Advertisement

வெல்லட்டும் வெண்மை புரட்சி

பசுமைப்புரட்சி என்பது வேளாண்மை துறையில் தானியம், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றின் அபரிமிதமான உற்பத்தியாகும். வெண்மை புரட்சி என்பது பால், முட்டை, இறைச்சி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதாகும். தமிழகத்தில் மதிப்பூட்டப்பட்ட பால் உற்பத்தி 2008-09ல் 6651 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது. 2014-15ல் 7132.47 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. மதிப்பிடப்பட்ட முட்டை உற்பத்தி 2008-09ல் 88ஆயிரத்து 098 லட்சம் எண்ணிக்கையில் இருந்தது. 2014-15ல் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 253.15 லட்சம் எண்ணிக்கையாக உயர்ந்தது. இறைச்சி உற்பத்தி 2008-09ல் 4 ஆயிரத்து 570 லட்சம் கிலோவிலிருந்து 2014-15ல் 4 ஆயிரத்து 919.3 லட்சம் கிலோவாக அதிகரித்தது. இந்தளவில் கோழி இறைச்சி உற்பத்தியும் அடங்கும். நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழகத்தில் பால் உற்பத்தி 10, முட்டை உற்பத்தியில் முதல், இறைச்சி உற்பத்தியில் 6வது இடத்தையும் பிடித்துள்ளது. உற்பத்தி அளவு இறைச்சி, பால், முட்டையில் இந்தளவு முன்னேற்றம் இருந்தாலும் தனிநபர் உட்கொள்ளும் அளவின் இலக்கை இன்னும் நாம் அடைய வில்லை. தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் பரிந்துரைப்படி தனி மனிதன் ஆண்டுக்கு 180 முட்டைகளும், 11 கிலோ இறைச்சியையும் உட்கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் தனி மனிதனுக்கு ஆண்டுக்கு 47 முட்டைகளும், 1.7 கிலோ கோழி இறைச்சியும் மட்டுமே கிடைக்கிறது.இலக்கை அடைய போதிய எண்ணிக்கையில் கால்நடைகள் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சதவீதம் உற்பத்தி திறனில் மூட நம்பிக்கைகளால் குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அன்றாடம் விவசாயிகள் சந்திக்கும் இடர்களில், கறவை மாடுகளை பொறுத்தவரை மடி நோய் முக்கியமானதாகும். கறவை மாடு வளர்ப்பில் மடி நோய்க்கான மருத்துவத்தை ஆரம்ப கால கட்டத்தில் செய்யாவிட்டால் முழு பால் உற்பத்தியையும் அந்த ஈற்றில் இழக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உண்டாகும். கிராமப்புறங்களில் கறவை மாடுகளில் இன்னும் மடி வீக்கம் காணப்பட்டால் விவசாயிகள் அதை கண் திருஷ்டி பட்டு விட்டது. கண்ணேறு பட்டு விட்டது என முடிவு செய்து மந்திரித்து திருநீறு போடுகின்றனர். அதுதான் நோயின் ஆரம்ப கட்டம் என அவர்களுக்கு தெரிவதில்லை. முடிவில் பால் உற்பத்தி என்பது அவர்களுக்கு கானல் நீராக போய் விடும். மடி இல்லையேல் மாடு இல்லை என கிராமங்களில் கூறுவர். மடியில் கோளாறு ஏற்பட்டு விட்டால், மாட்டினை வளர்ப்பதால் பயன் இல்லை. மடிநோய் என்பது சில பாக்டீரியா கிருமிகளின் தாக்குதலால் ஏற்படுகிறது என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். பால் என்பது பாக்டீரியா கிருமிகள் பெருகுவதற்கு ஏற்ற உணவுப்பொருளாகும். நாளுக்கு நாள் பெருகும் பாக்டீரியாக்கள், மடியின் ரசாயனத்தன்மையை மாற்றி விடுகின்றன.
மக்களின் மூடநம்பிக்கைகள் கால்நடை வளர்ப்பில், மூடப்பழக்கவழக்கங்கள் ஒரு குறிப்பட்ட சதவீதம் கால்நடைகளின் உற்பத்திதிறனை பாதிக்கின்றன. இந்த பழக்கவழக்கங்களால் பொருளாதார இழப்பும், லாபமும் கணிசமாக குறையும். கிராமங்களில் நாவரஞ்சி எடுப்பது எனக்கூறுவர். இதன்படி தீவனம் சாப்பிடாத கால்நடைகளின் நாக்கை வெளியே இழுத்து கத்தியினால் நாக்கினை சுரண்டி, மேலும் கீழும் உள்ள சவ்வுப்பகுதியை எடுத்து விடுவார்கள். இதனால் வலி ஏற்பட்டு கால்நடைகள் தீவனம் சாப்பிடாமல் இருக்கும். இந்நிலை கறவை மாடுகளுக்கு ஏற்பட்டால் தீவனம் சாப்பிடும் வரை பால் உற்பத்தி குறைந்து விடும். அதிக நேரம் கால்நடைகள் வேலை செய்தாலும் தண்ணீர் காட்டாமல் இருந்தாலும் உடலில் நீர்சத்து அளவு குறைந்து மாடுகள் விழுந்து விடும். இதை உணராமல் மாடுகளின் அருகே வைக்கோலை போட்டு கொளுத்துவர். இதனால் சூடு பொறுக்க முடியாமல் மாடுகள் எழுந்து விடும். சில நேரங்களில் மாடுகள் நினைவு இழப்பையும் சந்திக்கின்றன. கறவை மாடுகள், சில நேரம் சினைப்பிடிக்கவில்லை என்பதற்காக கள்ளிப்பாலை பிறப்பு உறுப்புகளில் விடுவதுபோன்ற கொடூரமான செயல்களும் இன்றளவும் நடைபெறுகின்றன. சினைபிடிக்கவில்லை எனில் டாக்டரிடம் காட்டினால் அவர் தகுந்த மருத்துவ உதவிகள் செய்வார்.
கால்நடைகளுக்கும் கள்ளிப்பால் சில கால்நடைகள் நோயின் காரணமாகவோ அல்லது நச்சுத்தாவரங்களை சாப்பிட்டதாலோ சோர்வாகவும், உடல் சிலிர்த்தும் காணப்படும். இதை தவறாக ஓணான் மாட்டின் மேல் விழுந்துஉள்ளது என துண்டு துணியை இறுக்கமாக கழுத்தில் கட்டி விடுவர். மாடுகள் சண்டை போடுவதாலும், விபத்துக்களினாலும் கொம்பு கழன்று விடும் அல்லது முறிந்து விடும். இது இயற்கை. இதற்கு உடனடி வைத்தியமாக உடலில் பட்டாலே வெந்து போகக் கூடிய கள்ளிச்செடியின் பாலை துணிகளில் நனைத்து கொம்பில் கட்டி விடுவர். இதனால் கறவை மாடுகள் உட்பட கால்நடைகள் வேதனை அடைகின்றன. விளைவு பால் உற்பத்தியில் குறைவு ஏற்படும். வேறு சிலர் கொம்பு கழன்று விட்டால் கருப்பட்டியை யும் சுண்ணாம்பையும் சேர்த்து அரைப்பர். தலைமுடியை கொம்பில் முழுவதுமாக சுற்றி பரப்பி வைத்து, பின்னர் கருப்பட்டி சுண்ணாம்பு கரைசலை இதன் மேல் அப்பி வைப்பார்கள். காய்ந்த பிறகு தலைமுடியை கொம்பிலிருந்து அகற்றும் போது மாட்டின் கொம்பில் மறுபடியும் ரத்தக்காயங்களுடன் புண்கள் ஏற்படும்.
மூட நம்பிக்கையால் உணவாகும் கோழிகள் : நாட்டுக்கோழி வளர்ப்பிலும் சில மூடநம்பிக்கைகள் கிராமங்களில் நிலவுகின்றன. சில கோழிகள் மெலிதாக முட்டையிடும். இதனை தோல் முட்டையிடுவது எனக்கூறுவர். தோல் முட்டையிடும் கோழிகள் வீட்டுக்கு ஆகாது என விற்று விடுவார்கள் அல்லது வெட்டி குழம்பு வைத்து விடுவர். மேலும் நள்ளிரவில் கூவும் சேவல்கள், வெள்ளியன்று முதல் முதலாக முட்டையிட துவங்கும் கோழிகள் இவையெல்லாம்வீட்டுக்கு தீமை என கருதி அறுத்து விடுவர். தவறான மூடப்பழக்க வழக்கங்கள் தான் தவிர வேறு ஒன்றுமில்லை. தோல் முட்டையிடும் கோழிகளுக்கு தீவனத்தில் சுண்ணாம்புச்சத்து குறைபாடு இருக்கும். போதிய அளவு கால்சியம் எடுத்து கொண்டால் தோல் முட்டையிடாது. ஏனெனில் கோழி முட்டையின் ஓடு கால்சியம் என்ற சுண்ணாம்பு சத்தால் ஆனது. தீவனத்தில் சுண்ணாம்புச்சத்து, கிளிஞ்சல்கள் போன்றவற்றைச் சேர்ப்பதால் இக்குறைபாடுகள் நீங்கும்.
கால்நடைகளுக்கும் உணர்வு : வெண்மை புரட்சியில் நாடு வெற்றி பெறுவதற்கு, குடிமக்களின் பங்கும் இருக்கிறது. உற்பத்தி பொருட்களை பெருமளவு விளைவித்தாலும் சிறிய அளவிலான மேலே கூறிய கருத்துக்கள், மூட நம்பிக்கைகள், வெற்றி எல்லையை தொட தடையாய் இருக்கும். கால்நடைகளுக்கும் உணர்வு உண்டு. அறிவியலும், நவீன மருத்துவமும் முன்னேறி வரும் இக்காலத்தில் தவறான கருத்துக்களாலும், மூடநம்பிக்கைகளாலும் கொடூர மருத்துவம் செய்வதையும் தகுதியவற்றவர்களாலும், மந்திரவாதிகள் செய்யும் மருத்துவத்தை கால்நடை வளர்ப்பாளர்கள் தவிர்க்க வேண்டும். வளமான வலிமையான பாரதத்தை உருவாக்கும் முயற்சி யில் உங்கள் பங்களிப்பும் சேர வேண்டாமா? அதற்காக வெல்லட்டும் வெண்மை புரட்சி என வாழ்த்துவோம்!
-டாக்டர் வி.ராஜேந்திரன்ஓய்வு பெற்ற இணை இயக்குனர்கால்நடை பராமரிப்புத்துறைநத்தம். 94864 69044

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement