Advertisement

பெண் என்னும் பொக்கிஷம்

'மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்றார் பாரதியார். 'ஒரு பெண் கல்வி அறிவு பெறுவது அக்குடும்பமே கல்வியறிவு பெறுவதற்கு சமம்' என்றார் நேரு.
'சமூகத்தில் ஏற்படும் முக்கியமான மாற்றங்கள் பெண்களாலே' என்றார் மகாத்மா காந்தி. ஒரு பெண் வெளியிலே சென்று படிப்பதற்கு பதிலாக வீட்டிற்குள்ளே இருக்கும் விஷயங்களை கற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான், 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று முன்னோர்கள் கேட்டிருப்பார்கள் போல...

பெண்களின் பணிப் பங்கு : பெண் என்பவள் தன் பிறப்பு முதல் இறப்பு வரை பல நிலைகளை கடந்து வருகிறாள். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என, பல பரிமாணங்களை எடுத்து வருகிறாள். குழந்தையாக இருந்து நடை பழக ஆரம்பித்த காலத்திலிருந்தே குடும்ப பொறுப்புகளை ஏற்க ஆரம்பித்து விடுகிறாள். சிறு வயது முதலே வீட்டை சுத்தம் செய்வது, வாசலில் கோலமிடுவது என, சிறிது சிறிதாக தன் பணிப் பங்கினை உயர்த்துகிறாள்.

அன்புள்ள செல்ல மகள் : பருவம் அடைந்த பிறகு பெண்மைக்கே உரித்தாகிய அழகையும், தாயின் அரவணைப்பையும் பெறுகிறாள். பெற்றோரின் அன்பைத் தட்டிச் செல்லும் செல்ல மகளாகவும், அண்ணனின் கட்டளைக்கு கட்டுப்படும் அன்புத் தங்கையாகவும், தாத்தா பாட்டிக்கு
மரியாதை செலுத்துவதில் செல்ல பேத்தியாகவும் மாறுகிறாள். வீட்டிற்கு வரும் அனைவரையும் உபசரிப்பதிலும் தனிக்கவனம் செலுத்துகிறாள். வேலைகள் அனைத்தையும் நேர்த்தியாக செய்து, தனக்கே உரிய முத்திரையை பதிக்கிறாள்.

புகுந்த வீட்டு உறவுகள் : குடும்ப கஷ்டத்தை உணர்ந்து பெற்றோரின் கடன் சுமைகளை தன் தோளில் இளவயதிலேயே சுமந்து வாழ்கிறாள். இன்னும் பல பெண்கள் குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்கிறார்கள். புது உறவு முறைகள் பிறந்த வீட்டை விட்டு, புகுந்த வீட்டுக்கு செல்லும் தருணம் வாழ்வில் எந்த பெண்ணாலும் மறக்க முடியாத ஒன்று. அப்பா, அம்மா உடன்பிறந்தோர் என, அத்தனை உறவுகளையும் விட்டு திருமணம் மூலமாக தனக்கு கிடைக்கும் புது உறவுகளை அனுசரித்து செல்கிறாள்.
அறிமுகமில்லாத நபர்களை மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனார் என, தன் வீட்டு உறவுகளாக ஏற்றுக்கொண்டு, தன் கணவரின் சொந்தங்களை தன் சொந்தங்களாக எண்ணுகிறாள். தன் பிறப்பின் அங்கீகாரமாக ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். அக்குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்து சமூக அங்கீகாரத்தை பெற்றுத் தருகிறாள். கணவனின் குடும்ப பாரத்தை குறைப்பதற்காக தானும் வேலைக்குச் செல்கிறாள்.

பெண் நடமாடும் கடவுள் : வீட்டு வேலை, குடும்ப பொறுப்பு, அலுவலக சுமை என, அனைத்தையும் சவாலாக ஏற்று சாதனை புரிகிறாள். வேலை நாட்களில் பம்பரமாக சுழன்று தன்
கடமைகளை நிறைவு செய்கிறாள். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையில் அக்கறை காரணமாக, சமையலில் தனிக் கவனம் செலுத்தி குடும்ப ஆரோக்கியத்தை நிலைநாட்டுகிறாள். தன் உடல்நிலை சரியில்லாத காலத்திலும் ஓய்வெடுக்கக் கூட நேரமில்லாமல் உழைக்கிறாள். இப்படி பல சொல்லப்பட்ட, சொல்லப்படாத நிலைகள் மாறுதல்கள் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இருக்கின்றன.இப்படிப்பட்ட பெண்கள் எல்லாம் 'லெமூரியா' கண்டத்தோடு அழிந்து
விட்டார்கள் என்று எண்ண வேண்டாம். நம் வீட்டிலும், நாட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக அங்கீகாரம் நம் நாட்டைக் கூட தாய்நாடு என்றும், தாய்மண் என்றும் தான் கூறுகிறோம். நம் மொழியையும் தாய்மொழி என்று தான் அழைக்கின்றோம்.பெண் என்பவள் வற்றாத
அன்பையும், உழைப்பையும் குடும்பத்திற்காக வழங்குபவள். அதனால் தான் வற்றாத
ஆறுகளுக்கும் நதிகளுக்கும் கங்கா, யமுனா, கோதாவரி, காவிரி என்று பெண்களின் பெயர்களை வைத்துள்ளனர். யாசகம் கேட்டு வீட்டிற்கு வருவோரும் அழைப்பது 'அம்மா தாயே' என்றுதானே. உயிரை படைக்கும் கடவுளான பிரம்மனே தன் வேலையை ஒரு பெண்ணிற்கே கொடுத்திருக்கிறார். ஆகவே பெண்களும் நடமாடும் கடவுள் தான்.

பாலியல் வன் கொடுமை : 'பேஸ்புக்'கிலும் 'வாட்ஸ் ஆப்'பிலும் பெண்களை வைத்து கிண்டல் செய்து விளையாடுகிறார்கள். அவர்களது தாயும் ஒரு பெண் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும், அலுவலகங்களிலும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை பற்றி நாளிதழ்களில் இடம்பெறாத நாளே இல்லை. பெண்களை நல்ல கண்ணோட்டத்துடனும் கண்ணியத்தோடும் பார்க்கலாம். பெண் என்பவள் கண்ணாடியைப் போல நாம் அன்பு முகத்தை காட்டினால் அதையே உள்வாங்கி பிரதிபலிப்பாள். கருவறையில் வைத்து சுமந்தவளை கடும் வார்த்தைகளால் சாடாமல் இருக்கலாம்.

பெண்கள் குடும்ப பொக்கிஷம் கணவன், மனைவியிடையே ஒரு ஞாயிற்று கிழமையில் போட்டி. தன் வீட்டிற்கு யார் வந்தாலும் கதவைத் திறக்கக் கூடாது என்றும் பேசக் கூடாது என்றும். போட்டி ஆரம்பித்தது கதவு தட்டப்பட்டது. குரலோ கணவனின் பெற்றோரிடமிருந்து. கணவன் போட்டியில் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக கதவை திறக்கவுமில்லை, பேசவுமில்லை. அவர்களும் சென்றுவிட்டார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்பட்டது. இப்போது குரல் மனைவியின் பெற்றோரிடமிருந்து. ஆனால், மனைவி போட்டியில் தோற்றாலும் பரவாயில்லை என்று ஓடிச்சென்று கதவைத் திறந்துவிட்டு தன் பெற்றோரை உள்ளே அழைத்து உபசரித்தாள். கணவனுக்கோ முதலில் வெட்கம்; பின்பு மெதுவாக புன்னகை செய்து விட்டு கூறினான், 'இன்னும் 15 ஆண்டுகளுக்கு பின் எனக்காக கதவு திறந்துவிட எனக்கும் ஒரு பெண் பிள்ளை இருக்கிறாள்' என்று பெருமிதத்துடன் கூறினான்.பெண் சிசுக் கொலையைத் தவிர்த்துவிட்டு, பெண் குழந்தை பிறந்துவிட்டதே என்ற கவலையை அகற்றி, பெண் பிள்ளைகளை போற்றி வளருங்கள். திருமணத்திற்கு பின் தன்னால் முடிந்த உதவியை தன் பெற்றோருக்கு, கணவனுக்கு தெரிந்தும் தெரியாமலும் செய்பவள் அவள். பெண் பிள்ளை ஒவ்வொரு குடும்பத்தின் அடையாளம். பெண் பிள்ளை நம் குடும்பத்தின் பொக்கிஷம்.

-- கே.பிரவீணா, பேராசிரியை
பொருளாதார துறை
தியாகராஜர் கல்லுாரி, மதுரை
praveena52gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • mpvijaykhanna - dindigul,இந்தியா

    Great article. All the ladies real living god. No doubt in that

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement