளர்அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம் மணிமுத்தாறு. 94880 63750


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement