Advertisement

கல்லிலே கலைவண்ணம் கண்டார்...

'காதல் ஆகிக் கசிந்து, கண்ணீர் மல்கி
ஓதுவர்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள்
ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே'

சமயம் என்பது மனிதனை வழிப்படுத்துகின்ற நன்னெறி. மனிதனுக்கு மட்டுமே சமயம் என்ற பண்பாடு உண்டு. சமயம் கூறும் கடவுள் மீது அச்சம் பிறந்தால் அந்த உணர்வு தீயவற்றை செய்ய அஞ்சும். நல்லவற்றை நாடும். பண்பட்ட உள்ளம் உருவாகும். மனிதனுக்கு தொண்டு செய்ய வந்ததே சமய நெறியாகும். மனிதனுக்கு அன்பு, அருள், பண்பு, நல்லிணக்கம், பற்று அனைத்தையும் கற்று கொடுப்பது தான் சமயம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதே சமயத்தின் நோக்கம். உலகம் ஓர் குலம் என்ற பரந்த மனம் படைத்தது சமயம்.

மண் ஒன்று தான் பல நற்கலம் :

ஆயிடும்உண் நின்ற யோனிகள் எல்லாம்
ஒருவனே இறைவன் ஒருவனே
என்பதை சமயம் வெளிப்படுத்தியது. நம்முள் கலந்துரையும் இறைவனுக்காகவும், சமுதாயத்தோடுநல்லுறவை ஏற்படுத்தி கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டதே கோயில்களாகும்.
கல்லாலும், தீந்தமிழ்ச்சொல்லாலும் கோயில்கள் உருவாகின. கோயில்கள் சமயத்தையும், சமுதாயத்தையும் வளர்க்கும் கூடமாகவும் திகழ்கின்றன.

'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை
நாணாமேசென்றே புகும்கதி இல்லை நும்
சித்தத்துநின்றே நிலைபெற நீர்
நினைத்து உய்மின்'
உயிர் தொகுதி முழுவதும் ஒன்று தான்.
உயிருக்கு உயிரான இறைவனும் ஒருவனே என்பதை சமயம் வலியுறுத்தி சமுதாயத்தை ஒன்றிணைக்கிறது. கோயில்கள் சமயத்தையும் சமுதாயத்தையும் மட்டும் நோக்கவில்லை.
கோயில்கள் விஞ்ஞானம்,மெய்ஞானம், பண்பாடு,நாகரிகம், கலாசாரம், கட்டடக்கலை, யோகக்கலை, மனவளக்கலை, முத்தமிழ்க்கலை போன்ற அனைத்து கலைகளுக்கும் பிறப்
பிடமாக இருந்தது.

அதிசயிக்க வைக்கும் கட்டடக்கலை : நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் அடங்கியதே பிரபஞ்சம். அப்
பிரபஞ்சத்திற்கு உரிய கோயில்களான நிலம் காஞ்சிபுரம், நீர்திருவானைக்காவல், தீ திருவண்ணாமலை, காற்று காளஹஸ்தி, வான் சிதம்பரம் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அதாவது கிட்டத்தட்ட 79 டிகிரி ரேகையில் அமைந்திருப்பது பெரிய அதிசயம். தமிழகத்தின் கோயில்கள் நிர்மாணிக்கப்பட்ட விதத்தை ஆராய்ந்தால் வியக்க வைக்கும் அரிய செய்திகள் தெரிய வரும். தில்லை நடராஜர் உறையும் சிதம்பரம் தன்னுள்ளே சிதம்பர ரகசியத்தை அடக்கியுள்ளது.
சிதம்பரம் உலக புவி ஈர்ப்புவிசையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. பிரபஞ்சத்தின் உருவமாக நடராஜர் சிலை கருதப்படுகிறது. அதனால் சுவிட்சர்லாந்து இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுஉள்ளதாக எண்ணப்படுகிறது.

மனிதனின் உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளது போல, இக்கோயிலில் ஒன்பது வாசல்கள்
உள்ளன. கருவறை மேலே 21, 600 தங்க ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 60
ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தஎண்ணிக்கை மனிதனின்
உடலுடன் சம்பந்தப்பட்டுள்ளது. மனிதன் சராசரியாக 21,600 முறை ஒரு நாளைக்கு சுவாசிக்கின்றான். மனிதன் உடலில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் நரம்புகள் உள்ளன. இக்கோயில் மனித உடல் அமைப்பை ஒட்டியே உள்ளது. இதையே திருமந்திரமும் குறிப்பிடுகிறது.

'மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே'
கற்கள் இணைப்பு
வற்றாத காவிரியில் வளம் கொடுக்கும் தஞ்சையில் விண் முட்ட உயர்ந்து நிற்பது தஞ்சை பெரிய கோயில். கட்டடக்கலைக்கு ஒரு முகப்பக்கல் இக்கோயில். பெரிய கோயில் கட்டு
மானத்திற்கு வேண்டிய கருங்கற்கள் தஞ்சாவூருக்கு அருகில் இல்லாமையால் புதுக்கோட்டை நார்த்தா மலையிலிருந்து கொண்டு செல்லப்பட்டது என்பது சாதனை. கற்களை இணைப்பதற்கு எந்தபசையும் பயன்படுத்தப்படாமல் கற்களை கொண்டே இணைக்கப்பட்டுள்ளது.
80 டன் எடையுள்ள, உலகிலேயே மிகப்பெரிய விமானத்தை, எந்த இயந்திரங்களின் உதவியும் இன்றி மேலே கொண்டு சென்று இணைத்தது எளிதான செயலன்று. அதை சாதித்து காட்டியவர்கள் தமிழர்கள். ஒரு லட்சம் டன் எடைக்கு மேல் இருக்கும் கருங்கற்கோவிலுக்கு, பல மடங்கு அஸ்திவாரம் தேவைப்பட்டிருக்க வேண்டும். அந்த அஸ்திவாரத்தை ஏற்படுத்தும் விதம் அதிசயக்க வைக்கிறது. அஸ்திவாரத்தில் சுக்கான் பாறையை கல் தொட்டியாக அமைத்து அதில் மணலை நிரப்பி, பலப்படுத்தி அதன் மீது ஒருலட்சத்து 30 ஆயிரம் டன் எடையுள்ள கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்து.

கங்கை கொண்ட சோழபுரம் : அலைகடல் நடுவே பல கலம் செலுத்தி, கங்கை முதல் கடாரம் வரை வென்ற ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது கங்கை கொண்ட சோழபுரம். சந்திரக்கல் பதிக்கப்பட்ட இக்கோயிலின் கருவறை தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப குளிர் காலத்தில் கதகதப்பாகவும், கோடையில் இதமாகவும் மாறி விடும். இது கங்கை கொண்ட சோழபுரத்தின் சிறப்பு. இந்த அரிய சந்திரக்கல் விஞ்ஞானத்திற்கு ஒரு சவாலாகும். கங்கை கொண்டான் என்ற பெயருக்கு ஏற்ப, கங்கையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து சோழகங்கம் என்ற பெரிய ஏரியை உருவாக்கி, வளமுள்ள நிலப்பகுதியை ஏற்படுத்தினார். அந்த ஏரி, தற்போது பொன்னேரி என்றழைக்கப்படுகிறது. இன்று கூறப்படும் காவிரி, கங்கை இணைப்பு நீர் திட்டத்தை அன்றே செயல்
படுத்தியவர் ராஜேந்திரசோழன்.

திருப்பெருந்துறை : இது ஆவுடையார் கோயில் எனப்படுகிறது. மாணிக்கவாசகர் சொல்லால் எழுப்பியது திருவாசகம். கல்லால் உருவாக்கியது திருப்பெருந்துறை. இக்கோயிலின் சிறப்பு இதன் கூரை, கருங்கல்லால் பல நுணுக்கமான உன்னதமான வேலைப்பாடுகளுடன் கட்டப்
பட்டுள்ளது. கல்லால் சங்கிலிஎன்பது நினைத்து கூட பார்க்கமுடியாதது. ஆனால் இக்கோயிலில் உள்ள கல்லால் ஆன முறுக்குகம்பியும், சங்கிலியும் வியக்க வைக்க கூடியது. பல கோயில்களில் யாழி சிலையின் வாய்க்குள் கல் உருண்டை அமைக்கப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு
சாதாரணமாக தோன்றினாலும் அதன் நுணுக்கம் மலைக்க வைக்கக் கூடியது. அக்கல் உருண்டையை கையால் உருட்டலாம். ஆனால் உருவ முடியாது.

கட்டடக்கலையின் பிரமாண்டம் : கடலுக்கு நடுவே இருக்கும் மிகப்பெரிய பிரகாரம் உடைய ராமேஸ்வரம் கோயிலுக்கு, எந்த வசதியும் இல்லாத காலத்தில் மிகப்பெரிய கற்களை எடுத்து சென்று, கோயிலை உருவாக்கியது தமிழர்களின் கட்டடக்கலை பிரமாண்டத்தை வெளிப்படுத்துகிறது.நெல்லையப்பர் கோயில், திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் கல் துாண்களை தட்டினால், இசையின் ஸ்வரங்களான ச, ரி, க, ம, ப, த, நி என்ற ஓசை ஒலிக்கும். கல்லுக்குள் இசையை உருவாக்கியவர்கள் தமிழர்கள்.

அறிவின் கருவூலம் : மெய்ஞானத்தில் மட்டுமின்றி விஞ்ஞானத்திலும் அறியாத செய்திகளை அறியவைத்தவர்கள் தமிழர்கள். கோள்கள் ஒன்பது என்பதை தொலைநோக்கி இன்றி வெட்டவெளியில் வானசாஸ்திரம் படித்து கோயில்களில் நவக்கிரகங்களை உருவாக்கி அதன்
தன்மையை பற்றி தெளிவாக உரைத்தது தமிழர்கள். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை
யிலுள்ள மீனாட்சி அம்மன்கோயிலில் அன்றே ஓசோன் படலம் குறித்த குறிப்புகள் உள்ளன. திருப்பூர் குண்டடம் வடுக நாதர் பைரவர் கோயிலில் தாயின் வயிற்றில் ஒவ்வொரு
மாதமும் குழந்தை வளர்ச்சிஎவ்வாறு இருக்கும் என்பதை துல்லியமாக கல்லில் சிற்பங்களாக வடித்துள்ளனர்.அணுவின் தன்மையை பற்றி அவ்வையாரும், திருமூலரும், மாணிக்கவாசகரும், பாடல்கள் வழியாக விளக்கியுள்ளனர். நளமில்லா சுரப்பிகள் இருக்கும் இடம், இயங்கும் விதம், உடற்கூற்றின் தன்மை, நற்குழந்தைகள் பிறப்பதற்கு வழிமுறைகள், குவிய துாரம், மனவளம் என இயற்பியல், உயிரியல், வேதியியல், வானசாஸ்திரம், ஜோதிடம் என
அனைத்தும் திருமந்திரத்தில் இடம் பெற்றிருக்கிறது. பல்வேறு துறைகளிலும் அரிய படைப்புகளை தந்த தமிழர்கள் நோபல் பரிசு பெற தகுதியானவர்கள். அவர்கள் சாதித்து காட்டிய
அதிசயத்தை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.

ச.சுடர்க்கொடி, கல்வியாளர்
காரைக்குடி. 94433 63865

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement