Advertisement

குடி கெடுக்கும் குடி!

மது தீமைகளின் உறைவிடம். நோய், வறுமை, ஒழுக்க கேடு, குற்றச்செயல், வன்முறை, கொலை, கொள்ளை, குடும்பச்சீரழிவு என பல கேடுகளை மது உண்டாக்குகிறது. மதுப்பழக்கம் ஒருவனது அறிவை கெடுக்கிறது. மது அருந்துவதால், குடலில் புண் ஏற்படுகிறது. நுரையீரல் கெடுகிறது. உடல் பலவீனப்படுவதால், பல நோய்கள் உண்டாகிறது.நரம்பு தளர்ச்சி, உடல் தளர்ச்சி ஏற்படுகிறது. போதை உண்டாக்கு வதற்காக பல பொருட்கள் சேர்க்கப்படுவதால் பெரும் தீங்கு உண்டாகிறது. கள்ளச்சாராயத்தை அருந்தி, உயிர் விட்டவர் பலர். '20 வயதுக்குள் குடிக்க பழகி விட்டால் இறக்கும் வரை அதன் கோரப்பிடியிலிருந்து விடுபட முடியாது' என்கிறது ஓர் ஆய்வு. தற்போது பெண்கள் கூட மேல்நாட்டு மகளிர் வழியில் மது அருந்தி வருவது
மனிதக்கொடுமை.

பாவங்கள் : ஒருவன் குடித்தால் அவன் குடும்பம் அழியும். குடும்பம் அழிந்தால், சமுதாயம் அழியும். சமுதாயம் அழிந்தால் நாடு அழியும். ஒருவனிடம் ''மதுவை குடி அல்லது மங்கையை தொடு அல்லது சூதாடு, இந்த மூன்றில் ஒன்றை நீ செய்'' என கூறப்பட்டது. அவன் மதுவே குறைந்த பாவம் என கருதி, அதைஅருந்தினான். அடுத்த சில மணி துளிகளில் அடுக்கடுக்காக மற்ற பாவங்களையும் செய்து விட்டான். 'குடி, குடியை கெடுக்கும்' என்பதே மதுக்கடைகளில் எழுதப்பட்டிருக்கும் மதுரமான வாசகம். டாஸ்மாக் கடைகளில் இந்த வாசகம் தாங்கிய விளம்பர பலகை தொங்கும். அதை படித்தோ, படிக்காமலோ, புரிந்தோ,புரியாமலோ திமுதிமுவென மது
வருந்தக் கூட்டம் மந்தை,மந்தையாக செல்கிறது. மொந்தை, மொந்தையாக குடிக்கிறது. சிந்தை தடுமாறி உருள்கிறது.மது குடித்தவன் மயங்கி சாகிறான். மனித நிலையை மறக்கிறான். உடுக்கை இழந்தாலும் கை கூட அவனுக்கு கை கொடுக்க மறுக்கிறது. வேட்டி விலக குடித்து விட்டு, தெருவில் கிடக்கும் ஒருவனை பார்த்து, எழுதப்பட்ட புதுக்கவிதை.''வேட்டி சொன்னது
மானம் கெட்டஇந்த குடிகார பயல்இடுப்பில் இருப்பதுஅவமானம் என்றுவிலகி கொண்டேன்.''
சிலர் படுக்கையில் சென்று கூட படுக்க முடியாமல் பாதையில் மல்லாந்து பிணம்போல ஈ மொய்க்க கிடக்கிறார்கள். நாயின் சாவு போல, சிலருக்கு நடுத்தெரு சாவு தான் கிடைக்கிறது. வாகனங்கள் கூட அவர்கள்கண்ணுக்கு பெரிதாய் தெரிவதில்லை. மனைவியின் தாலிகூட மார்வாடி கடைக்கு போய்விடுகிறது. மனைவியையும், மகளிரையும் அடகு வைக்க தயங்காதவர்கள் இந்த மது வெறியர்கள்.நல்ல குடிமகன் என்பது போய், நல்ல குடிகாரன் என்ற பட்டம் வாங்கி, தங்களையும், தங்கள் குடும்பத்தையும் அழித்துகொள்கிறார்கள்.
கள்ளுண்பவரை கண்டு, பகைவர்கள் அஞ்சுவ தில்லை.
கள்ளுண்பவர் மக்களால்இகழப்படுவர்.

கள்ளுண்பவர்களை சான்றோர் மதியார். நாணம் என்னும் நல்லாள்அவர்களை விட்டு நீங்கி விடுவாள். கள்ளுண்பவர் நஞ்சுண்பவரே என்றெல்லாம் வள்ளுவர் சாடுகிறார்.கள் என்று வள்ளுவர் சொல்வது மரக்கள்ளை மட்டும் குறிப்பிடுவதன்று. மதுவின் எல்லா வகைகளையும் குறிப்பிடுவது. மது குடிப்பதால் உடலும் கெடும்.உடமையும் கெடும். கொஞ்சம், கொஞ்சமாக சாகடிக்கும் நஞ்சு தான் மது.

பெண்களுக்கு பாதிப்பு : ஆண்களின் இப்பழக்கத்தால் பெண்களே நாட்டில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு கூட உணவளிக்கஇயலாத நிலையில், பத்துபாத்திரம் தேய்த்து, மனைவி வாங்கி வரும் பணத்தை கூட எடுத்து, மது குடித்து மூர்க்கனாய் திரும்பி வருபவர்கள் பலர். குடிப்பழக்கம் ஒருவனிடம் குடி புகுந்தால், அது அவன் குடியிலும் பல கோர உருவங்களில் புகுந்து, கோபுரம் போல் உயர்ந்திருந்த குடும்பத்தையும் குட்டிசுவராக்கி விட்டே விடை பெறும்.
போதை மாற்றும் பாதை மதுப்பழக்கம் உடையவர்களிடமிருந்து விலகி நிற்பதே தற்காப்பு. மேதைகளுக்கு போதை உதவும் என்பது மூட நம்பிக்கை. மேதைகள் போதைகளால் சீக்கிரம் அழிந்தார்கள் என்பது தான் உண்மை. மது குடிப்பவர்களை மன நல நிபுணர்களிடம் அழைத்து சென்று தீர்வு காண வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், சான்றோர்கள் இவர்களும் குடி மகனின் போதை பழக்கத்தை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். போதையை போற்றும் நிலையங்கள் ஒழிந்து, போதையை மாற்றும் நிலையங்கள் தோன்ற வேண்டும்.

இலவசம் : இலவசங்களை அள்ளி விட அரசுக்கு நிதி எங்கிருந்துவருகிறது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதுக்கடைகளில் கொண்டு கொட்டினால் தான், அரசுக்கு கலால் மற்றும் விற்பனை வரி மூலம் இவ்வளவு வருவாய் வரக்கூடும். டாஸ்மாக் கடைகளின் பணி என்ன தெரியுமா?. மது விற்பனையை அதிகப்படுத்துவது. நன்றாக புரியும்படி சொல்ல வேண்டுமானால், குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தான். மிக குறைந்த சம்பளம் பெறும் கூலி தொழிலாளர்கள் குடித்து உடலை கெடுத்து விடுவதுடன், குடும்பத்தையும் வறுமை நெருப்பில் பொசுக்கி விடுகின்றனர்.

புரியாத உண்மை : இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்த வெள்ளையர் கியூம் ''குடிபோதை, குற்றங்களை துாண்டுகிறது. மதுவின் மூலம் வரும் வருவாய் பாவத்தின் கூலி, அரசுக்கு இதில் ஒரு ரூபாய் வருவாயாக வந்தால், இதன் மூலம் உண்டாகும் குற்றங்களை தடுக்க இரண்டு ரூபாய் செலவழிக்க நேரும்'' என்று சொன்னதில் அர்த்தம் உள்ளது. மது வெள்ளத்தில் மிதக்கும் ஆங்கில மண்ணில் பிறந்த வெள்ளையருக்கு புரிந்த உண்மை, மகாத்மாவின் வாரிசுகளுக்கு புரியாமல் போய்விட்டதே. அரசு கருவூலம் நிரம்புவதற்கு, நம் மண்ணின் மரபார்ந்த ஒழுக்கங்களை இழக்க சம்மதிப்பது சரியா? இலவசமாக அரிசியை பெறும் ஏழை, நாள் ஒன்றுக்கு மதுவை 100 ரூபாய்க்கு வாங்கி குடித்தால் வறுமை ஒழியுமா. ஒன்றை பெறுவதற்காக, ஒன்றை இழப்பதுதான் நியதி. அதற்காக மேல் துண்டை இலவசமாக பெறும் ஆசையில், இடுப்பு வேட்டியை இழக்கலாமா.கள் உண்ணாமை குறித்து வள்ளுவன் வலியுறுத்தியும், மது விலக்குக்காக மகாத்மா கொடி பிடித்ததும் இன்று அர்த்தமற்று போய்விட்டன. நம்மை நெறிப்படுத்தவேண்டிய நம் தலைவர்கள்,தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். மதுவின் பிடியிலிருந்து விடுபட்டால் ஒழிய, மக்கள் வறுமையிலிருந்து மீள முடியாது என்ற உண்மையை, செல்லும் இடமெல்லாம் கொண்டு சென்றவர் மகாத்மா. மதுவை ஒழிப்பதற்கு தந்தை பெரியார் தமக்கு சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

மது விலக்கின் நன்மை : நாடு வளர நன் மகளிர் சிறக்க, குழந்தைகள் படிக்க, குடிக்க செல்லாத குடிமகன்கள் தேவை. இதற்கு மதுவிலக்கு ஒன்றே தான் வழி. மதுவிலக்கினால் மனிதன், மனிதனாக வாழலாம். உழைத்து ஈட்டிய செல்வம் குடும்பத்துக்கு பயன்படும். தாய்க்குலத்தின் அவலம் நீங்கும். வறுமை விலகி நாடும், வீடும் செழிக்கும். சேமிப்பு வளரும். புகழ் உண்டாகும். உழைப்பின் பெருமை உணரப்படும். உடல் நலமும், அறிவு நலமும் பெருகி வளமான வாழ்வு அமையும்.

அரசின் கடமை : எப்படிப்பட்ட இழப்பை ஏற்றேனும் அரசு மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.
கள்ளத்தனமாக மது அருந்துவதை தடுக்க கடும் சட்டங்கள் இயற்ற வேண்டும். கடும் தண்டனை அளித்தால் இப்பழக்கத்தை ஒழிக்கலாம். மனைவியும், குழந்தையும், குடும்பமும் படும் துன்பத்தை கண்டு தன் பழக்கத்தை மாற்றி கொள்ளாதவனுக்கு தண்டனை அளிப்பதில் தவறே இல்லை.தனி மனிதனால் எந்த ஒரு மாற்றத்தையும் விரைவாக கொண்டு வர முடியாது. அடர்ந்து கிடக்கும் இருள் காட்டில் ஒரு சின்னஞ்சிறு அகல் விளக்குசிறிதளவு தான் வெளிச்சம் தர முடியும். நாம் சுயநலமாக சுருங்கி விடாமல், நம்மை சுமக்கும் இந்த மண்ணிற்கும், சமுதாயத்துக்கும் இயன்றவரை நாமும் நன்மை செய்ய வேண்டும். இந்தியாமுழுவதும், என்றைக்கு பூரண மது விலக்கு அமலுக்கு வருமோ, அன்றுதான் ஏழ்மையை இங்கிருந்து விரட்ட முடியும்.

-மகா.பாலசுப்பிரமணியன்
சமூக ஆர்வலர், காரைக்குடி
94866 71830

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    சில நல்ல செய்திகள் தென்படுகின்றன. நான் கோவை அமைச்சர் மிக்க செல்வாக்கானவர் அவரின் 90 ஆவது வார்டில் பள்ளிக்கு சில ஆதி தூரத்தில், பி எஸ் என் எல் நிறுவனதிக்ரு மிக அருகில், குடியிருப்பு மைய பகுதியில், நான்கு வலை சாலையில் தமிழக்க்த்திலேயே அதிக லாபம் தரும் மதுபானம் கடை இருக்கிறது அதை நீக்கவே மாட்டேனென்கிறார்களே, அந்த மைச்சர் என்ன செய்கிறார் என்று எழுதியிருந்தேன். அவர் வீட்டருகேயே மக்கள் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள், மிக பெரியளவில் சமூக வலைத்தளங்களில் பரப்பி இருக்கிறார்கள். விளைவு அந்த டாஸ்மாக் கடை மூடப் பட்டு விட்டதாம். கோவைப்புதூர் கடை. சுண்டக்காமுத்தூர் சாலை. பரத் பெட்ரோல் எதிர்புறம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement