Advertisement

'‛வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்'

இந்த பழமொழியை நம் முன்னோர் எதை கருத்திற்கொண்டு சொல்லியிருந்தாலும், அது நமது பற்களை பாதுகாப்பதற்குரியதாகவும் எடுத்துக் கொள்ளலாம். உண்மைதான்; ஒருவர் வாய், பற்களை முறையாக பராமரித்தாலே உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்க முடியும்.இன்றைய கால கட்டத்தில் நமது வாழ்க்கை முறை 20 ஆண்டு களுக்கு முன்பு இருந்தது போல் இல்லை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நமது வாழ்க்கையில் அவசரத்திற்கும், பரபரப்பிற்கும் குறைவில்லை. ஆனால் இந்த வாழ்க்கை முறையில் நாம் நம் உடல்நலத்தை இழக்காமல் பாதுகாப்பது மிக மிக முக்கியமானது.உடல் ஆரோக்கியம் என்றதும் மருத்துவரை பார்த்து ஆலோசனையோ, சிகிச்சையோ பெறுவது ஆரோக்கியத்தின் இரண்டாம் கட்டம். முதல் கட்டம் என்பது அவரவர் கையில்தான் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் எவ்வளவு அக்கறை கொள்கிேறாமோ, அந்த அளவிற்கு நம் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், பலர் அக்கறை எடுத்துக்கொள்கின்றனர். அதேசமயம், அவர்களுக்கு சரியான வழிமுறைகள் தெரியாமல் உள்ளது. பரபரப்பான வாழ்க்கையின் நடுவே, சரியான முறையில் மிக சுலபமான வழிகளில் வாயையும், பற்களையும் அதன்மூலம் உடலை யும் ஆரோக்கியமாக எப்படி வைத்துக்கொள்வது?
உணவே மருந்து : பற்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது நாம் தினமும் உண்ணும் உணவு. இன்று அதிகம் பேர் விரும்பும் குளிர்பானங்களும், பாஸ்ட் புட்களும் பல் பிரச்னைகளை உருவாக்கும். பெரும்பாலான குளிர்பானங்களில் அமிலத்தன்மை உள்ளது. அதோடு சர்க்கரையும், பல ரசாயனங்களும் கலந்துள்ளன. இவை பற்களின் வெளியே இருக்கும் எனாமலை அரிக்கும் தன்மை உடையவை. நாளடைவில் எனாமல் தேய்ந்து பற்களில் கூச்சமும், வலியும் ஏற்படும். பற்களில் சொத்தை வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.இதை தவிர்க்க அமிலத்தன்மை வாய்ந்த குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். சாக்லேட் போன்ற ஒட்டும் தன்மை யுடையவை பற்களின் மேல் ஒரு படலத்தை உருவாக்கும். இதுவே கிருமிகளின் தங்கும் இடமாக மாறி, நாளடைவில் சொத்தையை உருவாக்கும். இவற்றை சுத்தம் செய்வது கடினம். எனவே சாக்லேட் மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிட்டதும் மறக்காமல் பற்களை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். இதுபோன்றவற்றை தவிர்த்து நார்ச்சத்துள்ள பழங்கள், காய்களை சாப்பிடலாம். ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றினால் உடல் ஆரோக்கியமும், வாய் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி : வாயே நம் உடலின்ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடி. ஒருவரின் உடல் உபாதையை வாய், பற்களை வைத்தே கணித்துவிட முடியும். இது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருதய நோய் உள்ளவர்கள் பற்களையும், ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். பல், ஈறு பிரச்னை உள்ளவர்களில் 70 சதவீத பேருக்கும் இருதய நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாயில் உள்ள கிருமிகள், உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து இருதயத்தை பாதிக்கும்.
கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியத்திலும், பல் ஈறுகள், வாயின் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈறு நோய் உள்ள பெண்களுக்கு எடை குறைவான குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பற்களையும், ஈறுகளையும் பாதுகாப்பதில் கவனம் வேண்டும்.
வாய் எரிச்சல் : வாய் துர்நாற்றம் என்பது சாதாரண விஷயம். இது வாயில் உள்ள பிரச்னைகளைவிட, உடல் உபாதைகளால் வருவதே அதிகம். நுரையீரல் தொடர்பான பிரச்னைகள், சுவாச பிரச்னைகள் உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும். தொண்டை புண், கிருமி, பூஞ்சை தாக்குதலின்போதும் வாயில் வெள்ளை திட்டுக்கள் மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்படும். உடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்படும்போது, ஈறு நோயும், வாய் எரிச்சலும் ஏற்படும்.ஆகவே நம் உடலில் ஏற்படும் பல வகை நோய்களை வாயில் தோன்றும் அறிகுறிகள் மூலமாக ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட முடியும்.
சின்ன சின்ன பழக்கங்கள் : ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்குகிறோம் என்பதைவிட, எப்படி முறையாக துலக்குகிறோம் என்பதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறையும், குறிப்பாக இரவும் பல் துலக்குவது அவசியம். சரியான பிரஷ் மூலம் சரியாக முறையில் பல் துலக்குவது தான் பற்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை காரணம்.முதலில் உங்கள் வாய்க்கு ஏற்ப பிரஷ்ைஷ தேர்ந்தெடுக்க வேண்டும். பிரஷ் பெரிதாக இருந்தால், வாயின் அனைத்து பகுதிகளுக்கும் அதை கொண்டு சென்று துலக்க முடியாது. அடுத்து பிரஷ் மிக கடினமாகவும், மிருது ஆகவும் இருக்கக்கூடாது. மிக மிருதுவாக இருந்தால் சரியாக சுத்தம் செய்யாது. மிக கடினமாக இருந்தால் சீக்கிரமே பற்கள் தேய்ந்துவிடும்.
மாறுங்க... மாற்றுங்க... : பல் துலக்கும்போது பற்களின் வெளிப்புறம், உள்புறம் மற்றும் ஈறுகள், நாக்கு போன்ற இடங்களை நிதானமாக சுத்தம் செய்ய வேண்டும். 2-3 நிமிடங்கள் வரை பல் துலக்க எடுத்துக்கொள்ளலாம். நீள வாக்கில் துலக்காமல், மேலும், கீழும் வட்டவடிவமாக துலக்க வேண்டும். துலக்கிய பின் பிரஷ்ைஷ உலர்வான இடத்தில் வைக்க வேண்டும். ஈரமான இடத்தில் வைத்தால் பிரஷ்ஷில் கிருமிகள் தங்க நேரிடும். 3--4 மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்சை மாற்ற வேண்டும்.ப்ளூ ரைட் பேஸ்ட் பயன்படுத்துவது நல்லது. பற்களில் கூச்சம் இருந்தால், அதற்கான பிரத்யேக பேஸ்ட்டை பயன்படுத்த வேண்டும். சரியாக பராமரிப்பதன்மூலம் பற்கள் சொத்தை ஆவதை தடுக்க முடியும்.அறிவியல் மாற்றங்கள் நமக்கு முக்கியம்தான். நம் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் அந்த அறிவியல் முன்னேற்றங்களை ஆரோக்கியமாக வாழ்வதற்கு பயன்படுத்த வேண்டியது நம் கையில்தான் உள்ளது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல், நம் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான எளிய வழிமுறைகளை அறிந்து பின்பற்றினால், மகிழ்ச்சியான வாழ்வுக்கு அதுவே சிறந்த வழியாகும்.
டாக்டர். கண்ணபெருமான்மதுரை. 94441 54551.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement