Advertisement

மொழியின் விழியில் வாழ்வின் வழி

தாயிடமிருந்து நாம் கற்றமொழி, தாயாக நம்மைப் பெற்ற மொழி நம் அருமைத் தமிழ்மொழி. “தமிழ்..தமிழ்”என்று தொடர்ந்து சொன்னால்“அமிழ்து அமிழ்து” என்று நம் காதுகளில் தேனாய் ஒலிக்கிறது. உலகமொழிகள் ஆறாயிரத்திலும் சிறந்தமொழி நம் அன்னைத் தமிழ்மொழி.பல நுாற்றாண்டுகளுக்கு முற்பட்ட மொழிகளான கிரேக்கமும், எபிரேயமும், இலத்தீனும் இன்று பேசுவதற்கு அதிக மக்கள் இல்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் தாய்மொழியான தமிழ் இன்றும், இணையத்தின் இதயத்தில் இதமாய் வீற்றிருக்கிறது. திராவிட மொழிகளின் தாயாகத் திகழும் நம் தமிழ்மொழி சொல்வளமும் பொருள் வளமும் மிக்கதாக இன்றும் இளமையோடும் இனிமையோடும் திகழ்கிறது. மொழி எனும் சொல்லுளி: மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துவது பேச்சாற்றல்தான். அப்பேச்சு, மொழியின் பெருவரம். உள்ளுக்குள் உறைந்திருக்கும் உயிர்மாதிரி, நம் சொல்லுக்குள் மறைந்திருக்கிறது தமிழ். மொழி என்பது வெறும் தகவல்தொடர்பு வாகனமன்று; அது நம் அழிக்க முடியா அடையாளம். மொழி, பண்பாட்டைச் செதுக்கும் சொல் உளி. மொழி, நம் சமூகத்தின் மூன்றாம் விழி. மொழியின் விழியில்தான் நாம், வாழ்வின் வழியைக் கண்டடைகிறோம்.
எழுத்துகளின் கழுத்து : களில்தான் நாம்சொல்ல விரும்பும் கருத்துகளே வீற்றிருக்கின்றன. திருவள்ளுவரின் ஈரடி வெண்பாக்கள் அறத்தின் திறத்தை அவனிக்குக் காட்டின. பாரதியின் கவிமொழி விடுதலைக்கான விதையை மக்கள் மனதில் விதைத்தது. பாவேந்தரின் தீந்தமிழ்க் கவிதைகள் தமிழினத்துக்குப் புத்துயிர் தந்தன. தாகூரின் நேசமொழி அவரை நோபல்பரிசு வரை அழைத்துச் சென்றது. அப்துல் கலாமின் பொன்மொழிகள் மாணவர்களைச் சாதனை படைக்கத் துாண்டிச்சென்றன. மொழி, எல்லாம் செய்யும் வலிமைமிக்கது.மொழி எனும் பெருவரம்: மொழி, அறிவை வளர்க்கும் அற்புத ஊக்கவரம். மொழிக்கு நாம் செய்யும் கைம்மாறு இறுதிவினாடி வரை அம்மொழியைச் சரியான உச்சரிப்போடு பிழையின்றிஅழகாகப் பேசுவதுதான். தாயை நேசிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் நம் தாய்மொழியை நேசிப்பதும் முக்கியம். ஞானம்தரும் மொழிதான் நம் இனத்தின் மானம் காக்கிறது. சிந்திக்கக் கற்றுத்தரும் மொழிதான் பல சவால்களைச் சந்திக்கும் உறுதியை உள்ளத்திற்குத் தருகிறது. தங்கத்தைவிட மதிப்பானது தங்கள் தாய்மொழி என்று உணரும் சமுதாயம், வைரத்தைவிட வலிமையானதாய் வளர்ந்தோங்குகிறது. முழுமையை நோக்கிய முன்னேற்றம் மொழியை விழியாக்கி வளர்வதில் இருக்கிறது.பழமையான மொழி: தாயிடமிருந்து உடலும் உயிரும் வந்ததைப்போல் தாயிடமிருந்து உயிரும் மெய்யும் மொழியாய் வந்தது, அவள் உதடுகுவித்தபோது உயிர் எழுத்தும் மெய்தீண்டி முத்தமிட்டபோது மெய்யெழுத்தும் மெல்ல வந்தது. நாம் வேற்றுாரில் இறங்கி வாய் திறந்து பேசும்போது, நாம் எந்த வட்டாரம் சார்ந்தவர் என்பதை பேசும்மொழி வெளிக்காட்டி விடுகிறது.இந்தியாவில் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகள் 22 இருந்தாலும், அவை எல்லாவற்றையும் விட தமிழ், காலத்தாலும் இலக்கிய வளமையாலும் முந்தியது. 6200 மொழிகள் பேசிய உலகில் இன்று 3000 மொழிகள் மட்டுமே நிலைபெற்றுள்ளன. இலக்கிய வளம்: ஒரு மொழியின் வலிமையை உணர அம்மொழியில் இறவாப்புகழ்பெற்ற படைப்பிலக்கியங்களை படைப்பதும், அம்மொழியில் உள்ள ஒப்பற்ற இலக்கியங்களை ஆழமாகப் படிப்பதுதான். எப்படியும் வாழலாம் என்று வாழ்ந்த மனித இனத்தை இப்படித்தான் வாழவேண்டும் என்று உயரிய மதிப்பீடுகளைத் தந்து, வாழக்கற்றுத்தரும் நீதி இலக்கியங்களை நமக்குத் தந்த மொழி நம்தமிழ்மொழி.'யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சங்க இலக்கியத்தால் ஓராயிரம் நற்பண்பாடுகளை நமக்குத் தந்தமொழி தமிழ்மொழி. சிலம்பும், மேகலையும், சிந்தாமணியும், கம்பராமாயணமும், தேம்பாவணியும், சீறாப்புராணமும் தமிழின் காப்பியச் செழுமையை இன்றும் உலகிற்கு உணர்த்தி கொண்டிருக்கின்றன.1955ல் முதல் சாகித்ய அகாடமி விருதினைத் தமிழுக்குப் பெற்றுத்தந்த சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையிலிருந்து 2016 ஆம்ஆண்டுக்கான விருதினை “ஒருசிறுஇசை” எனும் சிறுகதைத் தொகுதிக்காகப் பெறும் எழுத்தாளர் வண்ணதாசன் வரை, தாய்மொழிக்கல்வியில் பயின்று படைப்பிலக்கியங்கள்படைத்துவரக்கூடிய சிறந்த படைப்பாளர்களைத் தமிழ்பெற்றிருக்கிறது.இணையத்தமிழ்: முத்தமிழோடு நவீன இணைய ஊடகத்தின் வரவால்இணையத் தமிழ் எனும் நான்காம் தமிழ் உருவாகி இணையப் பக்கங்களில் இனிமையாக வீற்றிருக்கிறது. காலத்திற்கேற்பதமிழ் தன்னைப் புதுப்பித்துவந்திருக்கிறது என்பதற்கு சான்று இணையத் தமிழ் எனும்புதியதுறை. அன்னைத்தமிழுக்கு இன்னும் சிறப்புச்செய்யவேண்டும் என்கிற உயரியநோக்கில் தொல்காப்பியம் முதல் நவீன புதுக்கவிதை வரையாவும், ஒருங்குறியில் இணையத்தில்உள்ளிடப்பட்டுத் தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்யப்பட்டிருக்கிறது.புலம்பெயர்ந்ததமிழர்கள்: திருக்குறளும், ஆத்திசூடியும் அரபுமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு உலகத்தமிழர்களின் சொத்தாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கு தாய்மொழியைக் கற்பிக்கவேண்டும் என்ற நன்நோக்கில் அடிப்படைத்தமிழ் கற்பிக்கும் இணையதளங்கள் உருவாக்கப்பட்டு, இணையம் மூலமாய் தமிழ் கற்பிக்கப்படுகிறது. மலேசியநாட்டில்550 மேற்பட்டதமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டுமிக அழகாகத் தாய்மொழிக் கல்வி வழங்கப்படுகிறது. தாய்மொழி வழிக்கல்வி: உலகின்வளர்ச்சி அடைந்த நாடுகளின் வெற்றி அவர்களின் தாய்மொழிவழிக்கல்வியில்தான் உள்ளது. அமெரிக்கநாட்டில் அவர்களின் தாய்மொழியானஆங்கிலமும், வளைகுடாநாடுகளில் அரபும், ஜெர்மன் நாட்டில் ஜெர்மானிய மொழியும் தென்கொரியாவில் கொரிய மொழியும்பயிற்றுமொழியாய் திகழ்வதால்அந்நாட்டுக் குழந்தைகள் எளிதாகக் கல்வி கற்க முடிகிறது. எந்தநாட்டில் தாய் மொழிவழிக் கல்வி முன்னிலைப்படுத்தப்படுகிறதோ அந்தநாட்டில் அறிவுப்புலம் பரந்து விரியும். நாம்இன்னும் தாய்மொழி வழிக்கல்வியை வளர்க்கவேண்டிய நிலையில் உள்ளோம். கலைச்சொல்லாக்கம்: அறிவியல் வளரவளர மொழியும் அதற்கு ஈடுகொடுத்து வளர்வதைக்காணமுடிகிறது. தமிழில்“சொல்லுதல்” என்கிற சொல்லுக்கு அறைதல், செப்புதல், மொழிதல், இயம்புதல்,நவிலுதல்,பகர்தல், சாற்றுதல் என்பன போன்ற 39 இணைச்சொற்கள்உண்டு. இடத்துக்குத்தக்கவாறு அந்தந்தச் சொற்களைப்பயன்படுத்தும் வகையில்சொல்வளம் மிக்க மொழியாக தமிழ் திகழ்கிறது. புதிய கண்டுபிடிப்புகள் வரவர, அவற்றை தமிழில் மிகஎளிமையாக விளக்க, அழகான தமிழ்க்கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டு இணையதளங்களில் உள்ளிடப்படுவதால் பிறமொழிக்கலப்பின்றிப் பேசவும், எழுதவும் முடிகிறது. அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அறிவியல், மருத்துவம்,கணினி,தொழில்நுட்பம்சார்ந்த எட்டுக் கலைச்சொல் அகராதிகளைத் தமிழுக்குத் தந்தார். எழுத்தாளர் சுஜாதா எளிமையான தமிழில், மிகக் கடினமான அறிவியல்கருத்துகளைத் தொடர்ந்துஎழுதினார். இம்முயற்சியைத் தொடரவேண்டியுள்ளது.தாய்மொழியில் பேசுவோம்: தொன்மையும்தொடர்ச்சியும் உடையமொழி நம் தமிழ்மொழி. ஒருபண்பாட்டினை அழிக்க முயல்பவர்கள்முதலில் மொழியைத்தான் அழிப்பார்கள். மொழியை அழிப்பது ஓர் இனத்தின் அடையாளத்தை அழிப்பதேயாகும்,நம் தாய்மொழி அடையாளத்தை அழிப்பது நம்மை அழிப்பதற்கு ஒப்பானதாகும். வெறும்பேச்சோடு இல்லாமல் இந்த நாளிலிருந்து, நாம் சிலவற்றை மாற்றினால்என்ன?அலைபேசியில் பேசும்போது ஹலோ என்ற சொல்லுக்குப்பதில் “வணக்கம்..” என்று தமிழில் பேசி நம் உரையாடலைத்தொடங்கினால் என்ன? வீடுகளில் தமிழில் பேசுவோம்,கூட்டங்களைத்தமிழில் நடத்துவோம். நம் பெயர்ப்பலகையைத் தமிழில் தருவோம். நம் சந்திப்புஅட்டைகளை அழகு தமிழில் உருவாக்குவோம். நம் முகநுால் பக்க முகவரியைத்தமிழில் தருவோம். கணினியில் தமிழ் எழுத்துருக்களை நிறுவி, தமிழில் கட்டுரைகளைத்தட்டச்சு செய்வோம். தமிழில் கையொப்பமிடுவோம், நண்பர்களோடு நாளும் நல்ல தமிழ்ச்சொற்களைப்பகிர்ந்து கொள்வோம். தமிழ்ச்செய்தித்தாள் வாங்கித்தினமும் வாசிக்கும் பழக்கத்தைக்குழந்தைகளுக்குக் கற்றுத்தருவோம். தெருக்களின் பெயர்களைத் தமிழுக்கு மாற்றமுயற்சி எடுப்போம். சிங்கப்பூரில் வானுார்தி நிலையம் முதல்தெருக்கள் வரை எங்கும் தமிழ்எதிலும் தமிழ் என்று இருப்பதைப்போல் நாமும் செயல்படுத்துவோம். தமிழ் மரபுகளைக்காப்போம்: மொழி நம் பண்பாட்டின் வேர், ஈராயிரம் ஆண்டுகளாய் நம் பண்பாட்டை ஈரமாய் வைத்திருப்பதும் அதுதான். ஆயிரம் ஆண்டுகள் கடந்த தமிழ்க்கல்வெட்டு எழுத்துகளைச்சிதைக்க நாம் எப்படிச்சம்மதித்தோம்?ஈராயிரம் ஆண்டுகளின் தொன்மையும் தொடர்ச்சியும் உடைய பேரினம் தமிழினம். கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே வாளொடு, முன்தோன்றிய மூத்தகுடி நம்தமிழ்க்குடி. காதலையும், வீரத்தையும் இருகண்களாகக்கொண்ட நம் பண்பாட்டின், வேர்களையும், நம் தாய்மொழியின் கருவூலமான மரபுகளையும், காக்கவேண்டியது அவசியம். அழிந்து வரும் நம் தமிழ்மரபுகளைக் காத்து, அடுத்த தலைமுறைக்குத் தரவேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழ் மரபுகளைக் காக்கும் சபதத்தை மேற்கொள்வோம்.
- முனைவர் சௌந்தர மகாதேவன் தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ்அப்பா கல்லூரி திருநெல்வேலி 9952140275

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்

    ஆமாம் நமது தமிழின் பெருமை அளப்பரியது . இலக்கியம் பற்றி எல்லாம் அவ்வளவாக தெரியாது.ஆனால் ஒவ்வொரு சொல்லிற்குதான் எத்தனை வார்த்தைகள் என எண்ணிபார்க்கிறேன் உதாரணத்திற்கு "தந்தை",தகப்பனார் ","அப்பா" "தாயுமானவர் ...வேறேதேனும் சொல் உள்ளதா? வையகம்,பார் பூமி லோகம் தரணி பூலோகம் ,......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement