Advertisement

சாதனை பெண் கல்பனா சாவ்லா! இன்று பிறந்த நாள்

ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் சாதித்து காட்ட முடியும் என்பதற்கு சான்றாக, ஏராளமான பெண்களை கூற முடியும்.இத்தகைய பெண்களில் ஒருவர் தான் உலகமே வியந்து போற்றிடும் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா. உலக மானுட குலத்தை பாதுகாக்க தனது இன்னுயிரை துறந்த மகத்தான மனுஷி!“இருந்தாலும் மறைந்தாலும்பேர் சொல்ல வேண்டும்..இவர்போல யாரென்றுஊர் சொல்ல வேண்டும்”என்று கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப வீரிய வித்தை உலக மக்களின் மனங்களில் ஊன்றிவிட்டிருப்பவர்.

முதல் இந்திய பெண்அமெரிக்காவின் 'நாசா' வில் பயிற்சி பெற்று, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்ற பெருமை பெற்றவர். 1997 ல் கொலம்பியா மீள் விண்கலத்தில் ஆய்வுப் பயண நிபுணராகவும், எந்திரக் கையை இயக்குபவராகவும் பணியாற்றி அவரது விண்வெளி ஆய்வு லட்சியத்திற்குள் அடியெடுத்து வைத்தார்.
தந்தை, பனாரசிலால் சாவ்லா. சிறு வயதிலேயே கடுமையான உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, படிப்படியாக முன்னேறி 'சூப்பர் டயர்' என்ற நிறுவன முதலாளியாக உயர்ந்து, பொருளாதாரத்துடன் சமூக அந்தஸ்தையும் உயர்த்தி கொண்டவர்.
சுனிதா, தீபா, சஞ்சய், கல்பனா என நான்கு குழந்தைகள். 1961மார்ச் 17ல் டில்லிக்கும் சண்டிகருக்கும் நடுவில் இருக்கிற கார்னால் என்ற இடத்தில் சுயதொழிலில் ஈடுபட்டு வந்த சாவ்லா - சந்த்ஜோதி தம்பதிக்கு, நான்காவது பிள்ளையாக பிறந்தார் கல்பனா. படிப்பில் 'புலி' என்றெல்லாம் சொல்ல முடியாது. 'பரவாயில்லை' என்ற ரகம் தான்.

ஆசைக்கு பச்சைக்கொடிகார்னாலில் 'விமானப் பறப்பு மையம்' என்ற பெயரில் குழு ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த இளம் பருவத்திலேயே விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை கல்பனாவுக்கும், அவரது அண்ணன் சஞ்சய்க்கும் இருந்தது. முதலில் சஞ்சய்யும், அடுத்து கல்பனாவும்
அந்த விமானப் பறப்பு மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்தனர். கல்லுாரியில் படித்தபோது, கல்பனாவின் விண்வெளி வீராங்கனை கனவு பற்றி அவரது பேராசிரியர், சகமாணவியர் கேலி பேசினர்.
ஆனால், 'தான் ஒரு சராசரி பெண் இல்லை. இவ்வுலகம் வியக்கும் வண்ணம் ஆற்றல் பெற்ற பெண். விண்வெளி கனவை என்னால் மெய்யாக்கி காட்ட முடியும்,' என்ற உறுதியை தனக்குள் உருவாக்கிக்கொண்டு தனது லட்சியத்தை எட்டும் முனைப்பில் ஈடுபட்டார்.
அமெரிக்க பல்கலைபஞ்சாப் பல்கலையில் பொறியியல் முடித்து, அமெரிக்க டெக்சாஸ் பல்கலையில் முதுகலை விண்வெளி பொறியியல் படிப்பை முடித்தார். வழிகாட்டியாக இருந்த டான்விலசன் என்பவர் கல்பனாவை பற்றி, “கல்பனா அமைதியும் கூச்ச சுபாவமும் கொண்டவர். அதேசமயம் தைரியசாலி. நினைத்ததை சாதிக்கும் போராட்ட குணம் கொண்டவர். விண்வெளி வீராங்கனையாக ஆகியே தீருவது என்ற தாகம் அவருக்குள் இருந்ததால், அவரால் சாதிக்க முடியும் என்று முழுமையாக நம்பினேன்,” என்கிறார்.

திருமணம்தனது நண்பர் ராஜ் என்பவர் மூலம் தற்செயலாக ஜீன்பியர் என்பவரை சந்திக்க நேர்ந்தது. குழந்தை பருவத்திலிருந்தே தான் கனவு கண்டு வந்த விமானத்தை இயக்கும் ஆர்வத்தை அவரிடம் தெரிவித்தார். கல்பனாவின் துணிச்சலைக் கண்ட அவர், அங்குள்ள விமானப் பயிற்சி மையத்திற்கு சென்று உறுப்பினராக்கினார். அங்கு விமானம் ஓட்டக் கற்றதுடன் 'ஸ்கூபா டைவிங்'கிலும் முறைப்படி பயிற்சி மேற்கொண்டார். அவர்களுக்குள் நட்பு, காதலாகி பெரும் எதிர்ப்புக்கு இடையே திருமணம் நடந்தது.

ஆய்வின் மைல் கல்1988ல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதே ஆண்டில், 'நாசா' விலும் வேலைக்கு சேர்ந்து 'விஞ்ஞானி' என்ற அந்தஸ்தை பெற்றார். 1993ம் ஆண்டு கலிபோர்னியா 'ஓவர்ஷெட் மெதட்ஸ் இன் இ கார்ப்பரேஷன்' ஆய்வு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தது அவரது வாழ்வில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களுக்குப் பின் 1995, மார்ச்சில் நாசா விண்வெளி குழு விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவை தேர்வு செய்தது. 1996ல் முதல் விண்வெளி ஆய்வு பயணம் மேற்கொள்ள அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.

இந்தியாவிற்கு பெருமைஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.

அந்த விபத்துபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.

மனிதாபிமானிஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாப்ரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவி படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.
அவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் கல்பனா சாவ்லாக்கள் அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்!- தாமோதரன், எழுத்தாளர்அல்லிநகரம், 96268 50509

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement