Advertisement

அடிமைத்தனத்தை விரும்பாதவர் எம்.ஜி.ஆர்.,! : இன்று நூறாவது பிறந்த நாள்

எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகியவர்களுள் நானும் ஒருவன். அவர் தி.மு.க.,வில் பொருளாள ராக இருந்தார். அப்போது நான்,ராஜாஜியின் சுதந்திரா கட்சி யின் சட்டசபை உறுப்பினராக இருந்தேன்.மதுரையில் நடந்த தி.மு.க., மாநாட்டில், முதலில் கருணாநிதியை பேசுமாறு எம்.ஜி,ஆர்., கூறினார். ஆனால், கடைசியில் பேசுகிறேன் என்று கருணாநிதி கூற, எம்.ஜி,ஆர்., முதலில் பேசினார். அவர் பேசி முடித்ததும் கூட்டம் கலைந்தது. இதில் கருணாநிதி 'அப்செட்' ஆனார். கட்சியின் கணக்குகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியது, பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து, அவர் ஒருமுறை என்னிடம் தெரிவித்திருக்கிறார்.கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர்., தொண்டர்கள் ஆதரவுடன் அ.தி.மு.க.,வை ஆரம்பித்தார். அப்போது காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசும், சுதந்திரா கட்சியும் கூட்டணியில் இருந்தன.எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்தது குறித்து, 'தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என காமராஜர் விமர்சித்தார். ஆனால் ராஜாஜி, 'எம்.ஜி.ஆரை தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றியது அண்ணாதுரையை வெளியேற்றியதற்கு சமம்' என்றார். இது எம்.ஜி.ஆருக்கு ஊக்கமளித்தது.இதன்காரணமாக, ராஜாஜியிடம் ஆசீர்வாதம் பெற முடிவு செய்து, சொன்ன நேரத்தை விட தாமத மாக வந்தார். அப்போது நான் அங்கிருந்தேன்.
கலகலவென சிரிப்பு : ராஜாஜியிடம், 'ஷூட்டிங்கால் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது' என எம்.ஜி.ஆர்., கூற, 'ஏற்கனவே தான் உங்களுக்கு ஷூட்டிங் முடிஞ்சு போச்சே' என, எம்.ஆர்.ராதா சுட்டதை ராஜாஜி நகைச்சுவையாக சொன்னார். எம்.ஜி.ஆர்., கலகலவென சிரித்தார்.ஒருசமயம் குமுதம் பத்திரிகையில் இருந்து, 'நீங்களும், எம்.ஜி.ஆரும் நேருக்கு நேர் கலந்துரையாட வேண்டும். அதை நாங்கள் வெளியிடுகிறோம்' என கேட்டனர். நான் அவருக்கு தகவல் தெரிவித்தேன்.'இதெல்லாம் வேண்டாத வேலை. உங்கள் தலைவர்தான் (ராஜாஜி) என்னை அண்ணாதுரைக்கு சமமாக அடையாளம் காண்பித்து விட்டாரே. நீங்கள் என்னிடம் வந்துவிட வேண்டியதுதானே' என்றார். நானும் சரி என்று அ.தி.மு.க., வில் சேர்ந்தேன்.எம்.ஜி.ஆர்., ரஷ்யாவுக்கு கலாசார பயணம் மேற்கொண்ட போது, நான் உட்பட ஆறு பேரை 'அறுவர் குழு' என நியமித்து, கட்சியை வழிநடத்த ஏற்பாடு செய்தார். பிறகு ஊர் திரும்பிய அவர், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எனக்கு தலைமை நிலைய செயலாளர் பதவி வழங்கினார்.'கட்சியை மாவட்ட வாரியாக பலப்படுத்த வேண்டும். அதற்காக தான் இந்த பதவியை அளித்தேன்' என எம்.ஜி.ஆர்., கூறினார். உடனடியாக நான் எல்லோருக்கும் போஸ்ட் கார்டு அனுப்பி, போட்டோவுடன் பதில் அனுப்பு மாறு கூறினேன்; எதிர்பார்த்த பலன் கிடைத்தது. எம்.ஜி.ஆருக்கு ஆளை பார்த்தால் யாரென்று ஞாபகம் வந்துவிடும். பெயரை படித்தால் ஞாபகம் தெரியாது. போஸ்ட் கார்டில் வந்த போட்டோக்களை பார்த்து, 'அவரை தெரியுமே, இவரை தெரியுமே' என சிலாகித்தார். அதை ஒரு பதிவு ஆவணமாக தயாரித்தேன்.இதற்கிடையே நான் மூன்று மாதம் கட்சியில் இருந்து விலகி இருந்தேன். ஏனெனில், 'கட்சி யில் இருப்பவர்கள் பச்சை குத்த வேண்டும்' என எம்.ஜி.ஆர்., சொன்னதை நான் எதிர்த்தேன். இதை அறிந்த எம்.ஜி.ஆர்., எனது கிளினிக்கிற்கே வந்து கேட்டார்.'பச்சை குத்துவது என்பது அடிமைத்தனத்தின் அடையாளம். நான் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டேன்' எனக் கூறினேன்; உடனே என்னை கட்டிப்பிடித்து, 'நான் உங்களை இழக்க விரும்ப வில்லை' என்றார். அடிமைத்தனத்தை அவர் எப்போதும் விரும்பவில்லை.
வேதனையில் எம்.ஜி.ஆர்., : 1980ல் அ.தி.மு.க., ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கு மத்தியில் இந்திராவுடன் கூட்டணி அமைத்திருந்த, கருணாநிதியின் அழுத்தம் காரணம். ஆட்சி கலைத்ததற்கு எம்.ஜி.ஆர்., ரொம்ப சந்தோஷப்பட்டார். காரணம், சென்னையில் இருந்து எம்.பி.,யான ஆர்.வெங்கட்ராமன், மத்திய அமைச்சராக இருந்தார். அவர் சொன்னதைதான் அதிகாரிகள் கேட்டார்களே தவிர, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., உத்தரவுகளை பெரும்பாலான அதிகாரிகள் கேட்கவில்லை.கட்சியிலும் அவருக்கு எதிர்ப்பு இருந்தது. சில எம்.எல்.ஏ.,க்கள் கூட அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.ஜி.ஆர்., அறைக்கே வந்து ஒரு எம்.எல்.ஏ., சத்தம் போட்டார். அப்போது நான் அந்த அறையில் இருந்தேன். எம்.ஜி.ஆர்., 'அப்செட்' ஆனார்; எனக்கு கஷ்டமாக இருந்தது. அவர் நரக வேதனையில் இருந்தார். அச்சமயத்தில் ஆட்சி கலைக்கப்பட்டதும், நான் அவரை போனில் தொடர்பு கொண்டேன்.'அண்ணே! கவலைப்படாதீங்க. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். சாயங்காலம் தி.நகர் ஆபீசிற்கு வந்துடுங்க' என எம்.ஜி.ஆர்., மகிழ்ச்சியான குரலில் தெரிவித்தார். நான் சென்றபோது, அங்கே ஆனந்தவிகடன் மணியன் இருந்தார்.ரொம்ப குஷியாக, 'வாங்க எங்கேயாவது டிபன் சாப்பிடுவோம்' என்றார். பிறகு மூவரும் உட்லண்ட் டிரைவ் ஓட்டலுக்கு சென்றோம். 'எனக்கு பெரிய பாரம் இறங்கின மாதிரி இருக்கு. ரொம்ப ஹாப்பி' என்றார். பிறகு தமிழகம் முழுவதும் ஒரு 'ரவுண்ட்' வந்தார். 'நான் என்ன தவறு செய்தேன். எனது ஆட்சி ஏன் கலைக்கப்பட்டது' எனக் கேட்டார். அதுதான் அவருக்கு அரசியல் புத்துணர்ச்சியை கொடுத்தது.
அரசியல் வியூகக்காரர் : அந்த தேர்தலில் சென்னை அண்ணாநகரில் கருணாநிதி வேட்புமனு தாக்கல் செய்தார். திடீரென என்னிடம், 'அண்ணாநகரில் நீங்கள் போட்டியிட்டால் எப்படி இருக்கும்' எனக் கேட்டார். '50க்கு 50 வாய்ப்பு உண்டு' என்றேன். 'அதை 51 சதவீதமாக மாற்ற முடியுமா?' எனக் கேட்டார்.'நீங்கள் மனசு வைத்தால் நடக்கும்' என நான் கூற, அவர் கூறியபடி போட்டியிட்டேன்; அதில் கருணாநிதி வெற்றி பெற்றார்.நான் ஈசியாக 'வின்' பண்ணியிருக்கலாம். 'ஹண்டே ஜெயித்தாலும், தோற்றாலும் அவரை அமைச்சராக்குவேன்' என எம்.ஜி.ஆர்., சொன்னார். இதை பிரசாரத்தின் போது கருணாநிதி பயன்படுத்திக்கொண்டார்.'ஹண்டே அண்ணாநகர் மேல்சபை உறுப்பினராக உள்ளார். நான் சட்டசபை உறுப்பினராக இருந்துட்டு போறேன். உங்க அண்ணாநகருக்கு இரண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள்' என அவர் பிரசாரம் செய்து வெற்றி பெற்றார். 1980ல் எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பதவியேற்றேன்.எம்.ஜி.ஆர்., மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்ப மாட்டார். இந்திராவின் மகன் சஞ்சய், இறந்தபின் அமேதி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அதில் ராஜிவ் வெற்றி பெற்றார். மத்தியில் இந்திரா ஆட்சி நடந்தது. தேர்தல் முடிவு வெளியான மறுநாளே, என்னை எம்.ஜி.ஆர்., டில்லிக்கு அனுப்பினார். ராஜிவிற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, இந்திராவிடம், 'தமிழக அரசு மோதல் போக்கை விரும்பவில்லை. உங்களது எல்லா நடவடிக்கையிலும் நாங்கள் ஆதரவாக இருப்போம்' என கூறச்சொன்னார்.நானும் அப்படியே கூறி மத்திய அரசிடம் சுமூக உறவை வலுப்படுத்தினேன். அவர் பல அரசியல் வியூகங்களை வகுத்தவர். அதற்கு எத்தனையோ சம்பவங்கள் உள்ளன. அதையெல்லாம் எழுத இன்று ஒருநாள் போதாது!
- டாக்டர் எச்.வி.ஹண்டேமுன்னாள் அமைச்சர் , சென்னைhundayhospitalgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Vk naageswaran - Nanganallur, Chennai 600061,இந்தியா

    நம்முடைய மாநில நன்மையைக் கருத்தில் கொள்வோம் சின்னம்மா என்று அழைக்கப்படும் அ இ அ தி மு க வின் பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நேற்று தஞ்சை கூட்டத்தில் அளித்த வாக்கைப் போற்றும் வகையில், நாம் அரசியல் அமைதியைக் காக்க ஒன்றிணைவோம், முதல்வர் திரு. பன்னீர்செல்வம் அவரது கடமையைத் திறம்படச் செய்ய உறுதுணையாக இருப்போம். அரசியலை பொழுதுபோக்கு அம்சமாக மாற்றியுள்ள ஊடகங்களும் கட்சிகளுக் கிடையேயுள்ள வேற்றுமைச் சுவரை வளர்க்காமல் ஆதரவுடன் செயல்படட்டும். எந்த அரசியல் பின்னடைவும், சம்பந்தப்பட்ட கட்சியை மட்டுமல்லாமல் மாநிலத்தையே பாதிக்கக் கூடும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். வரக் கூடிய தேர்தலில் ஆளும் கட்சி தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதோ அல்லது புதிய கட்சிகள் ஆட்சியைப் பிடிப்பதோ அவரவர்கள் மக்களிடம் உண்டாக்கும் நம்பிக்கையைப் பொருத்தது. அதுவே உண்மையான ஜனநாயகம். அதை நாமனைவரும் பேணிப் பாதுகாப்போம். வி. கே. நாகேஸ்வரன், நங்கநல்லூர், சென்னை 600061 {14, கிழக்கு பிரதான சாலை, எஃப் 30 சல்மா அமர் எங்க்ளேவ், லக்ஷ்மி நகர் 4 வது நிலை, நங்கநல்லூர், சென்னை 600061)

  • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

    "அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு" ன்னு வாத்தியார் பாடினார்.. அவர் தன் கட்சிக்காரர்களை "ரத்தத்தின் ரத்தமே"ன்னு சொல்லுவார்.. கட்சியிலே ஒரு பய விடாமே எல்லாப்பயலும் அக்மார்க் அடிமைகள்.. ரத்தமே இல்லாத அடிமைகள் எப்படி ரத்தத்தின் ரத்தங்கள் ஆக முடியும்.. அதான்.. துரோகியின் காலில் விழுந்துட்டாங்க.. ரத்தம் இல்லை, முதுகெலும்பும் இல்லை.. புழுக்கள் தான்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement