Advertisement

மகிழ்ச்சியாய் இருப்போம்; மலர்ச்சியாய் வசிப்போம்!

அன்பிற் சிறந்த தவமில்லை என்றான் பாரதி. அன்பு தான் மகிழ்ச்சியை மலர் போல் மலர வைக்கிறது. தேங்காய் சில்லுக்கு ஆசைப்பட்டு எலி, பொறிக்குள் மாட்டி எமனுக்கு எதிர்ப்படுகிறது. மேலே துாண்டில் இருப்பதை அறியாமல் புழுவை புசிக்க ஆசைப்பட்டு மீன் துாண்டிலில் சிக்கி துடிதுடித்து இறக்கிறது. வாழ்வு ஒரு வசந்த நிகழ்வு. வாழ்வது ஒரு கலை. வாழ கற்றவர்களுக்கு எல்லா நாட்களும் மகிழ்ச்சியான நாட்களாய் மாறுகிறது.நல்ல எண்ணம்: நல்நோக்கு
நம்மிடம் வரும்போது எதிர்மறையான சிந்தனைகள் வராது. அன்பு, பாசம், அமைதி, நம்பிக்கை, மனநிறைவு என்கிற சொற்களால் நம் வாழ்வு நிரப்பப்படும்போது, மகிழ்ச்சி என்கிற ஒற்றைச் சொல் ஓடி வந்து நம்மிடம் நிற்கும். நாம் செய்யும் வேலையை நேசித்து, யோசித்து செய்தால், மகிழ்ச்சி தானாய் வந்து நிற்கும். தன் நிறைவு குறையாத மகிழ்ச்சியைத் தருகிறது. உள்ள வளமும் உடல் வளமும் உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறது.

மகத்தான கலை : அடுத்தவர் மகிழும் செயல்களை செய்தால் நம் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. நடக்கும் எல்லாவற்றையும் தடுக்கும் ஆற்றல் நமக்கு இல்லை. அதனதன் இயல்போடு எல்லாம் நடக்கிறது என்று உணர தொடங்கினால் குழப்பமும் துக்கமும் மிச்சமாகிறது. மகிழ்கலை என்னும் மகத்தான கலையின் நுட்பம் உணர்ந்தால் நமக்கு துன்பம் ஏதுமில்லை. இன்பம் வாழ்வின் முக்கிய நோக்கம். அதனால் தான் அறம், பொருள் என்று பால்கள் வகுத்த வள்ளுவர் மூன்றாம் பாலாக இன்பத்து பாலை முன் வைத்தார்.கவலை எனும் மாய வலை: கவலை ஒரு மாய வலை. நம் இன்பத்தை கெடுப்பதே அது கேட்கும் விலை. தேன் பாட்டிலுக்குள் விழுந்த எறும்பு,பாட்டில் தேனையும் பருகி பருத்து விடலாம் என்று எண்ணத் தொடங்கி இறுதியில் தேனுக்குள்ளே சாவை தழுவி சமாதியாவது நிஜம்.பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா? கரன்சிக் கட்டுகளால் கண்ணீரைத் துடைக்க முடிந்தால் உலகில் ஏன் இத்தனை பேர் சோக ராகம் பாடி கொண்டிருக்கிறார்கள்? கவலையைவிடுங்கள், எல்லாவற்றையும் ரசியுங்கள், பசி நீக்கும் அளவே புசியுங்கள், நல்லஎண்ணமுடையவர்களோடு வசியுங்கள்.

மனம் விட்டு சிரியுங்கள்: வாய் விட்டுச் சிரிப்பவர்களுக்கு நோய் விட்டுப்போகிறது. உம்மென்று இருப்பவர்களை உலகம் விரும்புவதில்லை. சிரித்துகொண்டே இருப்பவர்கள், அனைவருக்கும்
சீக்கிரமே நண்பர்களாகி விடுகிறார்கள். சிரிக்கிறவர்களுக்கெல்லாம் கவலைகள் இல்லை என்பது பொருளில்லை. இடுக்கண் வரும் போது வள்ளுவர் சிரிக்க சொன்னார். பாம்பு கடித்து விஷமேறி
இறந்தவர்களை விட, பாம்பின் விஷம் நம்மை இந்த வினாடியே கொன்றுவிடும் என்று அஞ்சியவர்களே அதிகம் இறந்துபோகிறார்கள். காசில்லாமல் வாழ்க்கை இல்லை; ஆனால் காசு மட்டுமே வாழ்க்கை இல்லை.காயங்களை ஆற்றும் களிம்பு நம் உதடுசிந்தும் புன்னகையே என்று புரிந்து கொள்ளுங்கள். நீலவானில் நீந்தி சிறகடிக்கும்சிட்டுக் குருவிகள் போல் நம் மன வானிலும் நம்மாலும் சிறகடித்து பறக்கமுடியும்என நம்புங்கள்.மலர்ந்த முகம் : ஒற்றைப்புன்னகை தேடிவரும் துயரங்களை துார ஓட்டி விடும்.சிரித்த முகம் ஸ்ரீதேவி இருக்கும் இடம், மலர்ந்த முகம் வெற்றியின் அகம். முகமலர்ச்சி, மனமுதிர்ச்சி, நற்பயிற்சி இவையே வெற்றியின் சூத்திரங்கள். சவால் வரும் போதுதான் அதிலிருந்து மீள்கிற வழிகளை நம் மனம் தேடுகிறது. தோல்வி நம்மை துரத்தும்போது தான் வெற்றிக்கு வெகுஅருகில் நாம் வந்து நிற்கிறோம். நாம் சிரிக்க , சிரிக்க நம் வாழ்வின் நாட்கள் நீட்டிக்கப்படுகின்றன. மலர்ந்த முகத்தோடு நாம் பழைய சோறு பரிமாறினால் கூட அது அமுதமாக சுவை தருகிறது.

