Advertisement

எதிர்கால படங்கள் என் தீர்மானம் -இயக்குனர் பிரேம் நவாஸ்

சினிமாவில் கதை நடக்கும் இடத்தையும், காலத்தையும் கணிக்க உதவுவது கலை இயக்கம். ஓவியக்கலைஞராக, தச்சுவேலை, செங்கல் கட்டட வேலை செய்யும் மேஸ்திரியாக செயல்படுபவர் 'ஆர்ட்' கலைஞர். அன்றாடம் காய்ச்சியின் வீட்டிலிருந்து, அண்ணார்ந்து பார்க்கும் மாளிகை வரை மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் 'செட்டிங்' செய்பவர்கள் இவர்கள்.
ஐந்து நிமிட பாடலில் வரும் கலைகளை உருவாக்க ஆண்டுக்கணக்கில் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. படத்தின் வெற்றி, தோல்வியை ஒரு சில நேரங்களில் கலை தீர்மானிக்கிறது. ஒரு அறையில் இருக்கும் பொருட்கள், ஓவியங்கள் செல்லும் வழியில் உள்ள வண்ணங்கள், என ஆரம்பம் முதல் முடிவு வரை மனதில் நிற்பது ஆர்ட் எனப்படும் கலை.
ஓவியக்கலையை உயிராக கொண்டு, வழக்கம்போல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று போனவர்களில் ஒருவர் தான் தற்போதைய மூடர் கூடம், இதுநம்ம ஆளு, துாங்காவனம், சபாஷ் நாயுடு படங்களின் ஆர்ட் கலைஞர் பிரேம் நவாஸ்.இவர் பணியாற்றிய இலங்கை தமிழர்களின் வாழ்க்கை நிலையை கூறும் தீபன் படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'தங்கப்பனை' விருது பெற்றது. பிறந்து வளர்ந்தது மானாமதுரை. சிவகங்கை துரைசிங்கம் கல்லுாரியில் கல்லுாரி படிப்பு. இடையிடையே இவர் வரைந்த ஓவியங்கள் இவருக்கு பாராட்டை பெற்று தந்தது.இவரது ஓவியங்களை பார்த்து உடன் இருந்த நண்பர் கூட்டம், ''உனக்கு பெரிய எதிர்காலம் உள்ளது, சினிமாவில் சென்றால் சாதிக்கலாம்'' என உசுப்பேத்தி விட்டதன் விளைவு, 2002-ல் சென்னைக்கு சென்று வாய்ப்புகளை தேடினார்.பாகுபலி உள்ளிட்ட படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக விளங்கிய சாபுசிரிலிடம் உதவி கலை இயக்குனராக சேர்ந்தார். பாய்ஸ், ஆயுத எழுத்து, யுவா, பாகுபலி, ேஹராம், எந்திரன் உள்ளிட்ட பல படங்களுக்கு பணியாற்றினார்.சாபுசிரிலிடம் உதவி கலை இயக்குனராக இருந்த செல்வகுமாருடன் சண்டைக்கோழி, திமிரு, பேராண்மை படங்களில் பணியாற்றியுள்ளார்.அவர் கூறியது...திரையில் பார்க்கும் வண்ணங்கள் எல்லாம் கலை இயக்குனரின் கைவண்ணத்தில் உருவாகுபவை. நடிப்பை மக்கள் மனதில் நிறுத்த உதவுவது ஆர்ட். தற்போதைய சினிமாவில், ஆர்ட் என்பது டிஜிட்டல் யுகமாக மாறி உள்ளது. ஆர்ட் கலைஞரும் அதற்கேற்ப தன்னை மெருகேற்றி கொண்டால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். கணினி யுகம் வரவில்லை என்றால் அவதார் போன்ற படங்கள் சாத்தியமில்லை. புராண படங்களை பொறுத்தவரை நிறைய வேலை செய்ய வேண்டும். அந்த கால கட்டத்துக்கு நாம் செல்ல வேண்டும்.கமர்ஷியல் படங்களை பொறுத்தவரை அப்படி இல்லை. நாம் சுதந்திரமாக செயல்பட்டு நம் எண்ணங்களை வெளிப்படுத்த முடியும். தீபன் படத்தை பொறுத்தவரை பிரெஞ்ச் ஆர்ட் டிசைனர் மிஷலுடன் இணைந்து பணியாற்றினேன். தொடக்கத்தில் வரும் அகதிகள் கூடாரம் உள்ளிட்டவையை நான் இங்கு வடிவமைத்திருந்தேன். அந்த படத்துக்கு 'தங்கப்பனை' விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.எதிர்காலம் குறித்த படங்கள் வருவது தமிழ் சினிமாவை பொறுத்தவரை குறைவு. அது போன்ற படங்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பது என் விருப்பம். அவற்றில் தான் நம் கற்பனையை வேறு களத்துக்கு கொண்டு செல்ல முடியும். சாபுசிரில், தோட்டாதரணி, பிரபாகரன் ஆகியோரை பிடிக்கும்.'கலை' என்பது கோயிலுக்கு சென்று தியானம் செய்வதை போன்றது. ஓவியம் வரைந்தால் மனதுக்கு நிம்மதி பிறக்கிறது. மாணவர்கள் தங்களுடைய நேரத்தை ஓவியம் வரைவதில் செலவிட்டால் புத்துணர்வு கிடைக்கும். மருந்து மாத்திரையில் குணமாகாத நோயும் ஓவியம் மூலம் குணமாகும், என்றார்.இவரை பாராட்ட: prem_mnmyahoo.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement