Advertisement

மொழியும் பண்பாடும் - மனம் திறந்த இந்திரா பார்த்தசாரதி

நாவல், நாடகத்துறையில் நாட்டின் சிறந்த ஆளுமைகளில் ஒருவர். 16க்கும் மேற்பட்ட நாவல்கள், 15க்கும் மேற்பட்ட நாடகங்கள், ஏராளமான சிறுகதைகள் இவரது எண்ணத்தில் உருவாகியுள்ளன. சாகித்ய அகாடமி, சங்கீத நாடக அகாடமி, பத்மஸ்ரீ, சரஸ்வதி சன்மான் போன்ற விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டதன் மூலம், பெருமை பெற்றன என்றால் மிகையில்லை. சில விருதுகளை இவர் ஏற்க மறுத்ததும் உண்மை. நாடகத்துறையில் வழங்கப்படும் 'ஜெ.வசந்தன் வாழ்நாள் சாதனையாளர் விருது' அண்மையில் மதுரையில் இவருக்கு வழங்கப்பட்டது. அவருடன் ஒரு நேர்காணல்:
* இணைய பயன்பாட்டிற்கு பின் வாசிப்பு பழக்கம் குறைந்துள்ளதா? தமிழ் எழுத்தாளர்களை பொறுத்தவரையில் ஜெயமோகன் இணையத்தில் நிறைய எழுதுகிறார். எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதா புத்தகம் எழுதுவதை போல, இணையத்திலும் எழுதுகின்றனர். இளைஞர்களும் அவற்றை விரும்பி படிக்கின்றனர்.* புத்தகங்கள் வாங்கி படிக்கும் பழக்கம் எப்படி? என்னை பொறுத்தவரையில் புத்தகங்களை வாங்கி படிக்கவே விரும்புவேன். அதில் கிடைக்கும் மகிழ்ச்சி இருக்கிறதே? படுத்துக் கொண்டு, உட்கார்ந்து கொண்டு புத்தகங்களை படிக்கலாம். நுாலகங்களுக்கு சென்று படிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை கூற வேண்டியதில்லை. * 'சாகித்ய அகாடமி' விருது நெல்லை மாவட்டத்தினர் தொடர்ந்து பெறுகின்றனரே? தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்களவு அதிகம் எழுத்தாளர்கள் உள்ளனர். ஆனால் ஒரு கால கட்டத்தில், புதுமைபித்தன் நெல்லையில் பிரபலமாக இருந்த போது தஞ்சாவூர் மாவட்டத்தில் ராஜமோகன், வெங்கட்ராமன், ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு போன்ற எழுத்தாளர்களும் பிரபலமாக விளங்கினர்.* நல்ல எழுத்தாளர்களுக்கு விருது கிடைப்பது இல்லை என்ற மனக்குறை உள்ளதே? சாகித்ய அகாடமி விருதை பொறுத்த வரையில், முதலில் பத்து பேர் கொண்ட குழு, 10 புத்தகங்களை தேர்வு செய்யும் அதிலிருந்து சிறந்த புத்தகங்களை மூன்று பேர் குழு தேர்வு செய்யும். இதில் நல்ல புத்தகங்கள் விடுபட வாய்ப்புள்ளது. நல்ல எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். சூடாமணி, வாஸந்தி, நகுலன் போன்ற எழுத்தாளர்களுக்கு விருது கிடைக்கவில்லை. அதற்காக நல்ல புத்தகங்களை எழுதவில்லை என எடை போடக்கூடாது.* இலக்கியத்திற்கு உயரிய விருதான ஞான பீட விருது பெறுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே? தமிழ் எழுத்தாளர்கள் எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு குறைந்தவர்கள் இல்லை. தேசிய மொழியாக இந்தி மொழி அறியப்படுகிறது. கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சமஸ்கிருத பாதிப்பு அதிகம். தமிழில் குறிப்பாக 'க' என்ற எழுத்து இடத்திற்கு தகுந்தாற் போல உச்சரிக்கப்படுகிறது. வடமொழிகளிலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பதை விட, மலையாளம், கன்னடம், தெலுங்கில் மொழி பெயர்ப்பது எளிது. இதுபோன்ற காரணங்களால் தமிழ் அந்நியப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதை வைத்து தமிழ் மொழியில் தகுதியுள்ளவர்கள், புலமைபெற்றவர்கள் இல்லை என கருத முடியாது. தமிழ் இலக்கிய நயங்களை தமிழ் படித்தால் தான் தெரிந்து கொள்ள இயலும். * நாடகம் எழுதுவதற்கும், நாவல் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம்? 300 ஆண்டு நிகழ்வு களத்தை 3 மணி நேரம் மக்கள் பார்க்கும் வகையில் நாடகமாக எழுத வேண்டும். நாவல் எழுதும் போது நாடகமாக சிந்திக்க வேண்டும். எனவே நாவல் எழுதுவதை விட நாடகம் எழுதுவது பெரிய சவால்.* இளைய தலைமுறையினருக்கு கூறுவது? நுால்கள் வாசிப்பது குறைந்து வருகிறது, நிறைய படிக்க வேண்டும். நாவல்கள், கவிதை புத்தகங்கள் வாசிப்பது குறைந்து உள்ளது. வாசிப்பை எப்படி ஈர்க்க வைப்பது என்பது சிரமம். கூட்டு முயற்சியாக செய்ய வேண்டும். சாகித்ய அகாடமி போன்ற அமைப்புகள் இதற்காக பயிற்சி பட்டறைகளை நடத்திட வேண்டும். மகாபாரதம், ராமாயணம் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளதால் அதை பற்றி அனைவரும் தெரிந்து கொண்டுள்ளனர். ஜெயகாந்தன் போன்றோரது நுால்களை தெரிந்து கொள்ள செய்ய வேண்டும். அவர் பெயர் வேண்டுமானாலும் மற்ற மொழியினருக்கு தெரிந்திருக்கலாம். அவரது எழுத்துக்களை பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பாராட்ட 99401 93607.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement