Advertisement

எல்லா நாளும் இனிய நாளே!

மனிதனின் வாழ்வை தீர்மானிப்பது மனதில் தோன்றும் எண்ணங்கள்தான். 'எண்ணம் போல் வாழ்வு' என்ற கூற்று அதை அழகாகவிளக்குகிறது. நேர்மறை எண்ணங்கள் உடைய மனிதர்கள் எப்போதும் உற்சாகம், வெற்றியாளர்களாக இருக்கின்றனர்.
திருவள்ளுவர்,
'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினும் தள்ளாமை நீர்த்து,'
என குறளில் கூறியுள்ளார். அதாவது எப்போதும் உயர்வானவற்றை எண்ண வேண்டும். அவை தவறினாலும், அந்த எண்ணத்தை கைவிடல் ஆகாது என்பது அதன் பொருள்.விவேகானந்தர், 'நீ எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்,' என்கிறார். நம்மை வலிமையுள்ளவர்களாக நினைத்தால், சிறப்பான செயல்களைச் செய்ய முடியும். வலிமையற்றவராக நினைத்தால் செயல்களைப் பற்றி சிந்திக்கக்கூட இயலாது.

எல்லை எங்கே
வாழ்வில் முன்னேற நம்மிடம் எப்போதும், நேர்மறையான எண்ணங்கள்தான் இருக்க வேண்டும். கன்னியாகுமரி கடற்கரையில் நின்றுகொண்டு கடலைப் பார்த்து, இந்தியாவின் எல்லை இங்கேதான் முடிவடைகிறது என எண்ணுவதைவிட, நிலத்தைப் பார்த்து திரும்பி நின்று, இந்தியா வின் எல்லை இங்குதான் துவங்குகிறது என நினைக்க வேண்டும்.
தாமஸ் ஆல்வா எடிசன்
பள்ளியில் படிக்கும்போது, ஒருமுறை, பாதியிலேயே வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவரிடம் பள்ளி நிர்வாகம் ஒரு கடிதம் கொடுத்தது. அதை வீட்டில் தாயிடம் கொடுத்தார் எடிசன். கடிதத்தைப் பார்த்து அவரது தாய் கண் கலங்கினார். எடிசன்,'அதில் என்ன எழுதியிருக்கிறது?' என்றார். தாய், 'அம்மா உங்கள் மகன் மிகவும் திறமைசாலி, பெரியஅறிவாளி, அதீத புத்திசாலி. அவருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு திறமையான ஆசிரியர்கள் பள்ளியில் இல்லை. உங்கள் வீட்டிலேயே படிக்க வைத்துக் கொள்ளவும்,' என எழுதப்பட்டுஉள்ளதாக உரக்கப் படித்தார்.
நேர்மறை எண்ணங்கள்
காலங்கள் உருண்டோடின. எடிசன் மிகப் பெரிய விஞ்ஞானியாகி, பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறிந்தார். அவரது தாய் வயது முதிர்வால் மரணமடைந்தார். ஒரு நாள் ஓய்வு நேரத்தில் வீட்டில் உள்ள அறையைச் சுத்தம் செய்தபோது, பள்ளி நாட்களில் பள்ளி நிர்வாகத்தால் அவருக்கு வழங்கப் பட்ட கடிதம் கிடைத்தது. ஆர்வத்தில் அக்கடிதத்தை எடுத்து எடிசன் படித்தார். அவரது கண்கள் கண்ணீரால் குளமாகியது. அதில், 'உங்கள் மகன் மன வளர்ச்சியில்லாதவன், மனவளர்ச்சி குன்றியவன். கல்வி கற்கத் தகுதியற்றவன். அவனுக்கு பாடம் நடத்தும் அளவிற்கு எங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை. உங்கள் வீட்டிலேயே வைத்து படிக்க வையுங்கள்,' என எழுதப்பட்டுஇருந்தது. அத்தாயின் நேர்மறையான அணுகுமுறையால் நமது தேவைகளை பூர்த்தி செய்யும் அறிவியல் கண்டுபிடிப்புகளை தந்த ஒருவிஞ்ஞானி கிடைத்ததை சொல்லித் தான் தெரிய வேண்டுமா...,?
நெருங்கும் வெற்றி
நேர்மறையான வார்த்தைகளையே பேசிப் பழக வேண்டும். நேர்மறையான எண்ணங்கள், பேச்சுக்களே நமது உயர்விற்கு என்றுமே வழிவகுக்கும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை. எப்போது நாம் நேர்மறையான எண்ணம், பேச்சோடு செயல்படுகிறோமோ அப்பொழுதே வெற்றி நம்மை நோக்கிநெருங்குகிறது என அர்த்தம்.தேர்வெழுதச் செல்லும் மாணவர்கள், 'கண்டிப்பாக நான் தேர்ச்சி பெறுவேன்' என நினைத்து தேர்வெழுதும்போது, தேர்ச்சி பெறுகின்றனர். தேர்ச்சி சந்தேக மாக உள்ளது என நினைத்து தேர்வெழுதினால், எண்ணம் போல் தோல்வியடைகிறான். செயல்களை நேர்மறை எண்ணத்துடன் செய்தால் வெற்றி நிச்சயம்.
தன்னம்பிக்கை தவளை
தவளைகளுக்கிடையே போட்டி நடந்தது. எல்லையிலிருந்து சிறிது துாரம் ஓடிச் சென்று, அருகில் உள்ள கோபுர உச்சிக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் போட்டி யின் விதி. அதிக தவளைகள் பங்கேற்றன. போட்டியைக் காண வழி நெடுகிலும் கூடியிருந்த மக்கள், 'இது மிகவும் கடினம். தவளைகளால் கோபுரத்தின் மீது ஏறமுடியாது. அதன் உச்சியை அடைய முடியாது,' என்றனர். இதைக் கேட்ட சில தவளைகள் சோர்வடைந்தன, சில போட்டியிலிருந்து விலகின. இறுதியில் ஒரு தவளை மட்டும் மிக வேகமாக ஓடி, கோபுரத்தின் உச்சியை அடைந்தது. இது எப்படி சாத்தியமாயிற்று! பார்வையாளர்களுக்கு மிக ஆச்சரியம். உண்மை என்னவெனில், கோபுர உச்சிக்குச் சென்று வெற்றி பெற்ற தவளையானது காது கேட்கும் திறனை இழந்ததாகும்.இக்கதை நமக்கு உணர்த்தும் நீதியானது, நாம் செயலில் ஈடுபடும் போது மற்றவர்கள் கூறும் எதிர்மறை வார்த்தைகளை பொருட்படுத்தக்கூடாது. அவை நம் மனதை பாதித்து, இலக்கை அடைய முடியாமல் செய்துவிடும். குறிக்கோளை அடைய நேர்மறையான எண்ணத்தோடு தீவிரமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
யார் நண்பர்கள்
நேர்மறை எண்ணம் கொண்டவர்களையே நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். பஸ் டிரைவர்கள் தங்கள் அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் உறங்குவதை அனுமதிக்கமாட்டார்கள். இதன் 'லாஜிக்' என்னவெனில், பல நேரங்களில், நம் செயல்பாடுகள் அருகிலிருப்பவர்களைப் பொறுத்துத்தான் அமைகிறது. உற்சாகமானவர்கள் உடன்இருந்தால், உறுதியாக வெற்றி நிச்சயம். எல்லாச் சூழலிலும் நகைச்சுவை உணர்வை வெளிக்கொணர்வதின் மூலம், மன அழுத்தம் குறைவதை உணர முடியும்.எச்செயலையும் இதற்கு முன் நான் செய்ததில்லை; இதைஎவ்வாறு செய்வது? என யோசிப்பதைவிட, இது நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என உணர்ந்து, நேர்மறையான அணுகுமுறை மூலம், திறமையாக செயல்பட வேண்டும்.
நேர்மறை சிந்தனை
நேர்மறையான மேற்கோள்களை உங்கள் வீட்டுக் கதவு, முகம் பார்க்கும் கண்ணாடி, பிரிட்ஜ் கதவு களில் எழுதி ஒட்டி வைத்துக் கொள்ளவும். அதை தினமும் பார்க்கும்போது, நல்லெண்ணங்கள் நம் மனதில் விதைக்கப்படுகின்றன. மனதை அமைதிப்படுத்த, கவலை தரும் எந்த விஷயத்தை யும் சிந்திக்காமல், அதிகாலையில் துாய்மையான இடத்தில் அமர்ந்து, 30 நிமிடங்களாவது நேர்மறை சிந்தனையுடன் தியானம் செய்ய வேண்டும். துவக்கத்தில் இது கடினமாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால், தொடர்ந்து செய்து வரும்போது, நல்லெண்ணங்களின் அதிர்வலைகளால் சூழப்பட்டு, எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையோடு வாழ முடியும்.இதை நாம் கடைப்பிடித்து, நம்மைச் சுற்றியுள்ளோரையும் கடைபிடிக்கச் செய்தால் எல்லா நாளும் இனிய நாளே. பொதுவாக எண்ணெய் நன்றாக இருந்தால் சமையல் ருசிக்கும். எண்ணம் நன்றாக இருந்தால் வாழ்க்கை ருசிக்கும் என்பதை உணர்ந்து வாழ்வோமாக..!
-எஸ்.ராஜசேகரன்முதுகலை ஆசிரியர்இந்து மேல்நிலைப்பள்ளிவத்திராயிருப்பு. 94429 84083

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement