Advertisement

விடுமுறையில் விளையாடுங்கள்!

முடிந்தது தேர்வு, விட்டாச்சு லீவு என்று மகிழ்ச்சி அடையும் மாணவர்களில் பெரும்பாலோர் இனி வீட்டில் 'டிவி' முன்னால் உட்கார்ந்து பொழுதைக் கழிக்கப் போகிறார்கள்; அல்லது வாட்ஸ்-ஆப் முகநுால் என்று நேரத்தைச் செலவழிக்கப் போகிறார்கள். இதுவரை 'படிப்பு, தேர்வு' என்று இருந்தவர்களுக்கு, இந்த இளைப்பாறுதல் தேவைதான் என்றாலும் இந்த விடுமுறைக் காலத்தில் தங்கள் குழந்தைகளை கம்ப்யூட்டர் கோர்ஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ், இசைப்பயிற்சி நடனம், கராத்தே என்று பல வகுப்புகளுக்கு அனுப்பினால் நல்லது என்று பெற்றோர் நினைக்கின்றனர். மாணவன், பெற்றோர் இந்த இருவருமே மறந்து போன ஒரு விஷயம் விளையாட்டு. பள்ளி நேரத்தில்தான் வீட்டுப்பாடம், படிப்பு, தேர்வு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து
விளையாட நேரமில்லாமல், மாணவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள் என்றால், விடுமுறையிலாவது விளையாட்டுக்குக் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாம் அல்லவா? 'ஓடி விளையாடு பாப்பா! நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா! கூடி விளையாடு பாப்பா!' என்று 'பாப்பா பாட்டி'லும் 'உடலினை உறுதி செய்' என்று 'புதியஆத்திசூடி'யிலும் பாரதியார் விளையாட்டின் முக்கியத்து வத்தை, குழந்தைகளுக்குச் சொல்லியிருக்கிறார். காரணம் விளையாட்டுப் பயிற்சிகளை குழந்தைப் பருவத்திலேயே தொடங்கினால்தான் அவற்றின் முழு பலன் கிடைக்கும். நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், முதலில் சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும். அரிசி,கோதுமை போன்ற முழுத்தானிய உணவுகளையும், பால், பருப்பு, முட்டை, பயறு, காய்கறி, பழம், கீரை
போன்றவற்றையும் நம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்தபடியாக சரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாரத்தில் குறைந்தது 5 நாட்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.

ஏன் செய்ய வேண்டும்? : ஒரு புதிய சைக்கிளைவாங்குகிறீர்கள். அதைஓட்டாமல் வீட்டிலேயே வைத்துக் கொண்டால் என்ன ஆகும்? நாளாக ஆக, சைக்கிள் துருப்பிடித்து கிரீச் கிரீச் என்று சத்தம்போடும். அதேநேரத்தில் அந்த சைக்கிளை தினமும் துடைத்து மசகு போட்டு சாலையில் ஓட்டி வந்தால் எப்படி இருக்கும்? அந்தச் சைக்கிள் பயணமே ஆனந்தம் தரும். இல்லையா? அது
போலவே 206 எலும்புகள், 600க்கும் மேற்பட்ட தசைகள், தசைநார்கள் மற்றும் 20 க்கும்
மேற்பட்ட உள்ளுறுப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளது, நமது உடல்.உடற்பயிற்சிகளைச் செய்யச் செய்யத்தான், எலும்பும் தசையும் வலுப்பெற்று, மூட்டுகள் நெகிழ்வுத்தன்மை அடைந்து அவற்றின் இயக்கங்கள் எளிதாகி, ஆரோக்கியம் காக்கும் உடற்தகுதியை நமக்குத் தருகிறது.
அதற்குத்தான் உடற்பயிற்சி தேவைப்படுகிறது.

ஏரோபிக்ஸ் பயிற்சிகள் : நம் உடற்தகுதியை நிர்ணயிக்கின்ற உடற்பயிற்சிகளில் முக்கியமானது ஏரோபிக்ஸ் பயிற்சிகள். இவை காற்றில் உள்ள ஆக்ஸிஜனை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பயிற்சிகள். நடப்பது, ஓடுவது, நீச்சலடிப்பது, சைக்கிள் ஓட்டுவது, கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, ஹாக்கி, கோக்கோ, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஸ்கிப்பிங் … இவை எல்லாமே ஏரோபிக்ஸ் பயிற்சிகள் தான்.

என்ன நன்மை? : விளையாடும்போது, நாம்வேகமாகவும் ஆழமாகவும் சுவாசிக்கிறோம். அப்போது அதிக அளவு ஆக்ஸிஜன் உடலுக்குள் சென்று, ரத்தத்தில் கலக்கிறது. இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. இதன் பலனால் உடலில் ரத்தம் வேகமாகவும், அதிகமாகவும் சுற்றிவருகிறது. அப்போது மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள்கூட விரிந்துகொடுக்கின்றன. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ரத்தம் செல்வது அதிகரிக்கிறது. சாதாரணமாக, ஒரு நிமிடத்தில் 5 லிட்டர் ரத்தம் நம் உடல் முழுவதும் சுற்றிவரும். நாம் விளையாடும்போது, ஐந்து மடங்கு ரத்தம் ( 25 லிட்டர் ) அதிகமாக சுற்றி வரும். இதனால் உடலில் உருவாகும் கழிவு முழுவதும் வெளியேறி, சீக்கிரமே ரத்தம் சுத்தமாகிறது. உடலின் வெப்பம் குறைந்து புத்துணர்ச்சி தருகிறது. இதனால் நாள்முழுவதும் சுறுசுறுப்புடன் வேலை செய்யமுடிகிறது.

நோய்கள் நெருங்குவதில்லை! : தினமும் விளையாடுபவர்களுக்கு பல நோய்கள் அருகில் வருவதில்லை. முக்கியமாக, விளையாட்டுப் பயிற்சிகள்மாரடைப்பைத் தடுக்கும். நுரையீரல்களைக் காக்கும். சர்க்கரை நோயைக் குறைக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். கொழுப்பைக் கரைக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். கை, கால், மூட்டு, முதுகு, இடுப்பு, தோள்பட்டை போன்ற பகுதிகளில் தசை இறுகி வலி ஏற்படுவது தடுக்கப்படும். உடலின் வடிவத்தை அழகாக்கும். எலும்புகளையும் தசைகளையும் வலுவாக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.மன அழுத்தத்தைக் குறைக்கும். சோர்வை நீக்கும். நினைவாற்றலைப் பெருக்கும். ஆரோக்கிய வாழ்வுக்கு வழி அமைக்கும்.

குறைந்த நேரம் : வருத்தத்துக்குரிய விஷயம்என்னவென்றால் இன்றைய குழந்தைகள் விடுமுறை நாட்களில் விளையாட்டுக்கு ஒதுக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது. காரணம் ஒவ்வொரு வீட்டையும் ஆக்கிரமித்துள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். இந்தப் பழக்கம் மாறவேண்டும். இவர்கள் தொலைக்காட்சியைப் பார்க்கும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு, விளையாட்டுக்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். விளையாட்டும் உடற்பயிற்சியும் குழந்தை களுக்குக் குறையும்போது, மன திடமும் உடல் திடமும் குறையும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமலே
குழந்தைகள் வளருவார்கள். இது ஆரோக்கியமற்ற சமுதாயத்துக்கு வழிவிடும். பின்னர், அது நாட்டின் பொருளாதார பலத்தையே பலவீனமாக்கிவிடும். எனவேதான், குழந்தைகளுக்கு விளையாட்டுப் பயிற்சிகள் அவசியம் என்கிறோம்.விளையாடுவதற்குக் காலை அல்லது மாலை வேளையைத் தேர்ந்தெடுப்பதுநல்லது. உங்களுக்குப் பிடித்த எந்த விளையாட்டையும் விளையாடலாம். தினமும் குறைந்தது 30 நிமிடத்திலிருந்து அதிகபட்சமாக 45 நிமிடங்கள் வரை விளையாடுவது ஆரோக்கியத்தைக் காக்கும்.

அனரோபிக்ஸ் பயிற்சிகள் : ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்களில், பிட்னஸ் சென்டர்களில் டம்பெல், பார்பெல், கம்பி போன்றவற்றின் உதவியுடன் செய்யப்படும் எடை துாக்கும் பயிற்சிகள் மற்றும் தசைப்பயிற்சிகள் அனரோபிக்ஸ் பயிற்சிகளைச் சேர்ந்தவை. இவை தசைகளுக்கு வலுவூட்டும்; உடலின் உறுதிக்கும் தசைகளின் பொலிவுக்கும் உதவும். இடுப்பு, தொடை, கால், மார்பு போன்ற பகுதிகளில் தேவையற்ற கொழுப்பு சேருவதைத் தடுக்கும். உடலை 'சிக்ஸ்பேக்' போல கச்சிதமாக வைத்துக்கொள்ள உதவும்.

டாக்டர் கு.கணேசன்
மருத்துவ இதழியலாளர்
ராஜபாளையம்.
gganesan95gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

    அபார்ட்மெண்டில் அடைந்திருக்கும் குழந்தைகள் எங்கே விளையாடுவது?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement