Advertisement

மழை எனும் அமிழ்தம் என்பார்வை

மழை பயிர்க்குலம் தழைக்கவும், அதனால் மனித குலம் தழைக்கவும் உதவும் உன்னத அமிழ்தம் ஆகும். அமுதம் என்பது உயிர் வளர்க்க கூடிய ஒன்று. மழையும் உயிர்களை காக்கும் ஒன்று. அதனால் தான் மழையை அமிழ்தம் என திருவள்ளுவர் குறிப்பிட்டார்.
'வானின் றுலகம் வழங்கி வருவதால்தானமிழ்தம் என்றுணரர் பாற்று'என்கிறது திருக்குறள்.
மழையை, அமிழ்தம் என்று அவர் சொல்ல இன்னொரு காரணமும் உண்டு. உண்பதற்கு ஆன உணவுப் பொருட்கள் விளைய, மழை காரணமாகிறது.
'துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய துாவும் மழை'
என்ற திருக்குறள், மழையின்
பெருமையை பறை சாற்றுகிறது. வான் சிறப்பு என திருவள்ளுவர் இந்த அதிகாரத்திற்கு பெயரிட்டிருக்கிறார். மனித குலம்
சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், வான் மழை சிறப்பாக இருக்க வேண்டும்.
'மாமழை போற்றதும்
மாமழை போற்றதும்
நாம நீர் உலகிற் கவனளி போல்
மேல் நின்று தான் சுரத்தலான்'
என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மழையின் சிறப்பை உணர்த்தியிருப்பார். சோழனின் கொடை தன்மை போல், மழை வானின்றும் சுரக்கிறது என்று மன்னனையும், மழையையும் போற்றுவார். இரண்டு பேருமே மக்களையும்,
மண்ணையும் காப்பவர்கள் என்று இதன் உள்ளீடாக உணர்த்தப்பட்டிருக்கிறது.
இப்படி பொழியும் மழை நீரை வாய்க்காலாய், மதகுகளாய், குளங்களாய், ஊருணிகளாய் நம் முன்னோர்கள் தேக்கி வைத்தனர்.
மழையும், மன்னர்களும்
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று திருத்
தல சிறப்பை சொல்லும் போது, தீர்த்தம் என்பது நீரின் குறியீடாக தெப்பக்குள சிறப்பாக எடுத்து காட்டப்படுகிறது. ஊரைச் சுற்றி குளங்கள், கண்மாய்கள் இருக்கும் போது, அங்கே நிலத்தடி நீர் பெருகுகிறது. ஊற்று வற்றாமல் சுரக்கிறது. கோடையில் தண்ணீர் பஞ்சம் தடுக்கப்படுகிறது. இவை எல்லாம் நீரின் அருமையை உணர்ந்த நம் முன்னோர்கள் நெறிமுறைகளில் ஒன்று.
நம் மன்னர்களில் பெரும்பாலானோர்
நீர் காக்கும் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள். நீர் காக்கும் பெருமுயற்சியின் பிதா மகனாக மாமன்னர் கரிகாற் பெருவளத்தான் திகழ்ந்திருக்கிறான். அவன்
கட்டிய கல்லணை கம்பீரத்தின் காட்சியாக நீர் தேக்கும் சாட்சியாக இன்று விளங்குகிறது.
கரிகாலனை தொடர்ந்து பிற்காலச் சோழர்களில் ராஜ ராஜ சோழனும்,
ராஜேந்திர சோழனும் அமைத்த நீர்தேக்கங்கள் இன்றளவும் வரலாற்றின் அழியாத பக்கங்களாக ஆராதிக்கப்படுகிறது.
நீர்சக்தி
வீர நாராயணன் ஏரி என்ற வீராணம் ஏரி, பொன்னேரி, சோழகங்க ஏரி, மதுராந்தகம் ஏரி என இதை விரித்து கொண்டே போகலாம். ஒரு நாட்டின் வளமையை நிர்ணயிப்பது அந்த நாட்டிலுள்ள நீர்சக்தி என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். நீர்ச்சத்து குறைந்தால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
நீர்ச்சத்து குறைந்தால் பஞ்சம், பசி,
பட்டினி, வறுமை, பிணி, வழிப்பறி, தேச துரோகம் என எல்லாம் தலை விரித்தாடும். அது ஒரு தேசத்தை பிடித்த நோயாகும் என்பது அவர்களின் கணிப்பு. நீர் காக்கும் முயற்சியிலும், நீர்த்தேக்கும் முயற்சியிலும் எல்லா மன்னர்களும் ஈடுபட்டிருந்தனர்.
மன்னர் அமைத்த குளம்
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர், நகரை சுற்றி அமைத்த குளங்களும், ஏரிகளும், தெப்பக்குளங்களும், அதற்கு திலகம் வைத்தது போல மதுரையின் கிழக்கே உலகம் போற்றும் மாரியம்மன் தெப்பக்குளத்தை அவர் அமைத்த பாங்கும், வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
அவர் காலத்தில் நிகழ்ந்ததாக குறிப்பிடப்படும் செவி வழிச் செய்தி உலவுகிறது. தன் தங்கையை புல்வாய்க்கரை அருகிலுள்ள திம்மாபுரம் என்ற சிற்றுாரில் திருமணம் முடித்து தந்ததாகவும், மழை இல்லா ஒரு வறண்ட நாளில் பயிர் எல்லாம் தண்ணீருக்காக தவம் கிடந்த நாளில் தன் தங்கையை பார்க்க ஆனை, சேனை பரிவாரத்துடன் வந்ததாகவும், அவர் வருகையை அந்த ஊர் மக்கள் அவரின் தங்கையான திம்மியிடம் கூறிய போது, அவர் கோபத்துடன் தண்ணீர் பஞ்சத்தில் கருகி கிடக்கும் நம் வயல்களுக்கு தண்ணீர் கொண்டா வருகிறார் என்ற ரீதியில், கார் கொண்ட நெல்லுக்கு நீர் கொண்டா வருகிறார், கதிர் கொண்ட நெல்லுக்கு தண்ணீர் கொண்டா வருகிறார் என கேட்டதாகவும், அந்த தகவல் மன்னரின் காதுகளை எட்ட அவர் உடனே மதுரை திரும்பி, கிருதுமால் கால்வாயில் இருந்து ஒரு துணை கால்வாய் வெட்டி கொந்தகை, கட்டமன்கோட்டை, விராதனுார், நெடுங்குளம், முக்குடி, சாரி புதுக்கோட்டை, கொட்டங்குளம், முடிச்சனேந்தல், கீழக்கள்ளங்குளம், திம்மாபுரம் என்ற ஊர்களின் வழியாக நீர்தடங்கள் அமைத்து அந்த ஊர் கண்மாய்க்கு நீர் கொண்டு சேர்த்ததாகவும் 400 ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.
இப்பகுதி ஊர்க்காடுகள் வழியாக மங்கம்மாள் சாலை, மதுரையிலிருந்து நரிக்குடிக்கு இந்த ஊர்கள் வழியாக தான் போகிறது. அதற்கு மங்கம்மா சாலை என்றே பெயரிடப்பட்டு இன்றளவும் அழைக்கப்படுகிறது.
வேளாண்மை சார்பு
காலனி ஆட்சியின் தொடக்கம் வரை நமது பொருளாதாரமும், பண்பாடும் வேளாண்மை சார்ந்தவை. எனவே தண்ணீர் என்பது மதிப்பும், புனிதமும் சார்ந்தது. குளம் தொட்டு வளம் பெருக்குதல் என்பது தமிழகத்து அரசரின் தலையாய கடமையாக இருந்தது. இந்த கடமையை மதுரை நாயக்க அரசின் புகழ் பெற்ற மன்னரான திருமலை மன்னர் வரை, எல்லா மன்னர்களும் நிறைவேற்றியுள்ளனர்.
வைகை ஆற்றின் நீரை கொண்டே சோழவந்தான் தென்கரைக்கு அருகில் உள்ள கட்டிக்கள்ளூர் சேந்தனேரி என்ற குளம் கி.பி.9ம் நுாற்றாண்டில் வெட்டப்பட்டது.
கி.பி., 17 ம் நுாற்றாண்டில் ஆற்றின் கடைமடை பகுதியில் மிகை நீரை தேக்கி ரகுநாத சமுத்திரம் என்ற பெரிய கண்மாய் சேதுபதி மன்னரால் வெட்டப்பட்டது. சேதுபதி சீமையில் இப்படி சேதுபதி மன்னர்கள் அமைத்த குளங்கள், கண்மாய்கள், ஊருணிகள் இன்னும் அவர்கள் புகழினை பேசுகின்றன.
புகழ் பேசும் ஊருணி
சிவகங்கையை ஆண்ட மருதுபாண்டிய மன்னர்கள் அமைத்த ஊருணிகள் இன்றும் அவர்கள் புகழினை பேசுகின்றன. ஒரு ஊருணி அமைக்கும் போது விருத்திகள் என்ற பார்ப்பார்கள். சந்திர விருத்தி, சூரிய விருத்தி என்பது இது. இதில் சந்திர விருத்தியில் அமைத்தால் அமைத்தவரின் குலம் வாரிசின்றி போகும் என்று ஒரு சாஸ்திரம் உண்டு. சிவகங்கை பகுதியில் குடிநீர் பஞ்சம் போக்க ஒரு சமயம் மருதுபாண்டியர் மன்னர்கள் ஊருணி அமைக்க தச்சு செய்யும் போது, ஆசாரி தயங்கினார்.
சந்திர விருத்தியில் அமைப்பது உங்கள் குடிக்கு ஆகாது என ஆசாரி கூறிய போது, 'குடிகள் தான் எம் மக்கள்; மக்கள் குடிக்கத்தான் நீர். எனவே குடிநீருக்கு பயன்படும் வகையில் சந்திர விருத்திகள் ஊருணி அமைக்க மருதுபாண்டியர் உத்தரவிட்டது, இன்றளவும் நினைவு கூறப்படுகிறது. அந்தளவிற்கு நீரின் பயனை அவர்கள் உணர்ந்திருந்தனர்.
தம் வம்ச விருத்தி பாதிக்குமே என பயப்படவில்லை. தமிழக மக்கள் வரலாறு என்பது அரசுகளின் வரலாறு மட்டுமின்றி, ஆறுகள், குளங்கள், நீர் வரத்து கால்வாய்கள் ஆகியவற்றின் வரலாறும் ஆகும் என தமிழறிஞர் தொ.பரமசிவன் கூறுகிறார்.
மழைநீர் சேகரிப்பு
மழைநீர் சேகரிப்பு என்பது கேலிக்குறியதல்ல. அது அவசியமானது. கிராமங்களில் அந்த கால வீடுகளில் முற்றம் வைத்து கட்டியிருப்பர். கடுமையான மழை பொழிவிலும் முற்றத்தில் விழும் மழை நீர், தேங்காமல் செல்ல துாம்பு வைத்திருப்பர். அதன் வழியாக மழை நீர் நிலத்திற்குள் செல்லும். இப்படி நம் முன்னோர்கள் மழை நீர் சேகரிப்பின் மூலம் மண்ணுக்கும், வீட்டிற்கும் பயன் சேர்த்துள்ளனர். அவர்களின் சந்ததியர்களாகிய நாம் மழை நீரின் அருமையையும், மழைநீர் சேகரிப்பின் நன்மையையும் அறியாமல் இருக்கிறோம்.
நீர் நமது உணவு
நீர் நமது உயர்வு
நீர் காத்தல் நம் வேட்கை
நீரோடு தான் நம் வாழ்க்கை
மழை நீர் சேகரிப்போம். நிலத்தடி நீர் தேக்குவோம். நம் தலைமுறைகளுக்கும் அதை விளக்குவோம்.
மழை எனும் அமிழ்தம் நம்
மண்ணுக்கு அவசியம்.
-கவிஞர் பொற்கைபாண்டியன்
மதுரை. 98651 88773

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement