Advertisement

அடுத்த தேர்தல் அல்ல: அடுத்த தலைமுறை முக்கியம்!

இத்தனைத் தலைவர்களா என்று சலித்துக்கொள்கிற அளவுக்கு எத்தனையோ தலைவர்களால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழகம். இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதுகூட
பட்ஜெட் வெளியாகிற போதும், பெட்ரோல் விலை கூடுகிறபோதும், பண்டிகைகள் வருகிற போதும், பெரிய மனிதர்கள் காலமாகிறபோதும், கருத்துரைப்பதற்கும், கவலைப்படுவதற்கும், ஊடகங்கள் சிலரை அணுகுகிற போதுதான் நமக்குத் தெரிகிறது. மக்கள் தங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று மாளாமல் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிற இவர்களுக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் காலங்களில்தான் தெரியவரும். இடையிடையே இடைத்தேர்தல்களிலும் தெரியும். கூடுவதும், கலைவதும், குற்றம் காண்பதும், குரல் எழுப்புவதுமாய்க் காலம் தள்ளுகிற இவர்கள் பத்துப் பன்னிரண்டு பேராய் மேடையில் வரிசையாக நின்று கைகோர்த்து உயர்த்திக் காட்சி தருவதும் இந்த நாடகத்தின் உச்சகட்டத்தில் ஒருவரால் ஒருவர் கெட்டுவிட்டதாகத் திட்டிக்கொள்வதுவுமாக சுவாரஸ்யமாக இருக்கிறது நமது தலைமைகள்.

வெவ்வேறு ரசாயனங்கள்வெவ்வேறு அளவில் கலந்து கொடுத்துப் பார்த்தாலும் குணமாக மாட்டேன் என்கிறது தமிழகத்தை பிடித்திருக்கிற ஏதோ ஒரு தொற்று நோய். ஏந்த மாற்றத்தையும் ஏற்
படுத்த முடியாத இன்றைய தலைவர்கள் பலருக்கு ஏற்படும் ஏமாற்றங்கள்தான் இங்கே நமக்கு வாடிக்கையாக நடந்துவருகிற வேடிக்கையாக இருக்கிறது.

தலைவர்கள் தேர்வு : சில நேரங்களில் நான்யோசிப்பதுண்டு நம்மில் பலரைத் தலைவர்களாய் யார் தேர்ந்தது? அது என்று நடந்தது? பெரும்பாலான தலைவர்கள் தங்களைத் தாங்களே தலைவர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள், தனித்தனியாகக் கட்சி தொடங்கியவர்கள். இவர்கள் தமக்குத் தாமே மகுடம் சூட்டிக்கொண்டவர்களேயன்றி மக்களால் அல்ல. மக்களால் என்றால் மாபெரும் வெற்றியை அல்லவா இவர்கள் குவித்துக் கொண்டிருக்க வேண்டும்.
உள்ளாட்சி உறுப்பினர் முதல் மிக உயரமான முதல்வர் வரை உட்கார்ந்து பார்க்க ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. அதற்கு மக்களுடைய உத்திரவு வரவேண்டுமே!

பிரதிநிதி யார் : ஒருமுறை பரந்தாமனிடம் சென்று தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு கோரிக்கையை முன் வைத்தனர். “இப்படிக் கூட்டமாக வராமல் யாரேனும் ஒருவரைத் தலைவராக, உங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்து அவரை மட்டும் அனுப்பி வையுங்கள்” என்று திருப்பி அனுப்பிய பரந்தாமன் இன்று வரை காத்திருக்கிறான் ஏகோபித்த தலைவராக யாரும் வரவில்லை. தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை. “யாரும் வரவில்லையே” என்று பரந்தாமன் ஒருநாள் நாரதரிடம் கேட்க, “அப்படியெல்லாம் யாரும் இனி வர வாய்ப்பில்லை. நீங்கள் நிம்மதியாகப் பள்ளி
கொள்ளலாம்” என்றார் நாரதர்.என்னிடம் கூட ஒரு தமிழறி ஞர் மிகவும் வருத்தப்பட்டார். “இப்போதிருக்கிற அத்தனை தமிழமைப்புகளையும் கலைத்துவிட்டு தனித்தனியே குழுக்களாக இயங்குகிற அமைப்புகளெல்லாம் ஒரே அமைப்பாக இயங்கவேண்டும். உரிமைக்குரல்
கொடுக்கவேண்டும்” என்று உணர்ச்சி மேலிட கூறினார். “வரவேற்கத் தக்க நல்ல முயற்சிதான்; நாமெல்லாம் ஒன்றுபட்டால், ஒரே அமைப்பானால் தமிழ் ஈழம் பெறலாம். தமிழக மீனவர்களை இலங்கை அரசு சுடாமல் பார்த்து கொள்ளலாம். மாநில, மைய அரசுகளின் குடுமிகள் நம் கையில் வரும்” என்கிற ஆர்வமும் அற்புதம்தான். “நல்ல யோசனை, தலைவரே!. அப்படியொரு அமைப்பை உருவாக்கினோம்என்றால் நான்தான் அதற்குத் தலைவராக இருப்பேன்” என்றேன். “அதெப்படி?” என்றார் அவர்.

எல்லோரும் தலைவர் : “அதுதான் பிரச்னையே.. எதைத் தொடங்கினாலும் அதற்குத் தாமே தலைமையேற்கவேண்டும் என்று எண்ணுவது எல்லோருடைய இயல்பாகிவிட்டது. எல்லோருக் குமே தலைமையின் மீது ஆசை என்பதால் நல்ல தலைமை நமக்குத் கிடைக்காமல் போய்விடுகிறது. தான் சொல்வதற்குத் தலையாட்ட வேண்டும். தனக்குப் பின்னால் ஒவ்வொருவரும் வரவேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசையும் ஆர்வமும் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் நமக்கு ஏகப்பட்ட தலைவர்கள் பெருத்து விட்ட நிலைமையும் ஏற்பட்டுவிட்டது.
தலைமை என்பது தாம் விரும்பி நிகழ்வதன்று. தம்மைச் சுற்றியுள்ள மக்களின் மாபெரும் மதிப்புக்கும், மகோன்னதமான தேர்வுக்கும் உரியவனே தலைவனாக முடியும். யார் தலைவனாக முடியும் யாருக்குத் தலைமையேற்கும் தகுதியுள்ளது என்றால் நல்ல பண்பினருக்கே அது சாத்தியம்.

தலைமை என்பது பண்பு : நலன்கள் சார்ந்ததே தவிர திறன் சார்ந்ததன்று. அலுவலகமோ, அமைப்போ, நாடோ நிறுவனமோ எதுவாயினும் சிறப்பாக இயங்குவதற்கு மூன்று இன்றியமை யாத கூறுகளான நடத்துதல், நிர்வகித்தல், தலைமை தாங்குதல் ஆகியவை அவசியம். நடத்துதல் என்பது அன்றாடப் பணிகளைச் செவ்வனே செய்து கொண்டிருத்தல் ஆகும். இதைத் தொழிலாளர்களும் அலுவலர்களுமே செய்வர். இதை மனித சக்தி என்று அழைக்கிறோம். அதாவது மானுட ஆற்றல், அடுத்து அலுவலகத்தைத் திறம்பட நிர்வகித்தல். இதை நிர்வாகத் திறன் என்கிறோம். சக்தி, திறன் இவையிரண்டை யும் செம்மையாகக் கொண்டுசெல்கிற படியில் உயரத்தில்
இருப்பது தலைமை. தலைமையை தலைமைச் சக்தி என்றோதலைமைத் திறன் என்றோ நாம் அழைப்பதில்லை. தலைமையை தலைமைப் பண்பு என்றே அழைக்கிறோம். எனவே
தலைமைக்கு நல்ல பண்புகள் இன்றியமையாதவை.

தலைமை என்ற பண்பு : தலைமை என்பது பண்பாகக் கருதப்படுகிறபட்சத்தில் அதற்கென சில எதிர்பார்ப்புகள் உள்ளன. “தலைவனுக்கு வழி தெரிய வேண்டும் அவ்வழியில் அவன் செல்ல வேண்டும். வழி காட்ட வேண்டும்”. என்கிறார் ஜான்மேக்ஸ்வெல் என்னும் அறிஞர். வெற்றி பெறுவதல்ல தலைமை. தலைமையேற்பதுதான் வெற்றி. வெற்றி பெறுவதற்கும் தட்டிப் பறிப்பதற்கும் என்னென்ன உபாயங்கள் உண்டோ அதைப் பயன்படுத்துகிறவன் மந்திரி அல்லது தந்திரி தானே தவிர தலைவன் அல்லன். “தலைமை என்பது அடுத்த தேர்தல் அல்ல. அடுத்த தலைமுறை” என்பார் சைமன் சினெக். தேர்தல்இல்லாமல், வாக்குகளைக் குவிக்காமல் ஒரு தலைவன் சுயமாக எழுவான். அவனுக்குப் பின்னால் ஒரு கூட்டம் வரும்.ஆடுகளை காப்பாற்றும் சிங்கம்இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எத்தனையோ தலைவர்களுக்குப் பங்குண்டு என்றாலும் அண்ணல் காந்தியின் அடையாளங்களான சத்தியம், அகிம்சை, எளிமை போன்ற பண்பு
நலன்களே அவரைத் தலைவராக இன்றளவும் நம்மைத் தொழ செய்திருக்கின்றன. நாலு காசை வைத்துக் கொண்டிருக்கும் பல நோஞ்சான்கள் சிங்கங்கள் என்னிடமிருக்கின்றன என்று சொல்லித் திரிவதில் பெருமையில்லை. அப்பாவி ஆடுகளைக் காப்பாற்றுவதற்காக நான் ஒரு
சிங்கம் போன்றவன் என்கிறவனே தலைவனாக இருக்க முடியும். மாவீரன் அலெக்ஸாண்டர்
“சிங்கங்களுக்குத் தலைமையேற்றுள்ள ஆடு குறித்து எனக்கு அச்சமில்லை. ஆடுகளைத் தலைமை தாங்கும் சிங்கத்தைப் பார்த்தே நான் அஞ்சுகிறேன்” என்பார். தோன்றுகிற வனே தலைவன். ஏற்பாடு செய்யப்படுகிற கூட்டங்களைத் தாங்குகிற தலைமையை விட எப்படி என்று தெரியாமலும், யாரால் என்று புலப்படாமலும் திரளும் உணர்ச்சிக்குள் தோன்றாமல் இருக்கிறார்களே அவர்கள்தான் உண்மை யான தலைவர்கள். அவர்கள் வெளித்தெரிய மாட்டார்கள். ஆனால், ஒருநாள் வெடித்தெழுந்து வருவார்கள்.அண்மையில் நடந்த மெரினா புரட்சியும் ஜல்லிக்கட்டு முதல் நெடுவாசல் வரை ஒவ்வொன்றையும் கவனமாகக் கலவரங்களின்றி அடுத்தடுத்த கட்டங்
களுக்குக் கொண்டு சென்ற நேர்த்தி, உணர்ச்சிக் குவிப்பு யாவும் நிகழ்கால இளைஞர்களின் சுயக்
கட்டுபாடுடன் கூடிய பண்பு நலன்களின் மொத்த வெளிப்பாடு என்றே கூறவேண்டும்.
யாரையும் நம்பவில்லை: எவரின் பின்னாலும் போகவில்லை. தாமே தம் பண்பு நலன்களால் இந்த இளைஞர்கள் ஒவ்வொருவருமே தலைவராக தம்மை நிறுவியிருக்கிறார்கள் யாருக்குப் பின்னாலும் இந்தக் கூட்டம் இல்லை. இது இன்னொரு சுதந்திரம் என்பதுபோல ஒருமித்த இலக்கு, ஒற்றுமை, உறுதி. ஆகியவற்றைப் பார்க்கும்போது நாளைய தலைவர்களாய் இவர்கள் எழும் வாய்ப்பும் உள்ளது. இன்றைய இளைஞர்கள் குறித்த பொதுவான தவறான விமர்சனங்கள் உடைத்தெறியப் பட்டுள்ளன. கேளிக்கைகளிலும், காசு சம்பாதிப்பதிலும் குறியாக இருக்கிற இவர்களிடம் சமூக அக்கறை இல்லை. நாட்டுப்பற்று இல்லை, நாளையப் பற்றிய சிந்தனை இல்லை, என்பனவெல்லாம் தவறென்று புலப்படுத்தப்பட்டுள்ளது. இப்போதிருக்கிற தலைவர்கள் நாளை இவர்களை வியந்து பார்க்க போகிறார்கள். எங்களால் முடியும் என்று எழுகிற இந்த இளைஞர்களின் கையில் இந்த நாடு செல்லட்டும். அடக்குமுறைகளால் இந்த சக்தியை அடக்கிவிடாமல் அரவணைத்து வழி நடத்துவோம். கவனமிருக்கட்டும்; நமக்கு அடுத்த தேர்தல் முக்கியம் அல்ல. அடுத்த தலைமுறை முக்கியம்.

-ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்
எழுத்தாளர், சென்னை.
94441 07879

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement