Advertisement

நாளைய பொழுது என்றும் நமக்கென வாழ்க!

என்னய்யா பெரிசா புது நிதியாண்டு அது இதுன்னு? ஒவ்வொரு நிதியாண்டும் முட்டாள் தினத்தன்னிக்கு ஆரம்பிச்சி ஆண்டு பூரா நம்பள முட்டாளாக்கிட்டு வில்லங்கமா முடியுது. ஆண்டு பூரா ஓடிக்கிட்டே இருந்தாலும் நாம இருந்த இடத்திலேயே தான் இருக்கோம். அம்பானியும் அதானியும் தான் வளர்ந்துகிட்டேயிருக்காங்க'' நாம் தான் இப்படிப் புலம்பி கொண்டிருக்கிறோம். அம்பானி யும் அதானியும் தங்கள் நிதியாதாரங்களை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் வருமானம் வளர்கிறது. நம் சம்பாத்தியத்துக் கும் பண வீக்கத்துக்கும் நடக்கும் ஓட்டப்பந்தயத்தில் முக்கால்வாசி நேரம் பண வீக்கம் தான்
வெல்கிறது. நமக்குப் புலம்பல்களே மிச்சமாகின்றன. இந்தாண்டாவது நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என தெரிந்து கொள்வோம். இந்த நிதியாண்டு 2017-18 பலவகைகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

வலுவடையும் பொருளாதாரம் : 2017 ஜூலையில் நாடுமுழுவதும் சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்து விடும். இதன் தாக்கத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்றுவல்லுநர்கள் கூறுகின்றனர். நாடு முழுவதும் ஒரு வரி என்பதால் சரக்குகள் இடம் மாறும் வேகம் கணிசமாக அதிகரிக்கும்.இதனால் நாட்டின் வருமானம்-ஜி.டி.பி., கூடும் என ஒரு சாரர் கூறுகின்றனர். ஆனால் வெளிநாடுகளில் இருப்பது போல் ஒரே வரிவிகிதம் இல்லை. ஏறக்குறைய ஆறு வரி விகிதங்கள் இருக்கலாம். இதனால் இதன் தன்மை நீர்த்துப் போக வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறுகின்றனர். எது எப்படியோ நாடு தழுவிய சரக்கு, சேவை வரி வர்த்தகத்தில் மகத்தான மாற்றத்தை கொண்டு வரும். கணக்கில் வராமல் நடக்கும் வியாபாரம் குறையும். வரி வசூல் அதிகமாகி பொருளாதாரம் வலுவடையும்.

ஆதார் மையம் செல்லுங்கள் : ஆதார் எண்ணை எல்லாவற்றுக்கும் ஆதாரமாக்கி விட்டனர். இனி ஆதார் இன்றி பான் கார்டு வாங்க முடியாது. அரசு அளிக்கும் மானியத்தொகை, கல்விக்கடன் அனைத்திற்கும் ஆதார் அவசியமாகிறது. இதுவரை நீங்கள் ஆதார் வாங்கவில்லை என்றால் நாளையே அலுவலகத்திற்கு விடுப்பு போட்டு விட்டு ஆதார் மையத்திற்கு செல்லுங்கள்.
ஆதார் எண்ணும் வருமான வரி பான் கார்டும் இணைக்கப்படுகிறது. இதுவரை பான் கார்டு வாங்குவதில் அதிக கட்டுப்பாடுகள் இல்லை. அதனால் வடமாநிலங்களில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு பான் கார்டிலும் வரி கட்டாமல் இரண்டரை லட்சம் ரூபாய் வருமானம் காட்டலாமே! அந்தத் தில்லாலங்கடி வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன் தங்கம் நமக்குத் கை கொடுக்கும் கடவுளாக இருந்தது. கணவனே கைவிட்டாலும் தங்கம் கைவிடாது என்பர். திருமணச் செலவு, படிப்புச்செலவு, திடீர் மருத்துவச் செலவு எல்லாவற்றுக்கும் தங்கம் கை கொடுத்தது. ஆனால் இப்போது தங்கத்தின் மவுசு குறைந்து விட்டது. 2006லிருந்து 2011 வரை ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை மூன்று மடங்கு உயர்ந்தது. 2011லிருந்து 2016 வரை பத்து சதவிகிதம் கூட உயரவில்லை. தங்கத்தை ஒரு சேமிப்பாகக் கருத வேண்டாம். தங்கம் பெரிதாக விலை ஏறாது.

புரட்சி நிகழுமா : ''அந்தக் காலத்துல எங்க தாத்தா பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கின வீடு இன்னிக்கு நான் ஒரு கோடி ரூபாய்க்கு வித்தேன்,'' என்று நீங்கள் மார்தட்டலாம். இதே வார்த்தையை உங்கள் பேரன் சொல்வானா என்பது சந்தேகமே. ரியல் எஸ்டேட் தொழில் தேக்க நிலையில் இருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி வந்தால் ரியல் எஸ்டேட் தொழில் எழுச்சி பெறும் என்கின்றனர். ஆனால் அதுவும் தங்கம் போலத் தான். கடந்த காலத்தில் பார்த்த அசுர
வளர்ச்சியைப் பார்க்க முடியாது.

நிதியாண்டின் யதார்த்தம் : வங்கிகள் சேவையில் பல மாற்றங்கள் வரலாம். இருபதாண் டுகளுக்கு முன் ஐநுாறு ரூபாய் பணம் எடுக்க வேண்டியிருந்தாலும் அலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு போட வேண்டும். இப்போது முக்குக்குமுக்கு ஏ.டி.எம்.,க்கள் உள்ளன. வீட்டிலிருந்தபடி வங்கிக் கணக்கிலிருந்து பணப்பரிவர்த்தனை செய்யலாம். வசதிகள் பெருகி விட்டன.
இதனால் வங்கிக் சேவைகளுக்கும் இனி அதிக கட்டணம் கட்ட வேண்டி வரும். ஸ்டேட் வங்கி வெளியிட்ட சேவை கட்டணப்பட்டியல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதுதான் இந்த நிதியாண்டின் யதார்த்தம். வங்கிப் பரிவர்த்தனைகளைத் திட்டமிட வேண்டும். டெபிட் கார்டு களுக்குக் கட்டணம் மிக குறைவு. அதை அதிகமாக பயன்படுத்த வேண்டும். வங்கியில் ரொக்கமாக பணம் செலுத்துவதையும், எடுப்பதையும் குறைத்து கொள்ளலாம்.தவணை கட்ட தவறினால்இன்றைய நிலையில் கடன் வாங்காமல் வாழ முடியாது.குழந்தைகளின் படிப்புக்கு கல்வி கடன், வீடு கட்ட வீட்டுக்கடன், அது எல்லாம் போக ஒவ்வொரு முறையும் உங்கள் கிரெடிட்
கார்டைப் பயன்படுத்தும் போது ஒரு கடனை வாங்குகிறீர்கள். இனி வரும் காலத்தில் கடன் தவணைகளைக் காலாகாலத்தில் கட்டுவது அத்தியாவசியமாகி விடும். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு கடனும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. கடன் தவணை கட்டத் தாமதமானால் சந்தையில் உங்கள் மதிப்பீடு குறைந்து விடும்.

லஞ்ச லாவண்யம் குறையும் : இந்த நிதியாண்டு இன்னொரு விஷயத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வருமானவரித்துறையினர் பரிவர்த்தனைகளை உன்னிப்பாக பார்க்க துவங்கி விட்டனர். சொத்துக்கள் வாங்கும் போதும், விற்கும் போதும் வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுங்கள். இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்க பரிவர்த்தனைக்குத் தடை வந்து விட்டது. வருமான வரி வசூல் கணிசமாக உயரும். நேர்முக வரியான வருமான வரி மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தால் அது நாட்டிற்கு நல்லது. சேவை வரி, விற்பனை வரி மூலம் அதிக வருவாய் கிடைத்தால் ஏழைகள் அதிக வரிச்சுமையை தாங்குகிறார்கள் என அர்த்தம். வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடியை இறுக்கும் போது லஞ்ச லாவண்யங்கள் குறையும். லஞ்சமாக பெற்ற பணத்தை செலவழிப்பதிலும், முதலீடு செய்வதிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் லஞ்சம் குறைந்து விடப் போகிறதா என அரசியல் பேசாதீர்கள். இது முதல்படி தான். இதுவரை நாம் இந்த முதல்படியிலேயே கால் வைக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை.
இச்சுழலில் வரும் நிதியாண்டு எப்படியிருக்கும்? பணம் என்றால் என்ன? மக்கள் கையில் இருக்கும் ரொக்கமா? வங்கிகளில் குவிந்து கிடக்கும் பணமா? இல்லை
வங்கிகளின் வைப்பில் இருக்கும் பணமா? பொருளாதார வல்லுனர்கள் எம் 3 என புழக்கத்தில் இருக்கும் பணத்தை கூறுவர். ரொக்கப்பணம், குறுகிய கால, நீண்டகால வங்கி வைப்புத்தொகை, இந்த எம் 3 அதிகமானால் பணப்புழக்கம் அதிகம் என அர்த்தம். நாடு சுபிட்சமாக இருக்கிறது.
உண்மையில் பணம் என்பது என்ன? நம் மனதில் எதிர்காலத்தை பற்றி இருக்கும் நம்பிக்கை தான். எதிர்காலத்தை பற்றி நம்மிடம் பயம் இல்லை என்றால் நாம் தாராளமாக செலவு
செய்வோம். நன்றாக முதலீடு செய்வோம். நம் செலவு இன்னொருவருக்கு வரவு. நம் முதலீடுகள் யாருக்கோ வருமானம்.ஐயையோ நாளை எப்படி இருக்குமோ என
அஞ்சினால் பெரிய ஓட்டல்களுக்கு சென்று கூட சாப்பிட தயங்குவோம். தொழில் துவங்கும் எண்ணத்தை மூட்டை கட்டி விடுவோம். இப்படி எல்லோரும் நினைத்தால் பொருளாதாரம் முடங்கி விடும். கையில் இருக்கும் பணத்தை கெட்டியாக பிடித்து கொள்வோம். வெளியில் விட மாட்டோம். பணப்புழக்கம் குறைந்து விடும்.

'வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்தனைய உயர்வு'
என, திருவள்ளுவர் கூறியது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பணப்புழக்கத்திற்கும் பொருந்தும்.நாட்டின் வளத்தைநிர்ணயிக்கும் நம்பிக்கைவருங்காலம் குறித்து மக்கள் மனதிலுள்ள நம்பிக்கையே பணப்புழக்கத்தையும் அதன் மூலம் தொழில் முதலீடுகளையும், நாட்டின் வளத்தையும் நிர்ணயிக்கிறது.மனதில் இருக்கும் நம்பிக்கையும், வருங்காலத்தைப் பற்றிய பயமின்மையுமே நமக்கும்நாட்டிற்கும் சுபிட்சத்தைக் கொடுக்கும். இந்த அடிப்படை உண்மை இந்த நிதியாண்டிற்கு மட்டுமின்றி எந்த நிதியாண்டிற்கும் பொருந்தும். புதிய வரிகள், அதிக சேவை
கட்டணங்கள், அதிகரிக்கும் செலவுகள் என நமக்கு ஆயிரம் பிரச்னைகள். நாளை எப்படியிருக்குமோ என ஆயிரம் கேள்விகள்.''காலை எழுந்தவுடன் நாளைய கேள்விஅது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி''என சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருந்தால் பொருளாதார பிரச்னைகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.
'நாளைய பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தை போல'
என்ற கண்ணதாசன் வரிகளை மனதில் கொண்டு வாழ்க்கையை அணுகினால் இந்த நிதியாண்டு மட்டுமின்றி எந்த நிதியாண்டும் வளம் சேர்ப்பதாகவே அமையும். வாழ்த்துக்கள்!

-வரலொட்டி ரெங்கசாமி
எழுத்தாளர்
மதுரை, 80568 24024

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement