Load Image
Advertisement

கூவம் நதிக்கரை கோவில்கள் அழிகின்றன

 கூவம் நதிக்கரை கோவில்கள் அழிகின்றன
ADVERTISEMENT
சென்னை: ''சென்னையில், புனித நதியான கூவத்தை அழிந்ததை போல், அந்நதிக்கரையில் உள்ள கோவில்களும் அழிகின்றன,'' என, 'ஆலயம் கண்டேன்' மின்னிதழின் ஆசிரியர், பிரியா பாஸ்கரன் பேசினார்.
பிரியா பாஸ்கரன் எழுதிய, 'தி காட்ஸ் ஆப் தி ஹோலி கூவம்' என்ற நுாலை, தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், கூவம் நதி வரைபடம் உருவாக்கிய, வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டனர்.
நுாலை, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், திருவள்ளூர் மாவட்ட முன்னாள் உதவி பொது மேலாளர் வைத்தியநாதன் பெற்றுக் கொண்டார்.
ஸ்ரீதரன் பேசியதாவது:
திருபுவனம் மாதேவி பேரேரியில் இருந்து புறப்படும் கூவம் நதி, பல கால மாற்றங்களை கண்டுள்ளது. அதன் கரையில், பல்லவர் காலம் முதல் பல சைவ, வைணவ கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. ராஜராஜன், குலோத்துங்கன் காலத்து கல்வெட்டுகள் உள்ளன.
நீர் மேலாண்மை, துார்வாருதல் உள்ளிட்ட தகவல்கள் அவற்றில் உள்ளன. பச்சையப்பன் முதலியார் கூட, கூவம் நதியில் குளித்து விட்டு தான், கோவிலுக்கு சென்றதாக கூறி உள்ளார். 2015ம் ஆண்டு பெய்த பெருமழையின் போது கூவம் சுத்தமானது.
அரசு, கூவத்தை சுத்தப்படுத்தினால் அது உயிருள்ளதாக மாறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நுாலாசிரியர், பிரியா பாஸ்கரன் பேசியதாவது:
கூவம் புராணத்தில் இருந்து பல தகவல்களை பெற்று, கூவம் நதிக்கரையில் உள்ள கோவில்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கினேன். எனக்கு முன்பே, வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், கூவத்தை, 'மேப்பிங்' செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்; அவர் உள்ளிட்ட பலரின் உதவி கிடைத்தது. தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக கள ஆய்வு செய்தேன்.
டி.வி.மகாலிங்கம் கூறியுள்ள, கூவம் நதிக்கரை கோவில்களில் பலவும், கல்வெட்டுகளில் பலவும் தற்போது இல்லை.
கேசவரம், கைலாய ஈஸ்வரமுடைய மகாதேவர் கோவில், வயலாநல்லுார் முருகன் கோவில் உள்ளிட்ட, 114 கோவில்களை அறிந்து, தற்போது ஆவணப்படுத்தி உள்ளேன்.
சிற்றம்பாக்கம் செல்லியம்மன் கோவில் வாசலில் கிடத்தப்பட்டுள்ள கல்வெட்டு, 7ம் நுாற்றாண்டை சேர்ந்தது. அக்கோவிலும், பழமையான கட்டுமானம் கொண்டது.
கூவம் கிராமத்தில், 7 அடி உயரமுள்ள, நடமாடும் புத்தர் சிலையை, தமிழக தொல்லியல் துறை மீட்டது. அங்கு, சமண, புத்த மதங்கள் ஓங்கி வளர்ந்ததையும் அறிய முடிகிறது. ஆதித்த கரிகாலன், தன் இரு மனைவியருடன், மப்பேடு கோவிலுக்கு குடமுழுக்கு செய்த செய்தியையும், கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
கூவம் நதி அழிந்ததை போலவே, கூவம் நதியில் உள்ள பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்களும் தற்போது அழிந்து வருகின்றன. அவற்றை, தமிழ் தொல்லியல் மற்றும் அறநிலையத் துறையினர் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement