Advertisement

உன்னிலிருந்து கிளம்பட்டும் புதிய உலகம்

ஆத்திச்சூடி என்றாலே நமக்கு ஒளவையார் தான் நினைவுக்கு வருவார். சங்க காலத்திலும், இடைக்காலத்திலும் ஒளவையார் வாழ்ந்ததாக சான்றுகள் கூறுகின்றன. எல்லோர் மனதிலும் இடம் பெற்றிருக்கும் 'பாசக்காரப் பாட்டி' என்றால் ஒளவையாரைத் தான் சொல்வோம். பொதிகைவெற்பில் மணம் வீசும் சந்தனத்தில் இருப்பவர். பைந்தமிழ்க் கற்ற சான்றோரின் இதயத்தில் இருப்பவர். செந்தமிழ் பெற்றெடுத்த சீர்மிகு செல்லப்பிள்ளை. அவர் நாவில் எழிலுறு நறுஞ்சுவையாம் அகமும் புறமும் வழிந்தோடும், தீதிலாத் தமிழரின் திறமையைப் பாடி, ஆண் மகனாம் அதியனிடம் நட்புக்கொண்டவர். வள்ளுவரின் அறிவை அணுவுக்குள் வைத்து அழகு பார்த்தவர்.சஞ்சலமில்லாச் சங்கத்தமிழை வாரிக்குடித்து, பாரினில் அதனை கோரிக் (அள்ளி) குடிக்கக் கொடுத்தவர். ஒரு தனிப் பெண்ணாய் உலா வந்த உலக அதிசயம் ஒளவை. ஆணாதிக்க சமுதாயத்தில் அளாவியவர். ஆத்திசூடியின் அருஞ்சுவையை, அழகு தமிழில் அனைவருக்கும் அள்ளிக்கொடுத்த தெள்ளுதமிழ்பாவை, தன்னிகரில்லாத தனித்தமிழின் முத்து.
சுட்ட பழமா : ஒளவையே நம் தமிழின் சொத்து, மாசறு கருத்தை மனத்திடைக் கொண்டு பேசும் தமிழ் நுாலுக்குப் பெருமை தந்த பெட்டகம் சுட்ட பழமா? சுடாத பழமா? என்று அந்த குமரனின் குறும்புச் சிரிப்புக்குப் பொக்கை வாயைத் திறந்து போதித்தவர் நிறைய சாதித்தவர்.அவரைப் பற்றிக் கூற வேண்டும் என்றால் கன்னிப்பருவத்தில் மணம் முடிக்க முயன்றபோது, தன் இஷ்ட தெய்வமான விநாயகப் பெருமானின் அருளால் கிழவியாக உருவம் பெற்றவர். நம் குழந்தை பள்ளியில் முதன் முதலில் அள்ளிக் குடித்ததும் ஒளவையாரின் தமிழைத்தான். ஆயுள் காலம் நீட்டிக்க அருங்கனியான நெல்லிக்கனியை அதியமான் அருந்தாது, அழகு தமிழ் பாடும் ஒளவைக்குக் கொடுத்து அகிலம் புகழச் செய்தார்.அதியனிடத்தில் நல்ல அமைச்சராக ஆலோசகராக, துாதுவராக இருந்ததும் பெருமை கொள்ளத் தக்கது. இது எப்படி சாத்தியம். பெண்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாது இருந்த நிலையில், நாட்டையே சுற்றிப்பார்த்த நற்றமிழ்ப் பாவை தன்னை வயோதிகமாக மாற்றிக் கொண்டது ஏன். அக்காலத்திலும் பருவப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தானே உணர்த்துகிறது.
பெண்ணின் பாதுகாப்பு : சங்ககாலம் பொற்காலம் என்று சொன்னால் அது யாருக்குப் பொற்காலம். வீரம் நிறைந்த மண் என்று பெருமைப்படும் நாட்டில் பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லாமல் தானே இருந்துள்ளது. ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று அறிவுரையும் தொண்டைமானிடம் துாதாக சென்று வஞ்சகப் புகழ்ச்சியில் வாழ்த்திய வரும் இவரே. அவரின் சமயோகித புத்தியினைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும்.
பெண்ணின் ஆலோசனை : அன்று, ஒரு பெண் மகளான ஒளவையார் கூறிய ஆலோசனையை மன்னர்கள் கேட்டு அதன் படி நடந்து வந்துள்ளனர், போர் நிகழாமல் தடுக்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதற்கும் ஒரு பெண் தான் காரணமாக இருந்திருக்கிறாள் என்பதை நாம் உணர்ந்தே ஆக வேண்டும். ஒவ்வொரு மன்னனிடம் அவர்களுடைய குறை நிறைகளைக் கூறி உலகோர் வாழ்வு உயர்வு பெற தன்னால் முயன்ற உதவியைச் செய்துள்ளார்.வள்ளல் பாரிக்கு ஆடு வாங்கி கொடுக்க விரும்பி வாதவன், வத்தவன், யாதவன் என்ற மூன்று வணிகர்களிடம் சென்று பொருள் கேட்க, அவர்கள் பொருள் கொடாமல் காலம் நீட்டியதால், பின் வஞ்சி நகருக்குச் சென்று சேரமன்னனிடம் போய் வாதவன் பின்னர் தருவதாகச் சொல்கிறான். வத்தவன் நாளை நாளை என்கிறான். யாதவன் எதுவுமே கூறவில்லை. மன்னர் நீ என்ன சொல்லுகிறாய் என்று உரிமையோடு கேட்க, ஒளவையார் உதவி கேட்டார் என்பதற்காக பொன் ஆடு ஒன்றை சேரன் கொடுத்தான். அதனைக் பாரியிடம் கொடுத்து அவர் வாழ்வுக்கு வழி காட்டியாக இருந்துள்ளார்.சிலர், பெண் என்று இகழ்ந்து பேசியும் உள்ளனர். 'எம்மிகழாதார் தம்மிகழாரேஎம் இகழ்வாரோ, தம் மிகழ்வோரேஎம் புகழ் இகழ்வோர்' என்று தன்னை இகழ்வரைப்பற்றி கவலைப்படாது, பொறுமையாக பதில் கூறுவது பெண்களால் தான் முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்.அறிவுசார்ந்த பெண்ஒளவையாருக்குக் கொடுத்த மதிப்பை இன்று, அறிவு சார்ந்த பெண்ணுக்கு கொடுத்து பாருங்கள், பெரும் வளர்ச்சி காணலாம்.தமிழ் மூதாட்டியின் சொல்லுக்கு இயற்கையும் ஏன்! இறைவனுமே வணங்கி ஏவல் செய்துள்ளனர் என்று பல கதைகள் மூலம் அறிய முடிகிறது. ஒளவையின் திறமை, புலமை, பக்திச் சிறப்புக்களைக் கண்டு வியக்கிறோம். அரசர்களோடு மட்டுமின்றி, ஏழை எளிய மக்களிடையே சென்று அறிவுரை வழங்கி சமுதாயத்தை மேம்படுத்த பல தொண்டுகள் செய்துள்ளார். ஒரு பெண், அரசர் முதல் அனைவரையும் நல்வழிப் படுத்தி இருக்கிறார். ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு, ஒளவையார் ஓர் எடுத்துக்காட்டு தான். ஒளவையார் ஒரு தெய்வீகப்பிறவி என்று தான் கூற வேண்டும்.

இன்றைய நிலை : இன்று அவர் போல ஒரு பெண் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். இன்று பணம், பதவி இல்லாத ஒரு பெண்ணிடம் எத்தனை பேர் ஆலோசனை கேட்பார்கள். அவர் அப்படி பாடும்போது, பொன் கிடைக்கும் என்று தெரிந்தால் அவளை சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்து விடுவார்கள். இளம் வயதில் இச்சமூகத்தில் ஒழுக்கமாக வாழ முடியுமா? என்ற சந்தேகம் ஒளவைக்கு வந்த காரணத்தால் தான், முதுமை பருவத்தை வேண்டி பெற்றுக் கொண்டார்.ஒரு பெண், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கூறியுள்ளார். அவருடைய ஆலோசனையை கேட்டதால், மன்னர்கள் நாட்டை நன்றாக ஆண்டு வந்துள்ளனர், அழிவில்லையே. சரித்திரம் படைத்திருக்கிறார்களே தவிர, அதனால் சாகவில்லையே. ஆனால் இன்று அந்த மனப்பக்குவம், எத்தனை ஆண்களிடம் உள்ளது. பெண்ணிடம் யோசனைக் கேட்டு செய்தால், நம் மதிப்பு மரியாதை குறைந்து போகும் என்ற எண்ணம் உடம்போடு ஊறிப் போனதாகிவிட்டது.
போகப்பொருளா : பெண்ணை ஒரு போகப் பொருளாக நினைக்கின்ற காரணத்தால், நாளொரு ஆணவக் கொலைகளும், பொழுதொரு பாலியல் பலாத்காரமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒரு தலைக்காதலால் இளைஞர்கள் வாழ்க்கை உருப்படாமல் போய்விடுகின்றது. அங்க அமைப்பை தவிர அறிவு, ஆற்றல், செயல் என்று எதிலும் ஆணுக்கு, பெண் சமமாக உள்ளாள்; தவிர ஏற்றத்தாழ்வு காண முடியாது.காலங்காலமாகப் பெண்களைப் பற்றி எழுதுவதற்குக் கருத்துச் சுதந்திரம் கிடைத்திருக்கிறதே தவிர, அவர்கள் வாழ்க்கையில் இன்னும் சுதந்திரம் பெற்றதாகத் தெரியவில்லை. அதனால் தான் நம் சமுதாயம், பெண் குருதிக் கறை படிந்த குடும்பங்களாகவே மாறி வருகின்றன. உயர்ந்த பதவியிலிருக்கும் பெண் முதல் கீழ்நிலையில் பணிபுரியும் பெண்கள் வரை இன்று பாலியல் தொந்தரவால் பதவியை விட்டு விலகியவர்கள் ஏராளம்.
கணவனும், மனைவியும் : கணவன் மனைவியை ஞானக்கண் கொண்டு பாராமல், ஊனக்கண் கொண்டு பார்ப்பதால், சிதறிப் போன குடும்பங்கள் தான் எத்தனை! எத்தனை! பெண் என்பவள் பெரிய அதிகாரியாக இருந்தாலும் இன்னொருவனிடம் ஒப்படைக்கப்படும் ஒரு பொருளாகவே இச்சமூகம் கருதுகின்றது. அலட்சியப்பார்வையும், ஆண் என்ற இறுமாப்பும் இன்னும் அழிந்தபாடில்லை. பதவி சுகத்துக்காக சில நேரங்களில் பலிகடா ஆக்கப்படுகின்றாள். திருமண வீட்டில் தெளிக்கப்படும் பன்னீராகத் தெரிகின்றாள். தாகம் தீர்க்கும் தண்ணீராக்கப்படுகின்றாள். இனப்பெருக்கத்தை விருத்தி செய்யும் இயந்திரமாக உருமாறிப் போனாள்.
உங்களுக்கும் சிறகுகள் : உங்களுக்கும் சிறகுகள் உள்ளன, பிறருக்காக தவழ்ந்து செல்லாதீர்கள், அதைக் கொண்டு மேலே மேலும் பறந்து செல்லுங்கள் என்கிறார் நமது அறிஞர் அப்துல்கலாம். உயரே பறப்பதற்கு உரிமை வேண்டுமே? அவள் சார்புண்ணியாகவே (தந்தை, -கணவன்,- மகன்) வாழ்ந்து பழகிப் போனவள். பெண்ணே! நீ மாற வேண்டும். இல்லையென்றால் உன்னில் மாற்றம் வேண்டும். நாம் சிறு வயதிலிருந்தே ஆண், பெண் பேதமின்றி குழந்தைகளை வளர்க்கப் பழக வேண்டும். பெண்ணுக்குள்ளேயே பேதம் (வேறுபாடு) இருக்கின்றது. எங்கே! ஆண்மகனை விளக்குமாறு கொடுத்து வீட்டைப் பெருக்கச் சொல்லுங்கள். முடியுமா? முதலில் பெண்ணாகிய நம்மிலிருந்து சமத்துவத்தை வளர்த்துக் காட்டுங்கள். நாடு நலம் பெறும். வாழ்வும் வளம்பெறும். கலப்பை சுமந்தும் கிடைக்காத வாழ்வை கருப்பையில் சுமந்து பெற்றிருக்கும் பெண்ணே! உன்னிலிருந்து கிளம்பட்டும் ஓர் புதிய உலகம்.
முனைவர். கே.செல்லத்தாய்,தமிழ்த்துறைத் தலைவர்,எஸ்.பி.கே. கல்லூரி,அருப்புக்கோட்டை.94420 61060

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement