Advertisement

இழந்த சொர்க்கத்தை இணைந்து மீட்போம்!

ஒரு மனிதனை மாற்ற வேண்டுமெனில், முதலில், அவனின் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும். ஒவ்வொரு மனிதனின் உணவு பழக்கத்துடன், கலாசாரம் மற்றும் பண்பாடு இணைந்துள்ளது. உறுதியுடன் உடல் உழைப்பு தந்த மனிதன், இன்று, ஊளை சதைப் போடக் காரணம், இன்றுள்ள உணவு முறை தான்.
முதலில், வெள்ளை கோழிகள், 'லெகான்' கோழிகள் என, சந்தைக்கு வந்த போது, அது, உணவு புரட்சியாகப் பேசப்பட்டது. ஓய்வின்றி, தினமும் முட்டை தரும் லெகான் கோழிகள், பாராட்டுகளை பெற்றன. 'நாட்டுக்கோழி முட்டையிலும், லெகான் கோழி முட்டையிலும் வேறுபாடு இல்லை; இரண்டிலும் ஒரே அளவு புரதமே உள்ளது. தினம் ஒரு முட்டை உண்டால், மருத்துவரை அணுக வேண்டாம்' என, அப்போது விளம்பரப்படுத்தப்பட்டது.
மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டுக்கு, லெகான் கோழிகள் வரப்பிரசாதமாக அமைந்தன. ஆண் குஞ்சுகள், கறிக் கோழிகளாக சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. படிப்படியாக, 30 நாட்களில் வளரும் கறிக்கோழிகள் கூட, சந்தைக்கு வந்து விட்டன. அதை ஆசையுடன் உண்ணும், நம் பெண் குழந்தைகள், 10 வயதில் பூப்படைகின்றனர்.
முட்டைக் கோழிக்கும், கறிக் கோழிக்கும் தரப்படும் ரசாயனங்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகள், முட்டையிலும், கோழிக்கறியிலும் தங்கியுள்ளதால், அதை உண்ணும் நமக்கு, நோய் வரத் துவங்கியது. கறிக் கோழியும், முட்டைக் கோழியும், உடல் நலத்திற்கு தீங்கானது என, இப்போது உணரும் வேளையில், ஒரு சந்ததியே அவற்றிற்கு அடிமையாகி போய் விட்டது.
அடை காத்து, பொரித்தெடுத்த தன் குஞ்சுகளை அழைத்துச் சென்று, மண்ணைக் கிளறி, புழுப்பூச்சிகளை உணவாக கொடுத்த நாட்டுக் கோழிகளை, கிராமப்புறங்களில் கூட காண்பது, இன்று அரிதாகி விட்டது.
கோழிக்கறி இல்லாத, அசைவ உணவு விடுதி இன்று இல்லை. வீட்டிற்கு விருந்தினர் வந்தால், முதலில் அறுபடுவது கறிக்கோழி தான்.
மூன்று மாதங்களில் விளையும் நெல் என்பது, இன்று, 40 நாட்களில் விளையும் நெல்லாகிப் போனது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களை நாசமாக்க வீசப்பட்ட குண்டுகளில் இருந்த, அமோனியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கொடிய ரசாயனப் பொருட்கள் தான், உரம் என்ற பெயரில், நம் நிலத்தின் மீதும் வீசப்படுகிறது.
அதை பயன்படுத்தி கிடைத்த விளைச்சல், பசுமை புரட்சியை தந்து, பஞ்சத்தை அப்போது போக்கியது. எனினும், நம் வாழ்வுக்கு பல பாதகங்களை ஏற்படுத்தவே செய்து விட்டது. உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவே, விஷம் என்றானது. எதை உண்டாலும், அதில் உண்மையில்லை என்ற நிலை வந்து விட்டது.
வறட்சியை தாங்கி வளரும் சிறு தானியங்கள், பயிரிடப்படுவது அரிதாகி விட்டது. அதற்கும் ரசாயன உரங்கள் போடப்படுகின்றனவாம். 40 - 50 ஆண்டுகளுக்கு முன், அரிசிச் சோறு வீட்டில் சமைத்தால், 'எங்கள் வீட்டில் நெல்லுச் சோறு' என, குழந்தைகள் கும்மியடித்து மகிழ்ந்தன. காரணம், வீட்டில் எப்போதும் கம்பு, சோளம், வரகு, தினை, பனிவரகு, குதிரைவாலி, ராகி போன்ற சிறுதானிய உணவு தான், அப்போது சமைக்கப்பட்டன.
வறட்சி தாங்கி வளர்ந்த, சிறுதானிய உணவை உண்ட உழவன், உடல் வலுவுடன் கிணறு தோண்டும் அளவு வலிமை பெற்றிருந்தான். ஆனால், இன்று, நடுத்தர உணவு விடுதியில் கூட, மதியச்சோறு, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நம்மை அறியாமல், நம் நாக்கு விஷத்திற்கு அடிமையாகிவிட்டது.
தென்னை மற்றும் பனை மரக் கள்ளை, நம்மவர்கள் குடித்தனர். பின், கடுக்காய், ஜாதிக்காய், மரப்பட்டை, வெல்லம், பழம் என, ஊறப் போட்டு, காய்ச்சிக் குடித்தனர். அவை, போதையுடன், உடலுக்கும், சிறிது வலு தந்தன. ஆனால், இன்று, இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவுக்கு நம்மை அடிமைப்படுத்திக் கொண்டோம். பனை மரங்கள், வெட்டி களையப்பட்டன. ஒரு ஆண்டில் இளநீர் தரும் தென்னை மரங்கள், காளான் போல வந்து விட்டன.
கிணற்று நீரையும், குளத்து நீரையும், நதி நீரையும், தெருக்குழாய் நீரையும் அருந்தி, தாகம் தீர்த்த மனிதன், இன்று, 'பாட்டில்' தண்ணீர் அருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். மண் குடம் ஒன்றை வகுப்பறையில் வைத்து, தினமும் காலையில், தண்ணீர் குடித்த பள்ளி மாணவர்கள், இன்று, குழாய் தண்ணீரை திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை; பார்க்கும் வகையிலும் இருப்பதில்லை.
பிரிட்டிஷ் காலத்தில், நம் மக்களை தேநீருக்கு அடிமையாக்க, வீதிக்கு வீதி, தேநீர் இலவசமாக வழங்கப்பட்டது. தினமும் தேநீர் தந்து, மக்களின் நாக்கை அதற்கு அடிமையாக்கிய பின், நாடெங்கும் டீக்கடைகள் திறக்கப்பட்டன. வீட்டில் வடித்த கஞ்சித் தண்ணி குடித்தவர்கள் நாக்கு, டீ மற்றும் காபிக்கு அடிமையாகிப் போனது.
களரியும், கபடி விளையாட்டும், சிலம்பச் சண்டையும் போய், கிரிக்கெட் விளையாடுபவனே, சிறந்த வீரன் என்ற புகழை பெற்று விட்டான். விளம்பரத்துக்காக அந்த, 'விளையாட்டு' வீரனின் கையில் உள்ள, அன்னிய குளிர்பானம், கோடி, கோடியாக வருவாயை அள்ளுகிறது.
கடவுள், எல்லா இல்லங்களிலும் இருக்க முடியாது என்பதால் தான், தாயை இறைவன் படைத்தான். தாய்க்கும், பிள்ளைக்கும் மட்டுமின்றி, அனைவருக்கும் பால் தர, பசுவை படைத்தான். பால், தயிர், நெய், சாணம், கோமியம் என, பஞ்ச கவ்யம் தந்த பசு மீதும், மதச்சாயம் பூசப்பட்டு விட்டது.
பாலிலும் வெண்மை புரட்சி காண வேண்டி, ஜெர்சி மற்றும் எச்.எப்., எனப்படும், அதிக பால் சுரக்கும் வெளிநாட்டு மாடுகள், நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. நாட்டு இன மாடுகளின் பாலில் புரதம், புரோட்டின் அதிகமுள்ளது. ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட கலப்பின மாடுகளின் பாலில், கொழுப்பு தான் அதிகமுள்ளது.
அந்த பாலையும், பவுடராக்கி, அந்த பவுடரிலும் மருந்தை கலந்து, மனிதனின் உயிரோடு விளையாடத் துவங்கி விட்டன, பன்னாட்டு
நிறுவனங்கள்.
விவசாய வேலைகள் அனைத்திற்கும், நாட்டு மாடுகள் தான் முன் பயன்படுத்தப்பட்டன. உழவு மற்றும் கிணற்றில், கமலை கட்டி, தண்ணீர் இறைக்க, போக்குவரத்துக்கு என, விவசாயிகளின் வாழ்வில் அங்கமானது, மாடு. ஒரு வாய் புல் தின்று, தன்னையும் காத்து, விவசாயியையும் காத்தது, நம் நாட்டு மாடு.
'யாவர்க்கும் மாம்பசு அதற்கு ஒரு வாயுறை...' என்கிறது, திருமந்திரம். பசுவிற்கு ஒரு வாய் புல் தருவது, புண்ணியம் என்பது அதன் பொருள்.
வறட்சியை தாங்கி, ஆண்டு முழுவதும் விளைச்சல் தரும் சிறுதானியம், பசி, பஞ்சத்தை மனித இனம் அறியாதவாறு பாதுகாத்தது. சிறுதானியத் தட்டைகள், பசுவிற்கு நல்ல தீவனமாக அமைந்தன. எனவே, பூமிக்கு பசுவின் சாணம் பஞ்சமின்றி கிடைத்தது.
இயந்திரக் கலப்பையை அறிமுகப்படுத்திய போது, அதை எதிர்த்தார், பொருளாதார மேதையும், காந்தியவாதியுமான, ஜே.சி.குமரப்பா. அதற்கு அவர் சொன்ன காரணம் - இயந்திரக் கலப்பை, சாணி போடாது. இந்த மண்ணில் இருந்து இன்று எல்லாம் போய் விட்டன.
கடும் வெயிலையும், கடுங்குளிரையும், கன மழையும் எதிர்த்து உயிர் வாழ்ந்தன, நம் நாட்டு கோழிகள், சிறுதானியங்கள், நாட்டு மாடுகள், நாட்டு நாய்கள். இன்று அவை, அழிவின் விளிம்பில் உள்ளன.
ஒரு பொருளை தடை செய்யும் போது தான், அதை நுகர வேண்டும் எனத் தோன்றும். ஒரு பொருளை வலுக்கட்டாயமாக திணிக்கும் போது தான், அதை வெறுக்க தோன்றும்; இது மனித இயல்பு.
அன்னிய துணிகள் நம் மீது திணிக்கப்பட்டன. எனவே, கதரை காப்பாற்ற வேண்டி போராடினர்; அன்னிய துணியை தீயிட்டு கொளுத்தினர், நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள்.
வீரியமிக்க நாட்டு மாடுகளை அழிக்க வேண்டும் என்பதால் தான், ஜல்லிக்கட்டை ஆயுதமாக எடுத்துள்ளன, பன்னாட்டு நிறுவனங்கள். ஆனால், அந்த தடை முயற்சியே, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்த விழிப்புணர்வு, இனி நாம் காட்டும் அக்கறையில் தான் உள்ளது.
நாம் மீட்க வேண்டியது, ஜல்லிக்கட்டை மட்டுமல்ல. இதை துவக்கப்புள்ளியாக வைத்து, இழந்த சொர்க்கத்தையும் மீட்க வேண்டும்; மாட்டை மட்டுமல்ல; நாட்டையும் மீட்க வேண்டும்.
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் சாயங்களை, நம் பின்னலாடை நிறுவனங்கள் பயன்படுத்தின. இன்று, நொய்யல் என்ற நதி மரணித்து விட்டது. இனி, அது மீண்டும் வருமா என்பது சந்தேகமே.
நம் கலாசாரமும், பண்பாடும் தான், நம் சந்ததியை காப்பாற்றும். கடந்த ஆண்டு வீசிய, 'வர்தா' புயலில், அன்னிய மரங்கள் அடியோடு சாய்ந்தன; நம் நாட்டு மரங்கள் நங்கூரமாக நின்றன.
வர்தா புயல் போல, ஒரு புயலோ, நோயோ, வறட்சியோ, குளிரோ, வெப்பமோ ஏற்பட்டால், கலப்பின மாடுகள், கோழிகள், உணவுப் பொருட்கள் அழிந்து போவது மட்டுமின்றி, நம்மையும் அழித்து விடும். எனவே, இதயத்தால் இணைந்து, இழந்த சொர்க்கத்தை மீட்போம்; இளைய பாரதமே வாருங்கள்!
இ - மெயில்: asussusigmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • R Ganesan - Riyadh city,சவுதி அரேபியா

  அருமையான பதிவு ....செல்வதை தேடி ஓடியவர்கள் இன்று தன் உடல் நலம் காக்க முதிர்ந்த வயதிலும் தள்ளாடும் வயதையும் மறந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறான் ஆனால் நமது பாரம்பரியத்தின் உணவு பழக்கத்தையும் , கலாச்சாரத்தையும் , நம்மை சூழ்ந்திருந்த காடுகளையும் அளித்து நகரவாழ்க்கையை தேடியவன் இன்று சுத்தமான காற்றுக்காக ஏங்குகிறான் . நாகரீகத்தை தேடிய நாம் நமது கலாச்சாரம் மறைமுகமாக கொடுத்த எத்தனையோ நல்லதை இழந்துவிட்டோம் . படிப்பறிவில்லாத நமது முன்னூர்கள் தெரியாமல் செய்த எத்தனையோ விஷயங்களில் ஒளிந்திருந்தது நல்லது . மேலே இருந்த கட்டுரையில் ஒவ்வொரு வரிகளும் வார்த்தையும் நம் உணர்வுகளில் இருந்து நெடுந்தூரம் சென்றுவிட்டது . கட்டுரையின் முதல் வரி என்னை சிந்திக்க வைத்தது .

 • ponmuthu - chicago,யூ.எஸ்.ஏ

  தமிழ்ச்செல்வங்களே சிறு விதி ஒன்று செய்யுங்கள். உழவன் பாமரனானாலும் இலக்கணம் தெரிந்தவன். அவன் சேறு என்பதில் 'கால்' போட்டு நாமுண்ணும் சோறு செய்கிரான். நம்மில் சிலர் உண்ணும் முன் அன்னபூரணி என்றும் பரமபிதா என்றும் வணங்கி சோற்றில் கை வைக்கின்றோம். ஆனால் உழவனை நினைத்து நன்றி சொல்லி, நன்றி உணர்ந்து, நன்றி செய்து உண்பதில்லை. நமக்கு உய்வு வேண்டுமானால் நாளில் ஒரு முறையாவது உழவனுக்கு நன்றி சொல்லி, உணர்ந்து, நன்றி செய்து உண்ணுங்கள். இது நம் உள்ளத்தில் ஊன்றி நம் செயலால் உழவனுக்குப் போய்ச்சேரும்போது மாற்றங்கள் வரும்- பொன்முத்து, அமெரிக்க வாசகர்

 • மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா

  asussusi@gmail.கம அவர்களே, இழந்த சொர்கத்தை மீட்க மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுக்குமா? அல்லது உங்கள் கூற்று செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆகுமா? பொறுத்திருந்து பொறுத்திருந்து பார்த்துக்கொண்டே இருக்கவேண்டியதுதானா? ஷ்.... இப்பவே கண்ணைக்கட்டுதே.

 • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

  சிறப்பான பதிவு .நன்றி அய்யா .

 • Manian - Chennai,இந்தியா

  இதில் பல உறுதி செ்யப்படாத சொந்தக் கருத்துக்கள் உள்ளன.(1)அரசில் அரசாங்க வியாதிகளில் மக்கள் நலனை சிந்திக்கும் திறன் உள்ளவர்கள் 0.0001% இரு்தால் அதிகம்.அவர்கள்தான் முதல் தடுப்பணைகள்.ஆகவே எந்தவித மருத்துவ கட்டுப்பாடும் இல்லை (2) பொதுவாக, எப்படியும் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற வியாபாரிகள்(3)நாட்டு கோழி, பசு,மாடுகளை எப்படி மரபணு மாற்றம் மூலம் மேன்மைப் படுத்தலாம்,இயற்கை உணவு உற்பத்தியில் அவற்றை ஈடுஉ படுத்தலாம் என்ற ஆராய்ச்சிகள் செய்யாத விவசாய கழகங்கள், பே-ராசிரிர்கள்,மாணவ்கள்...(4)டீவீ சீரில் பார்த்து, விளம்பரத்தை நம்பி ஏமாறும் காகித படிப்பு தாய்மார்கள்,(5)விலை குறைவாக,பொருளதிகாக வேண்டும் என்ற பொதுவான மனப்பான்மை (6) சுயமாக சிந்திக்க தெரியாத, வரட்டு கொளரவம் பார்கும் மக்கள் என்ற காரணங்களை,மக்களே உள் உணர்வால்,தகுதிக்கு விலை அதிகம் என்பதை உணரும் போதுதான் மாற்றங்கள் வரும். உண்மை எப்போதும் சுடும். சொர்கத்தை இழந்து விட்டோம் என்பதை உணரவைக்க என்ன செய்ய வேண்டும், யார், எப்படி செய்ய வேண்டும் என்பதை பிறறை குறை சொல்லாமல் ஆக்க வழியில், அறிவுப் பூர்வாமாக சொல்லுவீர்களா?

Advertisement