நல்லதே செய்யுங்கள்: யாருக்கும்மனதால் கூடத் தீங்கிழைக்காதவர்களுக்கு என்றும் இன்பமே எந்நாளும் துன்பமில்லை. மற்றவர் செயல்களில் தேவையில்லாமல்தலையிடுவது, தீராத தலைவலியை உருவாக்கும். நம் எல்லைகளை தெளிவாக அறிந்தால் தொல்லைகள் நமக்கு வரப்போவதில்லை. தேவையில்லாமல் நாம் பேசும் சொற்களே நம் மகிழ்ச்சியை கெடுக்கும்பீரங்கிகள். எல்லோருடைய விமர்சனத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதில் தான் சிக்கல்கள் சீழ்பிடித்து கிளம்புகின்றன. யாருக்கில்லை சோகம் ? செயற்கைத்தனங்கள் இல்லாத இயல்பான வாழ்க்கை ஏமாற்றங்களிலிருந்து நம்மை காத்து ஆட்கொள்ளும். கவலையின் கூர்நகங்கள் நம் இன்ப முகங்களை கீறிக்கிழித்து விட அனுமதிக்கலாமா? நடுங்கும் நம் நாட்களை நம்பிக்கை எனும் முட்டுக்கொடுத்துத் துாக்கி நிறுத்தியாக வேண்டும். யாருக்கில்லை சோகம், யாருக்கில்லை துக்கம்; எல்லாவற்றையும் மென்று விழுங்கி விட்டு மெல்ல நகர்வதில் இருக்கிறதுஇன்ப வாழ்வின் இனிய நுட்பம். ஏன் கசந்த வாழ்வாக்குகிறோம்: நெஞ்சை பிழியும் துயரம் பலருக்கு வசந்த வாழ்வை கசந்த வாழ்க்கையாக்குகிறது. அழுது, அழுது அலுத்து
போவதற்கா இந்த வாழ்க்கை. ஏன் அதைச் சிரித்து, சிரித்து சிறந்ததாக மாற்றலாமே. இலையுதிர்காலம் இலைகளின் இறந்த காலமன்று, இன்னும் புதிய
இலைகள் துளிர்ப்பதற்கே என்று நாம் ஏன் எண்ணக்கூடாது? இழப்பதற்கு ஒன்றுமில்லை இருப்பதற்கே வந்தோம் என நினையுங்கள் துக்கம் பக்கம் வராது. இன்று புதிதாய்
பிறந்தோம் என்கிற பாரதிபோல்ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியால்நமை நிரப்பும்போது
மகிழ்ச்சிதானாய் நம்மை வந்தடையும்.

மனம்செய்யும் விந்தை: விருப்பும்வெறுப்பும் நம் மனம் செய்யும்விந்தை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.பணம் மட்டுமேமகிழ்ச்சியை மனத்திற்குத்தந்துவிடமுடியாது என்பதைஉணரத்
தொடங்குவோம்.பொம்மையை உண்மையாய் நம்புகிறவரை குழந்தை மகிழ்ச்சியாகத்தானிருக்கிறது. அதிகமான சந்தேகம் ஆழத் துயரைத் தந்துவிடும். நாம் நினைத்த படியே யாவும் நடக்கவேண்டும் என்கிற ஆசை தீராத்துயரைத் தந்துவிடும். எல்லாவற்றையும் நம்மால் மாற்ற
முடியாது என்கிறஉண்மைதான் புரிதலை நோக்கி நம்மை இட்டுச்செல்கிறது. மாற்ற
முடியாதவற்றைப் புரிந்துகொள்ளும் அறிவாற்றலை நாம் பெறும் போது இன்பத்தை நாம் தொலைக் காமல் இருப்போம்.

மகிழ்ச்சியாய் வாழ : மூன்றுமாதத்திற்கு ஒருமுறையாவதுஅலைபேசிகள் இல்லாத, தொலைக்காட்சிப் பெட்டிஏதும் இல்லாத மண்மனம் கமழும், குயில்கள்கூவும், அருவிநீர் சலசலக்கும், பச்சைப்பசேலென்று இயற்கையின் இன்மொழிபேசும் இடத்திற்குச் சென்று கலக்கம் இல்லாது இருங்கள். இயற்கையைப்போல் இன்பம் தரக்கூடியது வேறுஏதுமில்லை என உணருங்கள்.
அதிகாலையில்துயில் எழுவதைவிடச் சிறந்த பழக்கம் ஏதுமில்லை.காலம் கடந்து தூங்குகிறவனை எழுப்ப எந்தப் பொழுதும் இரண்டுமுறை விடிவதில்லை.ஏதும் இல்லாமல் போனாலும் அதற்கு நம்மால் எந்த வருத்தமும் இல்லாமல்வாழ முடிந்தால் நாம் மகிழ்ச்சியாக வாழ்வதில் முழுமையை நோக்கிப்பயணிக்கிறோம் என்பது பொருள்.எதற்கும் உரிய காலம் வரும் வரை
பொறுத்து தான் ஆக வேண்டும் என நம்ப மறுக்கிறோம். திறமையினால் சாதிப்பதை விட பொறுமையினால் சாதிப்பது மேன்மை என உணரும்போது மகிழ்ச்சி தானே ஊற்றெடுக்கிறது.

மகிழ்ச்சி வெளியே இல்லை: அன்பு மனைவியின் காலை நேரத்து இன்சுவை காபி, ஊர் கண்
பட்டு விட்டதாய் உள்ளம் பதறி உப்பு சுற்றி, கிணற்று தண்ணீரில் சத்தமில்லாமல் போட்டு
நிம்மதிப் பெருமூச்சு விடும்அன்பு அம்மா, குட்டி கொலுசு பூட்டி, தத்தி நடை நடக்கும் பாசமகள்,
அம்மா மூலம் துாதனுப்பி மிதிவண்டிகேட்கும் நேச மகன், வெளியே போகும்போது சாமி படத்தின் பூத்தந்து அன்போடு அனுப்பி வைக்கும்அன்பு அப்பா, சிறுவயதில் கட்டி புரண்டு சண்டை போட்டாலும் இப்போது சிறுகாய்ச்சல் வந்தால் கூட வாட்ச் அப்பில்வருத்தப்படும் பாசத்தம்பி, நான்கு நாட்கள் வெளியூர் போய் விட்டால்கூட தொலைபேசியில் அழைத்துநலம் விசாரிக்கும் பக்கத்து வீட்டுக்காரர்.இவர்களால் தான் இன்னும் நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோம்.
கொட்டும் மழைநாளில் நனைவதில் மகிழ்ச்சியுண்டு, அதிகாலை நாளிதழின் அச்சு மணத்தில் மகிழ்ச்சியுண்டு, மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு வந்தவுடன், கரம் பற்றி நலம்
விசாரிக்கும் அன்புக்கரத்தின் இளம்சூட்டில் மகிழ்ச்சியுண்டு, நட்சத்திரம் கொட்டி கிடக்கும் விரிவானில் நுால் பிடித்தாற்போல் வரிசையாய் பறக்கும் அழகு பறவைகளை பார்ப்பதில் மகிழ்ச்சியுண்டு, தொட்டில் குழந்தையின் பஞ்சு பாதம் தொடுதலில் மகிழ்ச்சியுண்டு, வீடடுத்தோட்டத்தில் புதிதாய் ஒரு பூப்பூத்தால் மகிழ்ச்சியுண்டு, நதி மூழ்கிக்குளிக்கையில் விரல் கடிக்கும் மீன்கண்டால் மகிழ்ச்சியுண்டு.மகள் திருமணம் முடிந்து மணமேடையில் இன்பக்கண்ணீர் விடும்போது மகிழ்ச்சியுண்டு. இப்படி எல்லா மகிழ்ச்சியையும் எல்லை இல்லாமல் நம்மருகே
வைத்துக் கொண்டு மனசு சரியில்லையென்று நாம் ஏன் இனி சொல்லவேண்டும்.
முனைவர் சௌந்தர மகாதேவன்
தமிழ்த்துறைத்தலைவர்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
திருநெல்வேலி, 99521 40275

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement