Advertisement

போராட்ட களம் போர்க்களம் ஆவது ஏன்?

நாட்டு மக்களின் அடிப்படை தேவையை, அரசு அளிக்கத் தவறும் போது அல்லது அரசு பதவியில் இருப்பவர்கள், நியாயத்துக்கு புறம்பாக செயல்படும் போது, மக்கள் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவது இயல்பு; தவிர்க்க முடியாதது.
அது, அரசின் கவனத்தை தங்கள் பக்கம், தங்களின் கோரிக்கை பக்கம் திருப்புவதற்காகச் செய்யும் முயற்சியில், சாதாரணமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், சாலை ஓரமாக, கையில் பதாகைகளுடன் நின்று கோஷம் போட்டாலே போதும். அது, அரசின் கவனத்திற்கு, சம்பந்தப்பட்ட காவல் துறை தனிப்பிரிவு அதிகாரிகளால் கொண்டு செல்லப்பட்டு விடும். அதன்பின், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விளக்கம் கேட்கப்படுவர்; உரிய நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தப்படுவர்.
அரசு சொத்துகளை, பொது போக்குவரத்து வாகனங்களை, தனியார் சொத்துகளை சேதப்படுத்தியும், காவல் துறையினர் தடியடி நடத்தும் அளவுக்கு கொண்டு செல்வதும், ஜனநாயக போராட்டமே அல்ல.
உங்கள் வீட்டுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்பதற்காக, சாலை மறியல் என்ற பெயரில், வேலை, மருத்துவ சிகிச்சை போன்றவற்றிற்கு சென்று கொண்டிருப்பவர்களைத் தடுப்பதற்கு, என்ன உரிமை இருக்கிறது... அப்படியே, எல்லாரும் செய்ய ஆரம்பித்தால் என்னவாகும்?
ஒட்டுமொத்தமாக, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். அவ்வாறு செய்வது, இந்திய தண்டனைச் சட்டப்படி, கைது செய்யக்கூடிய குற்றமாகும். அதைச் செய்ய கடமைப்பட்டவர்கள், காவல் துறையினர்.
அவர்கள் கைது செய்ய முற்படும் போது, கைதாவது தான் போராட்டக்காரர்களின் கடமை அல்லது போராட்டத்தை கைவிட்டு, கலைந்து செல்ல வேண்டும். அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து விளக்கமளித்த பின் தான், கலைந்து செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கைது செய்யவிடாமல் தடுத்தாலோ, படுத்து முரண்டு பிடித்தாலோ, காவல் துறையினர், குறைந்தபட்ச பலாத்காரத்தை உபயோகிக்க சட்டம் இடமளிக்கிறது.
அப்படி உபயோகிக்கும் போது, தப்பி ஓடி, காவலர்கள் மீது கல்வீசித் தாக்குவது, எந்த விதத்தில் நியாயம்... சாத்வீகமான முறையில் போராட்டம் நடத்த வந்தவர்கள், சாலை மறியல் என்ற, கைது செய்யக் கூடிய குற்றத்தைச் செய்யும் போது, காவல் துறையினர் அவர்களை கைது செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
அந்த கைது நடவடிக்கைக்கு கட்டுப்படாமல், அவர்களின் சட்டப்படியான நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் போது, பலாத்காரத்தை உபயோகிக்கும் கட்டாயம் ஏற்படுகிறது.
ஒரு பகுதியின், சட்டம் - ஒழுங்கு என்பது, அந்த பகுதியில் இருக்கும் காவல் துறை அதிகாரியின் பொறுப்பு மற்றும் கடமை. அங்கு, சட்ட விரோதமாக அனுமதியின்றி கூடியிருக்கும் கூட்டத்தை கலைந்து போகச் சொல்லி எச்சரிப்பதும், தவறினால், பலவந்தமாக கலைக்கவும் அவருக்கு சட்டம் அனுமதியளிக்கிறது.
அப்படி கலைந்து போகிறவர்கள், துாரத்தில் தங்களைப் பாதுகாப்பான இடத்தில் மறைத்துக் கொண்டு, கல், கண்ணாடி, பாட்டில், பெட்ரோல் குண்டு போன்றவற்றால் தாக்குவர்.
ஆனால், காவல் துறையினர் பொறுமையாக அவற்றையெல்லாம் தாங்கியபடி, அமைதி காக்க வேண்டும் என்பது, சற்று அதிகப்படியான எதிர்பார்ப்பு.
வன்முறையாளர்கள் செய்யும் அராஜகங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு, காவல் துறையில் சிலர் தங்களின் கோபத்தை கட்டுப்படுத்த தெரியாமல், உணர்ச்சி வேகத்தில் செய்யும் தவறுகளை, அளவுக்கு அதிகமாக வெளிச்சம் போட்டுக் காட்டி, காவல் துறை அந்த வன்முறையை வேண்டி, விரும்பி செய்தது போல் குற்றஞ்சாட்டுவது, காவல் துறையினரின் பணி ஆர்வத்துக்கு இடப்படும் முட்டுக்கட்டை என்பதை, சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் உணர வேண்டும்.
காவலர்களுக்கும், சட்டம் அளித்துள்ள பொது விதிவிலக்குகளும், தற்காப்பு உரிமையும் பொருந்தும் என்பதை மறுந்துவிடக் கூடாது. சட்டப்படியான தன் பணியை செய்யும் போது, பொதுமக்களின் உயிருடன் தன்னையும், தன்னுடன் பணியாற்றும் சக அலுவலர்களின் உயிருக்கும், அரசு சொத்துக்கும், பொது சொத்துக்கும் ஆபத்து ஏற்படும் போது, உபயோகிக்கும் பலப் பிரயோகம் குற்றமாகாது.
ஆனால், அதற்கென்று உள்ள எல்லையை அவர்கள் மீறவில்லை என்பதை, அவர்கள் விசாரணையின் போது நிரூபித்தாக வேண்டும். அப்போது தான், அது நியாயப்படுத்தப்படும். தவறினால், துறை நடவடிக்கைக்கு அல்லது குற்ற நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்; நிச்சயமாக தப்ப முடியாது.
அப்படி தண்டிக்கப்படும் போது, அந்த நிகழ்வுக்குப் பின், அந்த அதிகாரியிடமும், இதையறிந்த மற்ற அதிகாரிகளிடமும், அலுவலர்களிடமும் இருந்த, தேவையான துணிவு விடைபெற்று போய் விடும்.
அவசியம் ஏற்படும் போது, விரைந்து, துணிந்து முடிவெடுக்கும், செயலாற்றும் திறமை, ஆற்றல் அவர்களை விட்டுப் போய் விடும். இதனால், தங்களுடைய உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பாக, காவல் துறையை முழுவதுமாக நம்பியிருக்கும் இந்த சமுதாயத்துக்குத் தான் இழப்பு.
இதைச் சொல்வதன் மூலம், காவல் துறையை கட்டவிழ்த்து விட்டு, அவர்களின் அராஜகத்தை பொறுத்துக் கொள்ள சொல்லவில்லை. அவர்களை தேவையின்றி சீண்டிப் பார்க்காமல், அவர்கள் மீது குற்றம் சுமத்தும் போது, யோசித்து உண்மை நிலையை அறிந்து, நடைமுறை சிக்கல்களையும், சிரமங்களையும், மனதில் நிறுத்தி செயல்பட வேண்டியது அவசியம்.
அவர்களிடம் ஒப்படைத்திருப்பது, எத்தனை கடுமையான, உங்களால் முடியாத, கடினமான வேலை என்பதை உணர வேண்டும். இவற்றை எல்லாம் கையாள, அவர்களுக்கு சட்டப்படியான அதிகாரம் தான் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, அமானுஷ்ய சக்தி ஏதும் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆயுதங்களைக் கூட, அவர்கள் ஒரு வரையரைக்கு உட்பட்டு தான் உபயோகிக்க முடியும்.
ஒவ்வொரு கலவரமும் நடந்து முடிந்த பின், அதற்கான விசாரணையை எதிர்கொள்ளும் சுமை, அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக, எந்த அதிகாரியும், தேவையில்லாமல் பலாத்காரத்தை உபயோகிக்க விரும்ப மாட்டர். சில சந்தர்ப்பங்களில் தேவையான நேரத்தில் கூட பலத்தை உபயோகிக்காமல் பழியைச் சுமந்ததும் உண்டு.
கலவரத்தில் முடிந்த ஒருசில போராட்டங்களைப் பற்றி கடுமையாக விமர்சிக்கும் அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும், ஏராளமான போராட்டங்கள், காவல் துறையின் உரிய பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்து கொண்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.
தினமொரு போராட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று நிகழ்வதால், அங்கு காவலர்களை குவித்து, பாதுகாப்பு அலுவல் செய்வதன் விளைவாக, காவல் துறை தன் அன்றாட வேலையை செய்து, பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற முடிவதில்லை. மக்களுக்கு கிடைக்க வேண்டிய காவல் துறையின் அன்றாட சேவை பாதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு கட்சியும், இயக்கமும், தாங்கள் நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்காக, அனுமதி கேட்டு வரும் போது, ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம், நேரம், பங்குபெறுவோரின் எண்ணிக்கை பற்றிய விபரங்களைக் கொடுத்து, காவல் துறையினரிடம் அனுமதி பெறுகின்றனர்.
வன்முறை நிகழக் கூடாது என்பதற்காக, அந்த அனுமதி படிவத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு தான் செல்கின்றனர். ஆனால், சில சமயங்களில் அவர்களையும் மீறி, அவர்கள் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களின் தலைமையை திருப்திப்படுத்துவதற்காக அல்லது மகிழ்விப்பதற்காக செய்யும் அத்துமீறிய, வரம்பு மீறிய செயல்களை, அந்த தலைவர்களாலேயே கட்டுப்படுத்த முடிவதில்லை.
போராட்டத்தில் ஈடுபடும் அத்தனை பேரும் வன்முறையாளர்களோ, வன்முறையை விரும்புகிறவர்களோ இல்லை. வன்முறையில் இறங்கும் போர்க்குணம் படைத்த இளைஞர்கள், எல்லா பிரிவிலுமே, 10 - 15 சதவீதம் வரை இருப்பர்.
இவர்கள் தான், நாம் எதையாவது செய்து, அடுத்தவரின் அல்லது தங்கள் கட்சித் தலைமையின் கவனத்தை ஈர்த்து, நன்மதிப்பைப் பெற வேண்டும். தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள். அதற்காக, அளவுக்கு அதிகமாக வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பர்.
மற்றவர்களுக்கு, அதாவது, 85 முதல், 90 சதவீதம் பேர், அதில் உடன்பாடு இல்லை என்றாலும், வேறு வழியில்லாமல், தங்கள் கட்சி அல்லது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, அமைதியாகப் பொறுத்துக் கொண்டிருப்பர். ஆனால், அதையே தங்களின் செயலுக்குக் கிடைத்த அங்கீகாரமாக வன்முறையாளர்கள் எடுத்துக்
கொள்கின்றனர்.
இதே நிலை தான், காவல் துறைக்கும். இந்த சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள் தான் காவலர்களும், அதிகாரிகளும். அவர்கள் யாரும், வேற்று கிரகத்து மனிதர்களோ அல்லது அமானுஷ்ய சக்தி படைத்தவர்களோ இல்லை. அவர்களுக்கு அளிக்கப்பட்ட பதவியும், பயிற்சியும், அவர்களுக்கு அதிகாரத்தையும், பொறுமையையும், திறமையையும் தான் கொடுத்திருக்கிறது.
அதற்கு சோதனை வரும் போது, அவர்களுக்குள் இருக்கும் சாதாரண மனித இயல்பு வெளிப்பட்டு, எதிர் வினை ஆற்றிவிடுகிறது. அதன் விளைவை, ஒழுங்கு நடவடிக்கை என்ற வடிவில், அவர்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.
ஆனால், அது போன்ற ஒருசில நிகழ்வுகளை வைத்து, ஒட்டுமொத்த காவல் துறையையும் குறை சொல்வது நியாயமில்லை என்பது மட்டுமல்ல, மக்கள் காவல் துறை மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதிப்பதுடன், சிறப்பாக பணியாற்றி வரும் நேர்மையான காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊக்கத்தையும் குறைத்து விடும்.
ஜனநாயக நாட்டில், போராட்டங்கள் தவிர்க்க முடியாதது எனக்கூறும், கட்சி மற்றும் இயக்கத் தலைவர்கள், தங்கள் போராட்டம் ஜனநாயகப் படி இருக்கிறதா என, கவனிப்பதில்லை. அவர்களின் தொண்டர்களை, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடிவதில்லை. அதன் காரணமாகத் தான், போராட்டக் களங்கள், போர்க் களங்களாகி, காவல் துறை மீது களங்கம் கற்பிக்கிறது.
- எம்.கருணாநிதி - காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு)
இ- மெயில்: spkarunagmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ponmuthu - chicago,யூ.எஸ்.ஏ

    ஐயா ஒன்று செய்வோம். ஔவையின் ஆத்திச்சூடியை பெரிய எழுத்துக்களில் அச்சடித்து சட்டப்பேரவையில் எல்லாப் பக்கங்களிலும், எல்லா அரச அலுவலகங்களிலும் பதிக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பில் படித்த பாடம் எல்லாருக்கும் ஆகுமே பொன்முது, சிகாகோ.

  • Pasupathilingam - Chidambaram,இந்தியா

    வணக்கம், தங்கள் ஒவ்வொரு வரியும் மிக சரியாக உண்மையாக சொல்லப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் இந்த கருத்துக்களை நான் சொல்லவே நினைத்திருந்தேன். எனது பணிக் காலத்தில் பல சட்டம் ஒழுங்கு பிரச்சினை நடந்த இடங்களில் வருவாய்த்துறை மற்றும் காவல் அலுவலர்களுடன் பணி செய்திருக்கிறேன். அதிலும் ஒரு சமயத்தில் ஒரு கலவரத்தின் பொது (உண்மையில் அது ஒரு கலவரமே அல்ல) ஒரு பிரிவினர் அடுத்த பிரிவினரை தாக்க துணிந்தார்கள். ஒரு பிரிவினர் அமைதிப்படுத்தியதும் ஒரே இடத்தில் உட்காரவைக்கப்பட்டார்கள். அடுத்த பிரிவினரே எப்படியேனும் கலவரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்துகொண்டார்கள். ஒரு இஸ்லாமியர் இரு பிரிவினருக்கும் இடையில் எவ்வளோவோ சமாதானம் பேசிவிட்டு சலிப்படைந்து போய்விட்டார். அதில் சப்கலெக்டர், டி,எஸ்,பி, உடன் சென்றவர்கள் அனைவருக்கும் கல்லடி கிடைத்தது. அந்த நேரத்திலும் இரண்டு அதிகாரிகளும் ரத்தம் வழிய அவர்களிடம் இருகரம் கூப்பி களைந்து செல்லும்படி கெஞ்சினார். அவர்களின் அந்தஸ்துக்கு இவர்களிடம் இப்படி கெஞ்சவேண்டுமா என்று என் மனம் துடித்தது. அப்போது அங்கு வந்த ஒரு போலீஸ் வேன் கலவர காரர்களால் சல்லடையாக துளைக்கப்பட்டது. அந்த பலமும் ஆயுதமும் வெறியும் அவர்களுக்கு இருந்ததது. திரைப்படங்களில் வருவதுபோல் ஒருதுப்பாக்கி ஏந்திய காவலரை தலையில் வெட்டி தெருவில் தூக்கி வீசினார்கள். பல போராட்டங்கள் இப்படித்தான் திட்டமிட்டு மாற்றப்படுகின்றன. கடைசியில் துப்பாக்கி சூட்டில் முடிந்தது. அதன்பின் இன்று வரை அத்தகைய கலவரம் நடக்கவில்லை. அதற்கு முன் சாவு விழுந்தால் கூட போய் காவல் காக்கவேண்டும். கொட்டினால் தான் தேள் என்று நினைக்கிறார்கள். இல்லை என்றால் காவல்துறை என்றால் அது ஒரு காமெடி துறை என்று எல்லா பாடும் படுத்துவர். இதில் ஊடகங்கள் திரைப்படங்கள் அனைத்தும் காவல் துறை என்றால் கேவலமாக தானே பார்க்கின்றனர். எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்கள் ஒருமணி நேரம் சும்மா இருந்துவிட்டால் இந்தியா என்ன ஆகும். அதேபோல் அனைத்து காவல்துறையினரும் ஒரு நாள் மட்டும் எதுவும் செய்யாமல் முடங்கி இருந்தால் மக்கள் என்ன ஆவார்கள் என்பதை யாரும் சிந்திப்பதில்லை. கீழ்நிலை காவல் துறையினரின் பல தவறுகளுக்கு மேல்நிலை அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் காரணம். அவர்கள் நேர்மையாக இருந்தால் எல்லாம் நேர்மையாக இருக்கும். எதிர்க்கட்சியினர் எல்லோரும் இது ஆளும் கட்சி போலீஸ் என்ற கண்ணோட்டத்தில் பேசி மக்களை தூண்டிவிடும் செயலை நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement