Advertisement

ஆழ்மனதின் அதிசயங்கள்!

உங்களுக்குள் ஒரு புதையல் இருக்கிறது என்றால், அது இந்த ஆழ்மனம்தான். கடந்த காலத்தில் வாழ்ந்த மாபெரும் மனிதர்கள் தங்கள் ஆழ்மனதோடு தொடர்பு கொண்டு அதன் சக்தியினால் பயன்பெறும் ரகசியத்தை அறிந்திருந்தனர்.
உங்களாலும் அது முடியும். : உங்கள் பிரச்னைகளுக்காக தீர்வு உங்கள் ஆழ்மனதில் உள்ளது. இரவு படுக்கபோகும்போது, உங்கள் ஆழ்மனதிடம் 'நாளை காலை ஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டும்' என்று அழுத்தமாக பதிவு செய்துக்கொண்டு படுக்கச்சென்றால், அது உங்களை சரியான நேரத்துக்கு எழுப்பிவிடும். உங்கள் உடல்நலத்தின் காரணகர்த்தாவாகத் திகழ்வது உங்கள் ஆழ்மனம்தான். பரிபூரண ஆரோக்கியம் என்ற கருத்தை உங்கள் ஆழ்மனதில் பதிய வைத்துவிட்டால், உங்களுடைய நம்பிக்கைக்குரிய பணியாளனாக அது செயல்படும்.உங்களுடைய குறிக்கோளில் தெளிவாக இருக்க வேண்டும். முழு நம்பிக்கையோடு இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆழ்மனதில் பதிய வைப்பதில் குழப்பம் ஏற்படும். உங்கள் விருப்பம் எதுவாயினும் அதை திறமையோடு இணைந்து ஆழ்மனதில் பதிய வையுங்கள்.நீங்கள் ஒரு எழுத்தாளராகவோ, மருத்துவராகவோ, பொறியியல் வல்லுநராகவோ வேறு எந்த துறையாயினும் அதை அன்போடு உரிய காலத்தில் ஆழ்மனத்திற்கு தெரிவியுங்கள். உடனே, அது அதற்கு செவி சாய்த்து காரியத்தில் இறங்கிவிடும்.நீங்கள் ஒரு கப்பலை வழிநடத்திச் செல்லும் தலைமை மாலுமியை போன்றவர். நீங்கள் சரியான நேரத்தில் சரியான கட்டளைகளை வழங்காவிட்டால் கப்பல் சேதமடைந்துவிடும். என்னிடம் அந்த வசதியில்லை. என்னால் முடியாது. அந்த அளவுக்கு என்னிடம் ஆற்றல் இல்லை என்பன போன்ற எதிர்மறைச் சொற்களை பயன்படுத்தாதீர்கள். இதையும்கூட ஆழ்மனம் நிறைவேற்றிவிடும்.
இழப்பு உங்களுக்குத்தான்.: என் ஆழ்மனதின் சக்தி கொண்டு என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று எண்ணுங்கள். இந்த வேலையை என்னால் நன்றாக செய்ய முடியும் என்ற திட்டத்தோடு ஆழ்மனதுக்கு ஆணையிடுங்கள். அதில் வெற்றி காணலாம்.
திருமணங்கள் நிலைபெற வேண்டுமா : மரபுப்படி நடக்கிற திருமணங்களில் பல சடங்குகள் உண்டு. அவை எல்லாம் தேவைதானா என்று நாம் நினைக்கலாம். ஆனால், அவை எல்லாம் திருமண பந்தத்தை ஆழ்மனதில் பதியவைக்கும் முயற்சிகள்தான். உறவு ஆழ்மனதில் பதிந்துவிட்டால் சிறு சிறு பிரச்னைகள் எல்லாம் செல்லாதவை ஆகிவிடும். வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தை வளர்த்துவிடும். இப்படிப்பட்ட திருமணங்கள் தோல்வியில் முடிவதில்லையா என்று கேள்வி எழும். சடங்குகள் இருந்தும் அவை திருமண பந்தத்தை ஆழமாக ஆழ்மனதில் பதிய வைக்கவில்லை என்றே அதற்கு பொருள்.
காதல் திருமணங்கள் : ஆழமான காதல் என்றால், அது ஆழ்மனதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். காதலிக்கிற காலத்தில் கனியே, தேனே, அமுதே என்றவர், கல்யாணம் நிச்சயம் ஆனபிறகும் பொன்னே, மணியே, காரே, ஸ்கூட்டரே என்கிறார்' என்று ஒரு பெண் புலம்பும்போது, அந்த காதல் ஆழ்மனதில் பதிவு செய்யப்பட வில்லை என்றே தெரிகிறது. பணமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
படிப்புக்கும் இதுவே அடிப்படை : படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தை ஆழ்மனதில் பதிவு செய்து வைத்துவிட்டால், அந்த எல்லையை நீங்கள் நிச்சயம் தொடலாம். எந்த துறையாக இருந்தாலும், விருப்பத்தோடு அதனை ஆழ்மனதில் பதிய வைத்தால் வெற்றி வாகை சூடலாம்.ஆழ்மனம் வேறு - மனசாட்சி வேறு. இந்த இரண்டு உணர்ச்சிகளும் வேறு வேறானவை. மனசாட்சி தர்மத்தின் தலைவன். உங்களுக்குள் ஒளிந்து கொண்டு உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துகின்ற தெய்வீக குணம். அதற்கு செவி சாய்த்தால் தவறுகளில் இருந்து தப்பிக்கலாம். மனசாட்சியையே மரத்துப்போக வைக்கும் கொடுமையானவர்களும் உண்டு. மனசாட்சி உங்களுக்கு கட்டளையிடும். ஆழ்மனத்திற்கு நீங்கள் கட்டளையிட வேண்டும்.காலை கண் விழித்தவுடன் ஆழ்மனத்துக்கு இப்படி கட்டளை இடுங்கள்.lஇன்று எல்லாம் வெற்றியாக முடியும்
lபிரச்னைகளை எளிதாக தீர்க்க முடியும் : lஎல்லோரும் என்னை நேசிப்பார்கள்lஅன்பையும், பரிவையும் தேர்ந்தெடுக்கிறேன்lஎன்னால் முடியும்.lஆம். என்னால் முடியும்!இந்த மந்திரச் சொற்களை தீர்மானமாக உச்சரித்தால் நீங்களும் வாகை சூடலாம்!ஆழ்மனம் தரும் அபூர்வ கணங்கள்படைப்பாளர்கள் இந்த அபூர்வ கணங்களை அதிகமாக அனுபவித்திருப்பார்கள். ஒரு சிறுகதை எழுத்தாளர் தனது சிறுகதைக்கு நல்ல பொருத்தமான அல்லது ஈர்க்கக்கூடிய ஒரு தலைப்பு வேண்டும் என்று விரும்புவார். ஆனால், அந்த நேரத்தில் அது அகப்படாமல் போகலாம்.ஒரு கவிஞர் தனது கவிதையில் ஒரு சொல்லுக்காக ஏங்கித் தவிப்பார். ஆனால், அந்த நேரத்தில் அது கிடைக்காமல் போகலாம். ஒரு திரைப்படஇயக்குனர் தனது திரைப்படத்தின் முதல் காட்சியை எப்படிஎடுக்கலாம் என்று தீவிரமாக ஆராய்வார். அப்போது அது அமையாமல் போகலாம். ஆனால் பிரச்னை அத்தோடு முடிந்து விடுவதில்லை.கால இடைவெளியில் அவர்களே எதிர்பாராத வேளையில் தீர்வு கிடைக்கும். அதற்குதான் 'அபூர்வ கணங்கள்' என்று பெயர். எது எப்படி நிகழ்ந்தது, அவர்களின் அந்த கோரிக்கைகள் ஆழ்மனதில் பதிந்துவிடுகின்றன. ஆழ்மனம் அதை அசைபோட்டு கொண்டே இருக்கிறது. விடை கிடைத்ததும் வெளியே அனுப்பி விடுகிறது. குளிக்கும்போதோ, துாங்கும்போதோ எப்போது வேண்டுமானாலும் வெளிப்படும். ஆழ்மனதின் இந்த ஆற்றலை ஆழமாக புரிந்துகொண்டு செயல்பட்டால் அதிகமான நன்மைகளை பெறலாம். அறிவியல் ஆய்வில்கூட இந்த ஆபூர்வகணங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஆட்டுக்குட்டியை விழுங்கிய விவகாரம் : ஆழ்மனதில் அவசியமானதைதான் பதிவு செய்ய வேண்டும். அபத்தமான பீதிகளை பதிய வைத்துவிடக்கூடாது. ஒருவன் தனது கனவில் ஒரு ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டதாக ஒரு காட்சியை கண்டான். விழித்த பிறகும் அது உண்மை என்றே நம்பினான். திரும்ப திரும்ப அதையே நினைத்தான். ஆழ்மனதில் பதிவாகிவிட்டது. மதியம் சாப்பிட்டதும் வயிறு வலிப்பதாக உணர்ந்தான். உறவினர்கள் அவனை ஒரு டாக்டரிடம் அழைத்துச்சென்றார்கள். பரிசோதித்த டாக்டர், 'அப்படியொன்றும் பெரிய பிரச்னை இல்லையே' என்றார்.'நான் ஒரு ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டேன். அதுதான் வலிக்கு காரணம்' என்று வாதாடினான். அது சாத்தியமில்லையே என்று டாக்டர் மறுத்தார். ஆனால், அவன் அதையே திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். உளரீதியான மருத்துவம்தான் இதற்கு சாத்தியம் என்று உணர்ந்து கொண்ட டாக்டர், ஆட்டுக்குட்டியை வெளியே எடுத்தால் போதுமல்லவா என்று கேட்டார். ஆமாம் அதுபோதும் என்றான் அவன்.அப்படியானால் ஒரு ஊசி போடுகிறேன். கொஞ்ச நேரத்தில் ஆட்டுக்குட்டி வெளியே வந்துவிடும் என்று சொல்லி ஒரு மயக்க மருந்து ஊசி போட்டார். அவனும் மயங்கிவிட்டான். டாக்டர், அவனது உறவினர் ஒருவரிடம் உடனே போய் ஒரு ஆட்டுக்குட்டியை கொண்டு வருமாறு கூறினார். உறவினரும் ஆட்டுக்குட்டியோடு வந்தார். அதை ஒருவர் கையில் பிடித்துக்கொண்டார். உடம்பெல்லாம் தண்ணீர் தெளிக்கப்பட்டது.கொஞ்ச நேரத்தில் நோயாளி மயக்கம் தெளிந்து கண் திறந்தான். டாக்டர் சொல்லி வைத்திருந்தபடி எல்லோரும் கைதட்டினார்கள். இதோ பார், நீ விழுங்கிய ஆட்டுக் குட்டி வெளியே எடுத்துவிட்டேன் என்றார் டாக்டர். அவன் ஆட்டுக் குட்டியை உற்றுப்பார்த்தான். பிறகு சொன்னான். 'டாக்டர்! நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள். நான் விழுங்கியது கறுப்பு ஆட்டுக் குட்டி. இங்கே இருப்பதோ வெள்ளை ஆட்டுக்குட்டி' என்றார்.டாக்டருக்கு தலை சுற்றியது. இப்படிதான் பல பேர் தேவை இல்லாத பிரச்னைகளை கற்பனை செய்து கொண்டு திண்டாடுகிறார்கள். ஆழ்மனம் அதையும் நிறைவேற்றி கொடுத்து விடுகிறது. அதற்கு நல்லது எது கெட்டது எது என்று தெரியாது. செயல்பட மட்டும்தான் தெரியும்.
வெற்றி மகுடம் : உங்கள் ஆழ்மனம் ஓர் நினைவு களஞ்சியம். கச்சிதமான நினைவாற்றலுக்கு அடிக்கடி இந்த உறுதிமொழியை கூறுங்கள். என் ஆழ்மனத்தின் முடிவில்லா பேரறிவு எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் நான் அறிந்திருக்க வேண்டியவற்றை எனக்கு வெளிப்படுத்துகிறது.வெற்றி குறித்த யோசனை, வெற்றியின் இன்றியமையாத தன்மை அனைத்து அம்சங்களை யும் உள்ளடக்கியது. நீங்கள் விசுவாசத்துடனும், உறுதியுடனும் வெற்றி பெற வார்த்தையை தொடர்ந்து பலமுறை உங்களுக்குள் நீங்கள் கூறிக்கொள்ளுங்கள். ஆழ்மனம் வெற்றி என்று மகுடத்தை உங்களுக்கு சூட்டி மகிழும்.
இளசை சுந்தரம், எழுத்தாளர் மதுரை. 98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement