Advertisement

'தமிழகத்தை விட்டே போய் விடலாமான்னு தோணுது!'

கடந்த, 10, 20 நாட்களாக தமிழகமே துாங்கவில்லை. இரவு, 11:00 மணி, 'என்ன சார்... 'டிவி'ல என்ன ஓடிக்கிட்டிருக்கு...' மடிப்பாக்கத்து நண்பர் ஒருவர் விசாரித்தார்.

அடுத்த நிமிடம், திருவொற்றியூர் நண்பர் ஒருவர், 'சார்... நான் இந்த, 'டிவி' பார்த்துக்கிட்டு இருக்கேன்... நீங்க என்ன?
''நான், என்.டி., 'டிவி' பார்க்கறேன்...'என்ன தமிழகம் இது... இந்தியாவிலேயே, தமிழகம் மட்டும் தான் அமைதி பூங்காவாக இருக்கிறது என, தற்பெருமை பேசியவர்கள் எல்லாம் எங்கே? 'அம்மா' என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா மரணத்திற்குப் பின், தமிழகத்தின் இன்றைய நிலையும், கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் புதைக்கப்பட்டு விட்டது.
'ஜெயலலிதா' என, முதல்வரின் பெயரை சட்ட சபையில், எம்.எல்.ஏ., ஒருவர் பேசினால், உடனே அடிதடி ரகளை... 'நாங்களும் கருணாநிதி என்று பெயர் சொல்வோம்...' என்றால் சண்டை. சந்தியாவும், ஜெயராமனும், தங்கள் பெண்ணுக்கு ஜெயலலிதா என்று தானே பெயர் வைத்தனர்... முத்து வேலரும், அஞ்சுகம் அம்மையாரும், தங்கள் பிள்ளைக்கு, கருணாநிதி என்று தானே பெயர் வைத்தனர்... தங்கள் குழந்தையை மற்றவர்களும், பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களும், இவர்களை ஜெயா என்றோ... கருணா... என்று தானே அழைத்திருப்பர்.

இவர்களின் பெயர் சொல்லி அழைப்பதில் என்ன தவறு? வடக்கே, டில்லியில் ராகுலும், யெச்சூரியும், கார்கேயும், 'மோடி ஜி...' என்று பெயர் சொல்லித் தானே அழைக்கின்றனர்... இங்கே மட்டும் இவர்களுக்கு என்ன கொம்பு முளைத்து விட்டது? ஈ.வெ.ராமசாமியை, வயதின் காரணமாக, 'ஐயா' என்றும், ராஜாஜியை, 'சார்' என்றோ... 'மிஸ்டர் சி.எம்.,' என்றோ அழைப்போம். காமராஜருக்கும், 'சார்' அல்லது 'ஐயா...' தான். எம்.ஜி.ஆரைக் கூட, 'மிஸ்டர் எம்.ஜி.ஆர்.,' என்போம்; யாருமே கோபிக்க மாட்டர். கலைஞர் கருணாநிதி வந்தார். 'கலைஞர்' என்று தான் அழைக்க வேண்டும். ஜெயலலிதாவை, 'அம்மா' என்று தான் எல்லாரும் அழைக்க வேண்டும் என்றார். இல்லையென்றால், ரகளை தான். கருணாநிதியை கலைஞர் என்று தான் அழைக்க வேண்டும்; ஜெயலலிதாவை, அம்மா என்று தான்
அழைக்க வேண்டும் என்று, இவர்கள் சட்டம் கொண்டு வராத நிலை.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்... அம்மா என்றால் நம்மை பெற்றெடுத்தவள் தான், அம்மா; அம்மா இல்லாதவர்களுக்கு, பார்வதி தேவி தான் அம்மா.
ஆதிசங்கர பகவத் பாதாள்,
'மாதா ச பார்வதி; பிதா தேவோ மஹேஸ்வரஹ;
பாந்தவஹ (உறவினர்கள்) சிவபக்தர்களே' என்கிறார்.
மரியாதை நிமித்தமாகவும், அன்பின் எல்லையில்லா தன்மையினாலும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவியை, அம்மா என்கிறோம். ஏழைகளிடம் காட்டிய அன்பினால், 'மதர் தெரசா' என்கிறோம்.
சோனியாவையும், ஜெயலலிதாவையும், அம்மா என்றழைப்பது சரி என்றால், நாம், நமீதாவையும், நயன்தாராவையும், அம்மா என்று அழைக்கலாம் அல்லவா... ஆனால், அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.
நாட்டில், 306 இடங்களில் சொத்து வாங்கியவர்களையும், நான்கு ஆண்டுகள் சிறை சென்று இருப்பவர்களையும், அம்மா என்றழைப்பதில் தவறு இல்லை என்றால், உ.பி.,க்காரன், பூலான் தேவியையும், அம்மா என்றழைக்கலாமே... என்ன கலாசாரம் இது!

தவறு செய்தவர்களுக்காக கோவிலில் அபிஷேகம் செய்வதும், யாகங்கள் செய்வதும், கும்பிடும் கடவுளுக்கல்லவா அவமானம்... தன் தாயின் திதியின் போது, அந்தப் பணத்தை செலவிட்டால், பெற்றவள் ஆன்மா சாந்தியடையுமே... ஏதோ, நாட்டுக்காக தியாகம் செய்த காந்தியையும், வ.உ.சி.,யையும், திருப்பூர் குமரனையும், வாஞ்சி நாதனையும் நினைத்து, அந்தத் தியாகிகள் தினத்தில், தான, தருமம் செய்தாலாவது நாலு பேர் பாராட்டுவரே... இது ஏன் தமிழனுக்குத்தெரியவில்லை! கிரிமினல்களுக்காக தன் குடும்பத்தையும் மறந்து தீக்குளிப்பதையும், தற்கொலை செய்து கொள்வதையும் எதில் சேர்ப்பது...

ஒரு காலத்தில், பீஹாரிலும், உ.பி.,யிலும் ஓட்டுக்காக, எம்.எல்.ஏ.,க்களையும், எம்.பி.,க்களையும் கடத்தி வைப்பதை கேவலமாக நினைத்தோம். இன்று, கூவத்துார் நம் கவலையை நீக்கி விட்டது. இந்தியாவில் இருக்கிற எல்லா அரசியல்வாதிகளும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்!கூவத்துார் ஓட்டலில், எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்களாக இருந்தவர்களும், ஒரே கும்மாளம் தான். கறி விருந்து, குடி என்று ஆட்டம் போட்டனர். ஆண்கள் குடித்து விட்டுக் குத்தாட்டம் போட்ட போது, பெண், எம்.எல்.ஏ.,க்கள் ரசித்தது மகா கேவலம். குத்தாட்டம் போடவில்லையா அல்லது போட்டதை படம் எடுக்கவில்லையா என, தெரியவில்லை.

நல்லவேளை... பெங்களூரின், 'ஸ்ரீராம் சேனா' தமிழகத்தில் இல்லை.எல்லாம் முடிந்து, அமைதியாக இருந்த வேளையில், கூவத்துார் ரிசார்ட்டில் நுழைந்து, போலீஸ் சோதனை செய்ததாம்... பரவாயில்லை. சசி ஜெயிலுக்குப் போன பிறகாவது, இவர்களுக்கு தைரியம் வந்ததே என, பாராட்டலாம்.யாரோ ஒருவர், 'எங்கள்,
எம்.எல்.ஏ.,வை காணவில்லை' என, புகார் கொடுத்ததும் போலீஸ் போயிருக்கிறது. அப்போதே ஒரு அமைச்சர், 'போலீஸ் எப்படி லத்தியோடு ரிசார்ட்டில் நுழையலாம்...' என, ஒரு பெண் போலீஸ் அதிகாரியிடம், பெரிய குரலெடுத்து சண்டை போட்டிருக்கிறார்.

பாவம்... போலீஸ்காரர்கள் எங்கு போனாலும் லத்தியோடு தான் போவர் என்பது கூட தெரியாமல், இவர்கள் எப்படி, எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் இருக்கின்றனர் என, புரியவில்லை.பதவிப் பிரமாணம் எடுக்கும் போது, என்னவெல்லாம் சொல்லி, இந்திய சட்டத்தின் மீது ஆணையிட்டோம் என்பதைக் கூட, இவர்கள் மறந்து விட்டனர்.

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது... இவர்கள் பதவி ஏற்கும் போது சாணக்கியரின், 'அர்த்த சாஸ்திர'த்தையும், விதுரரின், 'விதுர நீதி' புத்தகத்தையும் படிக்கக் கொடுக்க வேண்டும்... ஆனால், இதில் பயனில்லை... மதுவையும், மாட்டுக் கறியையும் தின்று விட்டு, அந்தப் புத்தகங்களின் பக்கங்களை கிழித்து, கையை துடைத்து விட்டுப் போய் விடுவர்.அற்புதமான, அரசியலை நடத்திய தமிழகம், இன்று அழுகிப் போய் கிடக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால், யாரோ ஒரு ஹிந்தி நடிகரின் மனைவி, 'இந்தியாவை விட்டே போய் விடலாமா...' என, சொன்ன மாதிரி, நமக்கும், தமிழகத்தை விட்டுப் போய் விடலாமா என்று தான் தோன்றுகிறது.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். கவுண்டர் ஆளக் கூடாது; தேவர் ஆளக் கூடாது; வன்னியர் ஆளக் கூடாது என, ஜாதி வாரி அரசியல் இங்கேயும் தோன்றி விட்டது. இப்படி, இந்தியா முழுவதுமே இருக்கிறது. யாதவரா, தலித்தா என்கிறது, உ.பி., அரசியல். ரெட்டியா - நாயுடுவா என்கிறது, இன்னொரு மாநில அரசியல்; ஜாட்டா - க்ஷத்திரியரா என்கிறது மற்றொரு மாநிலம்.

உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்திலும் ஜாதி வந்து விட்டது. இதில், பிராமணரை யார் மதிக்கப் போகின்றனர். பிராமணர்கள், காங்கிரசை நம்பி ஏமாந்தனர்.இன்னும் பிராமணர்களை வெறும், 2 சதவீதமாகவே தமிழகத்தில் நினைக்கின்றனர். இப்போது, 5 முதல், சில தொகுதிகளில், 7 சதவீதம் பேர் இருக்கின்றனர். பலர் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவதில்லை.

தமிழகத்தில், எம்.ஜி.ஆருக்காகவும், ஜெயலலிதாவுக்காகவும், பிராமணர்கள், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட்டனர். இனி, அ.தி.மு.க.,வுக்கு பிராமணர்கள் ஓட்டு கிடைக்காது. காஞ்சி மடம் ஜெயேந்திரரை கைது செய்த போது கூட பிராமணர்கள், ஜெ.,யை ஆதரித்தனர். இனி அவர்கள், இரட்டை இலையை ஆதரிக்க மாட்டர். சென்னையில், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், நங்கநல்லுார், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளையும், ஸ்ரீரங்கமும், ஸ்ரீவில்லிப்புத்துார் போன்ற இடங்களில் வாழும் பிராமணர்களின் பிள்ளைகள், லண்டனிலும், அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஜெர்மனியிலும், சிங்கப்பூரிலும், சுந்தர் பிச்சையாகவும்,
இந்திரா நுாயியாகவும் வாழ ஆரம்பித்து விட்டனர்.
பா.சி.ராமச்சந்திரன்
மூத்த பத்திரிகையாளர்
இ - மெயில்: bsr_43yahoo.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

    சம்மதியில் புதைக்கப்பட்ட உடலையோ சாம்பலையோ கும்பிடுவது பகுத்தறிவு, நம்பிக்கையின் பேரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்லை கடவுள் என கும்பிடுவது அல்லஎன்ற கூட்டம் எங்குமே இருக்கும்போது நீங்கள் தமிழ் நாட்டில் இருந்தால் என்ன, வெளி மாநிலத்திலோ வெளி நாட்டிலோ இருந்தால் என்ன?

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    அம்மா சின்னம்மா ஐயா பெரிய ஐய்யா சின்னய்யா என்று தான் சொல்லோணும்னு ஆர்டர் இல்லே இருக்கு

  • sickularist sickular - sikim,பூடான்

    மிக உன்னதமான இன்றயநிலையின் பிரதிபதிப்பு .அனால் இந்தநிலை எல்லா சமூக பெண்மணிகளிடமும் காணப்படுகிறது என்பதுதான் கசப்பான உண்மை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement