Advertisement

என்றும் நான் பாடகிதான் ...மகாநதி ஷோபனா

தமிழ் திரையுலகம் தந்த இசை நதி... இளையராஜா அறிமுகபடுத்திய தமிழிசை நதி... இன்றும் இன்னிசைத்துறையில் வற்றாத ஜீவ நதி... அரங்கனின் பாடலால் அகிலம் அறிந்த அருள் நதி...கர்நாடக பாடல் முதல் காவடி சிந்து என அனைவரது மனதையும் இன்றும் கொள்ளை கொள்ளும் தமிழிசைப்பேரொளி மகாநதி ஷோபனா.'தினமலர் சண்டே ஸ்பெஷல்' பகுதிக்காக இவரிடமிருந்து இன்னிசையாக உதிர்த்த முத்துக்கள் இதோ உங்களுக்காக ...

* எப்படி செல்கிறது இசைப்பயணம் சென்னையில் நடக்கும் மார்கழி உற்சவம் நவம்பர் கடைசியில் துவங்குவது மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இங்கு அனைத்து தமிழ் கவிஞர்களின் அரிய பாடல்களை கொடுப்பதால் மிகவும் சிறப்பாக அமைகிறது.

* இன்றைய தலைமுறையினரின் வரவேற்பு பெரியவர்களிடம் மட்டுமே ஈர்ப்பை ஏற்படுத்திய இன்னிசை கச்சேரிகள், தற்போது இளைஞர்கள், மாணவர்களிடமும் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் தமிழ் பக்தி பாடல்கள் பாடுவதை இன்றைய தலைமுறையினர் மிகவும் வரவேற்கின்றனர். மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது.

* 'மகாநதி'யில் நடித்த அனுபவம்5 வயது முதலே சங்கீதம் கற்றேன். 12 வயதில் 'மகாநதி'யில் நடித்ததின் பலன் கோடிக்கணக்கான மக்களிடம் என்னை கொண்டு சென்றது. 22 ஆண்டுகள் ஆகியும் அந்த படத்தில் வரும் ஸ்ரீரெங்கநாதர் பாடல் அன்று போல் இன்றும் கைத்தட்டல், ஆரவாரம் தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. வாய்ப்பை கொடுத்த இளையராஜாவிற்கு நன்றிகடன்பட்டுள்ளேன்.

* 'மகாநதி'யை மிஸ் செய்திருந்தால்...இன்றும் இசைப்பாதையில் தான் பயணித்திருப்பேன். இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. மகாநதி மூலம் தான் மிக விரைவாக பெயரும், புகழும் கிடைத்தது. சினிமாவில் நடித்திருந்தாலும் என்றும் பாடகியாக இருப்பது தான் ஆசை.

* இன்றும் மக்களை ஈர்ப்பது எப்படி...பாரதியாரின் பாடல்களே இதற்கு காரணம். எப்போதும் அவரின் பாடல் புத்தகங்களை அதிகளவில் படிப்பேன். அதில் சொல்லப்படும் அரிய தகவல்களை எளிதாக, மக்கள் விரும்பும் வகையில் பாடுகிறேன். நாச்சியார் திருமொழி, வள்ளலார், தியாகராஜபாகவதர், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்களை ரசிக்கும் வகையில் பாடுவதால் எனது இசை மீது மக்களுக்கு ஓர் ஈர்ப்பு, ஆனந்தம், மகிழ்ச்சி.

* இசையில் உங்களின் இலக்கு ...மக்கள் விரும்பும் வகையில் தமிழில் அதிக பாடல்களை புதிய மெட்டுக்களுடன் கொடுக்க வேண்டும். தாய்மொழியில் பாடல்கள் வழங்கி, அனைவரது மனதிலும் இடம் பெறும் வகையில் இசையை கொண்டு செல்ல விரும்புகிறேன்.

* பெண்கள் கல்வி குறித்து...கிராமத்திலிருந்தாலும், நகரத்திலிருந்தாலும் அனைவருக்கும் கல்வி அவசியம். அது தன்னம்பிக்கையை கொடுக்கும். அறிவு, அன்பு, பண்பு, ஆளுமைத்திறனை உருவாக்கி, எதிர்கால சமுதாயம் நல்லபடியாக அமைய பெண்கள் உயர்கல்வி பெறவேண்டும். அது பெண்களுக்கு சிறப்பைத்தரும். நான் எனது திருமணத்திற்கு பின்பு தான் பி.எச்.டி., முடித்தேன்.

* பெண்களுக்கான தங்களது அறிவுரை ...என்ன தான் புதுமையை விரும்பினாலும், பழமையை மறந்து விடக்கூடாது. எப்படி இருக்கவேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை. பழமையில் நமது முன்னோர்கள் அரிய தகவல்களை விட்டு சென்றுள்ளனர். அதை பின்பற்றி தமிழ் கலாசாரத்தை கடைப்பிடித்தால் பெண்களின் மதிப்பு அதிகரிக்கும். எதிர்கால தமிழ் கலாசாரமும் சிறப்பாக அமையும். இதை ஒவ்வொரு பெண்ணும் கடைப் பிடிப்பது அவசியம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • shankar - chennai,இந்தியா

    கலாச்சாரத்தில் ஒரு மைல் கல் இவர் நன்றி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement