Advertisement

உங்கள் வாழ்க்கை விலைமதிப்பற்றதாக வழி

என்னுடைய நண்பர் பொறுப் பான நல்ல பதவியில் இருந்தார். அவர் வீட்டின்புதுமனை புகுவிழாவுக்கு அழைத்து இருந்தார். பரிசுப் பொருள் ஒன்றுடன் அவரை வாழ்த்த சென்றுஇருந்த எனக்கு, ஒரு கசப்பான அனுபவத்தைத் தந்தார். அந்த அனுபவம்தான் இந்தக் கட்டுரைக்கான செய்தி. அவருக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் எனக்கும் நண்பர்தான் - முன்னதாகவே விழாவுக்கு வந்து சென்று விட்டார். அவரைக் குறிப்பிட்டு மிகுந்த நன்றியுணர்வுடன் “அவர்தான் எனக்கு இந்த வீட்டை வாங்க உதவி செய்தார். நீங்களும் தான் அவரோடு இத்தனைவருஷமா பழகறீங்க. உங்களுக்கு அவர் எதுவும் செய்த மாதிரி தெரியலியே“ என்றதும் நான் அதிர்ச்சியடைந்தேன். அன்று அவருடைய விழா மகிழ்ச்சியைக் கெடுத்துவிடக் கூடாதென்று கருதி, அமைதியாக வீடுதிரும்பிய நான், மறுநாள் அவரைத் தொலைபேசி அழைத்து அவர்சொன்னதைத் திரும்பச் சொல்லக் கேட்டுவிட்டு... விலை இல்லாத சிலவற்றிற்கு மதிப்புஇருக்கிறது. விலைபோகிற பலவற்றிற்கு மதிப்பிருப்பதில்லை. ஒரு கிலோ தக்காளியின் விலை 20 ரூபாய். அதுவே லாரி வராவிட்டால் ரூபாய் நாற்பதென்று உயரக்கூடும். விலை உயர்ந்திருக்கிறது என்பதுதான் உண்மையே தவிர, தக்காளியின் மதிப்பு அதிகரித்திருக்கிறது என்றாகாது. இப்படித்தான் ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. விலையில் ஏற்ற இறக்கம் நேர்கிறது.
மனிதனுக்கு மட்டும் விலை என்பது கிடையாது. மதிப்பு மட்டுமே உண்டு. மனிதர்கள் மதிப்பிற்குரியவர்கள்.“அவர் உங்களுக்குத் தந்திருப்பது ஒரு விலை. நீங்கள் அவருக்கு எவ்வளவோ உதவிகளை செய்துஇருக்கிறீர்கள். அவற்றைச் செய்வதற்கு உங்களுடைய பதவி உதவியிருக்கிறது. அதற்கான விலைதான் அவர் உங்களுக்கு வீடு வாங்கச் செய்த உதவி. எங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே. நாமிருவரும் அவரைப் பார்க்க பல சந்தர்ப்பங்களில் அவருடைய அலுவலகத்திற்குப் போயிருக்கிறோம். நீங்கள் நின்று கொண்டிருப்பீர்கள். நான் அவரோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பேன். உங்களுக்கு அவர் தந்தது நீங்கள் அவருக்குச் செய்திருக்கிற உதவிகளுக்கான விலை. எனக்கு அவர் தருவது எங்களின் நீண்டநாள் நட்புக்கான மதிப்பு. விலையும் மதிப்பும் வெவ்வேறானவை. விலை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதென்றால் மதிப்பு எனக்குப் பெருமையைத் தருகிறது. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்” என்றதும் தாம் ஏன் அப்படிப் பேசினோம் என்று நண்பர் அதிர்ந்துபோனார்.
ஒவ்வொன்றிற்கும் விலை
எனினும் மதிப்புக்குரியவர்களான மனிதர்கள் விலைக்குஉரியவர்களாகிறபோது மதிப்பை இழந்து விடுகிறார்கள். கற்புக்கு விலை கிடையாது. ஏனெனில் இந்தியாவில் அது மதிப்பிற்குஉரியது. அதுவே விலை போகிற போது மதிப்பை இழந்து விடுகிறது. ஆணோ பெண்ணோ உரியவருக்கு உரிமையாகவேண்டிய உடல் ஒவ்வொருவருக்குமாகிறபோது பழிக்கப்படுகிறது.
வாய்ப்புக்கு விலை
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது. நமக்கான ஆட்சியை நாம் தேர்ந்திட நமக்கொரு நல்ல வாய்ப்பாக ஒரு வாக்குச் சீட்டு தரப்படுகிறது. அது மதிப்பிற்குரியது. சட்டமன்ற உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க மக்களாட்சி நமக்கு தந்திருக்கிற மாபெரும் வாய்ப்பு அது. அதை ஆயிரத்துக்கும் ஐநுாற்றுக்கும் விற் கிறபோது ஒரு விலை கிடைக்கிறது. ஆனால் அதன் மதிப்பு போய்விடுகிறது. ரயிலில் ஓட்டை போட்டு நோட்டை எடுப்பதற்கும், தேர்தலில் நோட்டைப் போட்டு ஓட்டை எடுப்பதற்கும் வேறுபாடு இல்லை.வாக்குகள் விலைக்குக் கிடைக்கிற காரணத்தால் தான் அவற்றை விற்கிற நாம் கீழ்த்தரமாக அழைக்கப்படுகிறோம். “ஓட்டு கேட்க வருகிறவர்கள் இந்த ஊரில் எத்தனை வாக்காளர்கள்?” என்றா கேட்கிறார்கள். “எத்தனை ஓட்டு தேறும்! இதிலே நமக்கு எத்தனை விழும்!” என்று தானே கேட்கிறார்கள். கையூட்டு வாங்கிக்கொண்டு கடமையாற்றுகிறவனை லஞ்சப்பேர்வழி என்று சொல்ல, காசுக்காக ஓட்டுப் போடுகிற நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
விலை போகும் மதிப்பு
விலை என்பது மதிப்பாவதும் மதிப்பானது விலைபோவதும் சமூகத்தில் சிலநேரம் நடக்கும். உதாரணமாக இந்திய அரசு பணத்தாள் அச்சிடுகிறது. அச்சாகும்முன் அது ஒரு சாதாரண துண்டுக் காகிதம்தான். அச்சான பிறகு ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பை இந்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கிறது. கடைக்குச்சென்று ஒரு பொருளை வாங்கு கிறபோது அந்தப் பொருளுக்குஉரிய விலையைக் கடைக்காரர் சொல்வார். அந்த விலைக்கு நம்மிடமுள்ள அதற்கான மதிப்புடைய பணத்தாளைத் தருவோம். இப்போது பணத்தாள் விலையென்றாகிறது. இதே தொகையை நாம் ஒருவருக்கு லஞ்சமாகத் தருகிறபோது பணமும் மதிப்பிழக்கிறது. நாமும் மதிப்பிழக்கிறோம். ஆனால் ஒருவருக்கு அவருடைய சாதனைக்காக சமூகம் வழங்கும் தொகையை விலையென்று கருதமுடியாது. அது மதிப்பிற்குரியதாகிறது.
கெட்ட பொறியாளர்
ஊதியமாகவும், லாபமாகவும், பயனாகவும் பணம் கிடைக்கும்போது வருகிற நிறைவும் பெருமையும் கூடுதலாக வேண்டு மென்று கை நீட்டும்போது காணாமற் போய்விடுகிறது. தன் கணவன் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்குகிறான் என்பதைச் சொல்கிற மனைவியின் பெருமிதம், மாதத்தில் அவனுக்கு சராசரி லட்சரூபாய் 'கிம்பளம்' வருகிறது என்று சொல்வதில் இருக்காது. சொல்லவும்முடியாது. கோட்டப் பொறியாளர் கேட்டப் பொறியாளரானால், சமூகத்தில் அவர் கெட்ட பொறியாளர்தான்.
அன்பு இலவசம்
எல்லாவற்றிற்கும் விலை நிர்ண யித்துக் கொள்ளக்கூடாது. அன்பு இலவச மானது. எனவே தான் இலவச மாக அளிக்கப்படும் எந்தப் பொருளுக்கும் அன்பளிப்பு என்ற பெயரிடப்பட்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது உயரிய பண்பு. மானுடம் மாண்புறுவது ஒருவருக்குஒருவர் உதவுவதிலும் உள்ளன்போடு பேசுவதிலும்தான் இருக்கிறது. “அரை மணிநேரம் அன்பாகப் பேசுகிறேன். ஆயிரம் ரூபாய் கொடுங்கள்” என்று யாரும் கேட்பதில்லை. மனம் கல்லான ஆட்டோ ஓட்டுநர்கூட, விபத்தில் சிக்கியிருப்பவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மீட்டருக்கு மேல் போட்டுக் கொடுங்கள் என்று கேட்கமாட்டார். இலவசமாகவே ஓடி வருவார். எதையும் எதிர்பாராமல் செய்கிற உதவிகள் பயன்பெறுகிறவர்களின் நன்மதிப்பைப் பெறும்.
தொண்டுள்ளம் படைத்தவர்கள் தாம் செய்கிற தொண்டுகளுக்கு விலை வைத்துக்கொள்வதில்லை. சென்ற ஆண்டு மழை கொட்டித் தீர்த்தது. மாநகர் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. அழைக்காமலேயே பல இளைஞர்கள் ஓடோடி வந்தனர். மக்கள் மதிப்பில் உயர்ந்தும் நின்றனர். மதுரை மண்ணின் மாதரசி சின்னத்தாய் சமூகப் பணிகளில் சிறந்திருந்ததால், அவரது காலடிகளைத் தொட்டுவணங்கிய பாரதப் பிரதமர் தொண்டுள்ளமே துாய உள்ளம்; அது மதிப்பிற்குரியதென்று புலப்படுத்தியிருக்கிறார். அன்புக்கு விலையில்லை. அதைப் போலவே தொண்டுள்ளமும் ஒரு விலையிலடங்காது.
விலைமதிப்பற்றவை
சில நேரங்களில் நாம் அரியவை சிலவற்றை விலைக்கும் மதிப்புக்கும் மேலே விலைமதிப்பற்றவை என்று கருதிக்கொண்டாடு வோம். உயர்ந்த பெருமக்களின் கலைப்படைப்புகள், பயன்படுத்திய பொருள்கள் ஏலத்தில் விடப்படுகிறபோது, கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவோரும் உண்டு. அது விலையும் அல்ல; மதிப்பும் அல்ல விலைமதிப்பற்றவை. பெருமக்கள் பயன்படுத்திய ஆடை, உபயோகித்த பேனா, துணையிருந்த கைத்தடி என்றெல்லாம் பலரால் போட்டி போடப்பட்டு வாங்கப்பட்டுள்ளன. 1932ல் ஒரே நாளில் வரைந்து முடிக்கப்பட்ட ஓவியர் பிக்காஸோவின் இலைகளும், மார்பளவு சிலையொன்றும் சூழ்ந்த ஒரு நிர்வாணப் பெண்ணோவியம் ஏலம் தொடங்கிய எட்டாவது நிமிடத்தில் 106.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு(இந்திய ரூபாய் ஏறக்குறைய 700 கோடி) ஏலம் போனதாம். இது விலைக்கும் மதிப்புக்கும் அப்பால் விலைமதிப்பற்ற நிலை.
இப்படி விலைக்குரியதாகவும், மதிப்பிற்குரியதாகவும், விலைமதிப்பில்லாத தாகவும் உலகம் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தாம் விற்கிற பொருள்களுக்கு மனிதர்கள் விலை வைத்துக் கொள்ளலாம். அது வணிகம். ஆற்றுகிற பணிகளுக்கு ஊதியம் பெறலாம். அது உத்தியோகம். தம்மை விற்பது, தம் கொள்கைகளை இழப்பது போன்றவை பதவி என்ற ஒன்றை ஒரு விலையாக நமக்குத் தரலாம். ஆனால் நாம் மதிப்பை இழக்க நேரிடும்.
மனிதர்கள் எல்லாவற்றிற்கும் விலை வைத்துக்கொள்ளக்கூடாது. விலையாகிறபோது விலகிப்போகிற மதிப்பை எந்த விலைகொடுத்தும் திரும்பப்பெற முடியாது. இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு விலை வேண்டுமா… மதிப்பு வேண்டுமா… அல்லது உங்கள் வாழ்க்கை விலைமதிப்பற்றதாக விளங்கவேண்டுமா?-ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்எழுத்தாளர், சென்னை94441 07879

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement