Advertisement

புதுசுகளை அறிமுகப்படுத்துவேன் - இயக்குனர் சோலை பிரகாஷ்

மதுரைக்கும் தமிழ் சினிமாவுக்கும் தவிர்க்க முடியாத பந்தம் உண்டு என்பதற்கு மற்றொரு அடையாளம் தான் சோலை பிரகாஷ். சசிகுமாரை 'பலே வெள்ளைய தேவா' என, காமெடியில் கலக்க வைத்து, அவருக்கான புதுப் பாதையை அமைத்து கொடுத்தவர். 'சுப்ரமணியபுரம்' முதல் 'கிடாரி' வரை ஆக்ரோஷமாய் பார்த்த சசிகுமாரை, குழந்தைகள் முதல் 'காலேஜ் கேர்ள்ஸ்' வரை குலுங்கி, குலுங்கி சிரித்து ரசிக்கும்படி திரையில் காட்டியவர் சோலை பிரகாஷ்.
நம்மிடம் மனம் திறக்கிறார்...
* சினிமா ஆர்வம்
மதுரை சமயநல்லுார் அருகே தோடனேரிதான் எனது கிராமம். வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் படிக்கும் போது, நமக்கான களம், வேலை, வாழ்க்கை எல்லாமே சினிமாதான் என முடிவெடுத்தேன். இதனால், கல்லுாரி வகுப்பில் இருந்ததை விட, சினிமா தியேட்டர்களில் தான் அதிகமாக இருந்தேன்.
* சினிமாவில் வாய்ப்பு
சினிமாவில் சேர சென்னை வந்து, ஐந்து ஆண்டுகள் ஓடிய பின் தான், சென்னையையே என்னால் முழுமையாக படிக்க முடிந்தது. சிறுகதை, சினிமா விமர்சனங்களை எழுதிய எனக்கு, அதுதான் உதவி இயக்குனராகும் வழியை காட்டியது. இதை பார்த்த 'இறுதிச்சுற்று' பட இயக்குனர் சுதா, 'துரோகி' படத்தில் உதவி இயக்குனர் வாய்ப்பு கொடுத்தார்.
* பாலாவின் 'பரதேசி' அனுபவம்
இயக்குனர் பாலா பட 'ஷூட்டிங் ஸ்பாட்' ஒரு 'மிலிட்டரி கேம்ப்'. நான் சினிமாவை நுணுக்கமாக கற்றுக் கொண்ட இடம் அது.
* முதல் பட வாய்ப்பு
'பரதேசி' முடிந்த பின், என் படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்து பல வித போராட்டங்களுக்கு பின், கதையை சசிகுமார் தேர்வு செய்தார். 'மதுரை சார்ந்த ஒரு படத்தில் அரிவாள், கத்தி, வெட்டுக்குத்து இல்லை என்பதே இந்த படத்தின் ஸ்பெஷல்' என கூறி, கதைக்கு அங்கீகாரம் கொடுத்தார்.
* பட டைட்டிலில் கோவை சரளா பெயர் முதலில் வருதே
அந்த பெருந்தன்மை சசிகுமாருக்கு உண்டு. கதை முழுவதும் கோவை சரளாவை சுற்றி இருக்கிறது. அவர் பெயரே முதலில் வரட்டும். அடுத்து என் பெயர் வரட்டும் என பெருமிதமாக கூறினார்.
* படத்தின் ஹீரோயின்
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தான்யா. தனிக்கொடி கேரக்டருக்கு சற்று உயரமான ஹீரோயின் எதிர்பார்த்தேன். அந்த கேரக்டருக்கு அப்படியே பொருந்தினார். தாத்தாவின் பெயரை முதல் படத்திலே காப்பாற்றி விட்டார்.
* இயக்குனர்களில் நீங்கள் வியப்பவர்
எப்போதுமே பாலா தான்.
* எந்த நடிகரை இயக்க ஆவலாக உள்ளீர்கள்
புதுமுகங்களை அதிகம் அறிமுகப்படுத்துவேன்.
* மதுரை மண், தமிழ் சினிமாவுக்கு உள்ள பந்தம்...
நிறைய. சென்னை நண்பர்கள் சிலர், மதுரையில் இருந்து எல்லோரும் சினிமாவுக்கு வந்து விட்டால், நாங்கள் எங்கே போவது என வேடிக்கையாக சொல்வதுண்டு. இந்த பந்தம் என்றும் தொடரும்.
* 'பலே வெள்ளைய தேவா' பற்றி ரசிகர்கள் என்ன கூறினர்
படத்தின் சில காட்சிகளுக்கு, மதுரை ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். நாகர்கோவில் ரசிகர்கள் உம்முன்னு உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த வேறுபாட்டை நான் புரிந்து கொண்டேன். இனி எல்லாரும் ரசிக்கும்படியான படங்களை இயக்குவேன்.
ciniprakashgmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement