Advertisement

செத்து மடியும் விவசாயி; செத்துப் போகுது ஜனநாயகம்!

'நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது; மழை இல்லையென்றால் ஒழுக்கமும் இருக்காது' என்பது திருவள்ளுவர் கூற்று. மனிதன் மட்டும் தான் நாகரிகத்திற்கு ஏற்ப மாற வேண்டுமா... இயற்கையாகிய நாங்களும் ஏன் மாறக்கூடாது என, கேட்பது போல இயற்கை மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாசு மற்றும் சுற்றுச்சூழல் குறித்து நாம் கண்டு கொள்ளாததால், இயற்கை வாரி வழங்கும் மழை எனும் கொடை, நம்மை விட்டு வெகு துாரம் செல்லத் துவங்கியுள்ளது. ஆம்... வட கிழக்குப் பருவ மழை பொய்த்துப் போனது. நன்றாக மழை பெய்த காலங்களில் தண்ணீரின் அருமை தெரியாமல், முறையாக சேமிக்காமல் விட்டு விட்டோம். மழையும், தண்ணீரும் இல்லாமல் போனால், 'நாட்டின் முதுகெலும்பு' எனப்படும் கிராமங்களும், விவசாயமும் அழிந்து போகும் அபாயம் உள்ளது. விவசாயிகளுக்கு, மழை ஒரு சில நேரங்களில் வரமாகும். சில நேரங்களில், அதுவே புயல், காற்று, அதீத மழை என, சாபமுமாகும். சாபமானாலும் கூட, அடுத்த ஆண்டில் விவசாயத்தை துாக்கிப் பிடித்து விடுவான் விவசாயி. காரணம் நிலத்தடி நீரும், ஈரப்பதமும் பூமியில் இருந்தால் போதும், 'பூமராங்' போல் மீண்டெழுவான் விவசாயி.ஆனால், அந்த நிலத்தடி நீரும் இப்போது அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறதே! சட்டப்படி தர வேண்டிய தண்ணீரை, அண்டை மாநிலம் தர மறுப்பதாலும், தமிழகம் இன்று வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. வறட்சி, கோரத்தாண்டவம் ஆட, வெகு துாரமில்லை. இதற்கான, 'கவுன்ட் டவுண்' தான், தமிழகத்தில் வரிசையாக விழும் விவசாயிகளின் தற்கொலைகள்.இதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவில்லை. நமக்கெதற்கு இயற்கை பற்றிய அக்கறை வர வேண்டும்... நமக்கு மற்றும் நம் இளைஞர்களுக்கு, மொபைல் போனும், விவசாயிகளின் கூக்குரல் காதுகளில் விழாமல் இருக்க, 'ஹேண்ட்ஸ் பிரீ' செட் இருந்தாலே போதுமே! நமக்கும், நம் இளைஞர்களுக்கும் தான் அக்கறை இல்லை என்றால், நாம் தேர்ந்தெடுத்த தமிழக அரசும், மத்திய அரசும் என்ன செய்தன?பாவம். இப்போதிருக்கும் ஆட்சியாளர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது. மே மாதம் தேர்தல் முடிந்து, அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று, முதல்வரான ஜெயலலிதா, முழுதாக நான்கு மாதங்கள் கூட ஆட்சியை நடத்தாமல், உடல் நலமின்றி, செப்டம்பரில், அப்பல்லோ மருத்துவமனையில் விழுந்தார். அமைச்சர்கள், முதல் ஆளும் கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், மருத்துவமனை வாசலிலேயே நின்றிருந்தனர். மக்கள் பற்றிய சிந்தனையே அவர்களுக்கு மறந்து போனது. 'அம்மா... அம்மா' என, மருத்துவமனையே கதியாக கிடந்தனர். டிச., 5ல், ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அன்று நள்ளிரவிலேயே, பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்றது முதல், 'சின்னம்மா' புராணம் பாடத் துவங்கி விட்டனர். அவரை கட்சியின் தலைமை பீடத்தில் அமர வைக்கும் முயற்சியில், ஒரு மாதம் ஓடி விட்டது.தமிழகத்தில் ஜனநாயகம் செத்துப் போய் விட்டதா... ஜனநாயக முறைப்படி, ஒரு அரசை தேர்ந்தெடுத்து, எட்டு மாதங்களாகி விட்டது. இதுவரை என்ன செய்தது இந்த அரசு... அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை காத்ததா... தண்ணீர் இன்றி, விவசாயம் செய்ய முடியாமல் மடியும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறதா... வேளாண் துறைக்கு என அமைச்சர் இருக்கிறாரா... அந்தத் துறை செயல்படுகிறதா...இதுபோல, எத்தனையோ கேள்விகள் எழுகின்றன. பதில் சொல்லப் போவது யார்?கடந்த ஆண்டு பருவ மழையின் போது, வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, விவசாயிகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. மழை நீரை சேமிக்க முடியாமல் போனதற்கு, ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகள் தான் காரணம் என்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாசன நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க வழி காணப்படும் என, அனைத்து கட்சியினரும் உறுதி அளித்தனர்.வெற்றி பெற்றவர்கள் செய்தனரா... இது வரை ஒரு செங்கல்லைக் கூட பெயர்க்கவில்லை; மண்வெட்டியை எடுத்து, ஒரு வாய்க்காலைக் கூட வெட்டவில்லை என்பது தான் நிதர்சனம். வாழ்க ஆட்சியாளர்களே! வளர்க நீங்கள் சேர்க்கும் செல்வம். மத்திய அரசும், தன் பங்குக்கு தமிழக விவசாயிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், மத்திய அரசு காதில் வாங்கி கொள்ளவில்லை. மேலாண்மை வாரியத்தை அமைத்திருந்தால், ஓரளவிற்கு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என, நம்பிக்கை கொள்ளலாம்; அதுவும் இல்லாமல் போய் விட்டது. விவசாயத்தை இப்படி முற்றிலும் அழித்து விட்டு, எதை சாதிக்க ஆட்சியாளர்கள் இருக்கின்றனர் என, தெரியவில்லை. இளைஞர்களே, விவசாயத்துடன் நம்மையும், நம் வருங்கால சந்ததியினரையும் காப்பாற்ற, இனியும் அரசை நம்பியிருக்க வேண்டாம். உங்கள் காதுகளில் இருக்கும், 'ஹேண்ட்ஸ் பிரீ' செட்டை துாக்கியெறியுங்கள். கையில் இருக்கும் மொபைல் போனை விசிறி அடியுங்கள்; களத்தில் இறங்குங்கள். நிலத்தடி நீர் குறித்து ஆராயுங்கள். நீர் ஆதாரத்தை பெருக்க என்ன வழி என, வல்லுனர்கள் மற்றும் இணையத்தில் தேடுங்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறுங்கள். விளை நிலங்கள், 'பிளாட்'டுகளாக மாறுவதை தடுத்திடுங்கள். விவசாய நிலங்களில் பசுமையை கொண்டு வரும் வழிமுறைகளை கண்டுபிடியுங்கள். விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துங்கள். உங்களிடம் இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வாருங்கள். விவசாயத்தைக் காத்திடுங்கள்; பசுமைப் புரட்சியை ஏற்படுத்துங்கள்.
- வி.மோகன் -சமூக ஆர்வலர்
இ - மெயில்: vimomohan63gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  மிக அருமையான கட்டுரை. விரைவில் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கும் ஒரு விடியல் பிறக்கும்...

 • மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா

  விவசாய நிலங்களில் பசுமையை கொண்டு வரும் வழிமுறைகளை கண்டுபிடிச்சாச்சு. தமிழகத்தில் ஆங்காங்கே உள்ள மண்ணுக்கேற்றவாறும், கிடைக்கும் நீர் ஆதாரங்களுக்கேற்றவாறும் மூலிகை விவசாயம் செய்வதுதான் ஒரே வழி. இதையெல்லாம் அரசு, தக்க முன்னேற்பாடுகளை செய்துவிட்டு செயல்படுத்த முற்ப்பட்டால் சுலபமாக இருக்கும். இல்லையென்றால் மக்களே தன்னெழுச்சியாக முன்வந்து மாதிரி இணை அரசாங்கம் அமைத்து செயல்படுத்துவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

 • murasu - madurai,இந்தியா

  மிக அருமையான கட்டுரை . நன்றி . தமிழக ஆட்சியாளர்கள் மணல் கொள்ளை மாபியாக்களுடன் கூட்டணி வைத்து கொள்ளை அடிக்கின்றனர். சேகர் ரெட்டி, வைகுண்ட ராஜன், PRP போன்ற அனைவரும் தங்கள் பங்குக்கு தமிழக இயற்கை வளங்களை கொள்ளை அடித்துக்கொண்டுள்ளனர். மத்தியில் ஆளும் பிஜேபி , காங்கிரசை விட பன்மடங்கு நயவஞ்சக சூழ்ச்சி செய்து தமிழகத்தை பழிவாங்குகின்றனர் . இதற்கு தீர்வு: மக்கள் , இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குளங்களை , ஆறுகளை சீரமைக்கலாம் , தூர்வாரலாம் . ஆனால் அரசு தான் விளைநிலங்கள் . பிளாட் ஆகாமலும், மணல்கொள்ளை , கடல் மண் கொள்ளை , க்ரானைட் கொள்ளை இவைகளை தடுக்க முடியும் . இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அறவழியில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் , சமீபத்திய சென்னையில் கூடிய விவசாய ஆதரவு இளைஞர்கள் கூட்டம் போல். அரசு தான் தடுப்பணைகள் கட்டவும் , ஆக்கிரமிப்புகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு உள்ள நாம் தமிழர் கட்சி கோட்பாட்டை , அதிமுக, திமுக தங்களது நிலைப்பாடாக கொள்ளவேண்டும். இல்லையேல் நாம் தமிழர் கட்சியிடம் ஒரு ஐந்து வருடம் ஆட்சியை கொடுங்கள்

 • Kumar Ram Kumar - Chennai,இந்தியா

  Good thinking. Peoples are not cared the farmers problem and for the past 15 years all the farmers a are always faced the losing money in Agriculture or no profit. Because of this peoples stop doing agriculture and shifted to find job in companies. Soon we can face the food problem in India and even we may beg food from other Countries.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement