Advertisement

செவிக்கு விருந்தாகும்... நோய்க்கு மருந்தாகும்

இசை இயற்கையின் வடிவம். இயற்கையின் அதிர்வலைகளும் இசையின் அலைகளும் ஒன்று போலவே அமைந்து உள்ளதில் இருந்தே இதனை நாம் அறியலாம். இயற்கையாக வளர்ந்துள்ள மூங்கிலில் காற்று மோதும் போது இசை பிறக்கிறது. இயற்கையின் பிரதிபலிப்பான இசையில் ஏற்படும் லயம், தாளம், காலப்பிரமாணம், ஆழம் யாவும் இயற்கையில் இருந்தே துவங்குகிறது.
கடலின் அலை ஓசை, காற்றின் ஓசை, காற்றில் இலைகள் ஆடும் ஓசை, மழைத்துளியின் ஓசை,
மரத்தில் துளை போடும் மரங்கொத்தியின் அலகின் ஓசை யாவுமே இசையாகத் தான் துவங்குகின்றன. இந்த இசைக்கு மனிதன் தன்னுடைய புத்திக்கூர்மையால் ஒரு கலையாக உருவம் கொடுத்திருக்கிறான்.

இசை அலைகள் : ஆய்வாளர்கள் இயற்கை அலைகளைப் போலவே இசை அலைகளும் உடலில் தோன்றும் நரம்பலைகளும் ஒன்றை ஒன்று ஒத்திருப்பதாக கூறுகின்றனர். மூளை மின்சார அதிர்வால் செல்களை செயல்படுத்துகிறது. இசை அதிர்வலைகள் மின்சார அதிர்வலைகளை ஒத்திருக்கின்றன, என நரம்பியல் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனித திசுக்கள், அணுக்கள், உறுப்புகள் இசை அலைகளால் மாற்றம் அடைகின்றன என்பதை சுவிஸ் டாக்டர் ஹான்ஸ்ஜென்னி உறுதிப்படுத்துகிறார். இசை மனிதனின் ஆன்மா, மனம், உடல் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பைகொண்டிருக்கிறது. இசையால் கோபம், சோகம், வீரம், நம்பிக்கை, காதல், நகைச்சுவை போன்ற உணர்வுகளை உருவாக்க முடிகிறது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் மனமும், உடலும் ஒரேநிலையில் இருக்க வேண்டும். இந்நிலை பாதிக்கப்படும் போது தான் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இசை கேட்பவரின் மனதை ஈர்த்து தன்னோடு அவரை ஐக்கியப்படுத்துகிறது. ஒரு பாடலாசிரியர் தன் எண்ணத்தை மனதில் படுகிற பொருளை அழகாக எழுத்தில் பாடலாக வடிக்கிறார். அதற்கு இசை அமைக்கும் போது
பாடலாசிரியரின் மன உணர்வும் ஆர்வமும் ரசிகனுக்குப் புரிகிறது. இதுவே இசையின் இயல்பு. இசையை அதன் பாவங்களையும், அர்த்தங்களையும் புரிந்துஅனுபவிப்பதில் தான் மனிதனின் ரசிப்பு தன்மை அடங்கியுள்ளது.

ஆன்மாவும், இசையும் : தியானம், ஜெபம், லயம் இவை எல்லாவற்றிற்கும் மேலானது இசை. சங்கீத மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் தன்னுடைய ஆந்தோளிகா ராக க்ருதியில் இசை எவ்வளவு மேலானது, என விளக்குகிறார்.பண்டைய காலத்தில் யோகிகளும், இசை கலைஞர்களும் மனதின் ஆழமான உணர்வுகளை துாண்டி பக்குவப்படுத்தும் மருந்தாக இசை பயன்படுகிறது என்பதை அறிந்திருந்தனர்.தம்புராவை ஸ்ருதி சுத்தமாக திரும்ப திரும்ப மீட்டும் போது அந்த நாத அலைகள் மனதை சாந்தப்படுத்தும். இதை ஒரு தெய்வாம்சம் அல்லது தங்கச்
சுரங்கம் என்று அறிஞர் ஓலிவியா டியுஹரிஸ்ட் மேட்டோக் குறிப்பிடுகிறார்.

இசையும் மனநிலையும் : இசையை மென்மையாகவும், மன உணர்ச்சிகளை எழும்பும்படி அழுத்தமாகவும் பாட முடியும். பாடும் ஸ்வரத்தின் ஸ்தாபியை பொறுத்து கேட்பவரின் மனநிலை மாறுகிறது. கீழ் ஸ்தாயில் பாடும் போது ரசிகரின் மனதில் மன அமைதி ஏற்படும். மேல் ஸ்தாயில் பாடும் போது பாடுபவர் கேட்பவர் இருவரின் உடலிலும் உள்ளத்திலும் அதிர்வையும், சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது. வேகமான தாள லயங்கள், உடலில் படபடப்பை ஏற்படுத்தி இதய துடிப்பை அதிகப்படுத்துகிறது. சீரான ஸ்வர லயத்தில் இதயத்துடிப்பும், சுவாசமும் சீராக அமைகின்றன. அபஸ்வரமாகும் போது சுவாசமும், இதயத்துடிப்பும் மாறுகிறது. உடல் தசைகளுக்கு ஸ்வரத்தின் உச்ச ஸ்தாயியாலும் அழுத்தத்தாலும் சக்தி கிடைக்கிறது.

இசையால் வசமாகா இதயம் : இசையால் நம் மனநிலை பலவாறாக பாதிக்கப்படுகிறது. நம்மை அறியாமலேயே நல்ல இசை நம்மை தன்வசப்படுத்துகிறது. மனத்தொய்வு ஏற்படும் போது கேட்கப்படும் நல்ல இசை நம் மனதில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது. ஆர்ப்பாட்டமான இசை, மனதை அலைக்கழிக்க வைக்கிறது. மென்மையான இசை, நம்மனத்துக்கு ஆறுதலையும், அமைதியையும் தருகிறது. இசையை அனுபவிக்கத் தெரிந்தவனுடைய வாழ்வு அர்த்தம் உள்ளதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் அமைகிறது. இசை மனக்கட்டுப்பாட்டையும் தரவல்லது. தியானத்திலும் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.விலங்குகளும், பறவைகளும் கூட இசையை கேட்டு மயங்குகின்றன. கோவிந்தன் குழலோசையில் பறவைகள், பசுக்கள் கட்டுண்டு கிடந்ததாக திவ்யபிரபந்தம் கூறுகிறது. இசையால் வசமாக இதயம் ஏது?

நாட்டுப்புற இசை : கல் தோன்றி மண் தோன்றா காலம் முதல் இசை மனிதனுக்கு ஒரு பாலமாக அமைந்து நல் எண்ணங்களை கொடுத்து நல் வாழ்வையும் கொடுத்து வருகிறது. தாலாட்டில் துவங்கி கொட்டு, பறை, முழக்கம், படகோட்டி யின் தெம்மாங்கு, கழனிகளில் களை எடுக்கும் உழத்தியர் பாட்டு, உழைத்து கொண்டே பாடும் தொழிலாளியின் நாடோடி பாட்டு, காதலிக்கு துாது
அனுப்பும் இனிய புல்லாங்குழல் ஓசை இவை அனைத்துமே உணர்ச்சியின் வெளிப்பாடாக அமைகின்றன.மன அமைதி, களிப்பு, அன்பு, ஆர்வம், பக்தி, வலி, ஏமாற்றம், திகைப்பு எல்லா
வற்றுக்கும் இசையே மொழியாக அமைகிறது. உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த வாய்சொற்கள் பயனற்று விடும் போது இசை அந்த பணியை செய்கிறது.இளம் குழந்தைகளை உறங்க வைக்க ஒரே சொற்றொடரை திரும்ப திரும்ப நிதானமாக தாய்மார்கள் பாடுகின்றனர். அதுவே தாலாட்டாகிறது. ஆராரோ ஆரிராரோ.. என நீலாம்பரி ராகத்தில் மென்மையாக பாடுவதும், குறிஞ்சியில் தாலேலோ என பாடுவதும் மென்மையான தாலாட்டாகிறது. தாலாட்டில் ஆர்ப்பாட்டமோ, அமர்க்களமோ இருப்பதில்லை.

இன்பம் தரும் இசை : இசை, கேட்பவர்களின் மனத்துக்கும், உணர்வுக்கும் ஏற்ப அருமருந்தாக அமைகிறது. நாதோபாசனை செய்கிறவர்களுக்கு இசை தெய்வாம்சமாக காட்சி கொடுக்கிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இசை, கேட்பவருக்கு தெய்வ தரிசனம் தருகிறது.
வாழ்வில் துன்பத்தையே அனுபவிக்கும் மனிதர்களுக்கு இசை மிகுந்த சக்தியையும், தன்னம்
பிக்கையையும் கொடுக்கிறது. ஞானம் இல்லாத பாமரனுக்கும் இசை இன்பத்தை கொடுக்கிறது.

நாத யோகம் : ஜடப் பொருளால் மாத்திரமல்லாமல் நாத அசைவின் சக்தியாலேயே உலகம் உருவானது என்பதை பவுதீக சாஸ்திர விஞ்ஞானிகளும் புரிந்து கொண்டுள்ளனர். இதன் பயனாகவே நாதத்தை, நாதப்ரம்மம் என வழிபட்டனர். தியாகராஜர், 'மனமே நாதத்தில் ஆசை கொண்டு அதிலேயே திளைத்து பிரம்மானந்தம் அடைவாயாக' என்கிறார்.கர்நாடக சங்கீதத்தை ஒரு அரிய பெரிய சாதனை என சொல்லலாம். ஆஹத இசை ஒரு சாமானியர்களின் கலை. கர்நாடக சங்கீதம் ஆஹத இசையை பிரமாண்ட சமுத்திரமாக உருவாக்கி இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஜன்ய ராகங்களும் 108 வகையான தாளங்களும் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டாலும் எல்லையை அடைய முடியாத பிரமிப்பு தான் தென்னிந்திய இசையின் பெருஞ்சிறப்பு.

நோய் தீர்க்கும் சில ராகங்கள் : நோய் தீர்க்கும் தன்மை கொண்டதாக உள்ளன.ஆனந்த பைரவி (நட பைரவி ஜன்யம்): சாந்த மான ராகம், பண்டைய கால கிராமிய பாடல்களில் வேரூன்றி வளர்ந்த ராகம். உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்துகளுடன் ஆனந்த பைரவி ராகமும் ஒரு வாழ்த்து பரிசு போல அமையும். மன அழுத்தம் கூடிய வேலைகளான போர் விமானத்தை ஓட்டும் பைலட்களுக்கும், அறுவைசிகிச்சைக்கு முன் டாக்டர், நோயாளி இருவருக்குமே ஆனந்த பைரவி ராகத்தை கேட்டால் மனதில் ஆனந்தமான அமைதி நிலவும்.
பைரவி: இது ஒரு சர்வகால ராகம். மூளைச்சிதறல் எனப்படும் மனம் குன்றியவர்களின் வெறியை அடக்கும் சக்தி வாய்ந்தது. மனதை பற்றற்ற நிலைக்கு கொண்டு செல்லும் மகிமை வாய்ந்த இந்த ராகத்தில் ரிஷிகளும், முனிவர்களும் மந்திரம் ஓதுகிறார்கள்.

தேவகாந்தாரி: வீரத்தை பிரதிபலிக்கும் ராகம். எதிர்மறை எண்ணங்களை மனதிலிருந்து
அகற்றுவதற்கும், பயம், தடுமாற்றம் தன்னம்பிக்கை அற்ற குணம், கோபம் இவற்றை நிவர்த்தி செய்யவும் இந்த ராகத்தை பாடியும், கேட்டும் பயன்பெறலாம்.

த்விஜாவந்தி: உடல் அயற்சியை போக்கவும், நரம்பு தளர்ச்சியை சரி செய்யவும் பாடப்படும் ராகம் இது. தலைவலிக்கும் நிவாரணி.

ஹிந்தோளம்: நளினமே இந்த ராகத்தின் ஜீவநாடி. மனதில் அமைதியும், மென்மையான
வருத்தம் கலந்த சாந்தமும்தெய்வீக உணர்வும் பிரதிபலிக்கும் ராகம் இது.
இறைவன் ஓசை, ஒலியெல்லாம் தானே ஆகி நிற்பவன். ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனும் இறைவனே. எனவே இசையை கற்பதும் கேட்பதும் இறைவழிபாடே எனலாம்.

-- முனைவர் சீ.பத்மலட்சுமி
இசை ஆராய்ச்சியாளர்
மதுரை
padmalakshmi.ssrgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement