Advertisement

பெண்களுக்கு ஆதரவான ஆண்கள் நாம் என சொல்வோம்!

கேரளாவில், நள்ளிரவில் காரை மறித்து, கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான, நடிகை பாவனா மீண்டும் நடிக்க வந்து விட்டார். 'குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்த பின்னே நடிப்பேன்' என, சொன்னவர், ஒரு வாரத்தில் வந்திருக்கிறார் என்றால், அது, அவரது துணிச்சலையே காட்டுகிறது.
இங்கே, குற்றம் நடக்கிறது; குற்றவாளிகளுக்கு தண்டனை உடனே கிடைப்பதில்லை, தாமதமாகிறது. ஒருவேளை, அதற்காக பாவனா காத்திருந்தால், அவர் கிழவி
ஆகி விடுவார்.
குற்றம் செய்வோர், குற்ற உணர்ச்சியே இல்லாமல், சமூகத்தில் சாதாரணமாக உலவுகின்றனர். பெரிய பதவிகளிலும், வெட்கமே இன்றி அமர்ந்து இருக்கின்றனர். அப்படியிருக்க, பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக வெளியே வந்திருப்பது, பெண்கள் தலை நிமிரும் தருணம் வந்து விட்டது என்றே கூற வேண்டும்.
ஒரு பாவனா வெளியே வந்து விட்டார். எத்தனை பாவனாக்கள், நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கின்றனரோ... எத்தனை பாவனாக்கள் தற்கொலை செய்து கொண்டனரோ... எத்தனை பேர் கொலை செய்யப்பட்டனரோ... எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டு, இன்னும் நீதிக்காக அலைந்து கொண்டிருக்கின்றனரோ...?
உ.பி.,யில் நடைபெறும் சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி சார்பில் ஒரு, எம்.எல்.ஏ., போட்டியிடுகிறார். அவர் மீது கற்பழிப்பு வழக்கு இருக்கிறது. கற்பழிக்கப்பட்ட அந்தப் பெண், சுட்டுக் கொல்லப்பட்டார். எம்.எல்.ஏ.,வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்க, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், அவர் மகனும், அக்கட்சியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவும் மறுத்து விட்டனர்.
இவர்களிடம் நேர்மை இருந்திருந்தால், கற்பழித்த, எம்.எல்.ஏ.,வுக்கு தேர்தலில் நிற்க, 'சீட்' கொடுத்து இருப்பரா... ஆனால், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, ரவுடியிசம் போன்றவற்றில் ஈடுபடுவோரைத் தானே, பெரும்பாலும், எல்லா கட்சியினரும் வேட்பாளராக தேர்வு செய்கின்றனர்!
நேர்மையானோர், எளிமையானோர், பணமில்லாதோர் தேர்தலில் நிற்க யார் வாய்ப்பு தருகின்றனர். இப்படிப்பட்டோர் ஜெயித்து ஆட்சியை பிடித்தால், எந்த மாதிரி ஒரு சமூகம் அமையும்?
நடிகை பாவனா விஷயத்திலேயே இதை கவனிக்கலாம்.
கேரள சட்டசபையில் ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும், இதற்காக மோதிக் கொள்கின்றனர். இதன் மூலம் பிரச்னையை திசை திருப்ப பார்க்கின்றனரா, குற்றவாளிகளுக்கு பின் இருப்போரை பாதுகாக்கின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது.
சமீபத்தில் வந்திருக்கும், எமன் படத்தில் ஒரு காட்சி வரும். அந்தப் படத்தின் நாயகி, சினிமா நடிகை வேடத்தில் வருவார். அவரை, 'படுக்க வரீயா...' என, மந்திரியின் மகன் அழைப்பான்.
அதற்கு, மந்திரி ஒரு நியாயம் கற்பிப்பார். 'என் மகன் என்ன பெருசா தப்பு செஞ்சுட்டான்... சினிமாவில் பணம் வாங்கி, இவர்கள் யார் யாரோடவோ ஆடிப் பாடலையா... நாம் பணம் தர மாட்டோமா...' என்பார்.
ஒரு பெண், சினிமா நடிகை என்றால் அப்படித் தான் இருப்பார் என்ற மனோபாவம் இங்கே இருக்கிறது. பணம், செல்வாக்கு, காதல் வேஷம் இவற்றால், நடிகையை வீழ்த்த முடியாவிட்டால், கற்பழிக்கலாம் என்ற துணிச்சலை கொடுத்திருக்கும் சமூக சூழல் தான், இந்த கால கட்டத்தின் பெரும் துயரம்.
சின்ன வயதிலிருந்தே, பெண்களை நாம் அப்படித்தான் வளர்க்கிறோம். 'ஆண்களுடன் பழகாதே; சிரித்து பேசாதே; நேரத்திற்கு வீட்டிற்கு திரும்பி விடு' என, அறிவுறுத்துகிறோம்.
ஆனால், நம் ஆண் பிள்ளைகளுக்கு, 'எந்தப் பெண்ணையும் சீண்டக் கூடாது; அவள் அனுமதியின்றி, அவளுடைய உடலை தொடாதே' என, சொல்லிக் கொடுத்தோமா... இந்த விஷயத்தில், நாமும் தவறு செய்கிறோம்.
இன்றைய பெண்கள் நிறைய படிக்கின்றனர்; நன்றாகவும் படிக்கின்றனர்; நல்ல வேலைகளும் அவர்களுக்கு கிடைக்கின்றன. யார் என, தெரியாத ஆளை, பெற்றோர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயன்றால், மறுக்கின்றனர்.
தான் விரும்பும், தன் மனதுக்கு பிடித்த ஆளை தேர்வு செய்யும் பொறுப்பும், இன்றைய பெண்களுக்கு இருக்கிறது. திருமணம் சரிப்பட்டு வராவிட்டால், விவாகரத்துக்கும் தயார் ஆகின்றனர். இது தான், நவீன இந்தியா.
ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை மாறி, ஆணை விட பெண் உயரே செல்ல, இது ஆணாதிக்க சமூகத்திற்கும், மதங்களுக்கும், இவற்றை தாங்கிப் பிடிக்கும் அரசியல்வாதிகளுக்கும் பிடிப்பதில்லை. அதனால் தான், ஒவ்வொரு கற்பழிப்பு சம்பவங்களுக்கு பின்னும், அவர்களின் குரல் ஒரே மாதிரி ஒலிக்கிறது. அது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பேரிடியாக இருக்கிறது; குற்றவாளிகளுக்கு பயம் விட்டுப் போகிறது.
அப்படிப்பட்ட ஒரு குரல், பாவனா சம்பவத்திலும் கிளம்பியிருக்கிறது. கொஞ்சம் கேட்போமா...
'கோவில்களுக்கு இப்போது பெண்கள், 'ஜீன்ஸ், டி - ஷர்ட்' அணிந்து வருகின்றனர்; கையில் எப்போதும் மொபைல் போன் வைத்திருக்கின்றனர். பெரும்பாலான இளம்பெண்கள், தலை முடியை சரிவர வாராமல் காற்றில் பறக்க விட்டபடி வருகின்றனர்.
'ஜீன்ஸ் அணிந்து வரும் பெண்கள், ஆண்களை அத்துமீற துாண்டுகின்றனர். ஆண்கள் அணியும் உடையை பெண்கள் அணியலாமா... அதையும் மீறி, பெண்கள் ஜீன்ஸ் அணிவது, கடவுளுக்கு பயப்படாத செயலாகும்.
'சில பெண்கள் ஜீன்ஸ் அணிவது அரைகுறையாக உள்ளது; ஆண்கள் மனதை கிளர்ச்சிப்படுத்துகிறது. எனவே, ஜீன்ஸ் அணியும் பெண்கள் உடலில் கல்லைக் கட்டி, கடலில் துாக்கிப் போட வேண்டும். சில பெண்களுக்குள் சாத்தான் புகுந்து விடுகிறான். இதனால் அவர்கள், துப்பட்டா போடுவதில்லை' என, ஒரு மத போதகர் பேசுகிறார் என்றால், அவர் காட்டுமிராண்டி காலத்தில் இருக்கிறார் என்று தானே அர்த்தம்!
இந்த ஒரு விஷயத்தில் மட்டும், எல்லா மதவாதிகளும் ஒற்றுமையாக செயல்படுகின்றனர். பெண்கள் எந்த ஆடை உடுத்துவது என்பதை யார் தீர்மானிப்பது... அதை அந்த பெண்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆடை உடுத்துவதற்கு கூட, மற்றவர்களின் அனுமதியை எதிர்ப்பார்க்க வேண்டுமா...?
அவர்கள் எப்படி ஆடை உடுத்தினாலும், அது எப்படி அவர்களை பாலியல் வன்புணர்ச்சி செய்ய ஆண்களுக்கு அதிகாரம் தரும் என்பது, எந்த நாட்டு சட்டம் என்பது தெரியவில்லை.
பாலியல் தொழிலாளியை கைது செய்யும் போலீசார், அவர்களை போலீஸ் வேனில் ஏற்றிச் சென்று, கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்; பின், காப்பகத்தில் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் தங்கள் முகத்தை மூடிக் கொண்டாலும், அவர்களின் பெயர், ஊர் போன்ற விபரங்கள், ஊடகங்களில் வந்து விடுகின்றன.
விபசாரம் குற்றம் என்றால், ஆண்களின் புகைப்படங்கள், பெயர்கள், விபரங்கள் ஏன் மறைக்கப்படுகின்றன... எல்லா கதவுகளும் அடைக்கப்படும் போது, ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தால் தான், ஒரு பெண், பாலியல் தொழிலாளியாக மாறுகிறாள்.
அந்த அவமானமே, அவளை சிறுகச் சிறுக கொல்லும் போது, அவர்களை கைது செய்வது, குற்றவாளியாக காட்டுவது எந்த விதத்தில் நியாயம்... அவர்கள் நேர்வழியில் உழைத்து சாப்பிட்டால் மட்டும், வக்கிரம் பிடித்த ஆண்கள், அவர்களை விட்டு வைக்கப் போகின்றனரா... தங்கள் உடல் இச்சையை தீர்க்க, அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதைத் தான் அன்றாடம் பார்க்கிறோமே!
சம்மதித்தால் சரி, இல்லையென்றால், 'ஆசிட்' வீச்சு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என, எத்தனை விதங்களில் அவர்கள் மீது கொடுமைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கற்பு என்பதே ஒரு மாயை. அது எப்படி பெண்ணுக்கு மட்டுமே இருக்கிறது... ஆணுக்கு கிடையாதா?
முதலில் முட்டாள் கற்பிதங்களில் இருந்து, பெண்கள் வெளியே வர வேண்டும். தங்கள் மீது ஏவப்பட்ட எந்த வித அடக்குமுறையையும், சட்டம், நீதியின் துணையுடன் தைரியமாக சந்திக்க வேண்டும். பாவனாவுக்கு கிடைத்த ஆதரவும், பாதுகாப்பும், சாதாரண பெண்களுக்கும் கிடைக்க வேண்டும்.
நீதியும் விரைவில் கிடைத்து, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டால் மட்டுமே, இது போன்ற குற்றங்கள் குறையும். இல்லையென்றால், தொடரும்.
நம் தமிழ் சினிமாக்கள், பெண்களை இழிவுபடுத்துவதில், நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கின்றன. திரையுலகினர், நடந்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இனி, பெண்களை கேவலப்படுத்தும் படங்களை எடுப்பதில்லை என, முடிவு செய்ய வேண்டும்.
பெண்கள் என்றால் போகப் பொருட்கள்; உடல் உறவுக்கு பயன்படும் கருவிகள்; ஆண்களின் துாக்க மாத்திரைகள் என்பது, அந்தக் காலத்து சிந்தனை. இன்றைய கால கட்டத்திற்கு பொருந்தாது. மனைவியாகவே இருந்தாலும், அவளுக்கு இஷ்டமில்லை என்றால், கணவன் அவளை தொடக் கூடாது. இது, இந்த காலம்.
மாறி வரும் காலத்திற்கு ஏற்ப, தமிழ் சினிமாவும், 'டிவி' தொடர்களும், விளம்பரங்களும், பெண்களை ஒரு பண்டமாக, வெறும் சதைப் பிண்டமாக காட்டுவதை கைவிட வேண்டும்.
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் கலந்து கொண்டனர்; இரவிலும், அங்கேயே தங்கினர். ஒரு பெண்ணையும், யாரும் சீண்டவில்லை; தொடவில்லை. இது, இளைய தலைமுறையின் இன்னொரு முகம்; நம்பிக்கை தரும் முகம்.
ஒவ்வொரு பாலியல் வன்கொடுமைக்கும், பாதிக்கப்பட வேண்டியவர்கள், வெட்கப்பட வேண்டியவர்கள், பெண்கள் அல்ல, ஆண்கள் தான். அந்த கொடுமையை செய்தது ஆண் தானே... எனவே, ஆணாக இருப்பதற்கு வெட்கப்பட வேண்டும்.
பாவனாவுக்கு இருக்கும் துணிச்சல் கூட நமக்கு கிடையாதா... அவர்களுக்கு ஆறுதல் தர வேண்டாமா... ஆதரவு தர வேண்டாமா... ஆண்களே ஊமைகளாக இருந்தது போதும். உலகிற்கு உரக்கச் சொல்வோம்... பெண்களுக்கு ஆதரவான ஆண்கள் நாமென்று!
இ - மெயில்:
writer.afzal1gmail.com - அப்சல் -
எழுத்தாளர், சிந்தனையாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Siva - Chennai,இந்தியா

    பாவனாவுக்கு துணிச்சலா? அப்படி என்ன பண்ணிட்டா? சினிமாவுக்கு சொம்பு தூக்கறத நிறுத்து அங்க நடக்கற மானம்கெட்ட பொழப்ப யாரு பார்த்திருக்கா? பொம்பளைங்களுக்கு வக்காலத்து வாங்கறதா நிறுத்து இந்த காலத்துல பொம்பளைங்க கொலை கொள்ளை லஞ்சம் எல்லாவற்றிலும் சமமா தான் இருக்காங்க... ஆண்களுக்கு ஆதரவான பெண்கள் எந்த பெண்ணாவது சொல்லி கேட்டிருக்கியா?? கள்ள காதலுக்காக கணவனை கொல்வது மற்றும் குழந்தைகளை கொல்வது இப்போது அதிகரித்து வருவது பல செய்திகளின் மூலம் தெரிகிறது ... இன்னுமா பெண்கள் பெண்கள் அப்படினு டமாரம் அடிப்பே? "பெண்கள் எந்த ஆடை உடுத்துவது என்பதை யார் தீர்மானிப்பது" - சரி .. ஒரு ஆண் உள்ளாடையுடன் மட்டும் தெருவில் வந்தால் சரியா உனக்கு? நீ ஒரு வெட்கம் கேட்ட ஆண் ...குற்றமுள்ள நெஞ்சு உன்னுடையது மற்ற ஆண்களை குறை சொல்ல உனக்கு தகுதி இல்லை...

  • Sithu Muruganandam - chennai,இந்தியா

    கவிப்பேரரசு வைரமுத்து சொல்கிறார், "பாவனாவுக்கு பாவாடை கிழிந்தால் அது பாராளுமன்றம் வரை எதிரொலிக்கிறது, நந்தினி, ஹாசினிகளுக்குக் கருவறுக்கப்படடாலும் அது கிணற்றுக்குள்ளேயே மூடி மறைக்கப்படுகிறது."

  • murasu - madurai,இந்தியா

    இதற்கு முக்கிய காரணமே திரைத்துறைதான், தேவை என்றால் கவர்ச்சி காட்டுவேன், கதைக்காக படுக்கை அறை காட்சியில் அறை குறையாக இருப்பேன், தொப்புளை காட்டுவேன், காட்ட மாட்டேன், நீச்சல் உடையில் கதைக்காக வந்தேன், என்று இதே நடிகைகள் கூட்டம் தொலைக்காட்சியில் பேட்டி கொடுப்பார்கள். கவர்ச்சியில் நயன் தாராளம், அடுத்தவர் சிக்கனம் இந்த மொழிகள் உங்கள் துறையில் தான் உண்டு. பெண்களை போக பொருளாக சித்தரிப்பதில் உங்கள் துறை அன்றும் இன்றும் என்றும் முன்னோடியாக உள்ளது, அடுத்தது விளம்பர துறை , திரைத்துறை வைச்ச ஆப்பு நாட்டின் எல்லா பெண்குலத்தை பாதிப்பதோடு மட்டும் அல்லாமல் திரைத்துறை கூட்டத்தையே பதம் பார்த்துள்ளது . இது வருந்தத்தக்க ஒன்று. கண்டிக்க தக்க ஒன்று. இனியாவது இந்த கேடுகெட்ட துறை திருந்துமா . பெண்களின் சதையை மட்டும் மைய படுத்தாமல் பெண்களுக்கு என்று ஒரு மனது, ஆசை, கனவு, சுதந்திரம் உள்ளது என்று உணர்ந்து கதையும் படமும் எடுங்கள். சமீபத்தில் பொன்வண்ணன் சமுதாயத்திற்கு அறிவுரை வழங்கினார். அனைத்திற்கும் மூல காரணம் அவர்களின் திரை துறை , அவர் மக்களுக்கு அறிவுரை சொல்லுவதற்கு முன் அவர் துறைக்கு உள்ள பொறுப்பை சொல்லட்டும் . பெண்கள் ரௌடியை துரத்தி துரத்தி காதலிப்பதும், சம்மதமே இல்லாத இடத்தில அரைகுறை ஆடையுடன் குத்து பாட்டு , ஐட்டம் சாங் போன்ற இடை சொருகல்கள் இல்லாமல் உங்கள் கூட்டம் படம் பண்ண சொல்லுங்கள். திரை துறை ஒரு கேடு கேட்ட துறை. இன்றை பல பாலியல் பிரச்சினைகளுக்கு மூல காரணம், திரை துறை, டாஸ்மாக் சாராயம் மட்டுமே காரணம் போதாக்குறைக்கு இந்த மத தலைவர்கள் ஒழுக்கம் எல்லாம் பெண்களுக்கு மட்டுமே என்ற மனோபாவம் , பிடிவாதம் , மத வாதம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement