Advertisement

இருவர்...

'நகர்வலம் போகலாமா?' என்று அகளங்கன் கேட்டான். உறையூர் சிற்றரசனுக்கு அவ்வப்போது அந்த ஆசை வந்துவிடும். ஆங்காங்கே பல்லக்கை நிறுத்தி இறங்கி மக்களோடு பேசுகிற அரசன். விக்கிரம சோழனுக்குக் கட்டுகிற கப்பத்தொகையை அவர்களே அளிக்கிறார்கள் என்பதை எப்போதும் மறவாத மன்னன். முடிந்ததைச் செய்வதில் அவனுக்கு ஒரு திருப்தி. செய்ய முடியாவிட்டாலும் காது கொடுத்துக் கேட்பதிலும் அன்பாக நாலு வார்த்தை பேசுவதிலும் அவனை விஞ்ச ஆள் கிடையாது. மக்களுக்குப் பிடித்த மன்னனாக இருப்பது எல்லோருக்கும் முடிகிற காரியமல்ல. அகளங்கன் அப்படி இருந்தான்.வில்லி அவனிடம் மெய்க்காப்பாளனாக இருந்தபோது வாரம் ஒருமுறையாவது நகர்வலம் கிளம்பிவிடுவான். ஒவ்வொரு பகுதியின் பிரச்னையையும் வில்லி முன்கூட்டியே மன்னனிடம் விவரித்துவிடுவது வழக்கம். என்ன பேசவேண்டும், எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று அவனுடன் விவாதித்துக்கொண்டு கிளம்பினால் போகிற காரியம் எளிதாக முடியும்.சந்தேகமில்லாமல் அகளங்கனுக்கு வில்லி பெரும் பலமாக இருந்தான். சட்டென்று இடம் மாறிச் சென்றுவிட்ட வில்லி.'என்னால் நம்பவே முடியவில்லை அமைச்சரே. நமது உறங்காவில்லி திருவரங்கத்து உடையவரின் தாசானுதாசராகி, அவரது மடமே கதியென்று கிடக்கிறாராமே?''ஆம் மன்னா. சேரன் மடத்துக்குச் சற்றுத் தள்ளி ஒரு குடிசை போட்டுக்கொண்டு வசிக்கிறார் என்று கேள்வி.''பொன்னாச்சி ஒப்புக்கொண்டுவிட்டாளா? இந்த வாழ்க்கை அவளுக்கும் பிடித்திருக்கிறதாமா?''நீங்கள் வேறு. அரங்கன் சேவையில் அவள் வில்லியை விஞ்சிவிடுகிறாள் என்று திருவரங்கத்துக்காரர்கள் சொல்கிறார்கள். உடையவர் இட்ட பணியை மறு கணமே இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நிறைவேற்றுகிறார்களாம்.''வியப்புத்தான். என்னிடம் வில்லி பணியாற்றிக் கொண்டிருந்தவரை பொன்னுக்கும் பொருளுக்கும் அவருக்குப் பஞ்சமே கிடையாது. முடிந்தவரை அவரை நாம் சௌக்கியமாகத்தான் வைத்திருந்தோம். சட்டென்று எப்படி இப்படியொரு துறவு மனப்பான்மை வந்துவிட முடியும்?' 'அது துறவு மனப்பான்மை அல்ல மன்னா. தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் நேசிப்பதில் இருந்து உயர்ந்து புவி முழுவதையும் நேசிக்கிற பெருமனம். உடையவரைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேருமே அப்படித்தான். வில்லிக்கு அவர் அரங்கனின் கண்ணைத் திறந்து காட்டிவிட்டாரே. அதற்குமேல் ஒருவர் எப்படி மாறாதிருக்க முடியும்?'அகளங்கனுக்கு அது தீராத வியப்பு. அப்படியா அப்படியா என்று வாய் ஓயாமல் வெகுநாள் கேட்டுக்கொண்டே இருந்தான். இனி அரங்கனின் சேவையே வாழ்க்கை என்று வில்லி முடிவெடுத்து திருவரங்கத்திலேயே தங்கத் தொடங்கியபோது, 'தொந்தரவு செய்யாதீர்கள், அவர் விருப்பப்படி இருக்கட்டும்' என்று சொன்ன மன்னன் அவன்.'வில்லி இங்கில்லாவிட்டால் என்ன? அவரது மருமகன்கள் இருவரும் நமது படையில்தானே பணியாற்றுகிறார்கள்?''யார், வண்டவில்லியையும் செண்டவில்லியையும் சொல்கிறீர்களா? அவர்களும் பாதி நேரம் சேரன் மடமே கதியென்றுதான் இருக்கிறார்கள். இங்கே வேலை முடிந்தால் அடுத்த நிமிடம் திருவரங்கத்துக்கு கிளம்பி விடுகிறார்கள்.''அட, அப்படியா?''ஆம் மன்னா. ராமானுஜரிடம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்று அவர்களும் வைணவ தரிசனத்துக்குத் தம்மை ஒப்புக்கொடுத்துவிட்டதாகக் கேள்வி.'அகளங்கனுக்கு இது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. வில்லியின் மருமகன்கள் இருவரும் இளைஞர்கள். வாலிப மிடுக்கும் வயதின் வேகமும் கொண்டவர்கள். தவிரவும் மல்லர்கள். வீரம் அவர்கள் ரத்தத்தில் தோய்ந்தது. அகளங்கனின் படையில் முக்கியமான வீரர்களாக அடையாளம் காட்டப்பட்டவர்கள். காதல், திருமணம், குடும்பம், செழிப்பான வாழ்க்கை என்று இயல்பாக எழக்கூடிய ஆசைகளை ஒதுக்கிவிட்டு எப்படி அவர்களாலும் இறைப்பணியில் ஒதுங்க முடிந்தது?எப்படி யோசித்துப் பார்த்தாலும் அகளங்கனுக்குப் புரியவில்லை. 'எங்கே, கூப்பிடுங்கள் அவர்கள் இருவரையும். இன்று நகர்வலத்துக்கு அவர்களும் வரட்டும் நம்மோடு' என்று உத்தரவிட்டான்.செய்தி வண்டவில்லிக்குப் போனது. 'மன்னர்பிரான் அழைக்கிறார். நகர்வலம் புறப்பட வேண்டுமாம். உன்னையும் உன் சகோதரனையும் கையோடு அழைத்து வரச் சொன்னார்!''அப்படியா? இதோ' என்று இருவரும் புறப்பட்டார்கள்.வீட்டை விட்டு வெளியே வந்ததும் வானம் பார்த்த வண்டவில்லிக்குச் சட்டென்று சிறு தயக்கம் எழுந்தது. கருமேகங்கள் சூழத் தொடங்கியிருந்தன. சட்டென்று அவன் அரண்மனையை நோக்கி ஓடத் தொடங்கினான். செண்டவில்லியும் அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்து உடன் ஓட, சில நிமிடங்களில் அரண்மனையை அடைந்தார்கள்.'நில்லுங்கள். எதற்கு இப்படி ஓடி வருகிறீர்கள்?' வாயிற்காப்போன் தடுக்க, 'அட நகர்ந்து நில்லப்பா... மன்னர் எங்கே? கிளம்பிவிட்டாரா? அவரைத் தடுத்தாக வேண்டும். வழியை விடு' என்று அவனை விலக்கிவிட்டு இருவரும் சபையை நோக்கி ஓட்டமாக ஓடினார்கள்.மன்னர் அங்கே நகர்வலத்துக்குப் புறப்பட்டு, மந்திரிகளுடன் தயாராகக் காத்திருக்க, 'ஓ மன்னா! நாரணன் வந்தான், நாரணன் வந்தான்! நகர்வலம் இன்று வேண்டாம் மன்னா!' மூச்சிரைக்கப் பேசினான் வண்டவில்லி.அகளங்கனுக்கு ஒன்றும் புரியவில்லை.'என்ன ஆயிற்று வண்டவில்லி? ஏன் நகர்வலம் வேண்டாம் என்கிறாய்?''வெளியே நாரணன் வந்துவிட்டான். அவன் உலாப் போகிறபோது நாம் போவது எப்படி?'மன்னனுக்கு அப்போதும் புரியவில்லை. 'மந்திரியாரே, வெளியே சென்று பார்த்து வாரும். இவன் சொல்வது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.'அமைச்சர் வெளியே போய்ப் பார்த்தார். அப்போது மழை வேகம் எடுத்திருந்தது. நகர்வலம் போவது சிரமம் என்று அவருக்கும் தோன்றியது. யோசனையுடன் உள்ளே வந்தவர், 'மன்னா, வெளியே நல்ல மழை பெய்கிறது. நாம் இன்னொரு நாளைக்கு நகர்வலம் போகலாம் என்று தோன்றுகிறது!'மன்னனுக்குப் பெரும் வியப்பாகிப் போனது. 'வண்டவில்லி, வெளியே மழைதானே வந்திருக்கிறது? நீ நாரணன் வந்தான் என்று சொன்னாயே.'சட்டென்று அவன் ஆழி மழைக்கண்ணா என்று பாட ஆரம்பித்தான். ஆண்டாளின் பாசுரம். மேகங்களின் அதிபதியான பர்ஜன்ய தேவனை அழைத்து, கண்ணனின் கருணைப் பெருமழையே போல் பொழியச் சொல்கிற பாசுரம்.வண்டவில்லி பாடத் தொடங்கியதும் செண்டவில்லியும் சேர்ந்துகொண்டான். இருவரும் கண்மூடிக் கைகூப்பிப் பாடிக் களித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அகளங்கனுக்கு ஒரு கணம் அவர்கள் லவகுசர்கள் போலத் தெரிந்தார்கள். என்ன ஒரு மாற்றம்! எப்பேர்ப்பட்ட மாற்றம்! மழையைக் கண்டதும் நாரணன் வந்தான் என்று அறிவிக்க முடிகிற மனம் எப்பேர்ப்பட்ட மனம்! எல்லோருக்கும் முடியுமா இது? சொல்லிக் கொடுத்து வருவதா? பக்தி அனைவருக்கும்தான் இருக்கிறது. ஆனால் சிந்தை முழுதும் எம்பெருமானே நிறைந்திருப்பதென்பது எப்படி சாத்தியம்?'முடியும் மன்னா. ஒரு சம்பவம் சொல்கிறேன். முடியுமா முடியாதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!' என்றார் அமைச்சர்.
(நாளை தொடரும்...)writerparagmail.com
- பா.ராகவன் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Manian - Chennai,இந்தியா

    மாத்வாச்சாரியரைப் பத்தியும் எழுதப் பிராத்திக்கிறேன். மும்மதங்களான சங்கரர், ராமானுஜர்,மாத்வாச்சாரியார் வரலாறுகள் இது போல் தெளிவாக வரவேண்டும். சிலரது மனமாவது இறைவனடி சேர பாதை காட்டும். ஆசிரியருக்கு பெருமாள் கிருபை உள்ளது. அதை அவர் பகிர்ந்து கொள்வது அவர் உயர் மனத்தை காட்டுகிறது. வரலாற்றுப் பிழைகள் கேள்வி மூலம் திரிபு, எழுத்து பதிப்புக்கள் மூலம் பிழைகள், சிலரது கோணல் மனதால் ஏற்பட்ட மறைப்புகள் என்றெல்லாம் இருந்தாலும் மூல உண்மைகளை உள் மனதால் உணர முடிவது போதும்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இந்தத் தொடரை 108 உடன் முடிக்காமல் நீட்டித்து எங்களுக்கு உடையவரின் கிருபையைக் குறைவின்றிக் கிடைக்கச் செய்யுங்கள் ஆசிரியரே கட்டுரை ஆசிரியருக்கு பல கோடி ஆசிகள்.(நான் வயதில் மூத்தவள் )

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    பொலிக பொலிக படிக்கும்போது கண்களில் தன்னை அறியாமலேயே கண்ணீர் வருகிறது. பக்தியில் உள்ளம் உருகுகிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement