Advertisement

தமிழ் வளர்த்த தைரியநாதர் என்பார்வை

உலகில் ஆறாயிரம் மொழிகள் பேசப்படுவதாகவும், காலப்போக்கில் பல மொழிகள் வழக்கொழிந்து போவதாகவும், மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த ஆறாயிரம் மொழிகளில் லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, சீனம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய ஆறு மொழிகளே உயர் தனிச்செம்மொழிகள் என போற்றப்படுகின்றன. மொழியின்றி இனம் இல்லை. இன உணர்வு இன்றி, பண்பாட்டு வளர்ச்சிக்கு வேறு வழியே இல்லை.
உலகில் வாழும் 600 கோடி மக்களில் நமக்கென்று ஒரு தனித்த அடையாளத்தை தேடித்தருவதுதான் தாய்மொழியின் சிறப்பு. இந்த மானுட சமுத்திரத்தில், நாம் அடையாளம் இழந்து விடாமல், நமக்கென்று
தனியாக ஒரு முகத்தையும், முகவரியையும் தருவது தான் நாம் பேசும் தமிழ்மொழி என்பதை இன்றைய தலைமுறை உணர வேண்டும்.
தமிழ் பேசுவது தற்குறித்தனம். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவது தான் அறிவின் அடையாளம் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ''என்னுடைய வாழ்க்கையில், எதற்காகவாவது நான் கவலைப்பட வேண்டும் என்றால், உயர்ந்த தமிழ் மொழியை கற்க முடியாமல் போனதற்கு மட்டும் தான்'' என்றார் காந்தியடிகள்.
தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்மொழியையே மறந்து வாழும் தமிழர்கள் மத்தியில், வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து, தமிழ் தொண்டாற்றியவரை நாம் மறந்தால் நன்றி கொன்றோர் ஆவோம். அப்படி வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து தமிழ் வளர்த்தவர் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் கான்ஸ்டாண்டிசியஸ் ஜோசப் பெஸ்கி.
இளமையும் கல்வியும்
இவர் இத்தாலி நாட்டில் உள்ள மாந்துவா மாவட்டத்தில் காஸ்திகிலியோன் என்னும் சிற்றுாரில் 1680 நவம்பர் 8-ல் பிறந்தார். பெற்றோர் கொண்டல்போ பெஸ்கி, எலிசபெத் அம்மையார். இளமையிலேயே பன்மொழி கற்கும் ஆர்வம் இவருக்கு இருந்தது. பல மொழிகளை கற்றார். 18 வயதிலேயே கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் சேர்ந்தார். இத்தாலியம், கிரேக்கம், எபிரேயம், லத்தீன், போர்ச்சுக்கீசியம் முதலிய ஐரோப்பிய மொழிகளை ஆழமாக கற்றார். கிறிஸ்தவ சபையில் பணிபுரியும் மனம் இருந்ததால், அதற்குரிய கல்வியை கற்று 1709-ல் பாதிரியாரானார்.
சமயப்பணி
தன்னுடைய 30 வயதில் தமிழ்நாட்டுக்கு கிறிஸ்தவ சமய பணி நிமித்தமாக வந்தார். தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலுார், மதுரை, காமநாயக்கன்பட்டி, கயத்தாறு முதலிய இடங்களில் பணியாற்றினார். சமய பணி செய்வதற்காகவே தமிழ் கற்க தொடங்கினார். சுப்பிர தீபக் கவிராயர் என்பவரிடம் தமிழை கற்றார். இலக்கணங்களை, இலக்கியங்களை தோய்ந்து, தோய்ந்து கற்றார். அதனால் கடல் மடை என கவிபாடும் ஆற்றல் இவருக்குள் புகுந்தது.
சமயம் பரப்ப வந்தவர், தமிழ் பரப்பி தமிழ் வளர்க்கும் தொண்டரானார். சமஸ்கிருதம், தெலுங்கு, உருது மொழிகளிலும் புலமை பெற்றார். தமிழக கலாசாரத்தின் மீது மிகுந்த பற்று கொண்டதால், நடை, உடை பாவனைகளையும் தமிழ் முனிவர் போல் மாற்றி கொண்டார்.
காவி உடுத்தார், தாடி வளர்த்தார், சைவ உணவே உண்டார். தம்முடைய பெயரை 'தைரியநாத சுவாமி' என மாற்றி வைத்து கொண்டார். அதுவே அழகு தமிழில்
வீரமாமுனிவர் ஆயிற்று.திருநெல்வேலி மாவட்டம் கோளான்குப்பம் எனும் ஊரில், மாதாவுக்கு தமிழ் பெண் போல திருவுரு செய்து கோயில் அமைத்து வழிபாடு செய்தார். அம்மாதாவின் பெயரை பெரிய நாயகி அம்மை என அழைத்தார். ஏலாக்குறிச்சியில் அடைக்கல மாதா கோயிலில் ஆண்டுதோறும் விழா எடுக்க ஏற்பாடு செய்தார்.
துாத்துக்குடியிலும் சமய பணிகள் புரிந்தார்.
தமிழ்ப்பணி தமிழுக்கு இவர் ஆற்றிய சீர்திருத்த பணிகள் அதிகம். தமிழ்ச் செய்யுள் நடை, உரைநடை, இலக்கணத்துறை என எல்லா துறைகளுக்கும் அவர் பணி பயன்பட்டுள்ளது. தேம்பாவணி எனும் பெருங்காவியத்தை, யாப்பிலக்கண பிழையின்றி, கம்பன் காவியம்போல் வடித்தெடுத்து தமிழன்னைக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார். மூன்று காண்டங்களில் 36 படலங்களை கொண்டு மொத்தமாக 3615 விருத்தபாக்களால் ஆனது இந்த காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின் இணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார்.
தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே தமிழை தாய்மொழியாக கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்ட பெருமை தேம்பாவணிக்கே உண்டு. வீரமாமுனிவரை போல வேறு எந்த காப்பிய புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பிற இலக்கிய வகைகளில் நுால்கள் படைக்கவில்லை. இவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள், சிந்தனையை கவர்பவை.
அவை, கித்தேரி அம்மானை, அடைக்கல மாலை, அடைக்கல நாயகி, வெண் கலிப்பா, அன்னை அழுங்கல் அந்தாதி, தேவாரம், கருணாம்பர பதிகம் ஆகியவற்றையும், தமிழ் செய்யுள் திரட்டு என்ற ஒன்றையும் தந்துள்ளார்.
சிறுவர்களை கவர்ந்தவர்
உரைநடைக்கு இவர் ஆற்றிய பணி மறக்க முடியாதது. வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக்கண்ணாடி, பேதகம் அறுத்தல், வாமன் சரித்திரம், ஞான விளக்கம், திருச்சபை கணிதம் முதலான உரைநடை நுால்களை உயரிய முறையில் உயர் தமிழுக்கு அளித்துள்ளார். இவர் எழுதியுள்ள பரமார்த்த குரு கதை சிறுவர்களை மட்டுமின்றி, பெரியவர்களையும் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்த தமிழில் முதன் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம். இது சுமார் 54 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
அகராதி தந்த பெருமை
இலக்கண வளர்ச்சிக்கும், இலக்கண நுால்களை படைத்தளித்துள்ளார். செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னுால் விளக்கம் முதலிய நுால்களை படைத்துள்ளார். தமிழில் முதலில் அகராதி தந்த பெருமை இவரையே சாரும்.
சதுர் அகராதி என்னும் அகராதியை அரும்பாடுபட்டு அளித்துள்ளார். உலக பொது மறையாம் திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றையும், தேவாரம், திருப்புகழ், நன்னுால், ஆத்திச்சூடி போன்ற நுால்களையும் ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் கற்க ஏதுவாக, தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். இதில் ஆயிரம் தமிழ் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே, முதல் தமிழ் அகர முதலி ஆகும். பின்பு 4,400 சொற்களை கொண்ட தமிழ் - போர்த்துக்கீசிய அகராதியை உருவாக்கினார். அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துக்கு புள்ளி வைக்காமல் எழுதுவது வழக்கம். புள்ளிக்கு ஈடாக நீண்ட கோடு இருக்கும். அதை மாற்றி மெய் எழுத்துகளுக்கு புள்ளி வைக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.
உரை நடையாக மாற்றியவர்அக்காலத்தில் குறில், நெடிலை விளக்க 'ர' சேர்த்து எழுதுவது வழக்கம். 'ஆ' என எழுத 'அர' என இரண்டு எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. இந்த நிலையை மாற்றி 'ஆ' 'ஏ' என மாறுதல் செய்தவர் இவரே. தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் படித்தறிய, எளிதாக இல்லை என்பதை உணர்ந்து, உரைநடையாக மாற்றியவரும் இவரே.
தொன்னுால் விளக்கம் தந்தமைக்காக 'திருமதுரைச் செந்தமிழ் தேசிகர்' எனும் பட்டத்தை பெற்றார். மதுரை தமிழ்சங்கமே வீரமாமுனிவர் என்னும் பட்டத்தை அளித்து பாராட்டியது. அதுவே இவர்தம் இயற்பெயராக அமைந்து விட்டது. தைரியநாதர், இசுமதி, சந்நியாசி எனும் பெயர்களால் அழைக்கப்பட்டாலும், வீரமா முனிவர் எனும் தமிழ்பெயரே தக்க பெயராகி நிலைத்தது. இவர் 1742-ல் மதுரையை விட்டு சென்று 1746--47-ம் ஆண்டில் கேரள மாநிலம் அம்பலக்காட்டில் வாழ்ந்தார் என்றும், அங்கேயே 1747 பிப்., 4-ல் இறந்தார் என்றும் வீரமா முனிவரின் வாழ்வை ஆய்ந்துள்ள முனைவர் ச.இராசமாணிக்கம் கூறியுள்ளார்.
எங்கிருந்தோ வந்து இங்கு சங்கத்தமிழ் வளர்த்த தங்க தமிழ் முனி வீரமாமுனிவரை நாம் மறக்க முடியுமா? தமிழக பல்கலைகள் அனைத்திலும் இவரது படைப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, மாணவர்கள் மத்தியில் தமிழின் பெருமையை உணர்த்த செய்வதே நாம் செய்யும் நன்றி கடன்.
-மகா.பாலசுப்பிரமணியன்
செயலர் வள்ளல் அழகப்பர் தமிழ் இலக்கிய பேரவை, காரைக்குடி. 94866 71830----------

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement