Advertisement

உன் வாழ்க்கை உன் கையில்!

வாழ்க்கை இது கேள்விக்குறி
விடை தெரியா வேளையிலே!
வெற்றிடமே காட்சி தரும்
விடுகதையாய் பார்க்கையிலே!

என்பதற்கேற்ப வாழ்க்கை என்பது பலருக்கு புரியாத புதிராகிகுழப்பம் ஏற்படுத்துகிறது. வாழ்விலே பல்வேறு அனுபவங்கள், சோதனைகள், சங்கடங்கள், சிக்கல்கள் உள்ளன. வாழ்க்கை கல்வி என்பது வாழ்வதற்கு நம்மை தயார் செய்யும் உலக ஞானம்தான்.

'வாழ்தல் என்பது ஒரு கலை
வெகு சிலருக்கு அது ஓர்
ஆனந்த அலை'
நீங்கள்தான் உங்கள் நண்பன்!
நம்முள் இருக்கும் ஜீவனில்
எல்லாம் இருக்கிறது.
* மகத்தான சக்தி இருக்கிறது.
* எதையும் சமாளிக்கும் இயல்பு இருக்கிறது
* தெரிந்துக்கொள்ளும் முன்
னேறும் ஆர்வம் இருக்கிறது
* அன்பும், கருணையும் இருக்கிறது
* இந்த ஜீவன் வாழ விரும்புகிறது -சாக அல்ல
* எல்லாவற்றையும் அனுபவிக்க விரும்புகிறது - அழுது புலம்ப அல்ல.

சுவாமி விவேகானந்தரும் 'உனக்குள் அளவற்ற ஆற்றலும் அறிவும் வெல்ல முடியாத
சக்தியும் குடிகொண்டுள்ளன. அவற்றை வெளியே கொண்டு வாருங்கள்' என்கிறார்.
எனவே உங்களை ஒருநண்பனாக நீங்களே தட்டிக்கொடுத்து அழைத்துச் செல்லுங்கள்.

உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்!
சிரித்து மகிழ்ந்து வாழ்ந்துவிடு!
கோபமாக இருப்பதை
கோபத்தில் இருப்பவன் உணர்வதில்லை. துக்கமாக இருப்பதை துக்கத்தில் இருப்பவன் அறிவதில்லை.

வாழ்க்கை எனும் கடையில் உற்சாகம், நம்பிக்கை, வலிமை, ஆரோக்கியம், துடிப்பு, அன்பு, உண்மை, பரிவு, உதவி என்று பல நல்ல பழக்கங்களையும், பகைமை, பொறாமை, வெறுப்பு, கோபம், சுடுசொல், பொய் என்று பல அழுகிய பழங்களையும் அடுக்கி வைத்திருக்கிறார்கள். இதில் நீங்கள் எதை தேர்ந்தெடுத்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது உங்கள் கைகளில்!

வாழ்க்கையில் லட்சியம் : 'இன்று புதிய நாள். இதோ ஒரு புதிய சூரியன். இதோ ஓர் இதம் தரும் புதிய காற்று. கல்லுடன் குலாவுவேன். மனிதர்களிடம் புன்னகையுடன் பேசுவேன்' என உற்சாகத்தை தேர்ந்தெடுங்கள்.'என்னால் எதுவும் முடியும். எனக்குள் ஒரு மாபெரும் சக்தி குடிகொண்டிருக்கிறது. ஆண்டவன் என் அருகில் இருக்கிறார். நான் சரியான பாதையில் சென்று
கொண்டிருக்கிறேன்' என்கிற எண்ணங்கள் உள்ளத்தில் ஆழமாக வேர்விடும்போது அது நம்பிக்கையாக, வாழ்வின் லட்சியமாக உருப்பெறுகிறது.இவ்வாறு உற்சாகம், நம்பிக்கை, வலிமை இவற்றை வாழ்க்கையின் லட்சியங்களாக கொண்டால் உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்!
தவறை திருத்திக்கொள்ளும் மனோபாவம் 'வெற்றிகளில் இருந்து நாம் எந்த பாடத்தையும் படிக்க முடியாது; தவறிலிருந்துதான் நாம் கற்றுக்கொள்ள முடியும்' என்கிறார்கள்
அறிஞர்கள். மேலும் 'தவறுகள் உனக்கு வழிகாட்டும் தெய்வங்கள்' என்கிறார் சுவாமி விவேகானந்தர். தவறை தவறு என்று ஏற்றுக்கொள்வதற்கு அசாத்திய துணிவு வேண்டும். பெருந்தன்மை
வேண்டும். அவ்வாறு நீங்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கை

உங்கள் கைகளில்! மனம் எனும் அதிசய விளக்கு

முன்னேற விரும்புகிறவர்கள் முதலில் தங்களை பற்றி நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.
தங்களிடம் 'மனம் எனும் அற்புத விளக்கு' உள்ளது என்பதைதெரிந்துக்கொள்ள வேண்டும்.
முன்னேற விரும்புகிறவர்களை முடக்கியிருப்பது நம்மால் முடியுமா? என்கிற சந்தேகமும் பயமும்தான். எனவே செக்கு மாட்டு வாழ்வை உதறித்தள்ளுங்கள். சவால்களை நாடுங்கள். சவால்களை மேற்கொள்ளும்போதுதான் நம்மிடமுள்ள குழுத்திறமையும் புடம் போடப்படுகிறது. முழுத்திறமையும் வெளிவருகிறது. எனவே சவால்களை பொறுப்பு களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சாதனைகளை உங்களுடைய தாக்குங்கள். இனி உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்!

அனுபவித்தலே வாழ்வு

'பிறப்பின் வருவது
யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக்
கேட்டேன்
இறந்து பாரென இறைவன்
பணித்தான்
அனுபவித்தேதான் அறிவது
வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்
ஆண்டவன் சற்று அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான் என்றான்'

என்று கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள் இங்கு நினைவு கூரத்தக்கன.
வாழ்க்கை என்பது இறைவனால் எழுதப்பட்ட கவிதை. அதற்கு நல்ல ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டு ஆனந்தமாக வாழுங்கள். விபரீதமாக அர்த்தம் சொல்லி விரக்தியாகி ஸ்தம்பித்து விடாதீர்கள். சங்கீதம் பாடிச்செல்லும் ஓடையை போல உங்கள் வாழ்வும் எப்போதும் உயிர்ப்புடன் உள்ளதாக இருக்கட்டும். இனி உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்!

சலிப்பின்றி வாழுங்கள்! : வாழ்க்கையை நரகமாக செய்வதற்கு சலிப்பு ஒன்று போதும். இயற்கை சலிப்படைந்து ஒரே ஒரு நாள் தன் இயக்கத்தை நிறுத்தினால் இவ்வுலகம் என்னவாகும்?
எனவே மனம் சலிப்பு எனும் சரிவில் உங்களை வீழ்த்திவிடாமல் இருக்க அதன் இறகுகளை விரித்து உதறுங்கள். வானத்தில் வட்டமிடுங்கள். இனி உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்!

அழகுணர்ச்சியோடு செயல்படுங்கள்! : எந்த செயலையும் அழகுணர்ச்சியுடன் அனுபவித்து செய்யும்போது அது கலையாகிறது. எப்போதும் பரபரப்போடும், படபடப்போடும் பறந்து கொண்டிருப்பவர்களால் வாழ்க்கை ஏட்டின் இன்பப் பக்கங்களை புரட்ட முடியாமலேயே போய்விடும். எனவே எப்போதும் அழகுணர்ச்சியோடு இருங்கள்; எதிலும் அழகுத்தன்மை மிளிருமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

வாழும் கலையின் ரகசியம் : வாழ்க்கை என்பது பரந்த வானம் போன்றது. அதில் சுட்டெரிக்கும் சூரியன் வரலாம். குளிர்ச்சி தரும் சந்திரன் வரலாம். இரண்டின் வரவையும் ஏற்றுக்கொண்டு பயன்பெறுங்கள்.எனவே வாழ்வில் எதையும் ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள்.

உண்மையான வாழ்தல்

'நேற்று என்பது உடைந்த பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது உன்கை வீணை
மீட்டு... மீட்டு... பாட்டு... பாட்டு...
என்ற வரிகளுக்கேற்ப, கடந்த காலத்தில் இருப்பவர்கள் என்போர் கடந்த காலத்தில் பட்ட காயத்தை நினைத்து இப்போதும் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பார்கள். அடுத்து எதிர்காலம் பற்றிய யோசனைகளில் இருப்பவர்கள் நிகழ்காலத்தை இழந்துவிடுபவர்கள். எனவே 'இன்று புதிதாய் பிறந்தோம்' என்ற பாரதியின் வரிகளை நினைவில் நிறுத்தி நிகழ்காலத்தில் வாழுங்கள்.
நாம் வாழும் வாழ்க்கையில் 'உயிரோடு இருப்பது வேறு; உயிர்ப்போடு இருப்பது வேறு'. வாழ்வது உண்மையிலேயே ஒரு கலைதான்.வாழும் கலையை புரிந்துக்கொண்டால், உங்களால் போர்க்களத்தின் நடுவிலும், புல்லாங்குழல் இசையை ரசிக்க முடியும். நெருப்புக்குண்டத்தில் அமர்ந்துக்கொண்டும் நிலவை ரசிக்க முடியும்.

'கடந்ததை பற்றி வருந்தாதே!
வருவது பற்றி கற்பனை செய்யாதே!
நிகழ்வதை திறம்படச்செய்!
வாழ்க்கை வேறு எங்கேயும் இல்லை. இங்கேயே இதோ
உங்கள் கைகளில்தான்
உள்ளது. இனி... உன் வாழ்க்கை உன் கையில்!

-சு. கவிதா, ஆசிரியை
ஊ.ஓ.ந. பள்ளி, நெடுங்குளம்
kavithasasikrishnangmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement