Advertisement

காதல்... காதல்... காதல்...

காதல்' என்ற சொல் பேரன்பின் அடையாளத்தின் வெளிப்பாடு. இது தாய், தந்தை, கணவன், மனைவி, காதலன்- காதலி, நண்பன் - தோழி உறவுகளின் ஒப்பற்ற பாசப்பிணைப்பாய் தொடங்கி, பறவை, விலங்குகள் வரை விரிவடைகிறது. குறிப்பாக, 'ஐ லவ் யூ செல்லம்...!' என்று செல்ல
நாய்களை, வீட்டில் வளர்க்கும் பறவைகளை கூட கொஞ்சுவதை இப்போதும் காணலாம்.
இதனாலேயே, 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?' என்ற சொற்கள், அர்த்தமுள்ளதாகின்றன என்றால் மிகையில்லை. சர்வதேச அளவில், கிறிஸ்துமஸ் தினத்திற்கு, அடுத்து முக்கிய தினமாக கொண்டாடப்படுவது 'வாலன்டைன் டே' என்ற 'காதலர் தினம்' தான்.

உயிர் தியாகம் : பண்டைய காலத்தில் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து உயிர் தியாகம் செய்தவர்களுக்கு 'வாலன்டைன்' என பெயர் வழங்கப்பட்டது. 1969 வரை கத்தோலிக்க தேவாலயம், 11 வாலன்டைன் தினங்களை அங்கீகரித்தது. இவற்றில் ஒரு பகுதியாக, பிப்.,14ல் ரோம் நகரை சேர்ந்த வாலன்டைன்களில் உயிர் தியாகம் செய்த ரோமானிய மதகுரு ரோம் மற்றும் பேரரசர் ரேலியன் கொடுமையால் கொல்லப்பட்டு, மதகுரு ரோம் புதைக்கப்பட்ட ப்ளமவுனியா என்ற இடத்தில், அவரது கல்லறைக்கு அருகில் புதைக்கப்பட்ட, பிஷப் டெர்னி வாலன்டைன் ஆகிய இருவர் நினைவாக உலகம் முழுவதும் பிப்.,14 காதலர் தினமாக கொண் டாடப்படுகிறது.
அன்பு, காதல், பாசம் என மனித குலத்தில் மகத்தான குணங்களை முன்வைத்து இது கொண்டாடப்படுகிறது. இந்நாள் தான் காதலர் களுக்கு பொன்னாள்.
இது, நட்போடு மட்டும் உள்ள இருவரின் அறிமுகத்தை, காதலாக பகிர்ந்துகொள்வதற்கு உரிய நாளாகிறது. காதலர்கள் மட்டுமின்றி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தங்களது அன்பை பகிர்ந்துகொள்ள ஏற்ற நாளாக இருப்பதால், இந் நாளுக்கு 'அன்பர்கள் தினம்' எனவும் பெயர் உள்ளது. இதய வடிவிலான உருவம், புறாக்கள் மற்றும் சிறகுகள் உள்ள தேவதை யின் உருவம் ஆகியவை நவீன காலத்திய காதலர் தினக் குறியீடுகள்.

எதிர்ப்புகள் : உலகின் காதலர் தினத்தை எதிர்க்கிற நாடுகளும் உண்டு. சவுதியில் 2001 மற்றும் 2008ல் மத அடிப்படை வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் காதலர் தினம் தொடர்பான பொருட்கள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது. ஈரானில் இளைஞர், இளம் பெண்கள் அங்கு நிலவி வரும் எதிர்ப்புக்கு பயந்து, எவரும் பார்த்துவிடாத இடத்திற்கு சென்று காதலர் தினம் கொண்டாடுவர். இந்தியாவை பொறுத்தவரை, இது, மேற்கத்திய கலாசாரம் என கூறி ஒரு பிரிவினரால் எதிர்க்கப்படுகிறது. பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் காணப்படுகிற காதல் ஜோடிகளை, அந்த இடத்திலேயே திருமணம் செய்து கொள்ளும்படி சிலர் நிர்ப்பந்திக்கின்னறர்.

திருக்குறளில் காதல் : காற்றை சுவாசிப்பதும், கண்களால் பார்ப்பதும், காதுகளால் கேட்பதும் இயற்கை நமக்களித்த வரங்கள். இதுபோல 'காதல்' என்ற ஒன்று இயற்கை தந்த பெருங்கொடை தான். இந்த காதல் உணர்வு தான் உயிரின விருத்திக்கு மட்டுமின்றி, சாதித்து காட்டும்
ஆர்வத்தை துாண்டி சாமானியரையும் 'சரித்திர புருஷர்களாக' மாற்றி காட்டியிருக்கிறது.
'நெஞ்சத்தார் காத லவராகசெய்து உண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து'
(குறள்)
அதாவது, என் காதலர் எனது நெஞ்சில் வீற்றிருப்பதால் சூடான பொருளை தான் உண்ணும்பட்சத்தில் அவருக்கு சுடும். எனவே சூடான பொருள் ஏதும் உண்ணுவதற்கு தர வேண்டாம் என்று, காதலை ஆத்மார்த்தமாக நேசிக்கும் பெண் கூறுகிறார். காதலின் அர்ப்பணிப்பு, வீரியம், தியாக மனசு அனைத்தும் இந்த இரண்டு வரி குறளில் அற்புதமாய் வெளிப்படுவதை அறிந்திட முடியும்.
மகாகவி பாரதிதாசன் இன்னும் ஒரு படி மேலே சென்று'கண்ணின் கடைபார்வை காதலியர்
காட்டி விட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்!'
என அற்புதமாக பதிவு செய்துள்ளார்.

தோல்வியும், தற்கொலைகளும் : பல ஆண்டுகளாக ஒருத்தருக்காக ஒருத்தர் காத்துக்கிடந்தும், வேர்த்துத் திரிந்தும் சந்தித்து தங்களது காதலை வளர்த்துகொண்டிருந்த நிலையில் இறுதியில் வீட்டாரின் குறுக்கீடுகளால் அந்த காதலானது சிதறடிக்கப்பட்டு வெறும் கனவாக நீர்த்து போகும் நிலையில், சகல விதத்திலும் சிதைந்துபோய் விட்டதாக விரக்தியின் உச்சத்திற்கே சென்று விடுவர், உண்மை காதலர்கள்.இதைத்தான் கவிஞர் கண்ணதாசன், 'காதல் என்பது தேன்கூடு - அதை கட்டுவதென்றால் பெரும்பாடு

காலம் நினைத்தால் கை கூடும்- அது
கனவாய் போனால் மனம் வாடும்...'
என்று சத்திய வாக்குப்போல சொல்லியிருக்கிறார்.
காதல்... காதல்... காதல்... போயின் சாதல்... சாதல்... சாதல்... என்று பாரதி தம் பாடலில் சொல்வதுபோல் இன்றைய சமூக அமைப்பில் ஜாதி, மதம் மற்றும் சமூக, பொருளாதார அந்தஸ்து ஆகியன காதலை வெற்றிகரமான தாகவும், தோல்வியுற்றதாகவும் ஆக்குவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.காதல் கைகூடாதபட்சத்தில் விரக்தியின் உச்சத்திற்கு சென்று தற்கொலை செய்துகொள்கின்றனர். அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் தற்கொலை செய்துகொள்வோரில் 3.6 சதவீதம் பேர் காதலில் தோல்விடைந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் உண்டு. இதில் கவுரவக் கொலை பெரும் சவாலாக உள்ளது.

மேதைகளின் காதல் : உண்மை காதலர்கள் பலரது வாழ்க்கையை, வரலாறு வருங்கால இளைஞர்களுக்காக பதிவு செய்துவிட்டுத்தான் சென்றிருக்கிறது. மும்தாஜ்- ஷாஜஹான்,
அம்பிகாபதி- அமராவதி, ரோமியோ- ஜூலியட், சார்லஸ்- டயானா, காரல் மார்க்ஸ்- ஜென்னி... என அடுக்கி கொண்டே போகலாம். பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தும், உலகத் தொழிலாளர்களின் விடுதலை ஒன்றே தனது லட்சியம் எனக் கூறி, அதற்காக இரவு பகலாக புரட்சிகர கட்டுரை எழுதியவர் காரல் மார்க்ஸ். வறுமை நிலை தெரிந்தும், பிறந்தவீட்டை பகைத்து கொண்டு அவரை காதலித்து திருமணம் செய்து, உணவுக்கே அல்லற்படும் சூழலில் தனது மார்பில் சுரந்த தாய்ப்பாலை விற்று செலவை சமாளித்த ஜென்னி, காதலர் மார்க்ஸ் மீது கொண்டிருந்த உண்மை காதலை இன்னும்கூட உலகம் வியந்துதான் பேசி கொண்டிருக்கிறது.
உலகளவிலான கொண்டாட்டங்கள்

சீனாவில் காதலிக்கும் பெண்ணிற்கு சாக்லேட்கள், பூக்கள் அல்லது இரண்டும் தருவது வழக்கம். பிலிப்பைன்சில், இந்த நாளை 'இதயங்களின் தினம்' என்றும் அழைக்கின்றனர். இந்த நாளையொட்டிய தினங்களில் இந்நாட்டில் பூக்கள் மிகவும் அதிகமாக விற்பனையாகும்.
தென்கொரியாவில் ஆண்களுக்கு வாழ்த்து சொல்லி சாக்லேட், மிட்டாய் வழங்குவார்கள். மார்ச் 14ல் ஆண்கள் பெண்களுக்கு மிட்டாய் வழங்குவர்.

காதலும், கருப்பு நுாடுல்ஸூம் : இந்த இரண்டு மாதங்களில் அன்பை பகிர்ந்துகொள்ளாத,
அதாவது, காதலில் தோல்வியடைந்தவர்கள், அங்குள்ள சீன உணவகம் சென்று 'கருப்பு நுாடுல்ஸ்' சாப்பிட்டு சோகம் ததும்ப தங்களின் தனிமை வாழ்வை பற்றிய கசப்பை அனுஷ்டிப்பார்கள். சுவீடனில் இது அனைத்து'இதயங்களின் நாள்' எனவும், பிரேசிலில், 'நேசம் கொண்டவர்கள் தினம்' என எனவும் அழைக்கப்படும். மொத்தத்தில் காதல் என்பது உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவான ஒன்று. மனித பிறப்பில் மட்டும் எதற்காகஇத்தனை முட்டுக்கட்டைகள்... மல்லுக்கட்டுகள்?காதல் என்ற மகத்தான சக்தியை ஜாதி, மத, இன, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை காட்டி ஒச்சப்படுத்த கூடாது. பரந்த மனசு இருந்து விட்டால் சமத்துவ, சமூகம் அமைவதற்கு இதுவும் பெருமளவில் கைகொடுக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
- தாமோதரன், அல்லிநகரம்
எழுத்தாளர், 96268 50509

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement