Advertisement

அசைவ உணவு விடுதிகளை மூடுமா உச்ச நீதிமன்றம்?

இப்படியொரு தலைப்பில் எழுத நேர்ந்ததற்கு, உண்மையிலேயே மனம் வருத்தமடையத் தான் செய்கிறது. ஆனால், சமீபகாலமாக, நீதித் துறையின் உத்தரவுகள், இப்படியொரு கேள்வியை எழுப்ப செய்துவிட்டன. அதற்கு முக்கிய காரணம், ஜல்லிக்கட்டு. அதற்கு முன், சில உதாரணங்களையும் பார்ப்போம். சென்னையில் வசிக்கும், 'டிராபிக்' ராமசாமி என்பவர், நாட்டில் எங்கெல்லாம் சட்ட மீறல்கள் நடந்தாலும், அவற்றை எதிர்த்து, சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். உதாரணமாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் தலைமையில், கிரானைட் குவாரிகள் முறைகேடுகளை ஆராய, விசாரணை கமிஷன் அமைந்ததற்கு, 'டிராபிக்' ராமசாமி தான் காரணம். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக, அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்கள், 'பிளக்ஸ் போர்டு'கள் வைப்பதை எதிர்த்து, இவர் போராடி வருகிறார். எங்கே பெரியளவில் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தாலும், அங்கே அவர் ஆஜராவார்; அதை அகற்றச் சொல்லி போராடுவார்; முடியவில்லை என்றால் வழக்கு தொடுப்பார். சமீபத்தில், மறைந்த ஜெயலலிதா வீட்டருகே, அந்த பகுதிமக்களுக்கு இடையூறாக, போலீஸ் குவித்து வைக்கப்பட்டிருந்ததை எதிர்த்து, அவர் நீதிமன்றத்தை நாடிய போது, வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தள்ளுபடி செய்ததோடு விட்டிருந்தால் பரவாயில்லை. 'அங்கே உனக்கு என்ன வேலை...' என, கேட்கவும் செய்தது. அங்கே வசிப்பவர்கள், நடிகர் ரஜினிகாந்த் உட்பட, அனைவரும் மேட்டுக்குடியினர். அவர்களால், இது போன்ற விஷயங்களுக்காக கோர்ட் படி ஏறிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் சார்பில் இவர், தானே முன்வந்து, பொதுநல வழக்கை தொடர்ந்தால், 'அங்கே உனக்கு என்ன வேலை...' என, கோர்ட் கேலியாகக் கேட்டது, அவ்வளவு நாகரிகமாகத் தெரியவில்லை.
காவிரியிலிருந்து, தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீரை, கர்நாடகா திறந்துவிட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 'உனக்கும் பெப்பே; உங்கப்பனுக்கும் பெப்பே... ஒரு சொட்டுத் தண்ணீர் கூட திறந்துவிட முடியாது' என, கர்நாடக அரசு, இன்று வரை உறுதியாக நிற்கிறது. உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் வேடிக்கை தான் பார்த்து கொண்டிருக்கின்றனவே தவிர, தீர்ப்பை மதிக்காத, கர்நாடக அரசு மீது ஒரு கண்டனம் கூட தெரிவிக்க இயலாத, கையறு நிலையில், கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றனவே தவிர, தீர்ப்பை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கும், கர்நாடக அரசின் மீது நடவடிக்கை இல்லை.

இதுவா, தேசிய ஒருமைப்பாடு... அரசியல் நிர்ணய சட்டம் இதைத் தான் வலியுறுத்திக் கொண்டிருக்கிறதா? பெரியாறு அணை வலுவுடன் தான் உள்ளது; அதில் தாராளமாக, 142 அடி வரை தண்ணீரை தேக்கலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், 'அணை வலுவாக இல்லை. பக்கத்திலேயே புதிதாக ஒரு அணை கட்டியே தீருவோம்' என, கேரள அரசு முரண்டு பிடித்து கொண்டிருப்பதோடு, புதிய அணை கட்ட பணிகளையும் துவக்கி விட்டது.
மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும், கையை கட்டிக் கொண்டும், வாயைப் பொத்திக் கொண்டும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கின்றன தவிர, கேரள அரசை தட்டிக் கேட்க முன்வரவில்லை.

ஏறு தழுவுதல் என்றும், மாடு பிடி என்றும், பணத்தை மாட்டின் கொம்பில் கட்டுவதால், 'சல்லிக்கட்டு' என்றும் அழைக்கப்படும், ஜல்லிக்கட்டுக்கு மட்டும் விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள, உச்ச நீதிமன்றம் முன்வருவதாக இல்லை. மத்தியில் ஆளும் அரசும், அது குறித்து அக்கறை எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை.ஜல்லிக்கட்டு என அழைக்கப்படும், மாடு பிடி விளையாட்டு, இன்று, நேற்று துவங்கியதல்ல; சங்க காலம் தொட்டு நிகழ்ந்து வரும், ஒரு வீர விளையாட்டு. இந்த வீர விளையாட்டில், வீரர்கள் தான் காயம்படுவர்; சமயங்களில் உயிரையும் விடுவர்; மாடுகளுக்கு சிறு சிராய்ப்பு கூட ஏற்படாது. அப்படி இருக்கும் போது, மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்பதை, எந்த மகானுபாவன் கண்டு பிடித்தான்... அதை, பிராணிகள் நல வாரியத்தில், 'போட்டுக் கொடுத்து' அந்த வீர விளையாட்டுக்கு தடை ஏற்படுத்தினான் என்பது தெரியவில்லை. ஜீவ காருண்யம் குறித்து, பிராணிகள் நல வாரியமான, அமெரிக்காவின், 'பீட்டா' தமிழர்களுக்கு வகுப்பு எடுக்கத் தேவையில்லை. 'அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை' என உபதேசித்த, ஜோதி ராமலிங்க அடிகளார், 200 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக் கூறி
இருக்கிறார். தைப் பூச நாளன்று, ஜோதி தரிசனம் தரும், கடலுார் மாவட்டம், வடலுாரில், இன்றளவும் அவர் ஏற்றி வைத்த தீபம், அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதோடு, பசி என வருவோருக்கு, உணவை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. பிராணிகள் நல வாரியத்திற்கு, உண்மையிலேயே பிராணிகள் மீது அக்கறை இருக்குமாயின், நடிகர் கமல்ஹாசன் கூறுவது போல, பிரியாணிக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கட்டும்; நாடு முழுவதும் உள்ள அசைவ உணவு விடுதிகளை மூட உத்தரவு பிறப்பிக்க, உச்ச நீதிமன்றத்தை நாடட்டும்.
அது மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள, கோழிக்கறி மற்றும் ஆட்டு இறைச்சிக் கடைகள், மீன் மார்க்கெட்டுகள் அனைத்தையும் மூட நடவடிக்கை எடுக்கட்டும். முதலில், அந்த குழுவின் உறுப்புகளில் ஒன்றாக உள்ள, கே.எப்.சி., எனப்படும், உலக நாடுகளில் வியாபித்துள்ள, அமெரிக்க கறிக்கோழி உணவுக்கடை, அதற்கு ஒத்துக் கொள்கிறதா என, பார்க்கட்டும்.
காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரையுள்ள அத்தனை மக்களும், அசைவ உணவைத் தவிர்த்து, வெறும் சைவ உணவை மட்டுமே உண்ண வேண்டும் என, ஒரு அவசர சட்டம் பிறப்பிக்க ஆவன செய்யட்டும். செய்வரா... செய்ய முடியுமா?
மாடு மட்டும் தான் பிராணியா... கோழி, ஆடு, மீன், மான் போன்றவை எல்லாம் பிராணிகள் இல்லையா... ஜல்லிக்கட்டுக்கு நேர்ந்துள்ள தடையை வைத்து, தமிழக அரசியல் கட்சிகள் நடத்தும் அலப்பறை, தனிக் கதை. எந்த கட்சி தடையை உருவாக்க உறுதுணையாக இருந்ததோ. அந்தக் கட்சியே, அந்தத் தடையை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது தான் உச்ச கட்ட, 'காமெடி!'
ஜல்லிக்கட்டு என்பது, பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஒரு வாரம் வரை நடத்தப்படும் நிகழ்ச்சி தானே! ஒரு வாரம் கடத்தி விட்டால், மெதுவாக மறந்து விடுவர்... அதோடு, அடுத்த ஆண்டு தான் ஜல்லிக்கட்டு குறித்து பேச்சு எழும் என, உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் கருதி இருக்கலாம். அங்கே தான் அவை, தவறிழைத்து இருக்கின்றன.
எப்படி, கர்நாடக மாநிலமும், கேரள அரசும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை உதாசீனப்படுத்திக் கொண்டிருக்கிறதோ, அந்த முன்னுதாரணம், இந்த ஜல்லிக்கட்டு தடை விஷயத்தில் தடையை மீற, வசதியாகி விட்டது. தமிழகம் முழுவதும், பல இடங்களில் தடையை மீறி, ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும், தங்கள் முகங்களை இப்போது எங்கே கொண்டு வைத்துக் கொள்ளும்... இந்த ஜல்லிக்கட்டு விஷயத்தில், உடனடியாக முடிவெடுத்து, உரிய நேரத்தில் தடையை விலக்கி உத்தரவிடாமல், பிராணிகள் நல வாரியத்தின் பக்கமே ஒருதலை பக்கமாக சாய்ந்து நின்றதன் விளைவு, உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும், மதிப்பையும், மரியாதையையும், இழந்து நிற்கின்றன என்பது தான் நிதர்சனம்.
இந்த நாட்டு மக்களுக்கு, நீதி கிடைக்கும் ஓர் இடம் என்ற நம்பிக்கை, உச்ச நீதிமன்றத்தின் மீது இருந்தது. ஜல்லிக்கட்டு விஷயத்தில், அந்த நம்பிக்கை நொறுங்கியதோடு, உச்ச நீதிமன்றத்தின் நேர்மையும் கேள்விக்குரியதாகி விட்டது. இனி மேலும், உச்ச நீதிமன்றத்தில் நியாயமான நேர்மையான தீர்ப்பு கிடைக்கும் என நம்ப, தமிழக மக்கள் தயாராக இல்லை என்பது தான் உண்மை.

- எஸ்.ராமசுப்ரமணியன் -
எழுத்தாளர், சிந்தனையாளர்

இ - மெயில்: essorresgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • spr - chennai,இந்தியா

  இந்த நாட்டு மக்களுக்கு, நீதி கிடைக்கும் ஓர் இடம் என்ற நம்பிக்கை, உச்ச நீதிமன்றத்தின் மீது இருந்தது. ஜல்லிக்கட்டு விஷயத்தில், அந்த நம்பிக்கை நொறுங்கியதோடு, உச்ச நீதிமன்றத்தின் நேர்மையும் கேள்விக்குரியதாகி விட்டது. இனி மேலும், உச்ச நீதிமன்றத்தில் நியாயமான நேர்மையான தீர்ப்பு கிடைக்கும் என நம்ப, தமிழக மக்கள் தயாராக இல்லை என்பது தான் உண்மை. இது மாடுகளைத் துன்புறுத்தும் ஜல்லிக்கட்டு என்ற காரணத்திற்காக நீதிமன்றம் அளித்த தீர்ப்பல்ல. இதே போல சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிரான ஒரு வழக்கில் மதம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் தலையிடாது எனச் சொன்ன நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனத்தைத் தனது வசம் எடுத்து அதன் மூலம் நீதிமன்றத்தை அடக்க நினைக்கும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க இயல்பாகவே, அவர்களுக்கு கிடைத்த ஓரு வாய்ப்பு. இல்லையேல் ஊரறிந்த மாறன் சகோதரர்கள் மீதான வழக்கை சரியான சாட்சியங்கள் இல்லையென்று தள்ளுபடி செய்த நீதித்துறை இந்த வழக்கை விசாரித்திருக்குமா? அதை விடுங்கள் அண்மையில் நாமக்கல்லில் பேருந்திற்காக நின்று கொண்டிருக்கையில் அருகில் ஒரு சாக்கு மூட்டைக்குள் ஏதோ ஒரு சலனம் இருக்கக்கண்டு அருகிலிருந்த பெரியவரிடம் சொல்ல, அவர் மிகவும் இயல்பாக "அட அதொண்ணுமில்லே ஆட்டை கழுத்தறுத்து போட்டிருக்கான் ரத்தம் வடிந்ததும் வெட்டிடுவான்" என்றார். திடுக்கிட்டு விசாரித்ததில் ஆட்டு ரத்தம் சேகரிக்க அப்படியொரு வழியாம் "ஆட்டு ரத்தப் பொரியல்" என்று ஒரு கடை வாசலில் படித்தது இதுதானோ இதற்கு நீதிமன்றம் என்ன சொல்கிறது? இன்னொரு சமயம் ஆவடியில் கடை வாசலில் ஒரு பெண்ணும் ஆணும் வீட்டு பிரச்சினை குறித்த ஆழ்ந்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர் அந்தப் பெண் தனது கூடையிலிருந்து சிறு கோழிக்குஞ்சுகளை எடுத்து வெளியில் விட்டார் என்ன அழகு அவை சின்னஞ்சிறு காலெடுத்து நடந்து வந்தன அந்த பெண் ஒவ்வொன்றாக எடுத்து அலட்சியமாக ஒரு உணர்ச்சியுமின்றி தரையில் ஓங்கி அடித்துக் கொன்றார் அவற்றின் சிறகுகளை பிய்த்து எறிந்தார் பாத்திரத்தில் போட்டு எடுத்துக்கொண்டு கடைக்குள் சென்றுவிட்டார் சிக்கன் 65 என்கிறார்கள் இதனை நீதிமன்றம் என்ன செய்யும்? ஓரிரு நாளில் முடிந்து போகிற ஜல்லிக்கட்டை வைத்து ஆதாயம் காணுகின்ற அனைவரும் நித்தம் நித்தம் நடக்கும் இது போன்ற பல கொடுமைகளை என்ன செய்யப்போகிறோம் தேவையற்ற விவாதம் போராட்டம் இதுதான் கண்ட பலன்

 • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

  உலகத்திலே மாட்டு கறி ஏற்றுமதி செய்வதில் நாம் முதல் இடம் .நாளை மறுநாள் உச்ச நீதி மன்றம் இது சம்பந்த பட்ட அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு(34 வழக்குகள் ) எடுத்து கொள்ளும் .விலங்கு நல வாரியம் அடங உறுப்பினர்களை வழக்குகளை வாபஸ் வாங்க சொல்லி உள்ளது .அப்போது தான் தெரியும் இந்த அவசர சட்டத்தின் மதிப்பு.3 பேர் உயிர் இழந்து உள்ளார்கள் .ஒரு மாட்டு உயிர் இழந்து உள்ளது .இவை அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ள படும் .மெரினா போராட்டம் அவசியம் கணக்கில் எடுத்து கொள்வார்கள் .50 % தான்வாய்ப்பு உள்ளது

 • Shake-sphere - India,இந்தியா

  இவ்வளவு வயதான பிறகு கூட ஜல்லி கட்டுக்கும் மாமிசம் உண்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடியாமல் இரண்டுக்கும் முடிச்சு போட்டு எழுதும் நீர் இந்த கால கொடுமையின் ஒரு உதாரணம்.மண்ணுக்கு பாரம்

 • Gunasekaran K T - chennai,இந்தியா

  உச்ச நீதிமன்றத்தில் ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யம் நடைபெறவில்லை என்பதை தலைமை நீதிபதி அவர்கள் உறுதி படுத்தவேண்டும். இதுவே மக்களின் நியாயமான கோரிக்கையாக இருக்கமுடியும். வாதாடும் வழக்கறிஞர்கள் நேர்மையும் தர்மத்தையும் ஒன்று சேர்த்து சட்டத்தை அணுகவேண்டும். சட்டம் அதன் அடிப்படையிலேயே அமையவேண்டும். இந்திய மற்றும் மாநில பண்பு, கலாச்சாரம், நடைமுறைகள் போன்றவற்றின் அடிப்படையில் இருக்கவேண்டும். தேவையான மாற்றங்களை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும்.

 • Mohan Nadar - Mumbai,இந்தியா

  சைவ பிரியர்களுக்கு அல்ல சைவ வெறியர்களுக்கு , பாக்டீரியா என்பது ஒரு உயிரி அதனாலே ஆண்டி பயோடிக் மாத்திரைகளை உண்ணாதீர்கள்,அது உயிரினங்களை கொல்லும் மருந்து.கொசு வர்த்தியை உபயோக படுத்தாதீர்கள்.கொசுவும் ஒரு உயிர் .

 • kmish - trichy,இந்தியா

  நீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறது என்று அரசியல் வாதிகளும் , அதிகாரிகளும் நடத்தும் நாடகம்

 • murasu - madurai,இந்தியா

  இந்த கட்டுரை அசைவ உணவுக்கு எதிரானது அல்ல. கையாலாகாத நயவஞ்சக மோசடி அரசின் மீதும் , பல்லு போன உச்ச நீதி மன்றத்தின் மீதும் தான் . மத்திய அரசும் , உச்ச நீதிமன்றமும் தன் மாண்பை இழந்துவிட்டன. அரசியல் லாபத்துக்காக உச்ச நீதிமன்ற அவமதிப்பை காவிரி , முல்லை பெரியாறு விஷயத்தில் அனுமதித்த மத்திய அரசு , அதே உச்ச நீதிமன்றத்துக்கு பயப்படுவது போல் காட்டுவது ரொம்ப காமெடி . இவனுக பூச்சாண்டி விளையாட்டை தமிழன் இனியும் நம்பமாட்டான் . கட்டுரையின் கருத்து நன்று . பீட்டாவையும் , பிராணிகள் நல அமைப்பின் செயல்பாட்டையும் , அதன் தலைவர்களின் வங்கி கணக்குகளையும் சற்று சோதனை செய்தால் நல்லது . திருடன் கிட்டயே சாவி இருக்கு , திருடனையே விசாரிக்க சொல்வது போல் இருக்கும் இந்த விசாரணை . நேர்மை அற்ற ஆட்சியாளன் கையில் நாடு என்னவெல்லாம் சந்திக்க போகிறோமோ இனி .

 • Shree Ramachandran - chennai,இந்தியா

  அசைவ உணவுக்கு எதிராக வலுவான போராட்டம் வந்தால் அவை நிறுத்தப்படும்.

 • sstamil - Chennai,இந்தியா

  இந்தியாவின் உயர்ந்த நாகரிகம் அழிந்த கதை என்று பெரிய நூல் ஒன்றை வெளியிடலாம்.

 • Sundararaman Ramanathan - tiruchi,இந்தியா

  எல்லா நிலைகளிலும் லஞ்சம் ஒழிக்கப்பட்டால் தான் அந்நிய சக்திகளின் ஊடுருவல் தடுக்கமுடியும் .இந்தியாவின் மனசாட்சி சமீபகாலமாக கேள்விக்குறி ஆகிவிட்டது .

 • abu lukmaan - trichy,இந்தியா

  அணுவை தான் நாம் சாப்பிடமுடியாது .அது உயிர் அற்றது .அது தான் சைவம் . molecule அல்லது செல் ஆகும் போது உயிர் வருகிறது . அது அசைவம் ஆகிறது . சும்மா காலம் காலமாக சைவம் , அசைவம்னு பேசிகிட்டு .

 • Paranthaman - kadappa,இந்தியா

  அப்பா பள்ளிக்கு டியூஷன் பீஸ் கட்டணும் பணம் கொடுங்கள்.மகனே இருக்கிற பணத்தை ஜல்லி கட்டில் கட்டிவிட்டேன்.உனக்கு தைர்யமிருந்தால் மாட்டைப்பிடித்து எடுத்துக்கொள்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  கருப்பு உடையில் சில கருப்பு ஆடுகள் என்று யாரோ எழுதிய புத்தகத்தை ஒரு புத்தகத்த திருவிழாவில் பார்த்த மாதிரி ஞாபகம்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  அது தானே. பாராளுமன்ற சட்டமனற வளாகத்தில் நீதி மன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் அசைவ உணவு விற்பனை நிறுத்தப் படுமா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement