Advertisement

நந்தவனம்

பெரிய திருமலை நம்பி தகவல் அனுப்பியிருந்தார். உடையவர் சொல்லியிருந்தபடி திருமலையில் ஒரு பெரிய நந்தவனம் தயாராகிவிட்டது. பூத்துக் குலுங்கும் அதன் பேரெழில் பற்றி வியக்காதோர் கிடையாது. அனந்தாழ்வானும் அவனது மனைவியும் பகலிரவாக நந்தவனத்தை உருவாக்கும் பணியிலேயே ஈடுபட்டு அதையே தமது தியானமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு நடை திருமலைக்கு வந்து சேவித்துவிட்டு அனந்தாழ்வானின் நந்தவனத்தையும் பார்த்துவிட்டுப் போகலாமே?

ராமானுஜருக்கு மிகுந்த மன நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. திருமலையில் ஒரு நந்தவனம் என்பது அவர் கனவு. நெடுநாள் கனவு. ஒரு சமயம் தமது சீடர்களுக்கு அவர் திருவாய்மொழி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். முதலியாண்டான், கூரத்தாழ்வான் தொடங்கி, அருளாளப் பெருமான் எம்பெருமானார் வரை அத்தனை சீடர்களும் சபையில் கூடியிருந்தார்கள். மடத்தில் புதிதாகச் சேர்ந்திருந்த சீடர்களும் நெடுங்காலமாக ராமானுஜருடனேயே இருப்போருமாக நுாற்றுக்கணக்கானோர் நிறைந்த சபையாக இருந்தது அன்று.பாசுரங்களைச் சொல்லி விளக்கம் அளித்துக்கொண்டே வரும்போது சட்டென்று ஒரு வரியில் ராமானுஜர் நிலைத்து நின்றார்.எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும் முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே என்பது பாசுரம். மரணமற்ற பெருவாழ்வு வாழ்கிற தேவர்கள் தமது தலைவரான சேனை முதலி யாரோடு வந்து மலர் துாவிப் போற்றித் துதிக்கிற திருவேங்கடம். தேவர்கள் துதிக்க வரும்போது பூக்களைக் கையோடு எடுத்து வந்திருப்பார்களா அல்லது திருவேங்கடத்தில் இருந்தே பறித்துக் கொண்டிருப்பார்களா? 'அவர்கள் ஏன் எடுத்து வரப் போகிறார்கள் சுவாமி? அங்கேயேதான் பறித்திருப்பார்கள்.' என்றார்கள் சீடர்கள்.
'தேவர்கள் உவந்து பறிக்கத்தக்க மலர்கள் அன்றைக்கு அங்கே பூத்திருக்கின்றன. ஆழ்வார் அதை எப்படி சிலாகித்திருக்கிறார் பாருங்கள். பறிக்கக்கூட வேண்டாம். பூக்கள் சிந்திக்கொண்டே இருந்திருக்கின்றன அன்றைக்கு. ஆனால், இன்றைக்குத் திருவேங்கடத்தில் ஒரு நந்தவனம் கூட இல்லையே.' என்றார் ராமானுஜர். சீடர்கள் அமைதியாக இருந்தார்கள். ராமானுஜரும் சில வினாடிகள் அமைதியாகவே இருந்தார். சட்டென்று, 'உங்களில் யாராவது
திருவேங்கட மலைக்குச் சென்று அங்கே பெருமானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்யத் தயாராக இருக்கிறீர்களா?' என்று கேட்டார். இதே போன்ற ஒரு தருணம் பெரிய திருமலை நம்பியின் வாழ்வில் நிகழ்ந்ததை அவர் எண்ணிப் பார்த்தார். அப்போது கேட்டவர் ஆளவந்தார். 'இதோ நான் இருக்கிறேன்' என்று அந்தக் கணமே திருமலைக்குக் கிளம்பிப் போன பெரிய திருமலை நம்பி இன்றுவரை அங்கேயேதான் இருக்கிறார். அவருக்கு உதவியாக ராமானுஜரின் தம்பி கோவிந்தன் அங்கே கைங்கர்யங்கள் புரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு நந்தவனம் உருவாக்கி, பராமரித்து, தினமும் திருமலையப்பனுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்ய இன்னொருவர் தேவை. பொறுப்பை ஏற்கிற ஒருவர். அது ஒன்றே தமது வாழ்வின் நோக்கமாகக் கருதி ஏற்கக்கூடியவர். அப்படி யாரும் இங்கே உண்டா? ராமானுஜர் கேட்டபோது அனைவருமே தயங்கினார்கள். திருமலைக்குச் செல்வது என்பது பெரிய காரியம். பாதை கிடையாது. பகலிரவு தெரியாது. காட்டு மிருகங்களின் ஆதிக்கம் அதிகம். ஏழு மலைகளுக்கு அப்பால் எம்பெருமான் கோயில் கொண்டிருக்கிறான் என்பது உண்மையே. ஏறிப் போய்ச்சேர்ந்துவிட்டால் அவன் பார்த்துக்கொள்வான்தான். ஆனால் போய்ச் சேருகிறவரை புலிகளுக்குப் பசிக்காதிருக்க வேண்டுமே?அத்தனை பேருமே தயங்கிக் கொண்டிருந்தபோது சட்டென்று அனந்தாழ்வான் எழுந்து நின்று கைகூப்பினான். 'சுவாமி, அடியேனுக்கு உத்தரவிடுங்கள். நான் இன்றே திருமலை புறப்படுகிறேன்.'ராமானுஜர் புன்னகை செய்தார்.
'சிறப்பு. ஆனால் நீ திருமணமானவன் ஆயிற்றே? உன் மனைவி இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமே? திருவரங்கம் போல அங்கே வசதிகள் கிடையாது. ஜனசந்தடி கூட அநேகமாகக் கிடையாது. ஒரு அவசர ஆத்திரத்துக்கு எதுவும் கிடைக்காத இடம் என்று கேள்விப்பட்டேன்.'
'எம்பெருமான் இருக்கிறான் அல்லவா? அவன் நிழலில் நாங்கள் இருந்துகொள்வோம் சுவாமி. எங்களுக்கு வேண்டியது என்னவென்று அவனுக்கா தெரியாது?''அருமை அனந்தாழ்வான். உனது துணிவு என்னைக் கவர்கிறது. எம்பெருமான் என்றும் உனக்குத் துணை இருப்பான். கிளம்பு!' என்றார் ராமானுஜர்.அன்று கிளம்பிப் போனவன்த ான். அதன்பின் அவனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. திருமலைக்கு அனந்தாழ்வான் வந்து சேர்ந்த விவரத்தைக் கொஞ்ச காலம் கழித்து பெரிய திருமலை நம்பி சொல்லி அனுப்பியிருந்தார். அதன்பின் வேறு விவரங்கள் கிடையாது.
சட்டென்று அன்று தகவல் வந்தது. நந்தவனம் உருவாகிவிட்டது. காண்போர் வியக்கும் வண்ணம் பூத்துக் குலுங்குகிற நந்தவனம். அத்தனையும் அனந்தாழ்வானின் உழைப்பு. அவனும் அவனது கர்ப்பிணியான மனைவியும் வேறு சிந்தனையே இன்றி உருவாக்கிப் பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள். திருமலையப்பனுக்கு தினமும் மாலை கோத்து சாத்துகிற திருப்பணி தடையற நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 'ராமானுஜரே, ஒரு சரியான கர்மயோகியைப் பிடித்து அனுப்பி வைத்தீர்கள். உமது சீடன் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கிறான். நீங்கள் ஒரு நடை வந்து பார்க்கக் கூடாதா?' என்று கேட்டனுப்பியிருந்தார் பெரிய திருமலை நம்பி.
'போகலாமே சுவாமி. திருவரங்கம் வந்ததில் இருந்து நாம் எங்குமே வெளியே போகவில்லை. காஞ்சிக்குக் கூட நீங்கள் செல்லவில்லை' என்றார் முதலியாண்டான்.'ஆம் தாசரதி. நீ சொல்லுவது உண்மைதான். பேரருளாளனை நான் நினைக்காத நாளில்லை. ஆனால் விட்டு வந்தது முதல் ஒருமுறைகூட அங்கே போகவேயில்லை என்பது எனக்கே உறுத்தலாகத்தான் இருக்கிறது.''நாம் கோஷ்டியாகத் திருமலைக்குச் சென்று வரலாமே சுவாமி? அது ஓர் அனுபவமாக இருக்குமல்லவா?' என்று கேட்டார் வில்லிதாசர்.'நிச்சயம் பிரமாதமான அனுபவமாகத்தான் இருக்கும். ஆனால் இங்கே அரங்கத்தில் பணிகள் எதுவும் தொய்வடைந்துவிடக் கூடாதே என்று கவலைப்படுகிறேன்.''அதெல்லாம் ஆகாது சுவாமி. நமது அகளங்க நாட்டாழ்வார் இருக்கிறார். பொறுப்பைத் துாக்கி அவர் தலையில் வையுங்கள். அவர் பார்த்துக் கொள்ளட்டும். நீங்கள் யாத்திரை கிளம்பும் யோசனையைத் தவிர்க்காதீர்கள்' என்றார் கூரத்தாழ்வான்.சீடர்கள் அத்தனை பேருக்கும் ஆர்வம் பிடித்துக் கொண்டது. உடையவருடன் ஒரு பயணம் என்பது அதுநாள் வரை அவர்களுக்கு வாய்க்காத விஷயம். அக்கம் பக்கத்து திவ்ய தேசங்களுக்கு அவ்வப்போது போய் வரக்கூடியவர்கள்தாம். உடையவரும் சமயத்தில் உடன் வருவார். ஆனால் அதெல்லாம் ஒரு சில தினங்களில் முடிவடைந்துவிடக்கூடிய பயணமாகவே இருக்கும். அவர்கள் எதிர்பார்த்தது ஒரு நெடும்பயணம்.'சுவாமி, யோசிக்காதீர்கள். திருமலை செல்லும் வழியில் உள்ள அத்தனை திவ்ய தேசங்களையும் சேவிக்க இது ஒரு வாய்ப்பு நமக்கு.'சிறிது யோசித்துவிட்டு, 'சரி, கிளம்பி விடுவோம்!' என்றார் ராமானுஜர்.

(நாளை தொடரும்...)

writerparagmail.com

- பா.ராகவன் -

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement