Advertisement

மருத்துவ கல்வி தரம் உயருமா?

மக்களுக்கு இலவசமாக அரசு தர வேண்டியது, தரமான மருத்துவ சேவை மற்றும் தரமான கல்வி மட்டுமே. நம் நாட்டில், சுதந்திரத்திற்கு முன் மருத்துவ சேவை, பெரும்பாலும் அரசு மூலமே கிடைத்தது. மருத்துவர்கள் மற்றும் மக்கள் விகிதாசாரம், அப்போது போதுமான அளவில் இருக்கவில்லை; இப்போதும், அதே நிலை தான்.
போதிய அளவில் அரசு மருத்துவக் கல்லுாரிகள் இல்லாததே, அதற்கு முக்கிய காரணம். மத்திய அரசும், மாநில அரசுகளும், இது குறித்து எந்த கவலையும் கொள்ளாமல், தொலைநோக்கு பார்வை இல்லாமல், அசட்டையாக இருந்தது தான் இந்த நிலைக்கு காரணம்.
அரசு மருத்துவக் கல்லுாரிகள், தேவையான எண்ணிக்கையில் நிறுவப்பட்டு, மருத்துவர்களின் எண்ணிக்கை, சற்றேனும் அதிகரிக்க தேவையான முயற்சிகளை பல ஆண்டுகளாக மேற்கொள்ளவில்லை. ஆரோக்கியமான மக்கள் தான், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பர் என்பது, ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் போனது துரதிருஷ்டமே.
ஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனையை விட்டால் வேறு தஞ்சமில்லை. அவர்களுக்கு தகுந்த, சிறந்த, மருத்துவ சிகிச்சை அளிக்க தவறும் எந்த அரசும், அடிப்படை கடமையில் தவறிய அரசு தான். சுகாதாரமும், கல்வியும், மக்களின் அடிப்படை உரிமைகள். இதற்கு, நிதி வசதியில்லை என, சாக்கு சொல்வது, இனி செல்லுபடியாகாது.
இலவசங்கள் என்ற பெயரில், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாக வாரி இறைக்கப்பட்டிருக்கிறது. இந்த பணத்தை, மக்களின் மருத்துவ சேவை மேம்பாட்டிற்கு செலவிட வேண்டும் என, அரசியல் தலைவர்களுக்கு ஏன் தோன்றவில்லை... அவ்விதம் செலவிடப்பட்டிருந்தால், அரசு மருத்துவ சேவை எவ்வளவு சிறப்பாக உயர்ந்திருக்கும்...
ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும், போதுமான எண்ணிக்கையில் அரசு மருத்துவக் கல்லுாரிகளை நிறுவியிருந்தால், ஆயிரக்கணக்கான, தகுதி வாய்ந்த மருத்துவர்கள் உருவாகியிருப்பர். அதை செய்ய தவறிவிட்டு, அந்த குறையை ஈடு செய்வதாக கூறி, தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுமதி அளித்து, புற்றீசல் போல, நாடு முழுவதும், தனியார் மருத்துவ கல்லுாரிகள் முளைக்க வழிவகுத்தது, மத்திய அரசு.
இக்கல்லுாரிகளில் போதிய அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத காரணத்தால், மாணவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்க முடியாமல், மருத்துவர்களாக வெளியே அனுப்பும் அவலத்தை என்னவென்று சொல்ல!
எனவே, மருத்துவக் கல்வியை வணிகமயமாக்கியதில், மத்திய அரசுக்கு மிகப்பெரிய பங்குண்டு. ஒரு சில தனியார் மருத்துவக் கல்லுாரிகளை தவிர, மற்றவை, குறிப்பிட்ட தரத்தை எட்டாதவை என்பதும், தரமான ஆசிரியர்களுக்கு, அந்த கல்லுாரிகளில் பற்றாக்குறை உள்ளது என்பதும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும்.
பெரும்பாலான, பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், பெருமைக்காக மட்டுமே தனியார் கல்லுாரிகளில் மருத்துவ பட்டம் பெறுகின்றனர் என்பதும், அவர்களது சேவை, எளிய மக்களுக்கு என்றுமே கிடைப்பதில்லை என்பதும் நடைமுறை உண்மை. அத்தகைய மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால், நாட்டுக்கோ, மக்களுக்கோ ஏதும்
பயனில்லை.
சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், 'குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள், பணம் படைத்தவராக இருந்தால், அவர்களுக்கு, வெளிநாட்டு மருத்துவக் கல்லுாரிகளில் இடம் கிடைக்கிறது. அங்கு பட்டம் பெற்ற பின், அவர்களுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் வழங்குகிறது. இது, எப்படி என, புரிந்து கொள்ள முடியவில்லை.
'தகுதி படைத்தவர்கள் தான் மருத்துவக் கல்லுாரியில் நுழைய வேண்டும். ஏனென்றால், நோயாளிகளின் உயிர் அவர்கள் கையில் உள்ளது. -நம் நாட்டிற்கு அதிக மருத்துவர்கள் தேவை. எனவே, கூடுதலாக அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்க வேண்டும். அப்போது தான், மருத்துவக் கல்வி வணிகமயமாகாது' என, உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்து, 70 ஆண்டுகள் ஆன பின்னும், ஒரே சீரான கல்வி முறை, இந்நாட்டில் இல்லையென்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இது, யாருடைய தவறு... சந்தேகமில்லாமல், நம் நாட்டை ஆண்ட அரசுகளும், அவற்றிற்கு தலைமை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகளும் தான், முழு பொறுப்பாளிகள்.
நாடு முழுவதும், ஒரே சீரான தகுதியுடைய மாணவர்களை, மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், 'நீட்' தேர்வை, மத்திய அரசு, முன் வைத்தவுடன், இவ்வளவு நாட்களும் உறங்கிக்கிடந்த அத்தனை அரசியல்வாதிகளும், கட்சி பேதமின்றி, எதிர்த்து கூச்சலிடுகின்றனர்.
உண்மையாகவே இது, கிராமப்புற மாணவர்கள் மீது உள்ள அக்கறை மற்றும் அவர்கள் நலனை உத்தேசித்து தான் என, யாரும் தவறாக எண்ண வேண்டாம். தங்கள் ஓட்டு வங்கியை, எவ்விதமேனும் தக்க வைக்க வேண்டும் என்பதற்கான, அரசியல்வாதிகளின் உபாயங்களில் ஒன்று தான் இதுவும்.
'அந்த தேர்வுக்கு, எந்த மாநிலத்திற்கும் விலக்கு அளிக்கப்பட மாட்டாது' என, உச்ச நீதிமன்றம் அறிவித்தவுடன், எதிர்த்தவர்களின் குரல்கள் அடங்கிவிட்டன.
கிராமப்புற மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதற்கு யார் காரணம்... போதிய கல்விக்கூடங்களை அமைத்து, தேவையான ஆசிரியர்களை நியமித்து, அவர்கள் கல்வி மேம்பட செய்யாதது யார் குற்றம்... தனியார் பள்ளிகள் புற்றீசல் போல முளைத்து, கல்வியை வியாபாரமாக்கியதற்கு யார் காரணம்?
தரமானக் கல்வியை அரசு அளித்திருந்தால், நகர்ப்புறத்தில் கூட, தனியார் பள்ளிகள் இவ்வளவு உயர்ந்திருக்காது என்பது தான் உண்மை.
அரசியல்வாதிகள் சுருட்டிய மக்கள் வரிப் பணமெல்லாம், மக்களுக்காக பயன்படுத்தியிருந்தால், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, கிராமப்புற மற்றும் நகர் புற, ஏழை மக்களின் கல்வியின் தரத்தை உயர்த்தி, அவர்களை எவ்வளவோ முன்னேற செய்திருக்கலாம்.
கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திற்காக, ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத அரசியல் தலைவர்களுக்கும், இது குறித்து குறைப்பட்டு கொள்ள உரிமையில்லை என்பது தான் மக்கள் கருத்து.
'தமிழகத்தில், பிளஸ் 2 பாட திட்டத்தில், கடந்த, 10 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கல்வியின் தரம், அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது' என, கல்வியாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.
தமிழகத்திற்கு மட்டும், 'நீட்' தேர்வு வேண்டாம் என, ஒரு வாதத்திற்காக வைத்து கொண்டால் கூட, மற்ற மாநில மாணவர்களை விட, நம் மாணவர்கள் தரம் குறைந்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை என்பது தானே பொருள்... இது, எவ்வளவு தவறான பார்வை!
அது போல, போட்டி தேர்வுகளில் பங்கேற்று, தங்கள் திறமையை நிரூபிக்கும், நல்ல தருணங்களை தவிர்த்து வந்ததன் விளைவு தான், மத்திய அரசு பணிக்கான தேர்வுகளில், தமிழகத்திலிருந்து குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் வெற்றி
பெறுவது.
அரசியல் ஆதாயம் கருதி, இதையெல்லாம் எதிர்ப்பது, தமிழர்களின் கல்வித்தரத்தை, நாமே குழி தோண்டி புதைப்பது போன்றது. இது, தமிழகம் மருத்துவத் துறையில் தரம் தாழ்ந்து போக வழிவகுக்கும் என்பதையும் மறக்கலாகாது. இது ஒரு தொலைநோக்கமற்ற செயல்.
நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வந்து, 'நீட்' போன்ற தேர்வுகளை நடத்தி, தகுதியான மாணவர்களை மருத்துவக் கல்வி பயில செய்தால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சேவையின் தரம் வருங்காலத்தில் உயரும்.
ஆரம்பத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும் என்றாலும், தொலை நோக்கு பார்வையில், நல்ல பலனையே இது தரும் என்பதில், எள்ளளவும் சந்தேகமில்லை.
இ -மெயில்: - டாக்டர் எஸ். ஏகநாதபிள்ளை -முன்னாள் பேராசிரியர் மதுரை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைahanathapillaigmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Prabu - Rasaimanagaram,இந்தியா

    மிகச் சரியான கருத்து, நம் இந்திய அரசியல் வாதிகளுக்கு தங்கள் கருத்து செவிடன் காதில் ஊதிய சங்காகவே இது இருக்கும். நல்லது நடக்க அந்த கடவுள் நாராயணனே அவதாரம் எடுத்தால்தான் உண்டு

  • P.Narasimhan - Tirupattur,Vellore Dist,இந்தியா

    "கிராமப்புற மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதற்கு யார் காரணம்"," கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திற்காக, ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத அரசியல் தலைவர்களுக்கும், இது குறித்து குறைப்பட்டு கொள்ள உரிமையில்லை என்பது தான் மக்கள் கருத்து" - இது ஒரு மேம்போக்கான கருத்து என்று மட்டுமே என கருத வேண்டியுள்ளது. ஏனெனில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் அதிகம் மற்றும் பொறுப்பு(இலக்கு) கிடையாது. நீ படிச்சா என்ன, படிக்கலைனா என்ன எனக்கு ஒண்ணாம் தேதியானா சம்பளம் வந்துருது என கூறிய ஆசிரியர்களை நேரில் பார்த்திருக்கிறேன். அக்கறையோடு உழைக்கும் ஆசிரியர்கள் குறைவு.இது தான் கிரௌண்ட் ரியாலிட்டி.

  • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

    சரியான கருத்து, சரியான நேரத்தில்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement