Advertisement

பகவான் ரமணரின் வாழ்க்கை நெறி

இந்தியா உலகப் புகழ் பெறுவதற்குக் காரணம் தாஜ்மஹால் போன்ற சிறந்த கட்டடங்கள் மட்டும் அல்ல; இமய மலையும், கங்கை ஆறும், கடற்கரையும் போன்ற இயற்கைப் பெருமைகள் மட்டும் அல்ல. பல நுாற்றாண்டுகளாக இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து புகழொளி பரப்பி வரும் பெருமக்களே பெரிய காரணம் ஆவார்கள். உண்மையை ஆராய்ந்தால், இயற்கைப் பெருமைகளும் செயற்கைச் சிறப்புகளுமான மலை, கட்டடம் முதலியவற்றை விட, அழியாப் புகழைத் தேடித் தருகின்றவர்கள் இப் பெருமக்களே ஆவார்கள்” என்பார் பேராசிரியர் மு.வரதராசனார். அவரது மணிமொழிக்கு இணங்க, பாரத மணித்திருநாட்டிற்கு - தமிழ் மண்ணிற்கு - பீடும் பெருமையும் அழியாப் புகழும் தேடித் தந்த அருளாளர்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் ரமண முனிவர். விருதுநகர் அருகே திருச்சுழி என்னும் சிற்றுாரில் பிறந்து, அருணாசலப் பெருமான் வீற்றிருக்கும் திருவண்ணாமலையில் முக்தி அடைந்த ஆன்மிகப் பேரொளி அவர்.“அவரவர் பிராப்தப் பிரகாரம்அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது;நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம்.ஆதலின், மௌனமா யிருக்கை நன்று” என்பதே பகவான் ரமணரின் 71 ஆண்டுக் கால நிறைவாழ்வு (1879--1950) உணர்த்தும் தலையாய செய்தி ஆகும்.பகவான் ரமணரின் உபதேசத்தை மூன்றே சொற்களில் ரத்தினச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்படிச் சொல்லலாம்.
'நீ உன்னை அறி!' : அறிவு இரு வகைப்படும். ஒன்று, பிற பொருளைப் பற்றிய அறிவு. அது ஒருவன் எவ்வளவு தான் கற்றாலும் முழுமைஅடையாது. 'அறிதொறும்அறியாமை கண்டற்றால்'என்னும் வள்ளுவரின் வாக்கு இங்கே நினைவு கூரத்தக்கது. இன்னொன்று, தன்னைப் பற்றிய அறிவு. இது உறவு நிலையைக் கடந்தது. மனதிற்கு அப்பாற்பட்டது.
வித்தியாசமான சிந்தனை : ரமண முனிவரின் ஆசிரம தோட்டத்தில் அரிய மூலிகைகளை வளர்த்து வந்தார்கள். ஒரு நாள் சில பசு மாடுகள் தோட்டத்திற்குள் நுழைந்து செடிகளைத் தின்றுவிட்டன. இதைக் கண்ட பக்தர்கள் 'மாடுகள் செடிகளை அழித்து விட்டன' என்பதையே திருப்பித் திருப்பிச் சொல்லியவாறு மாடுகளின் மீதே குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்களுடைய சிந்தனையை வேறு திசையில் திருப்பினார் ரமண முனிவர்.“தோட்டத்திற்குள் பசு மாடு வரக்கூடாது என்பது நமக்குத்தான் தெரியும். பசு மாட்டுக்குத்தெரியாது. தெரியும்படி செய்யவும் முடியாது. இந்த நிலையில் தோட்டத்துக்கு நன்றாக வேலி போட்டுக் காப்பாற்றி இருந்தால் மாடுகள் நுழைந்திருக்குமா? நாம் எதைச் செய்யவில்லையோ அதை நினைக்காமல், பசு மாடு தெரியாமல் இயல்பாகச் செய்வதை நினைத்துக் கோபப் படலாமா? செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருந்தது நம் குற்றம் அல்லவா?” என்று சிரித்துக் கொண்டே பக்தர்களிடம் வித்தியாசமான ஒரு வினாவை முன் வைத்தார் ரமண முனிவர்.
மவுன உபதேசம் : ஒருவர் ரமண மகரிஷியை, “ஏன் தாங்கள் ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு உபதேசம் செய்வதில்லை?” என்று கேட்டார். அதற்கு ரமணர் கூறிய பதில்:“நான் அதைச் செய்யவில்லை என்று உனக்கு எப்படித்தெரியும்? மேடை மீது ஏறி மக்களுக்குச் சொற்பொழிவு செய்வதுதான் உபதேசமா? உபதேசம் என்பது அறிவைப் புகட்டுவது. மவுனம் ஒன்றினால் தான் உண்மையான உபதேசத்தைச் செய்ய முடியும். ஒரு மணி நேரம் ஆரவாரமான பேச்சை ஒருவன் கேட்கிறான். கேட்கும் போது உற்சாகமாக இருக்கிறான். பிறகு அந்தப் பேச்சிலே கேட்டபடி தன் வாழ்வைத் திருத்திக் கொள்ள அவன் முயற்சி செய்வதில்லை. பேச்சு நன்றாக இருந்தது என்று சொல்கிறான். அது போதுமா? இன்னும் ஒருவன் பரிசுத்தமான ஒரு சன்னிதியில் அமர்ந்து சிறிது நேரத்தில் தன் வாழ்க்கை நோக்கம் முழுவதும் மாற்றிவிடுகிறான். இந்த இரண்டு உதாரணங்களில் எது சிறந்தது? பயனின்றி உரக்கப் பேசுவது நல்லதா? மவுனமாக அமர்ந்து ஆன்ம சக்தியை எங்கும் பரப்புவது நல்லதா?”
'வந்த வழியே போ!' : 1940ல் ஓர் அன்பர்ஆசிரமத்துக்கு வந்தார். ரமணர் முன்னிலையில் அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தார்.“சுவாமி, நான் மேல்நாட்டுத் தத்துவ சாஸ்திரங்களை எல்லாம் படித்திருக்கிறேன். அப்படியும் உண்மையை அறிய அவை ஒன்றும் பயன்படவில்லை. நம்முடைய ரிஷிகளோ ஒருவர் சொன்ன மாதிரி இன்னொருவர் சொல்வதில்லை. சங்கரர், 'அகம் பிரம்மாஸ்மி என்று சொல்லிக் கொண்டே இரு! நீ பிரமம் ஆகி விடுவாய்' என்கிறார். மத்துவாச்சாரியாரோ 'பிரம்மம் எப்போதும் ஆன்மாவினின்றும் பிரிந்து வேறாகவே இருப்பது' என்று சொல்கிறார். தாங்களோ, 'நான் யார் என்று விசாரித்தால் சரியான இடத்தை அடையலாம்' என்று சொல்கிறீர்கள். இப்படியே வேறு பல பெரியவர்களும் வெவ்வேறு வழிகளைச் சொல்கிறார்கள். இவை எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கின்றனவே, எது சரி?” என்று கேட்டார்.ரமணர் சிறிது நேரம் பேசாமல் இருந்தார். அந்த அன்பர் ஐந்து மணித்துளி சும்மா இருந்து விட்டு மறுபடியும் சற்று உரத்த குரலில், “சுவாமி, நான் எந்த வழியிலே போவது?” என்று கேட்டார்.ரமணரோ மிகவும் அமைதியாகக் கையை மெல்ல அசைத்து “வந்த வழியே” என்று சொன்னார்.சமத்துவம் என்பதே வாழ்க்கைரமணர் வாழ்வில் நிகழ்ந்தஅன்றாட நிகழ்வுகளைப் பார்த்தா லும் அவர் கருணைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து, எப்பொழுதும் சமத்துவத்தையே வாழ்வில் பின்பற்றி வந்ததும், மற்றவர்க்கு வலியுறுத்திக் கூறியதும் விளங்கும்.ஒருமுறை, டாக்டர் சீனிவாச ராவ் என்பவர் மருந்து ஒன்றினைக் குறிப்பிட்டு அது மிகவும் நன்மை தரும் என்றார். ரமணர், “ நான் ஒரு பிச்சைக்காரன். இத்தகைய விலையுயர்ந்த மருந்தினை நான் எப்படி உட்கொள்வது?” என்றார். டாக்டர் சொன்னார்: “மருந்துஇல்லாவிட்டால் சத்துள்ள உணவாகிய பால், பழம், பாதாம் பருப்பு ஆகியவற்றையாவது உட்கொள்ளலாமே?” ரமணர் சொன்னார்: “சரிதான். ஆனால் நான் தரித்திர நாராயணன், என்னால் அவற்றை எப்படி வாங்க முடியும்? என்னுடையது பெரிய குடும்பம். எல்லோரும் எப்படிப் பழம், பால், பாதாம் பருப்பு போன்றவற்றை உண்ண முடியும்?”தமக்காக அளிக்கப்படும் சிறப்பை எப்போதும் ஏற்பதில்லை. யாராவது சாப்பிடும் பொருள் கொண்டு வந்தால் அவர் உடனே எல்லோர்க்கும் பகிர்ந்து அளிப்பார்.
மந்திர மொழிகள் : நிறைமொழி மாந்தரான பகவான் ரமணரின் அமுதமொழிகள், அருமையும் எளிமையும், அழகும் ஆற்றலும் ததும்பி நிற்பவை. மந்திரம் போல் வாழ்வில் என்றென்றும் பின்பற்றத் தக்கவை. அவற்றில் ஒன்று...'மரணத்திற்குப் பிறகு என்ன ஆகும்?' என்று கேட்கிறீர்கள். நிகழ்காலத்தில் வாழுங்கள். எதிர்காலம் தானே தன்னைப் பார்த்துக் கொள்ளும். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.இறந்த காலமும் இல்லை, எதிர்காலமும் இல்லை. நிகழ்காலம் மட்டுமே உண்டு. அனுபவித்த போது நேற்று என்பதும் நிகழ்காலம். அனுபவிக்கப்படும் போது எதிர்காலமும் நிகழ்வே. எனவே அனுபவம் என்பது நிகழ்காலத்தில் மட்டுமே உண்டு.நிகழ்காலத்தில் வாழ்வாங்கு நல்ல வண்ணம்வாழ்தல்வேண்டும். இதுவே பகவான் ரமணர் வலியுறுத்தும் அடிப்படையான வாழ்க்கை நெறி.
ரமண மந்திரம் : ''நான் யார்'' எனப் பார். ஈசன் மேலே எல்லாப்பாரமும் போட்டுக் கவலையற்று இரு. அவன் எப்பாரத்தையும் தாங்க வல்லவன். ஒன்றும் நினையாது இரு. உள்ளத்தை உன்னுள் இருத்து. 'நான் யார்?' என்று விசாரித்தாலே ஊனோடு உற்ற உறவு ஒழியும். அலையும் மனத்தை இறைவனுக்கு அளி. அதுவே பெரிய பக்தி. உன்னுள் உள்ள ஈசனை விடாதே. எழும்பும் நினைவுகளை எல்லாம் நசுக்கு. பிறருக்கு ஈவது தனக்கே ஈவதாகும். தாழ்ந்து நடக்க நடக்க நல்லது. சொன்ன சொல் தவறாதே. அன்னியர் காரியத்தில் பிரவேசிக்காதே.” - இதுவே ரமண மந்திரம் ஆகும்.“பகவான் ரமணரைப் புரிந்து கொள்வது என்பது மிக எளிதானது. புரிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையான தாபம் இருந்துவிட்டால் போதும், பகவான் ஸ்ரீரமணர் உங்களை ஆட்கொள்வார்” என்பது எழுத்தாளர் பாலகுமாரனின் அனுபவ மொழி.
-முனைவர் இரா.மோகன்எழுத்தாளர், மதுரை94434 58286

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

    மிகவும் அருமையான கட்டுரை. நன்றி. ஓம் நம சிவாய, அருணாச்சல சிவா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement