Advertisement

எங்கே செல்கிறது இளைய சமுதாயம்

சரியான சமூகப் பார்வையும் புரிதலும் குறைந்த பட்ச நோக்கமும் இல்லாததால் வேலைக்குத் தகுதியற்ற நிலையில் பெரும்பாலான பட்டதாரிகள் இருக்கின்றனர். இதனால் கிடைக்கும் வேலையை விருப்பமின்றி செய்கின்றனர். புதிய தொழில் துவங்க வேண்டிய தொழிலறிவு இல்லாததால் தொழில் முனைவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மனம் போன போக்கில் : தன் மீது நம்பிக்கைக் குறைவாக இருப்பதால் 'காற்றிலே பறக்கும் காகிதத்தைப் போல்' மனம் போன போக்கில் போகின்றனர். இன்றைய தொழில்நுட்ப உலகில் இளைஞர்களின் சக்தி வீணடிக்கப்படுவது மட்டுமின்றி சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் இருக்கிற ஏற்றத்தாழ்வின் பிளவை அது அதிகரித்து வருகிறது. இந்நிலையிலும் கூட பண்பாட்டு மீட்புக்கான தைப்புரட்சியை அறப்போராட்டம் மூலம் உலகத்துக்கே கற்றுக் கொடுத்ததும் இம்மனநிலையில் இருந்த மாணவர்களிடம் தான். காந்திஜியின் கருத்துப்படி தற்கால மாணவர்களை குறை கூறுவது வழக்கமான ஒன்று தான். அவர்கள் ஒரு கண்ணாடி போல் இருக்கிறார்கள்; தற்கால நிலைமையெல்லாம் அப்படியே அந்தக் கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. அவர்களைக் குறைகூறுவது பாவம் எனத் தோன்றுகிறது. அவர்களைத் தெரிந்து கொள்வதில் கஷ்டம் இல்லை. புத்தகத்தைப் படிப்பது போல் அவர்களுடைய மனதைப் படித்து விடலாம். அவர்களிடம் சிறந்த பண்புகள் இல்லையென்றால் அது அவர்களுடைய குற்றமல்ல; பெற்றோரும் ஆசிரியர்களும் அரசுமே குற்றவாளிகள் என குறிப்பிட்டுள்ளார்.காந்திஜியின் கருத்துடன் இன்றைய நிலையை யதார்த்தமாக ஒப்பிட்டால் குற்றவாளிகள் வரிசையில் சினிமா, டிவி மற்றும் சமூக ஊடகங்கள் இணைந்தே மாணவர்களின் திசை மாறும் வாழ்க்கைக்குக் காரணமாக இருப்பதை உணரலாம். மாணவர்களின் சக்திதான் நாட்டின் பலம். சமூகத்தின் இயங்கு சக்தி என்பதை உணர்ந்து, நாகரிகம் என்ற போர்வைக்குள் இருக்கும் போலியான அங்கீகாரக் குறியீடுகளை விலக்கி மாணவர்களைப் பண்படுத்த வேண்டியது அனைவரின் கடமை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமூக, கலாசார, மாற்றங்களினால் குறிப்பாக மாணவர்கள் தம் பாரம்பரிய, சமூக, கலாசாரப் பண்புகளை விட்டு விலகிச் செல்லும் நிலை உருவாகி வருகிறது. இம்மாற்றத்தால் இளையோருக்கும் பெரியவர்களுக்கும் இடையில் முரண்பாடுகளும் இடைவெளிகளும் சமீபகாலமாகக் கூடுதலாக உருவாகி வருவதை வீடுகளில் பார்த்து வருகிறோம். இந்நிலையில் மாணவர்களுடைய பழக்க வழக்கம் மற்றும் செயல்பாடுகளை கவனிக்க, பெற்றோர்கள் கட்டாயம் நேரம் ஒதுக்க வேண்டும்.
பாலைவனச்சோலை கல்லுாரிகள் : கல்லுாரிகளுக்கும் சமுதாயத்திற்கும் இடைவெளி இருக்கிறது. கல்லுாரிகளில் படிக்கும் பெரும்பாலான கிராம மாணவர்களின் நிலையை எண்ணி பார்க்க வேண்டும். மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாய்ப்புகள் இல்லாததும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது. திறமையானவர்களுக்கு சரியான வேலைகள் இல்லை. பல வேலைகளுக்கு ஆட்களே இல்லை என்ற நிலையில் இருக்கிறோம். அரசின் கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மாணவர்கள் நலன் கருதி தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கிற கதையாக இல்லாமல் சமூகத்திற்கும் கல்லுாரிகளுக்கும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டிய பணிகளை முடுக்கி விட வேண்டும். கடனை வாங்கி படிக்க வைக்கும் பெற்றோர், படிப்பு முடிந்தவுடனே பிள்ளை வேலைக்குச் சென்று விடுவான்; அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
தொழில் வளர்ச்சி எப்போது : உற்பத்தி சார்ந்த தொழில் வளர்ச்சி நாட்டில் நிலையான பொருளாதாரத்திற்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் நாம், நம் மண் சார்ந்த உற்பத்தியைப் பெருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தொழிமுனைவோர்களை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு உதவியாக அரசின் கட்டுப்பாடுகளை தளர்த்தி, தொழில் தொடங்க வேண்டிய இடம், குறிப்பிட்ட காலத்திற்கு வரிச்சலுகைகள், வங்கிகளின் உதவி ஆகியவை அதிகரிக்கும் போது நம்மூரில் உள்ள பொருட்களைக்கொண்டு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கலாம். ஆரோக்கியமான சமூக பொருளாதாரத்தை உருவாக்கலாம். மாணவர்களும் 'படித்துக் கொண்டே சம்பாதிக்கிற, சம்பாதித்துக் கொண்டே படிக்கிற'நிலையை உருவாக்கினால், அவர்களுடைய ஏக்கம் மற்றும் ஏமாற்றம் ஆகிய இரண்டு வார்த்தைகளை மறப்பார்கள். ஏழை எளிய பெற்றோர் அதிக வலியின்றி இருப்பர்.
வன்முறைக்கு என்ன காரணம் : கல்வி நிலையங்களில் மாணவர்களிடம் ஏற்படும் வன்முறைக்குக் குடும்பச்சூழல், கட்டுப்பாடற்ற சுதந்திரம், சமுதாய ஏற்றத் தாழ்வுகள், மனஅழுத்தம், சமூக அக்கறையின்றி எடுக்கப்படும் சினிமா காட்சிகள் காரணங்களாக இருக்கின்றன. சில நேரங்களில் மாணவர்களுக்குள் ஏற்படும் மோதலை கட்சியினரும் ஊக்கப்படுத்துகின்றனர். சினிமாக்களில் மாணவர்கள் மோதிக்கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகம் இடம் பெறுவதால் அவர்களை அறியாமலே ஹீரோவாக வேண்டுமென்று ஒருவரை ஒருவர் தாக்குகின்றனர். கல்வியுடன் மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் கல்வி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

அதிகரிக்கும் மனஅழுத்தம் : மாணவர்கள் மனஅழுத்தத்தில் பாதிக்கப்படுதல், காதல் தோல்வியால் படுகொலை, பெருகும் மது பழக்கவழக்கம், பாலியல் கொடுமைகள் போன்றவைகளில் சிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாவதையும் சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வால் சின்னச் சின்ன விஷயங்களுக்காகத் தற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வசதியாக வாழவேண்டும் என்ற ஆசையில் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சமூக விரோதச் செயல்களில் சில மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் இருக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் உதவியுடன் கண்டறிந்து, மனநல ஆலோசகர்கள் மூலம் மாணவர்களின் வாழ்வை மீட்கும் பணியைக் கல்வி நிலையங்கள் செய்ய வேண்டும்.மாணவர்கள் திசைமாறிச் செல்லவும் நம் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தி வரும் பன்னாட்டு நிறுவனங்கள்' பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டில் ஆட்டும் வித்தையை' இப்பொழுது ஆரம்பித்துள்ளனர். மாணவர்களின் மனது மகிழ்ச்சியாக இருக்க, சுறுசுறுப்பாக இருக்க, ஞாபக சக்தி அதிகரிக்க, மனநிலை மேம்பட வணிக நோக்கோடு ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகள் மற்றும் மருந்துகளை சந்தையில் கொண்டு வந்துள்ளன. மற்றொருபுறம் உலகமயம், பருவநிலை மாற்றம், இன்றைய இளைஞர்களை நுகர்வோர்களாக மட்டுமே வைத்திருக்கிற தொழில்நுட்பம் ஆகியவை ஒரேநேரத்தில் ஏற்படுத்தும் தாக்குதல்களால் அரசுகளே பலவீனப்பட்டு வருவதையும் பார்க்கமுடிகிறது.
திரையில் தலைவனை தேடும் அவலம் : சமூகத்தை நோக்கி கேள்விகளை முன்வைக்கிறது இன்றைய மாணவர்களின் இந்த நிலைமை. மக்கள் தங்கள் பிரச்னைகளை பேச, போராட துவங்கி வரும் இந்நாளில் தான் இப்படியான விவாதங்கள் பெருமளவு முக்கியத்துவம் பெரும். 'அறிவியல் அறிவு' அரசியல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குஅதிக முக்கியத்துவம் பெறுகிறது. கருவேலமர ஒழிப்பு துவங்கி ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் வரை இதை உணரலாம். அத்தகைய சூழலில் நம் மாணவர்கள் தரையில் தங்களுக்குள் தேடவேண்டிய தலைவனை திரையில் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். நன்னம்பிக்கை முனைகளை தேடி தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நிலையில் இருந்து இவர்களை மீட்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
மனித வாசிப்பு அவசியம் : மாணவர்கள் புத்தகங்களுக்கு மேலாக மனித சமூகத்தை வாசிக்க வேண்டும். சமூகம் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை அவர்கள் காலத்தின் கண் கொண்டு நோக்க வேண்டும். மனித வாசிப்பும், சரியான சமூக அவதானிப்பும் கொண்ட மாணவர்கள் வாழ்வில் வீழ்ச்சியுற்றதாய் சரித்திரம் இல்லை. மாணவர்களை நிராகரித்து விட்டு அவ்வளவு எளிதில் சமூக முன்னேற்றத்தை அடைந்து விட முடியாது.
பெரி.கபிலன்கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர்மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி, மதுரை.98944 06111.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement