Advertisement

மாற வேண்டியது மக்கள்!

மருத்துவ சேவை, உயிர் காக்கும் உன்னத சேவை. மனித இனத்தின் நோய்களை தடுத்து, விபத்துகளிலிருந்து, உயிரையும், உடலையும் காத்து, வலியையும், வேதனையையும் தீர்த்து, வாழும் காலத்தில் மகிழ்ச்சியோடு வாழவும், ஆயுளை நீட்டிக்கவும், கடவுள் கொடுத்த வரமே, மருத்துவ சேவை!
சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தால், இறந்தவரின் உறவினர், நண்பர்களால் மருத்துவர் தாக்கப்படுவதும், மருத்துவமனை சேதப்படுத்தப்படுவதும் நடக்கிறது. கடவுளுக்கு சமமாக கருதப்படும் மருத்துவர்கள் மீது, சில ஆண்டுகளாக நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன; அவை, தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மருத்துவர் -- நோயாளி உறவு, ஒருவர் மேல் மற்றவர் வைத்திருக்கும் நம்பிக்கை என்ற அச்சில் தான் சுழல்கிறது. தற்போது, அந்த அச்சில், உறவில், ஆபத்தான விரிசல் ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், 75 சதவீதம் பேர், தங்கள் பணியிடத்தில் ஏதோவொரு விதத்தில், வன்முறையை சந்திப்பதாக, புள்ளி விபரம்
கூறுகிறது.
நோயாளிகளை குணப்படுத்துவதில், மருத்துவர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து செயல்படுகின்றனர். எய்ட்ஸ், சார்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததால், நோய் தொற்றி, இறந்த மருத்துவர்கள் அனேகம்.
ஒவ்வொரு வியாதியும், அது தாக்கி மறையும் போது, சில பின்விளைவுகளை, தழும்புகளை, உடலில் சில நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தத் தான் செய்யும். இன்றைய மருத்துவமும் சரி, வேறு எந்த துறையாக இருந்தாலும் சரி, நுாற்றுக்கு நுாறு வளர்ந்து, முழுமை பெற்று விட்டதாக கூற முடியாது. எனவே, சிகிச்சை முறைகளும், நுாற்றுக்கு நுாறு சதவீதம் பலன் தரும் என, சொல்ல முடியாது.
மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பின், நோயாளி இறக்க நேரிட்டாலோ அல்லது பாதிப்பு ஏற்பட்டாலோ, நோயாளிகளின் உறவினர்கள் அல்லது நண்பர்கள், சிகிச்சை அளித்த மருத்துவரை தாக்குவதும், மருத்துவமனையை சூறையாடுவதும், அதிக பணத்தை இழப்பு தொகையாக கேட்டு, மிரட்டுவதும் தடுக்கப்பட வேண்டும்.
சில நேரங்களில், பணம் தரும் வரை, உடலை வாங்க மறுப்பதும், இறந்தவர்களின் உடலை, மருத்துவமனையில் கிடத்தி, ஆர்ப்பாட்டம் செய்வதும் நடக்கிறது. இவர்களுடன், அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதி கட்சிகளின் தலைவர்களும் சேர்ந்து, பறித்த பணத்தை, பங்கு போட்டுக் கொள்ளலாம் என்ற ஆசையில், கூட்டுச் சேர்ந்து கொள்கின்றனர்.
அத்தகைய சூழ்நிலையில், மருத்துவர் அல்லது மருத்துவமனை நிர்வாகி, தங்களுக்கு பாதுகாப்பு கோரி, காவல் துறையை அணுகும் போது, அவர்கள் சட்டத்தை புரிந்து கொள்ளாமலும், சரியான வழிகாட்டும் நெறிமுறைகளை அறிந்து கொள்ளாமலும் செயல்படுகின்றனர்.
மருத்துவமனை முன், கூட்டம் அதிகமாக இருந்தால், சட்டம் - ஒழுங்கு என, காரணம் காட்டி, பாதுகாப்பு கேட்ட மருத்துவர் மீதே, வழக்கு போட்டு, கைது செய்ய முயலும் பாதுகாப்பற்ற சூழ்நிலை இங்கு உள்ளது.
இதனால், பல மருத்துவர்கள், ஆண்டு கணக்கில் பணியாற்றி, ஈட்டிய நற்பெயருக்கு களங்கம் வந்து விடுமோ என, அஞ்சுகின்றனர். இரவு, பகல் பாராமல் கண் விழித்து, பசி, தாகம் உணராது பணி செய்து, தன் நலம், தன் குழந்தைகள், குடும்ப நலம் கருதாமல் உழைத்து, குருவி போல் சேர்த்த பணத்தை, வன்முறை கும்பலிடம் இழக்கின்றனர். இதனால், மனம் நொந்து, ரத்த கண்ணீர்
சிந்துகின்றனர்.
படிப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இப்போதெல்லாம், மருத்துவத் துறையை தேர்ந்தெடுப்பதில்லை. திருமண தேவைகளில் கூட, 'மருத்துவர் வேண்டும்' என, மணமக்களின் பெற்றோர் கேட்பது, குறைந்து வருகிறது.
சக மனிதர்களை, சாவின் பிடியிலிருந்து தன்னுயிர் கொடுத்தாவது காக்க, உறுதி கொண்டு பணியாற்றும் மருத்துவர் நிலைமை மிகவும் பரிதாபம். எந்த நேரத்திலும், தான் கட்டிக்காத்த நற்பெயர், தொழில், மரியாதை, மானம் அத்தனையும் இழந்து, சிறைக்குள் வாட வேண்டி வரலாம் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் அவர் எப்படி, பயமின்றி, சுதந்திரமாக செயல்பட்டு, எமனுடன் போராடி, உயிர்களை மீட்கும் போரில் உறுதியுடன் நிற்க முடியும் என்பதை, அனைவரும் எண்ணி பார்க்க வேண்டும். சிகிச்சை பலனின்றி போகும் போது ஏற்படும் இழப்புகளுக்கு, மருத்துவர்களை தாக்கும் போக்கு மறைய வேண்டும்.
நோயாளி உறவு, நம்பிக்கை, நல்லெண்ணம், நோயாளியின் நன்மை கருதியே மருத்துவர் இருக்க வேண்டும். விளைவுகளை, மருத்துவரும், நோயாளியும் யாரையும் குற்றம் சாட்டாமல் ஏற்றுக் கொள்வது என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், மருத்துவர்களுக்கும் பொருந்தும் என்ற நீதிமன்ற தீர்ப்பு, மருத்துவர், நோயாளி உறவில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. மருத்துவர் என்பவர், தன் சேவையை விற்கும் விற்பனையாளர் என்ற அளவிற்கு, இச்சட்டம், மருத்துவர்களுக்கு, 'பெருமை' சேர்த்துள்ளது.
மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து, அவர்களை காப்பாற்றும் வகையில், 2005ல், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சற்று ஆறுதலாக உள்ளது.
'சேவைகளிலே, தலையாய சேவை மருத்துவ சேவை. அதில், கவனக்குறைவு என்ற குற்றச்சாட்டு எழுந்தால், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அப்போது தான், மருத்துவர்களை, நியாயமற்ற, முறை கேடான குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்ற முடியும்.
'மேலும், பணம் பறிக்கும் நோக்கத்துடன் போடப்படும் வழக்குகளிலிருந்தும் அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்திய மருத்துவ கவுன்சிலுடன் கலந்தாலோசித்து, சரியான வழிமுறைகளை வழங்க வேண்டும்' என, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவர்கள் மீது, நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்துவதற்கு பல சந்தேகங்களும், கோபங்களும் காரணமாக அமைகின்றன. மருத்துவ பரிசோதனை நிறுவனங்களிடம் பணத்தை பெற்று, தேவைக்கு அதிகமான பரிசோதனைகள் செய்ய, மருத்துவர்கள் நிர்ப்பந்திப்பதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு சென்ற மருத்துவ வழக்குகள் சிலவற்றில், 'தலைவலிக்கு ஏன், சி.டி., ஸ்கேன் எடுக்கவில்லை; கர்ப்பப்பை ஆப்பரேஷன் செய்யும் போது, இதய நோய் நிபுணரை ஏன், ஆப்பரேஷன் தியேட்டரில் வைத்து கொள்ளவில்லை...' என, நடைமுறைக்கு சாத்தியமில்லா கேள்விகளை அந்த நீதிமன்றங்கள் எழுப்பியுள்ளன.
எனவே, உன்னத தொழில் செய்யும் மருத்துவர்களை சந்தேகக் கண்ணால் பார்ப்பதை, பொதுமக்களும், நோயாளிகளும் தவிர்க்க வேண்டும். ஆங்காங்கே ஒரு சில மருத்துவர்கள், இத்தகைய முறைகேட்டில் ஈடுபடுவதாக தெரிகிறது. அத்தகையோர் மீது வரும் புகார்கள் மீது, மருத்துவர்கள் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்கிறது.
மருத்துவ துறையை விட பிற துறைகளில், அதிக வருமானம் வரும் இந்த நேரத்தில், மருத்துவம் படிக்க அனேகர் விரும்பாத நிலையில், எதிர்கால சந்ததியினருக்கு மருத்துவ வசதி கிடைக்க, அனைவரும் தொண்டாற்ற வேண்டும்.
மருத்துவ சேவை மேம்பட, ஊடகங்கள், மருத்துவ சேவைப் பற்றிய நேர்மறை செய்திகளை அதிகம் வெளியிட வேண்டும். உணர்ச்சியைத் துாண்டி அல்லது வன்முறையை துாண்டும் நிகழ்வுகளை பெரிதுபடுத்தக் கூடாது.
இதையும் மீறி, சமூக விரோத சக்திகள், சில மூன்றாம் தர அரசியல்வாதிகள் மருத்துவமனையை வன்முறை களங்களாக மாற்றுவதை, காவல் துறை தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அவசர கதியில் இயங்கி, மருத்துவ சேவைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
உயிர் போகும் நிலையிலுள்ள அல்லது நோய்வாய்ப்பட்ட நபரை காப்பாற்ற, மருத்துவர் தன் அறிவையும், கற்ற கைத்திறனையும் பயன்படுத்துகிறார்.
சில நேரங்களில், மருத்துவரின் முயற்சி தோல்வி அடைகிறது. நிலைமை இப்படி இருக்க, ஆபத்தை தடுக்க போன மருத்துவரை குற்றம் சாட்டி, தண்டிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?
எனவே, எதிர்காலங்களில், 'மருத்துவர் மக்களுக்காக; மக்கள் மருத்துவர்களுக்காக' என்ற புரிதல் இருவருக்கும் அவசியம். அந்த இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவதில், மக்கள், மருத்துவர், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், ஊடகங்களுக்கும் மிகப்பெரிய சமூக கடமை உள்ளது.
இ- மெயில்:drsurendranrvsgmail.com.

- டாக்டர். ஆர்.வி.எஸ்.சுரேந்திரன் எம்.எஸ்., -
மாநிலத் தலைவர், இந்திய மருத்துவ சங்கம், மருத்துவர் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • raghavan mageswary - chennai,இந்தியா

    மருத்துவ பணியை சேவை நோக்குடன் அர்ப்பணிப்புடன் செய்கின்ற மருத்துவர்களின் பாதுகாப்பு என்பது மருத்துவத்துறையை மேம்படுத்துவதாகவும் கடவுளின் வரிசையில் மருத்துவர்களை பார்க்கின்ற நோயாளிகளுக்கும், மருத்துவருக்கும் உள்ள உன்னத உறவை பலப்படுத்துவதற்கு உதவும்.டாக்டர் சுரேந்திரனின் கட்டுரை தொலைநோக்கு பார்வையுடன் கூடிய சிறப்பான கட்டுரை. இதற்க்கு ஒரு கூட்டு முயற்சி தேவை என்பதை எடுத்துரைத்த விதம் அருமை. எல்லா துறைகளிலும் ஊடுருவிவிட்ட குறுகிய காலத்தில் பணம் பண்ணும் ஆசை மருத்துவத்துறையில் நுழையும்போது அதன் விளைவுகள் மனித உயிரோடு என்பதால் அதன் பாதிப்பு உணர்வோடுகூடி வெளிப்படுவது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. இதற்க்கு மருத்துவர்களை மட்டும் குறைசொல்ல முடியாது. மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தகுதி அடிப்படையில் மட்டும் என்ற நிலை மாறி பணத்தின் அடிப்படையிலும் செல்வதால், சேவை நோக்கம் கொண்ட மருத்துவ துறை வியாபார நோக்கத்தில் பயணிக்க தொடங்கியதும் மறுக்க முடியாத உண்மை. இதையெல்லாம் தாண்டி மனித நேயமிக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடி சேவைமனப்பான்மை உடைய மருத்துவர்களும் இருக்கிறார்கள் அவர்களால்தான் உலகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. நல்லவொருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை என்பதுபோல இந்த மனித உருவத்தில் உள்ள கடவுளை காப்பாற்ற அரசின் சட்டங்களும், மக்களின் புரிதலும் ஊடகங்களின் தார்மீக பொறுப்பும் நிச்சயம் தேவை என்பதும் மறுக்கமுடியாத ஒன்றாகும், நன்றி டாக்டர் சுரேந்திரன் அவர்களே ,

  • A.Gomathinayagam - chennai,இந்தியா

    மருத்துவம் சேவையாக இருந்தவரை மக்கள் மருத்துவரை தெய்வமாகவே மதித்தனர். அது என்று வணிகமாக மாறியதோ அன்றே அழிவு ஆரம்பமாகி விட்டது. அன்று ஒரு சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவர், மருந்து கட்டணம் உட்பட ரூபாய் 10 தான் ஆகிவிட்டது. இன்று அதற்க்கு ரூபாய் 10000 வசூலிக்கும் கார்பொரேட் மருத்துவமனைகளும் உள்ளன. குறுகிய காலத்தில் பணம் பண்ண நினைப்பதே அனைத்துக்கும் காரணம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement