Advertisement

யாதுமாகி நிற்பவள்!

குழந்தையாய் மண்ணில் பிறந்து, குடும்பம் என்னும் அழகிய கூட்டில் பெற்றோர், உற்றாரின் அன்பில் வளர்ந்து, சாதனைப் பெண்கள் பலரின் வாழ்க்கையில் பாடம் பயின்று, தானும் அந்த வரிசையில் முன் நிற்க முயல்கிறாள் பெண். அப்போது பருவம் வந்த பெண்ணுக்கு கல்வியை விட, உற்ற துணை நல்ல ஆண் என்று எண்ணிய பெற்றோரின் மனம் மகிழ மணவாழ்வு கண்டோர் பலர்.
வேலை வைராக்கியம் : நாட்டின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற, மகளிரைப் புகழ்ந்திருக்கிறோம், வாழ்த்தியிருக்கிறோம். தன் சுற்றத்திற்காக, தன் கனவுகளைப் புதைத்து வாழும், மகளிருக்கும் நம் கரங்கள் சேரலாம், ஓசை எழுப்ப! வேலைக்கு போக வேண்டும் என்ற வைராக்கியம் எதுவும், பாலுக்கு அழும் குழந்தையின் முன் தோற்றுப் போகிறது. தோளில் பையுடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தையுடன், நாமும் வெளியுலகம் காணலாம் என்று கால் எடுத்து வைக்கப் போனால்... 'அம்மா! பள்ளி முடிந்து வீடு வரும் போது, ஓடி வந்து அணைத்துக் கொள்ள உன் மடி வேண்டும்' என்று கூறும் பிள்ளையின் வார்த்தைக்கு முன், பெண்ணின் கொள்கை எல்லாம் தகர்ந்து விடுகிறது.
வீட்டிற்குள் விஞ்ஞானி : பெண்ணும் நீரும் ஒன்று; இருக்கும் வடிவத்திற்கு ஏற்றாற் போல் வடிவத்தை மாற்றிக் கொள்வர். வங்கிகளில் நிதி நிலை சரிசெய்யும் மேலாண்மையாளராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், நான்கு சுவர்களுக்குள் நிதி அமைச்சர் ஆனவள். தயிரைப் பக்குவமாக புளிக்க வைக்கும் போது வீட்டிற்குள் விஞ்ஞானியாகிறாள்.தன் குழந்தையை பெரிய அறிஞனாக்கி, பாடகனாக்கி, கலைஞனாக்கி வாழ்வில் வெற்றி நடை போடச் செய்த எத்தனையோ அன்னையரைப் போற்றியிருப்போம். ஆனால், இந்த குழந்தை நடந்தாலே பெரிய வெற்றி என்று, பல மருத்துவர் சொன்ன குழந்தைகளை, பேணிக் காக்க தன் அறிவையும், அன்பையும் அந்த குழந்தைக்கே அர்ப்பணித்து வாழும் தாய்மார்களின் சாதனை போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரியது. வீட்டிற்குள் இவர்களது சாதனை புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறது.
அன்னை எனும் ஆசிரியர் : பள்ளி ஆசிரியர்களால், இந்த குழந்தையால் படிக்க முடியாது என்று நிராகரிக்கப்பட்ட சிறுவனை, தானே ஆசிரியராக இருந்து அறிஞனாக்கிய, தாமஸ் ஆல்வா எடிசனின் அன்னை நான்சி என்றும் நின்றிருப்பாள் தனது மகனின் வெற்றியில்.தன் லட்சியத்தை மறந்து, குடும்பத்தில் உள்ளவர்களை உயரப் பறக்கச் செய்யும் நுாலாய் நிற்கும், மகளிரும் சாதனை மகளிர் தான். நாட்டிற்காக, கணவரை அனுப்பிவிட்டு, அவன் வேலைகளையும் சேர்த்து வீட்டிற்கு காவல் செய்யும் பெண்கள் சாதனையாளர்கள் தான்.தன் மகள் பெரிய அறிவாளியாக வரவேண்டும், நடனத்தில் சிறக்க வேண்டும், அவரது பாட்டில் உள்ளம் இன்புற வேண்டும், வீரத்தில் அவள் விண்ணளவு வளர வேண்டும் என, தன் வீட்டு ராணியாக மகளை கொண்டாடும் ஒவ்வொரு தந்தையும், தன் அருகில் இதே போல் கனவு கண்ட ஒரு தந்தையின் ராணி தான் மனைவியாக இருக்கிறாள் என உணர வேண்டும்.
கனவுகளை மெய்யாக்குபவள் : மனைவியின் திறமையை கண்டறிந்து, அவளின் 'கனவு மெய்ப்பட' கணவன் துணையாய் நின்றால், அந்த பெண்ணுக்கு தினமும் மகளிர் தினமே. தான் சாதனை படைக்க வேண்டும் என்று நினைக்கும் எல்லா பெண்களுக்கும் போற்றப்படும் மேடை கிடைப்பதில்லை. சிலருக்கு சமுதாயம் மேடை அமைத்து தருகிறது. அவர்களின் சாதனைகள் மக்களின் கைதட்டுகளால் உரக்கச் சொல்லப்படுகின்றன, உலகில் அனைவருக்கும்.சிலரின் சாதனைகள் வீட்டிற்குள் நான்கு சுவற்றுக்குள் களம் காண்கின்றன. மேடை ஏறாவிட்டாலும் அவர்களின் சாதனைகளும், தியாகங்களும் உரக்க உலகிற்கு சொல்லப்படாவிட்டாலும், உறவுகளுக்கு உறுதி அளித்துக் கொண்டிருக்கும், அத்தனை மகளிருக்கும் இந்நாளில் வாழ்த்துக்கள் கதவை தட்டும்.
குடும்பமே உலகம் : திருமணம் ஆன பின்பு, குடும்பமே உலகம்; நம் நிறைவேறா கனவுகளுக்கு எல்லாம் நம் குழந்தைகளே கருவி என்று, அவர்களை கட்டாயப்படுத்தாமல், நாமே செயல் மாதிரியாக வாழலாம். சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல. சாதனைப் பெண்களை, கதையாக நகர்த்திக் கொண்டிருக்கும் மெகா சீரியல்களின் மோகத்தில் சிக்கிக் கொள்ளாமல், கதாபாத்திரமாக நாமே மாறலாம். குடும்பத்தையே, தனது அரணாக கொண்டு ஜெயித்திருக்கும் எத்தனையோ பெண்களின் வரிசையில் நாமும்இடம் பெறுவோம்.
சமுதாய ஆலமரம் : தன் குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு, முகத்துக்கு நேரே எதிரிகளைப் பந்தாடிய 'ராணி லட்சுமிபாய்' துவங்கி, இரண்டு குழந்தைகளைப் பெற்று தாயான பின்பும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மேரி கோம் வரை கண்டது தான் நம் சமூகம். வேரின் ஊட்டம் தான் விருட்சமாக வளரும். கனியினைச் சுவைத்தோரின் பாராட்டு, கனிக்கு சென்றாலும், வேரில்லாமல் மரமில்லை என்பது அறிந்ததே.வேர், மண்ணுக்குள் இருந்து மரமாகவும், பழமாகவும், பலன் தரும் மரங்கள் எத்தனை இருப்பினும், வேரும் விழுதாக சமுதாயத்திற்கு பயன்படும் ஆலமரம் தான், இந்தியாவின் தேசிய மரமாக உள்ளது. ஆணிவேராக இருக்கும் பெண்களும், சமுதாயத்திற்கு வேரோடு பயன்படும் ஆலமரமாக, தன்னை வெளிப்படுத்திக் கொண்டால் நம் சமூகம் நிச்சயம் உயர்வு பெறும்.
லாவண்ய ஷோபனா திருநாவுக்கரசுஎழுத்தாளர், சென்னைshobana.thirunagmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    The woman always Zero without adding man on either side. Due to the fault of woman from ning of the world the man still suffering. If we read any ancient history the raise and fall of Man was due to woman only. This article is written only to please the women by a woman writter.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement