Advertisement

மக்களின் மனம் அடுத்த தேர்தலை நோக்கி!

தமிழகத்தில் வெளியாகும் செய்தித் தாள்களை, முழுவதுமாக படிக்கும் பழக்கம், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் என, தன்னைத் தானே வர்ணித்துக் கொள்ளும், கைதி நம்பர் -3295க்கு இருந்ததா என்பது சந்தேகமாக உள்ளது. ஏனெனில், படித்த மக்களிடையே காணப்படும் நாசுக்கு, நடப்புகளின், 'அப்டேட்' போன்றவை அவர் பேச்சில் தென்படவில்லை; அவரின் ஒவ்வொரு அசைவும், அவரின் கூஜா துாக்கிகளுக்கு வேண்டுமானால் பிடித்திருக்குமே தவிர, பொதுமக்களுக்குப் பிடிக்கவே இல்லை என்பதை, தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் காண முடிகிறது.
'நான் பேப்பர் படித்தேனா, இல்லையா என்பதைப் பற்றியெல்லாம், இவங்களுக்கு என்ன கவலை...' என, மேற்படி நம்பர் கைதி கேட்டாலும் கேட்பார்; ஏனெனில், எதிர்சாரரின் கருத்தைக் காதில் போட்டுக் கொள்ளும் இயல்பு, அவரிடம் கிடையாது. அவர் படித்ததெல்லாம், கட்சிக்காரர்களைப் பற்றி, அரசு அதிகாரிகளைப் பற்றி, தொழிலதிபர்களைப் பற்றி, 'போட்டு'க் கொடுக்கும் வகையிலான, 'பேப்பர் கட்டிங்'குகள் தான் என்பதை, அனைவரும் உணரலாம்... எப்படி என்று கேளுங்கள்...
'நான் அரசியலை விட்டே போகிறேன்' என, ஜெ., சொன்ன போது, 'உங்களை அரசியலை விட்டு விரட்டணும்ன்னு யார் நினைச்சாங்களோ, அவங்க முன்னாடி நீங்க நின்னு காட்டணும்' என, தான் அறிவுரை சொன்னதாக, இவர் பறை சாற்றிக் கொண்டிருக்கிறார்.
'கடந்த, 2011 தேர்தல்ல, தே.மு.தி.க., உள்ளிட்ட ஏழு கட்சிக் கூட்டணியைப் பேசி முடிக்கிற பொறுப்பை, 'டே - நைட்'டுக்குள்ள பேசி முடிச்சேன். முடிக்கிறப்ப, அதிகாலை, 2:00 மணி' எனச் சொல்லும் அளவுக்கு, ஜெ.,வை அதிகாரம் செய்பவர் என்றால், எந்தெந்த செய்தித்தாளை, 'சம்பந்தப்பட்ட அக்கா' படிக்க வேண்டும் எனத் தீர்மானித்திருப்பார் என்பதை, உள்ளங்கை
நெல்லிக்கனியாக நாம் உணரலாம்.
மற்ற பத்திரிகைகளைப் பற்றிக் கேட்டால், 'அதெல்லாம் படிக்க, உங்களுக்கு எங்கே நேரம் இருக்கு அக்கா... இதோ இது தான், அந்த பத்திரிகை செய்தியின் சாராம்சம்' என, தனக்கு, 'ஜிங்சாக்' கொட்டும் அதிகாரிகளிடமிருந்து வந்த, 'கட்டிங்'கை காட்டியிருப்பார் போலும்... அடுத்த நாள், அவர்களின் அதிகாரபூர்வ நாளேடான, 'நமது எம்.ஜி.ஆர்.,' பத்திரிகையில், 'கட்டிங்'குக்கு எதிரான பதிலடி இடம் பெற்றிருக்கும். தொடர்ந்து இப்படி, 'கட்டிங்' வைத்து வைத்து, மீடியாக்கள் மீது வெறுப்பை உமிழ வழி வகுத்தார், மேற்படி நம்பர் கைதி.
அதே சமயம், அரசின் சில திட்டங்களுக்கு, பொதுமக்களிடையே எழும் எதிர்ப்புகள் பற்றிய செய்திகளை, இக்கைதியும் படித்திருக்க மாட்டார்; படித்திருந்தாலும்,
அக்காவிடம் சொல்லியும் இருக்க மாட்டார். ஏனெனில், திட்டத்தின் வாயிலாக பலன் அனுபவித்தாக வேண்டுமே!
'சும்மா கதை அளக்காதீர்கள்... எங்கள், 'மினிம்மா' அப்படியொன்றும் கொடூரமானவர் அல்ல; மிகவும் இளகிய மனதுடையவர்' என, யாராவது சப்பைக்கட்டு கட்டினால், அவர்களும், 'மினிம்மா'விடமிருந்து மிரட்டல் பெறும் நாள் வெகு துாரத்தில் இல்லை என, அறுதியிட்டுக் கூறலாம். மேற்படியாக, 'வாங்கிக் கட்டி'க் கொள்ளக் கூடியவர்களுக்கு மற்றும் அவரின் அருளாசியுடன் அமைச்சரவை அமைத்துள்ளவர்களுக்கு, 'அட்வான்ஸ்' வாழ்த்துகள்!
இதை வைத்து, இப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றால், முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம், முதன்முறையாக, மேற்படி கைதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, விஸ்வரூபம் எடுத்த மறுநாள், 'தமிழகம் பிழைத்தது' எனச் சொல்லி, வாயை மூடுவதற்குள், தலையில் கை வைக்காத குறையாக இருந்தது, இரு தினங்களாக நடைபெற்ற நிகழ்வுகள். 'குண்டர்கள் கையில், வலுவான கட்சி ஒன்று சிக்கி விட்டதே...' என, நடுநிலையாளர்கள் மனம் பதைத்தது.
சும்மா சொல்லக் கூடாது, மனிதர், அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் போலச் செயல்பட்டிருக்கிறார்... மகிழ்ச்சி! பன்னீர்செல்வத்திற்கு பொதுமக்களின் முழு ஆதரவு உள்ளது என்பதை, சமீபகாலமாகவே பார்த்து வருகிறோம். அதற்காக அவர், உத்தமர் என அர்த்தம் இல்லை. அவர், சீனா களிமண் பிளஸ் சுண்டெலி. தான் செய்த, 'சில பல' பரிமாற்றங்களால், முன்னாள் முதல்வரிடம் சிக்கிச் சிதைந்து, உருட்டைக் களிமண்ணாய் வெளியே வந்தவர். பின், அந்த, 'மாஜி' முதல்வரே, மீண்டும், பன்னீர்செல்வமாக மாற்றி, அரசு அமைக்க வழிகோலினார். ஒரு முறை அல்ல; மூன்று முறை!
ஆனால் இப்போது, அ.தி.மு.க., கட்சி, குண்டர்கள் வசம், சாரி... பெருச்சாளிகள் வசம் சிக்கியுள்ளதைப் பார்க்கும் போது, சுண்டெலியான, பன்னீர்செல்வமே பரவாயில்லை என, நினைக்கத் தோன்றுகிறது. சுண்டெலிக்குத் தெரியும், ஊசிய வடைக்கு ஆசைப்பட்டால், பொறியில் சிக்கி உதைபடுவோம் என... அதனால் தான், பவ்வியமாக, சுதாரித்துச் சுதாரித்து, நிதானமாக அளந்து வெளியேற்றுகிறார் வார்த்தைகளை!
பெருச்சாளிகளின் வசம் சிக்கியுள்ளோமே என்ற கவலையை மறக்க, சுகவாசம் அனுபவிப்பதாய் நினைத்து, தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்ட, எம்.எல்.ஏ.,க்கள் ஒரு பக்கம்; 'அப்பாடா... பதவியும், பணமும் கிடைத்ததே...' என, சிறையிலிருந்து மீண்ட அமைச்சர்கள் மறுபக்கம் என, தமிழகம் அல்லோல கல்லோலப்படுகிறது.
மேற்படி நபர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்தனரா என்பது அவர்களுக்கே வெளிச்சம். 'முதல்வர்' என, பதவி ஏற்ற பழனிசாமி, தன் முதுகில் உள்ள அழுக்கை மறைத்து, பணத்திற்காக, மேற்படி கைதி எண்ணின் சகாக்களிடம், 'டோட்டல் சரண்டர்' ஆகி விட்டார் என்பது, அவரது செயற்கைச் சிரிப்பிலிருந்து ஊகிக்க முடிகிறது.
மேலும், கூவத்துாரிலிருந்து, அவர் கவர்னர் மாளிகை செல்லும் வழியில், மாமல்லபுரம் அருகே, பொதுமக்கள் அவரை, கெட்ட வார்த்தைகளில் திட்டி, காரி உமிழ்ந்தனர் என்ற விபரத்தை, 'வாட்ஸ் ஆப்'பில் பரிமாறப்பட்ட தகவலும் காட்டியது!
இனி அவர் பதவி, கூர்முனை கொண்ட கம்பி போன்றது தான்; சொன்னதைச் செய்யவில்லை என்றால், கம்பியில் குத்திட்டு அமர வேண்டியது தான்... புரிந்து
கொள்ளுங்கள் பழனிசாமி!
எதிர்க்கட்சியான, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினுக்கும், ஒன்று சொல்கிறேன்; எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... உங்கள் தந்தையான, தி.மு.க., தலைவர், கருணாநிதி, தான் மட்டுமே அரசியலில் நிற்க வேண்டும் என்ற பேராசையில், காங்கிரசை வேரோடு அழித்தார் தமிழகத்திலிருந்து; அது, ஆரோக்கியமான அரசியல் அல்ல.
'இனி, அ.தி.மு.க., அழிந்து விடும்; நமக்கு எதிர்க்கட்சியே இல்லாமல் இருக்க வேண்டும்' என்ற எண்ணத்துடன், நீங்கள் செயல்பட முனைந்தால், நீங்கள் ஏமாந்து போவீர்கள்.
தமிழர்கள் ஒன்றும், ஏமாளிகள் அல்ல; நினைத்தால், உங்களையே ஓரம் கட்டுவர். ஜல்லிக்கட்டு எழுச்சியைப் பார்த்தீர்கள் அல்லவா! அந்த நிலை உங்களுக்கு வேண்டாம். உங்கள் மீது நீங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் பாதையில் பயணிக்காதீர்!
'பன்னீருக்கு, பெருந்தன்மையுடன் ஆதரவு தருகிறேன்' என்ற நல்லெண்ணத்துடன் நீங்கள் செயல்பட்டிருந்தால், இந்நேரம் தமிழக மக்கள் உங்களைக் கொண்டாடி இருப்பர். '2ஜி' ஊழல் விவகாரத்தால், உங்கள் கட்சி மீது ஏற்பட்ட வெறுப்பும் மறைந்திருக்கும்; அதைச் செய்யத் தவறி விட்டீர்கள்!
சசிகலாவின், 'பினாமி' என, தமிழகம் முத்திரை குத்திவிட்டதால், இனி, பழனிசாமி, சட்டசபையில் வேண்டுமானால், 'மெஜாரிட்டி' நிரூபித்திருக்கலாம்; மக்கள் மனம், அடுத்த தேர்தலை எதிர்நோக்கி உள்ளதை, வழக்கம் போல, மேற்படி கைதியும், அவரின் கைத்தடிகளும் படிக்க மாட்டார்கள்; பழனிசாமிக்கும் மறைக்கப்படும். இது உண்மை!
ஆகவே, மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு; அடுத்த தேர்தல், மகேசன் தீர்ப்பைச் சொல்லும்!
இ-மெயில்: kvbalasubramaniam11gmail.com - வி.பாலசுப்ரமணியம் -
சமூக ஆர்வலர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Natarajan Krishnaier - Bhopal,இந்தியா

  இந்த தண்ட திராவிட கட்சிகளால் நாம் காவேரி உட்பட எல்லாவற்றையும் இழந்து தவிக்கிறோம் . இனி மாற்றி யோசிப்போம் .

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  கட்டுரையாளர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .திமுகவை பிடிக்காதவர்களுக்கு அதிமுகவை விட்டால் வேறு வழி இல்லை. இப்போது அதிமுக பலம் பெற வேண்டியது முக்கியம்

 • Ramesh Gopalakrishnan - PHOENIX,யூ.எஸ்.ஏ

  அன்புள்ள தமிழனுக்கு உன் தமிழ் மொழி பேசும் ஒரு சக தமிழனின் கடிதம். என்ன தலையெழுத்து இந்த தமிழினத்திற்கு ? ஒரு நல்ல தலைவனைக் கூடவா இது வரை எந்தத் தமிழ்ப் பெண்ணின் கருவறையும் தரிக்கவில்லை, சுமக்கவில்லை ?. இல்லை கனன்று பிறந்த தழல்கள் எல்லாம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் தன் பிள்ளைகளின் தலைமுறைக்கும் உணவும் பிறவும் தேடித்தேடி சலிக்காமல் இன்னும் சேர்க்கப் போராடும் போராட்டத்தில் நீர்த்துப் போனதோ ? உன்னையும் என்னையும் போல்..நிற்க.. நீயும் நானும் இந்த இரை தேடும் போராட்டத்தில் மூச்சுப் பிடித்து ஓடும் ஆற்றலைத் தரும் கல்வியை நமக்குத் தந்தது தன் தாயையும் தன் அரசியல் தூய்மைக்காக நேர்மைக்காக தன்னிடமிருந்து தள்ளியே வைத்த அந்த விருதுநகர் தலைவன் அல்லவா ? இன்று நம் பிள்ளைகளுக்கு வேண்டும் கல்வியை விரும்பும் பள்ளியில் எவ்வளவு கொடுத்தும் நம்மால் பெற்றுக்கொள்ள முடியும், நாடு கடந்து கடல் கடந்து நன்கு சம்பாதிப்பதால், நயமாய் வாழ்வதால்... நம்மையும் நம் குடும்பத்தையும் மேட்டுக்குடிக்கு உயர்த்த தலைமுறைகள் பல நீண்ட போராட்டத்தில் பொது நலம் என்பதை நம் வாழ்க்கைக்கு வெளியே மிகத் தள்ளி வைத்து பார்த்து வளர்ந்த தலைமுறை நம் தலைமுறை. இது சரியா தவறா என்பதற்கு அல்ல இந்த கடிதம். ஒரு தூங்காத மழை இரவில் இந்த நம்பிக்கை கோரும் சட்டமன்ற காணொளிப் பதிவைக் கண்டபிறகு எழுந்த உணர்வுகளை என் சன்னலைத் திறந்து உன்னிடம் பகிர்ந்த்து கொள்ளும் ஒரு பகிர்வு.இங்கு கறிவேப்பிலையே அவ்வளவு விலை ..அதனால் இங்கே கதவைத் திறந்து பகிர்ந்து கொள்ளும் அன்பு எவ்வளவு விலை என்பதை புரிந்து கொள்வாய்.எவ்வளவோ அரசியல் சூ ழ்ச்சிகளின் மத்தியிலும் உன் பாட்டனும் என் பாட்டனும் விளையாண்ட சல்லிக்கட்டை பசித்திருந்து விழித்திருந்து மீட்டெடுத்த நம் தலைமுறை நிச்சயமாக ஒரு பெரும் நம்பிக்கை. தன்னலமற்ற தலைவர்கள் ஒரு ஓமந்தூராரைப் போல், ஒரு கக்கனைப் போல், ஒரு காமராஜரைப் போல் இங்கு ஆள வந்தால் மட்டுமே இந்த குப்பை கூளங்கள் சுத்தமாகும். இந்தக் காணொளியில் ஒரு கூட்டம் திருடர் கூட்டம்... ஒரு கூட்டம் கொள்ளையர் கூட்டம்... ஆண்டு.. ஆண்டு.. பல ஆண்டுகள் உண்டு கொழுத்த கூட்டம்... பல தலைமுறை களித்து வாழ கோடி கோடிகள் சேர்த்தும் இன்னும் போதாமல் இன்று இந்த அவையை அலங்கோலமாக்கி ஆட்டம் போடும் அற்பப் பதர்கள் ஒரு புறம்.. அமைதியின் போர்வையில் அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு ஒரு மிகப் பெரிய கொள்ளைத்திட்டத்துடன் ஒரு கூட்டம் மறு புறம்... உன் சமூக வெளித்தளங்களில் உன் எண்ணங்களை உன் உணர்வுகளைப் பதியும் பொழுது பகிரும் பொழுது ஒன்று தெளிவாகக் கொள். இந்த க் கட்சிகள் எல்லாம், பதர்கள் எல்லாம் முதலில் களையப்பட வேண்டும் இந்த களர் நிலத்தை தூய்மைப்படுத்த… புகையை, மதுவைத் தொடாத, ஓழுக்கமே வாழ்வாய் கண்ணியம் மிகுந்த தலைவர்கள், இளைஞர்கள் கூட்டத்தைக் கண்டெடுப்போம்.. நாமும் பசித்திருந்து விழித்திருந்து சிறிது பொதுநலத்தையும் நம் உணவில் உப்புடன் தினமும் சேர்த்து இனி உண்போம். நானும் என்னால் இயன்ற ஒரு சிறு விதையை பொது வெளியில் விதைத்து என் மகளுடன் தண்ணீர் ஊற்றி வருகிறேன் சில வாரங்களாக... எண்ணங்களில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. இயற்கை துணை செய்யும். இந்த மடலைப் படித்த பிறகு உன் உணர்வுகளை எனக்கு மடலாக்கு.. என் கதவுகளைத் திறந்து உன் மடலுக்கு காத்திருக்கிறேன். அன்புடன், உன் தமிழ் மொழி பேசும் ஒரு தமிழன்.

 • Manian - Chennai,இந்தியா

  வி.பாலசுப்ரமணியம் : மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு அடுத்த தேர்தல், மகேசன் தீர்ப்பைச் சொல்லும் எ்த மகாதேவன்? ஓட்டுக்கு காசு வாங்கி, சொதந்திரத்தின் சக்தி உணராத 70-80 % அப்பாவி, படிப்பில்லாத, இன்றே நெசம் என்று நினைக்கும் தமிழ் மக்களா(இந்த நோய் நம்மால் மற்ற மகாணங்ளுக்கும் அனுப்பி இருக்கிறோமே)? அல்லது 10% நான் ஓட்டே போட்டதில்லை, நடுத்தர நகரவாசிகளா, 10% வாய் ஜால மன்னர்களா? சாவு அளவு 40% வந்த பின்தான் அசல் மகாதேவர்கள் புறப்படுவார்கள். இப்போ டீவீ,சினிமா,கிரிகெட்டுதான் முக்கியம். இப்போஈ-மெயில் எளுதரவன் ஓட்டுப் போடுற நாட்டுப்புறத்தான் இல்லை என்பது மன்னார்குடி மாபியா ராணி சகதி-கலாவிற்கு தெரியும். அடி உதை தர கைலிப்படையுடன் இளவரசன் தினகரன்,அரசர் நடராசனர் ரெடி. பாலசுப்ரமணியம் ஒங்க ஒடம்பு பத்திரம். ஆயுள் இன்சூரன்சுக்கு இளவரசன் திவாகரனை எடப்பாடி எருமையார் மூலம் அனுகுங்கள். அது சரி, எத்துனி கிராமத்து மகேசுன்களை தட்டி எளுப்பினீங்கன்னு சொல்லமுடியுமா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement