Advertisement

யானைகளை காப்போம்!

வயது பேதமின்றி அனைவரையும் வியப்பு கொள்ள வைக்கும் பேருயிர் யானை. யானைகள் தொன்று தொட்டு மனித வாழ்வுடன் இணைந்து பின்னி பிணைந்திருப்பதை கோயில் சிற்பங்கள், இதிகாசங்கள், வரலாற்று நுால்களின் மூலம் நாம் அறியலாம். விநாயகராக போற்றி வழிபடப்படும் யானைகள் இன்று அழியும் தருவாயில் உள்ள பல விலங்குகளில் ஒன்று என்பது வருத்தப்படக்கூடிய ஒன்று. முற்காலத்தில் உலகெங்கிலும் வியாபித்து இருந்த யானைகள் தற்போது காடு அழிப்பினாலும் அதன் இயற்கை வாழிடம் குறைந்ததனாலும், மானுட பெருக்கத்தின் தாக்கத்தாலும் பாதுகாக்கப்பட்ட இடங்களான சரணாலயங்களிலும், சில காப்புக் காடுகளிலும் முடக்கப்பட்டுள்ளன.
வாழ்வு முறை: யானைகளின் வாழ்வு முறையை உற்று நோக்கினால், பலவியப்பான தகவல்களை காணலாம். வளர்ந்த யானை, ஒருநாளைக்கு 150--200 கிலோ பசுந்தாவரங்களை உட்கொள்ளும். ஒரு நாளைக்கு 150--200 லிட்டர் அளவிற்கு நீர் அருந்தும். உணவு தேவைக்காக, இயற்கையாக நகர்ந்து கொண்டே இருக்கும் பழக்கத்தை பெற்றுள்ளன.ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உணவு உண்ணும். பெரும் திரள்களாக வாழ்கின்றன. மூத்த பெண்யானைகளே கூட்டத்தினை வழிநடத்தி, உணவு மற்றும் நீர் அமைவிடங்களுக்கு இட்டுச்செல்லும். யானைகள் எப்போதும் காதுகளை ஆட்டிக்கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஏனெனில், மனிதனைப்போல் யானைகளுக்கும் வியர்வை சுரப்பிகள் இல்லை.எனவே, அதன் பரந்து விரிந்த காதுகளில் உள்ள ரத்தக் குழாய்களின் மூலம் பாயும் ரத்தம், செவி மடல்களை யானைகள் அசைக்கும் போது குளிரூட்டப்பட்டு அதன் வெப்பம் குறைய உதவுகிறது. கோடைக்காலங்களில் யானைகள் அதன் எச்சிலை துதிக்கையின் மூலம் எடுத்து அதன் காதின் பின்புறம் மற்றும் கழுத்தின் அடிப்பகுதியிலும் தெளிப்பதை கண்டிருக்கிறேன். நீரின் மீது அலாதி ஆசை உண்டு. யானைக்கூட்டம் நீரில் இறங்கியவுடன் தண்ணீர் கலங்கும் என்பதால் தங்கள் துதிக்கைகளை நீட்டி கலங்காத நீரினை பருகுவதை காணலாம். குளித்து முடித்ததும் அவை தங்கள் மீது சேற்றையும், மணலையும் அள்ளிப்போட்டுக்கொள்ளும். இது உடற்சூட்டினை கட்டுப்படுத்தவும், கொசு, உண்ணி, பூச்சிகளிடமிருந்து அவற்றை காக்கவும் உதவுகிறது.
சராசரி ஆயுள்: சராசரி ஆயுள் மனிதனைப் போலவே 60 முதல் 70 வயதாகும். வயதான யானை தங்களின் கூட்டத்தோடு தொடர்ந்து நடக்க இயலாமல் போகும் சூழ்நிலையில் ஏதேனும் நீர்நிலைகளின் அருகில் தங்கி அதன் கடைசி வாழ்நாட்களை கழித்து, அங்கேயே இறக்கும்.யானைக் கூட்டத்தில் உள்ள ஆண் குட்டிகள் 10--12வயதில் பருவ வயதினை நெருங்கும் காலத்தில் தன் கூட்டத்தினை விட்டு விலகி தனி வாழ்க்கையை மேற்கொள்ளும். இது இயற்கையாக தன் ரத்த சொந்தங்களுடன் இனச்சேர்க்கையை தவிர்த்து வேற்று மரபணு பறிமாற்றத்தின் மூலம் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்க வழி செய்கின்றன. ஆண் யானை 15--20 வயதாகும்போது பருவ மாற்றத்தால் மத நிலையை அடையும். அப்போதுஅதன் கண்ணிற்கும், காதிற்கும் இடையில் அமைந்திருக்கும் சுரப்பியில் இருந்து மத நீர் ஒழுகிக்கொண்டே இருக்கும். இவ்வாறான மதநிலையில் ஆண்யானைகள் உணவருந்தாமல், பெண்யானை கூட்டத்துடன் திரிந்து தக்க பருவத்தில் இருக்கும் பெண்யானையுடன் இணை சேரும்.மதம் பிடித்த நிலையில் தன்னை எதிர்க்கும் ஆண் யானைகளுடன் பயங்கரமாக சண்டையிடும். ஆண் யானைகளில் சில தந்தமற்று காணப்படும். இவை 'மக்னா” என்றழைக்கப்படும். இது மூன்றாம் பாலினம்என்ற கருத்து தவறு. மக்னா யானை அனைத்து வகையிலும் தந்தமுள்ள ஆண்யானைக்கு நிகரானதாகவும், சந்ததிகளை உருவாக்கக்கூடிய வல்லமை படைத்ததாகவும் இருக்கும். இவற்றிற்கு பிறக்கும் ஆண்குட்டி தந்தமுள்ளதாக பிறக்கவும் வாய்ப்புள்ளது. தந்தத்திற்காக ஆண் யானைகள்தொடர்ந்து வேட்டையாடப்படுவதால், மக்னா யானைகள் இயற்கையான தந்தமற்ற தகவமைப்புடன் உருவாகின்றது என்ற கருத்தும் நிலவுகிறது. ஆண் யானைகள் தந்தங்களுக்காக சுட்டுக்கொல்லப்படுவது ஆண், பெண் விகிதாச்சாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி யானைகளின் அழிவிற்கு காரணமாகிறது.
யானை வேட்டை: தந்தத்திற்காக வேட்டையாடப்படுவது இன்றளவும் தொடர்கின்றது. யானைவேட்டையில் கூலித்தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மாற்று வேலைகளில் தடுக்க உதவுவதுடன், இந்த சட்ட விரோத செயலில் தரகர்களையும் தேசிய மற்றும் உலகளவில் யானை தந்த சந்தையையும், வாணிபத்தையும் தடுக்க முடியும்.காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் உணவு மிகுதி மற்றும் பற்றாக்குறை யானைகளை புலம்பெயர உந்துகின்றன.மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி,கோயம்புத்துார் மற்றும் நீலகிரி போன்றவை தென்மேற்கு பருவக்காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில் மழையை பெறுகின்றன. நீலகிரி மாவட்ட வடகிழக்கு மலைச்சரிவுகள், சத்தியமங்கலம் மற்றும் சேலம் மாவட்ட வனப்பகுதிகள், வடகிழக்கு பருவக்காற்றினால் மழைப்பொழிவினை பெறுகின்றன. யானைகள் மழை பெய்தவுடன் வளரும் இளம் தாவரங்கள் மற்றும் புற்களை வாஞ்சையுடன் உட்கொள்ளும். சுமார் 100 கி.மீ. தொலைவிற்கு அப்பால் மழை பெய்யவிருப்பதை யானைகள் முன் கூட்டியே அறியும் வல்லமை கொண்டவை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போல் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து, கிழக்கு தொடர்ச்சி மலைக்கு, ஒரே பாதையில் செல்வதை யானைகள் வழக்கமாக கொண்டுள்ளன. இவ்வாறு யானைகளின் இரு பெரியவாழிடங்களை இணைக்கும் பகுதி, யானை வழித்தடம் என்றழைக்கப்படும். பல்வேறு நுாற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக யானைகளுக்கு இந்த வழித்தடங்கள் தங்களின் முன்னோர்கள் மூலம் அறியப்பட்டு அவை மிக நுணுக்கமாக இத்தகைய வலசை பாதைகளை நினைவு கொள்கின்றன.
உணவு முறை: யானைகளின் மிகப்பெரிய உடல் காரணமாக அவை சுவையான உணவு, சுவையற்ற உணவு என்ற பாகுபாடின்றி புற்கள், மரங்கள், மரப்பட்டைகள் அனைத்தினையும் உண்ணும். எனினும், மழைப்பெய்தவுடன் முளைக்கும் இளம் புற்களை யானைகள் வாஞ்சையுடன்உண்ணும். அப்புற்கள் முற்றியவுடன் அவைகளை பறித்து புற்களின்வேரில் ஒட்டியுள்ள மண்ணை தங்கள் முன்னங்கால்களில் தட்டிசுத்தம் செய்து சாறுள்ள அடிப்பகுதிகளை மட்டுமே உண்ணும். தன் உணவினை சுத்தப்படுத்தி உண்ணும் சில உயிரினங்களில் யானைகளும் அடங்கும். யானைகளுக்கு அதன் வாழ்நாளில் 6 ஜோடி பற்கள் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்து முளைக்கும். ஒரு சில நேரங்களில் ஒரே நேரத்தில் இரண்டு ஜோடி பற்கள் இருப்பதைக் காணலாம். ஆறாவது ஜோடி பற்களும் விழும் நிலையில் அவை உணவு உண்ண இயலாமல், பட்டினியால் உயிரிழக்கும்.
அழியும் வாழிடங்கள்: யானைகளின் வாழிடங்கள் தொடர்ந்து மனித தேவைகளானஅணைகள், நீர்மின் நிலையங்கள், தேயிலை மற்றும் காப்பித்தோட்டங்கள் போன்றவற்றிற்காக பெருமளவில் அழிக்கப்படுகின்றன. மேலும், யானை வழித்தடங்களை மனதில் கொள்ளாமல் செயல்படுத்தப்படும் சாலை மற்றும் இருப்புப் பாதை திட்டங்களும், சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட தனியார் வனப்பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக தோட்டங்களும், விடுதிகளும், வீடுகளும் கட்டப்படுவதால் யானைகளின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டு வலசைபோதல் தடைப்பட்டு அவைகளின் வாழ்விடம் தொடர்ச்சியாக இன்றி துண்டிக்கப்படுகிறது மேற்கூறியவாறு தடைப்பட்ட வழித்தடங்கள் தடைகளை மீறிகடக்க முற்படும் போது மனிதனுடன் தவிர்க்க முடியாத மோதலில் உயிர்ச்சேதம் ஏற்படுகின்றன. இதில் அப்பாவிகளான யானைகள், வில்லன்களாக சித்தரிக்கப்படுகின்றன. தற்போது, வாழ்விடங்கள் துண்டாடப்படுவதால் ஒரு குறிப்பிட்ட வாழ்விடத்தில் யானைகளின் எண்ணிக்கை பெருகி, அதன் இயற்கை உணவு பற்றாக்குறை ஏற்பட்டு அவை மனிதனால் உருவாக்கப்பட்ட வயல்களிலும், தோட்டங்களிலும் செழித்துள்ள பயிர்களை உண்ண முற்படுகின்றன. யானை வழித்தடங்களை அறிந்து அவை கடந்து செல்லக்கூடிய வகையில் சாலை மற்றும் இருப்புப்பாதை அமைக்க வேண்டும் என்று சட்டமியற்றுவதால் மட்டுமே இவ்வாறான பாதிப்புகளை நிரந்தரமாக தவிர்க்க முடியும்.
பல்லுரியம்: இந்த உலகில் ஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிரினங்களை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சார்ந்து வாழ்கின்றன. இதுவே, பல்லுயிரியம் என்று அழைக்கப்படுகின்றது.இந்த பல்லுயிரியத்தில் யானையின் பங்கு இன்றியமையாததாகும். எனவே, யானைகள் மையக்கல் இனம் என்றழைக்கப்படுகின்றன. காடுகளில் அடர்ந்து வளரும் மரம், செடி, கொடிகளை உடைத்து யானைகள் ஏற்படுத்தும் வழிகளையே மற்ற விலங்குகள் பயன்படுத்துகின்றன. மலைகளின் மீது ஏறுவதற்கு ஏதுவாக வளைந்து, நெளிந்து செல்லும் மலைப்பாதைகளை அமைப்பதில் மனிதனுக்கு முன்னோடியும், வழிகாட்டியும் யானைகளே. யானைகள் தோண்டிய ஊற்று நீரை மற்ற உயிரினங்களும் பயன்படுத்தும்.எனவே, யானைகள் இருக்கும் காடுகளில் யானை ஒரு இன்றியமையாத உயிரினமாகும். அதனால் யானைகள் இக்காடுகளிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டால் அத்துடன் சேர்ந்து மற்ற உயிரினங்களும், காடும் அழியும் அபாய நிலை ஏற்படும். காடு அழிந்தால், நாடு அழியும். நாம் அன்றாடம் உபயோகிக்கும் நீர், காட்டிலிருந்து உருவாகின்றது என்பதையும் நாம் சுவாசிக்கும் பிராண வாயு காட்டிலிருந்து உருவாகின்றது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.எனவே, யானைகளையும், காடுகளையும் எதிர்வரும் சந்ததியினருக்கு பாதுகாத்து வழங்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
-எம்.சந்தானராமன், வழக்கறிஞர்சென்னை உயர்நீதிமன்றம்.santhanaramanlawgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,இந்தியா

    யானையின் சாணத்தில் 55% நாற்காலி. அதை தாய்லாந்தில் பேப்பராக மாற்றுகிறார்கள்.ஒரு நாளைக்கு சுமார் 155 பக்க நோட்டு ஒரு யானையின் சாணியிலிருந்து தயாரிக்கிறார்கள். இந்த தொழில் நுட்பத்தை மலை வாழ் மக்களுக்கு கற்பித்தால் அவர்கள் தொழில் நலம் வளரும். மனிதனையே மதிக்காத சுயநலமே அதிகமான மக்கள், யானையை பார்க்காதவரை அதை நினைப்பதில்லை. ஆனால் அல்ப காசு கொடுத்து ஆசி மட்டும் வேண்டுகிறார்கள். யானைகள் அழியும் போது மனிதனும் அழிவான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement