Advertisement

தெம்மாங்கு பாட்டைக்கேளு

இசையும் நடனமும் பழங்காலத்திலிருந்தே மனித உணர்வுகளின் வெளிப்பாடாக விளங்கி வந்தது. பாடும்போது நெஞ்சை அழுத்தும் உணர்ச்சி பாரத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது.
கிராமங்களில் தண்ணீர் சுமந்து செல்கிற போதும், நெல் குத்தும் போதும், உழவு பணிகளை மேற்கொள்ளும்போதும் பாடலை பாடி மக்கள் தங்கள் அலுப்பை தீர்த்து கொள்கின்றனர். வழக்கு சொல்லும், வாய்ப்பாட்டு இசையும் போட்டு பாடிய பாடல்களே தற்போது தெம்மாங்கு பாடல், கிராமிய பாடல் என்ற வடிவம் கொண்டு அழைக்கப்படுகிறது.
தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி இருந்தாலும், இன்றும் மக்களை மகிழ்வித்து வருவது கிராமிய இசை நிகழ்ச்சிகளே. மண் கூட்டி உட்கார்ந்திருப்பவர்களை மனம் ஒத்து சிரிக்க வைத்து வரும் கிராமிய கலைஞராக இருப்பவர் காரைக்குடி இளையராஜா. 'இளையகானம்' என்ற கிராமிய தெம்மாங்கு இசை நிகழ்ச்சியை நடத்தி,திரைப்படங்களில் பாடி வருகிறார்.
'இளைய கானம்' என்ற கலைக் குழுவை தொடங்கி அதன் மூலம் 2ஆயிரம் மேடை கலை நிகழ்ச்சி நடத்தி உள்ளார். 'மானே மரகதே என்ற ஆல்பம்', 'உன் சிரிப்புல தான்', 'வாடி என் கருத்தப்புள்ள,' என்ற ஆல்பங்களை படைத்துள்ளார்.
பரணி இசையில் வெளுத்துக்கட்டு திரைப்படத்தில், 'ஒத்தயா இருந்த உசுருக்குள்ள...' பாடலின் மூலம் பாடகராக அறிமுகம் ஆனார். அதே படத்தில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தார். ஜேம்ஸ் வசந்தன் இசையில் 'விழா' திரைப்படத்தில் மதுர எனும் மாநகரமாம் பாடல் பாடியுள்ளார். தாஜ்நுார் இசையில் 'செல்லமடா நீ எனக்கு' படத்தில் 'செக்க செவந்திருக்கும் தக்காளி'.., இளமி திரைப்படத்தில் 'தவில் எடுத்து அடிடா... தீப்பறக்க முட்டிப்பாரு' ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.
அவரிடம் ஒரு நேர்காணல்: பள்ளி ஆண்டு விழாக்களில் பாட வாய்ப்பு கிடைத்தது.
அப்படி பாட ஆரம்பித்தது தான். பின்புலம் கிடையாது. பாடல் அறிவை வளர்த்தது பாட்டு புத்தகங்கள் தான். கிராமிய பாடல்களை பாடியதால், திருப்பத்துாரன் சேவியர் குழுவில் சேர்ந்தேன். ஒரு கால கட்டத்தில் தனியாக பிரிந்து 'இளைய கானம்' இசைக்குழு உருவாக்கி கிராமிய இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.
'வாடி என் கருத்தப்புள்ள' என்ற ஆல்பம் தயாரித்தேன். சினிமா தரத்துக்கு இணையான தரத்தை இதில் பதிவிட்டிருந்தேன். பாடல் எல்லா புறத்திலும் கேட்டாலும், அதை பாடிய என் முகம் வெளியே தெரியவில்லை. நான் தான் பாடினேன் என்று சொன்னாலும் யாரும் நம்பவில்லை.
யாரு என்று தெரியாமல் ஆல்பம் வெளியிடுவதை விட, முக்கியமான பாடல்களை வீடியோ பாடல்களாக வெளியிட வேண்டும் என்று வாடி என் கருத்தப்புள்ள, அத்த மக உன்னை நினைத்து, பூங்குயிலே ஆகிய பாடல்களை வெளியிட்டேன். ஒரு ஆல்பத்துக்குரிய செலவு ஒரு பாடல் வீடியோவுக்கு தேவைப்பட்டது. யு டியூப் மூலம் இது பரவி வெளிநாடுகளில் என்னை அடையாளம் காட்டியது.
கிராமிய பாட்டை பொறுத்தவரை அதன் அடையாளத்தை மாற்றக்கூடாது. அந்த ராகத்தை விட்டு வேறு வழிக்கு சென்றால் அது கிராமிய பாட்டல்ல. தான் புழங்கும் வழக்கு சொல், ராகத்தை அடிப்படையாக வைத்து தான் கிராமிய பாட்டு உருவாகும்.
திரைத்துறையில் கிராமியத்துக்கு தனி அடையாளம் உள்ளது. எப்படி தானியம் சாப்பிட வேண்டும் என்று பழமையை மக்கள் விரும்புகிறார்களோ, அதே போன்று கிராமிய இசை நிகழ்ச்சிகளையும் மக்கள் விரும்ப ஆரம்பித்துள்ளனர், என்றார்.
ஹலோ சொல்ல: 98653 26406.--------

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement