Advertisement

தமிழாய்வு தந்த தலைமகன்

பிறமொழி கலப்பில்லாத தெள்ளுதமிழ், அகண்டகாவிரியில் கரைபுரண்டு ஓடும் நதியின் துள்ளல் போன்ற எழுத்து நடையழகு. தேர்ந்த வழக்குரைஞரின் அனுபவப் புரிதலை போல ஆணித்தரமான கருத்துப்பதிவு. எடுத்து கொண்ட பொருள் எதுவாக இருந்தாலும், தனது கண்ணோட்டத்தை துணிந்து பதிவு செய்யும் நேர்மை. கருத்து வேறுபாடுகளை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம். இவை எல்லாம் ஒருங்கிணைந்த ஓர் உயரிய உயர்ந்த தமிழ் ஆராய்ச்சி மாமனிதர் வையாபுரிப்பிள்ளை.
இளம்பருவம் : நெல்லை மாவட்டத்தில், சிக்கநரசயன்பேட்டையில் 1891ல் அக்டோபர் 12ம் தேதி சரவண பெருமாள், பாப்பம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். புனித சவேரியார் பள்ளியிலும், ம.தி.தா. இந்து கல்லுாரியிலும், பிறகு, சென்னை கிறிஸ்தவ கல்லுாரியிலும் படித்து பட்டம் பெற்றார். சென்னை மாகாணத்திலேயே தமிழில் அதிக மதிப்பெண் பெற்று, 'சேதுபதி தங்கப்பதக்கம்' பெற்ற பெருமைக்குரியவர்.அவர் பாட்டனார் ஒரு தமிழ்புலவர். இவரின் தந்தையார், வட மொழியிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். அதனால் சிறுவயதிலேயே, தமிழ், வடமொழி அறிவு சூழல் அவருக்கு அமைந்தது. பாம்பன் குமரகுருதாச சுவாமி, யாழ்ப்பாண சுவாமிநாத பண்டிதர், மறைமலை அடிகள் ஆகியோரிடம் தமிழ் கற்கும் வாய்ப்பு கிடைத்தது. மத்திய அமைச்சராகவும், அண்ணாமலை பல்கலை துணைவேந்தராகவும் விளங்கிய ஆர்.கே.சண்முகம் செட்டியார், தமிழில் அறிவியலை பரப்பிய அறிஞர் பெ.நா.அப்பு சாமி, வரலாற்று பேரறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, ரசிக மணி டி.கே.சிதம்பரநாத முதலியார், பேராசிரியர் சாரநாதன் ஆகியோர் இவரது நண்பர்கள்.தமிழ் அல்லாத பிற துறை கல்வி பயின்று ஆர்வத்தால், ஆழ்ந்த அறிவால் தமிழ் துறை தலைவராக பதவியில் விளங்கிய கா.சுப்பிரமணியபிள்ளை, ரா.பி.சேதுபிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோரை போல், வையாபுரி பிள்ளையும் சட்டம் பயின்று வழக்கறிஞர் தொழில் நடத்தி, அதன்பின் சென்னை பல்கலை தமிழ்துறை தலைவராகவிளங்கியவர். வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில், வையாபுரிப்பிள்ளை எழுதி பிரசுரமான பல கட்டுரைகளும், இலக்கிய ஆய்வுகளும் அவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தது. உ.வே.சாமிநாத அய்யருக்கு பிறகு, பழந்தமிழ் இலக்கியங்களை தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை இவரையே சாரும்.
கால நிர்ணயம் : ஓலை சுவடிகளை பதிப்பித்ததுடன் நிற்காமல், அந்த இலக்கியங்களுக்கு கால நிர்ணயம் செய்ததிலும் அவருக்கு பெரும் பங்கு உண்டு. 1926-ல் சென்னை பல்கலை கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியில், பதிப்பாசிரியராக பொறுப்பேற்றார். 1936-ம் ஆண்டு முதல் சென்னை பல்கலை தமிழ் ஆராய்ச்சி துறை தலைவராக விளங்கினார். 1946 வரை அப்பணியில் சிறப்பாக செயல்பட்டு, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார்.
வையாபுரி பிள்ளை : திருவிதாங்கூர் பல்கலை தமிழ்துறை தலைவராக இருந்த காலத்தை, பொற்காலம் என்று கூறுவார்கள். சுமார் 4 ஆண்டுகள் அப்பதவியில் இவர் இருந்த கால கட்டத்தில் தான், மலையாள மொழி லெக்சிகன் (சொற்களஞ்சியம்) பதிப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினராக பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. இந்த கால கட்டத்தில் தான் தஞ்சை தமிழ் பல்கலையில் முதல் துணைவேந்தராக விளங்கிய, வ.ஐ.சுப்பிரமணியம் ஆய்வு மாணவராக வையாபுரிப்பிள்ளையிடம் பணியாற்றி, அவரது வாரிசு என்ற பெயரையும் பெற்றார்.
வ.உ.சி.,யின் நன்றி : ரா.பி.சேதுபிள்ளை போலவே, கம்பனின் கவிநயத்தில் தன்னை பறி கொடுத்து, ரசிகமணி டி.கே.சி.யுடன் இணைந்து, திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி., ஆகியஇருவரிடமும், வையாபுரி பிள்ளைக்கு நெருங்கிய அறிமுகம் இருந்தது.தனது சிறைவாசத்துக்கு பிறகு அரசியல் வாழ்வில் வெறுப்புற்றிருந்த வ.உ.சிதம்பரனார், ஏட்டில் இருந்த இளம்பூரணரின் தொல்காப்பிய உரையை பதிப்பிக்கும் நோக்கத்தோடு படி எடுத்தார்.அதனை, வையாபுரிப்பிள்ளையிடம் காட்டி திருத்தம் செய்து, அவரையும் அதன் பதிப்பாசிரியராக இருக்குமாறு கேட்டார். ஆனால், வையாபுரி பிள்ளையோ, ''நீங்களே பதிப்பாசிரியராக இருந்தால் போதும்'' என மறுத்து விட்டதாக, அந்த உரைப்பதிப்பின் முன்னுரையில் வ.உ.சி., இதனை நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
வீட்டில் நுாலகம் : வையாபுரிபிள்ளையின் வீட்டில் இருந்த நுாலகத்தில் மட்டும், 2943 புத்தகங்கள் இருந்தன. அதுமட்டும் அல்லாமல், ஆங்கிலம், தமிழ், பிரெஞ்ச், ஜெர்மனி, மலையாளம் போன்ற மொழிகளில் ஆன குறிப்புகளும், ஓலை சுவடிகளும், நுாற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் கோல்கட்டாவில் இருந்த தேசிய நுாலகத்துக்கு நன்கொடையாக அளித்து விட்டார்.நாற்பதுக்கும் அதிகமான நுால்களையும், நுாற்றுக்கணக்கான ஆய்வு கட்டுரைகளையும், எழுதி குவித்தவர். மனோன்மணியம் உரையுடன் தொடங்கிய அவர், 1955-ல் திவ்ய பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்து, தமிழுக்கு பெருந்தொண்டாற்றினார்.
ஆராய்ச்சி அறிஞர் : அச்சில் வராத பல தமிழ் இலக்கிய, இலக்கண நுால்களை பிழையின்றி அச்சிற்று தமிழன்னைக்கு பெரும் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய கட்டுரைகள் எல்லாம் தமிழ் மணமும், ஆராய்ச்சி நலனும் சேர்ந்து, கற்போர்க்கு பெரும் விருந்தாய் அமைந்தது. இதுவரை பிறரால் அறியப்படாத புதிய முடிவுகள் பல ஆராய்ந்து நிறுவப்பட்டுள்ளது. இவர் எழுதிய நுால்கள் தமிழக அரசால் அரசுடை மையானது குறிப்பிடத்தக்கது.
தனித்தன்மை : பேராசிரியர் வையாபுரிபிள்ளை இலக்கிய ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி, நுால்பதிப்பு, அகராதி தொகுப்பு என்ற நான்கு துறைகளிலும் புகழ் பெற்றவர். நுால்களை தவிர, நாவல், சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் முயன்றிருக்கிறார் ஆனாலும், அவர் ஒரு முழுமையான ஆராய்ச்சியாளர். இவர் தம் ஆராய்ச்சியில், இலக்கியம், இலக்கணம், மொழி நுால், கல்வெட்டு, பிறநாட்டவர் குறிப்பு, பிறமொழி இலக்கியம், சமுதாய - அரசியல் சூழ்நிலை, இலக்கிய மரபு, யாப்பமைதி ஆகிய பல மூலகங்களிலிருந்து சான்றுகள் சேகரித்து முடிவெடுப்பார்.
விமர்சனங்கள் : கால ஆராய்ச்சியும், ஒப்பு நோக்கு நெறியும், இவர் ஆராய்ச்சி யின் தனித்தன்மை. இவர் செய்த கால ஆராய்ச்சியில் கருத்து வேறுபாடு கொண்டு, பல தமிழ் பண்டிதர்கள் முரண்பட்டனர்.வையாபுரி பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலத்தை சரியாக கணிக்கவில்லை என்றும், கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தை பிற்பட்ட காலத்தது என்று கூறுவதாகவும் கண்டித்தனர். தமிழின் பழம் பெருமைக்கு எதிரானவர் என அவரை திராவிட கட்சிகள் விமர்சித்தன. அவருடைய ஆராய்ச்சி, அறிவியல் ஆய்வு நெறியின்பாற்பட்டது. அவருக்கு கிடைத்த ஆதாரங்களை கொண்டு சில முடிவுகளுக்கு வந்துள்ளார்.அதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அவருடைய கால ஆராய்ச்சி கருத்துக்களிலும், தமிழ் - வடமொழி சார்பு பற்றிய கருத்துக்களிலும், சில பிற்காலத்தில் அவர் வகுத்த நெறிமுறைகள் கொண்டே மறுக்கப்பட்டிருக்கிறது என்றாலும், தமிழுக்கு அவர் பங்களிப்பும், ஆராய்ச்சி நேர்மையும், யாராலும் மறுக்க முடியாதவை. இலக்கியம், சமுதாயத்தின் விளைபொருள் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் கருத்து கொண்டிருந்தார்.
தாய்மொழி கல்வி : பேராசிரியர் வையாபுரி பிள்ளை, தாய்மொழி கல்வியை வலியுறுத்தியவர். நமது நாட்டில் தாய்மொழியை கைவிட்டு,அந்நிய மொழியான ஆங்கிலத்தில் கல்வி பயிலுவிக்க கூடாது, தாய்மொழியில் தான் எல்லா வழிகல்வியும் போதிக்க வேண்டும் என்று கூறியவர். மேல்நாட்டு விஞ்ஞான சாஸ்திர பதங்கள் பலவற்றுக்கு தக்க தமிழ் சொற்கள் காண்பது சற்று சிரமமே. ஆனால், வேண்டும் இடங்களில் ஆங்கில சொற்கள் எடுத்து கொள்வதும் பொருத்தமே என்றார்.இவ்வாறு தமிழ் ஆய்வு நெறிக்கு கலங்கரை விளக்கமாக விளங்கிய இவரை தமிழ் உலகம் மறக்க முடியாது. தமிழ் ஆய்வே தன் வாழ்வுப்பணியாக வாழ்ந்த இவர், 1956 பிப்.17-ல் மறைந்தார். அவரது ஆய்வு நெறியை, பின்புலமாக கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைகளிலும், தமிழ் மொழி இலக்கியங்களை ஆய்வு செய்து, புதிய முடிவுகளை வெளிக்கொணர்வதே, இன்றைய தலைமுறை மாணவர்களின் முக்கிய கடமை.
-மகா.பாலசுப்பிரமணியன்செயலர், வள்ளல் அழகப்பர்தமிழ் இலக்கிய பேரவைகாரைக்குடி. 94866 71830

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement