Advertisement

உரத்த சிந்தனை : கூலிப்படை: சில புரிதல்கள்

ஒரு காலம் இருந்தது. பேட்டை யில் பஞ்சாயத்து என்றால், செட்டிக்குளம் தான் களம். சண்டைக்கான களம். மணல் வெளி என்பதால் செட்டிக்குளம் தான் பேட்டைக்கான, 'ஒண்டிக்கொண்டி' நடக்கும் பிரதான இடமாக, சிறப்புற்று விளங்கியது.

வாய்த்தகராறு முற்றினால், ஒண்டிக்குகொண்டிக்கான ஏற்பாடு கள், சக பயல்கள் மூலம் நடந்து விடும். சண்டைக்கான விதிமுறைகளும் உண்டு. எதிராளி போதுமென, 'அம்பேல்' சொல்லி விட்டால், அடிப்பவன் சண்டையை நிறுத்தி, தோற்றவனுக்கு கை கொடுக்க வேண்டும். சண்டையிட்டு கொண்ட இருவரும் புன்னகைத்து கொள்ள வேண்டும். இது, நடுவர்களின் கறாரான தீர்ப்பாகும்.

இதே நடுவர்கள், அடுத்த ஒண்டிக்குகொண்டிக்கு தயாரானால், போன சண்டையில் சண்டைக்காரர்களாக இருந்தவர்கள், நடுவர்களாக மாறுவர். இப்படியொரு சண்டை முறை, பேட்டையில் இருந்தது. ஒண்டிக்கொண்டியில் தீவிரத்துடன் சண்டை போட்டு கொண்டாலும், அடுத்த முறை அவனை ஒண்டிக்கொண்டியில் ஜெயித்து விட வேண்டும் என்று தான், பயல்கள் இருப்பான்களே தவிர, அவனை முற்றிலும் தீர்த்து விட வேண்டும்; கொன்று போட்டு விட வேண்டும் என்ற வன்மம் ஏதும், அப்போது இருந்ததில்லை.

வீரத்தில் நீயா, நானா என, பார்த்து விடலாம் என்றிருந்த சண்டை முறை தான், ஒண்டிக்கொண்டி.ஒரு தலைமுறை, விளையாட்டு களாலும், உடற்பயிற்சிகளாலும் வளர்ந்து கொண்டிருந்தது. பேட்டை யில் நிறைய பயல்களுக்கு குத்துச்சண்டை வீரனாகவும், புட்பால் பிளேயராகவும், கராத்தே வீரனாகவும் ஆக வேண்டுமென்று கனவு இருந்தது. அந்த லட்சியம், அவனை செலுத்தி கொண்டிருந்தது.

இப்போது இருக்கிற தலைமுறை, முற்றிலும் வேறாக மாறி விட்டிருக்கிறது. பெரும்பாலான இளைய தலைமுறைக்கு, லட்சியம் என்று ஒன்றில்லை. சிறிய வாய் தகராறுக்கு கூட கத்தியால் வெட்டி சாய்க்கிற சமூகமாக மாறி விட்டிருக்கிறது. தான் என்னவாக போகிறோம் என்பதில் ஏக குழப்படிகள் இருந்து கொண்டிருக்கிறது.

இந்த மாதிரியான குழப்படிகளில் இருக்கும் சிறுவர்களை தான், கூலிப்படைகளாக மாற்றி கொண்டிருக்கிறது, சில நிறுவனங்கள். நிறுவனங்கள் என்றதும், அலுவலகமாகவோ, ஆலைகளாகவோ நினைத்து கொள்ள தேவையில்லை. இவர்கள் நம்மை சுற்றி இருப்பவர்கள். அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள்; வியாபாரத்தில் செழித்து கொண்டிருப்பவர்கள். திடீர் பொது சேவை செய்பவர்களாக நம்மில் உலாவுபவர்கள் மற்றும் தொழில்முறை கொலைகாரர்களும் இவர்கள் தான்.

இப்போது நடந்து கொண்டிருக்கும் கொலைகளில், கூலிப்படைகளாக, செய்திகளில் வருவோர், பெரும்பாலும் இருபதிலிருந்து, முப்பது வயது இளைஞர்கள் தான் என்கிறது ஒரு ஆய்வு. எப்படியெல்லாம் கொலை செய்யலாம் என்று சொல்லி கொடுக்கிறது ஒரு கும்பல். கொலை செய்தால்
எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்று சொல்லி கொடுக்கிறது, இன்னொரு கும்பல். சொற்ப காலத்தில் எல்லா விதமான சந்தோஷங்களையும், அனுபவித்து விட வேண்டும் என, நினைக்கிற அபாயகரமான மனோபாவம் தான், ஒருவன் கூலிப்படையாக மாறுவதற்கான முதல் தகுதியாக கொள்ளப்படுகிறது.

ஆகவே, அந்த சிறுவனின் அற்பத்தனமான எந்த ஆசைகளையும், ஏவி விடும் இந்த கும்பல்கள் தீர்த்து வைக்கின்றன. சிறிய வயதில் மது, மாது, சூது என, எல்லாவற்றையும் பார்த்து விடுகிற மயக்கம், எல்லா வக்கிரங்களையும், புனிதமாக பார்க்க பழகிக் கொள்கிறது. உதாரணத்திற்கு, 'குவார்ட்டருக்காக கொலை செய்தேன்' என, கூலிப்படையில் ஒருவன் பேட்டி கொடுக்கிறான்.
கூலிப்படையாக மாறும் இவர்களுக்கு, ஒருவனை கொல்ல எந்த காரணமும் தேவை இல்லை. காசு கொடுத்தால் எந்த உயிரையும் எடுத்து விடலாம் என்ற நிலைக்கு இவர்கள், இதை ஒரு தொழிலாக மாற்றி கொள்கின்றனர்.

கூலிப்படைகளாக மாறும் இவர்கள், நம் கண்ணுக்கு தெரிவதில்லை. அரசியல் கொலைகளிலிருந்து, கள்ளக்காதல் கொலை வரை, இந்த கூலிப்படை கலாசாரம் இருக்கிறது. 'இது என்ன மாதிரியான சமூகம். இதை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும்...' என்ற குரல், உங்களை போலவே எனக்கும் இருக்கிறது. ஆனால், ஒரு வகையில் இந்த கூலிப்படையாக மாறி போகும் இளைஞர்களுக்கு, நாமும் ஒரு காரணமாகி போகிறோம் என்பதையும், புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

யாருடனும் நாம் பேசுவதில்லை. உரையாடல் அற்று போய்விட்டது. நம் பிள்ளைகள், 10 வயதிற்குள்ளே எல்லாவற்றையும் தெரிந்து கொள்கின்றனர் அல்லது தெரிய வைத்து விடுகின்றனர்.
இதில், சமத்தான பிள்ளைகள், நாம் முன்பே சொன்னது போல, தனக்கான லட்சியங்களோடு வாழ்வை முன் நகர்த்துகின்றனர். பதின் வயதுகளில் ஒரு பிள்ளை கூலிப்படையாக மாறுகிறான் என்றால், அவனை வழிநடத்த ஒரு ஆயன் இல்லாமல் போனது தான் என்பதை நாம் உணர மறுக்கிறோம்.

வளரும் பிள்ளைகளோடு, சமூக அரசியலை பேசி பழக வேண்டும். பிள்ளைகளின் ஏதாவது ஒரு திறனை நாம் பாராட்ட பழக வேண்டும்.ஒரே வீட்டில் ஏதும் பேசாமல், அவனின் உணர்வுகளை மதிக்காமல், யாரோடு பழகி கொண்டிருக்கிறான் என்று தெரிந்து கொள்ளாமல், தனித்து விடப்படும் அவனை, அந்த கும்பல் கைப்பற்றி கொள்கிறது; அவனின் திறமைகளை பாராட்டுகிறது; அவனின் ஆசைகளை நிறைவேற்றுகிறது.

இப்படியான மூளை சலவையில் எந்த லட்சியமுமின்றி தனித்து விடப்பட்ட சிறுவன், கூலிப்படையாக மாறி கத்தியை எடுக்கிறான். காரணமில்லாமல் கத்தியை எடுத்தவன்... எந்த காரணமும் இல்லாமல், ஒரு நாள் சாகடிக்கப்படுகிறான். இந்த கூலிப்படை எனும் அற்ப வாழ்வை, நம் பிள்ளைகளோடு பேசாமல் இருந்து வருகிறோம்.

ஒரு நடு சாமத்தில், காவல் துறை கதவு தட்டுகிற போது, எல்லா பெற்றோரையும் போலவே,
'என் புள்ள அப்படிப்பட்டவன் இல்ல சார்... நாங்க அப்படி வளக்கலியே சார்...' என, அழுது புலம்பும், தத்தி பெற்றோராக இருந்து தொலைக்கிறோம். சமீபத்தில், சிறுவர் சீர்திருத்த பள்ளியில், 33 சிறுவர்கள் தப்பிச் சென்றனர். தப்பியவர்களை பிடிக்க சென்ற போது, சில சிறுவர்கள், தற்கொலை முயற்சியாக பிளேடால் தங்களை கிழித்திருக்கின்றனர்.

தன்னையே கிழித்து கொள்ளும் அந்த சிறுவனிடம், கொலைகார வியாபாரிகள், ஐந்து நிமிடம் பேசினால் போதும். எந்த குற்ற உணர்வும் இல்லாமல், ஒருவனை கழுத்தறுத்துப் போடும் கூலிப்படையாக மாறி விடுவான் என்பது தான் நிதர்சனம்.இதில், காமெடி என்னவென்றால், சீர்திருத்த பள்ளியின் நிர்வாகிகளும், காவல் துறை அதிகாரிகளும், மதில் சுவரை இன்னும் பெரிதாக கட்டலாம் என, முடிவு எடுத்திருக்கின்றனர். சுவரை பற்றி சிந்திக்கும் நாம், சிறுவர்களின் மன நிலையை யோசிப்பதே இல்லை என்பது தான் வேதனை.

ஆகவே, பிள்ளைகளை நாம் வளர்ப்பதில்லை; அவர்களாகவே வளர்கின்றனர். இளைய தலைமுறையோடு பேசுவோம். உயிரின் உன்னதங்களை அவர்களுக்கு உணர்த்துவோம். உயர்ந்த லட்சியங்களில் பிள்ளைகள் வளருமெனில், எந்த அற்ப ஆசைகளும், மூளை சலவைகளும், நம் பிள்ளைகளை கூலிப்படையாக மாறவும், மாற்றவும் முடியாது என, நம்புவோம்!

- பாக்கியம் சங்கர் - எழுத்தாளர்
இ - மெயில்:
bakkiyam.filmsgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    சரி என நினைக்கிறேன். சரியான வேலை வாய்ப்பு இன்மையும் ,பண தேவை அதிகமாகி விட்டதும் காரணம் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement