dinamalar telegram
Advertisement

படைப்பாளிகளுக்கு அறிவுரை தேவை இல்லை - வண்ணதாசனின் எண்ணங்கள்..!

Share
Tamil News
சாகித்ய அகாடமி விருது குறித்த ஒரு நேர்காணல்...!ஒரே கிராமத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற இருவர் என்ற பெருமைக்குரியவர்கள், இடைச்செவலை சேர்ந்த கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன்.ஒரே வீட்டில் சாகித்ய அகாடமி பெற்றவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் தி.க.சிவசங்கரன், அவரது மகன் வண்ணதாசன். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாகிறது திருநெல்வேலி.1960களில் இருந்து எழுதிவரும் வண்ணதாசனுக்கு தற்போது வயது 70 ஆகிறது. 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்பிற்காக விருது பெற்றிருக்கும் அவரோடு ஒரு நேர்காணல்..* எப்படி எழுத்துக்குள் வந்தீர்கள்..?நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எழுதிய கதை ஏழையின் கண்ணீர்..அது ஒரு அச்சுக்கோர்ப்பவரைப்பற்றிய கதை. கே.டி.கோசல்ராம் நடத்திய புதுமை இதழில் வந்தது. அதற்கு முன்னரும் பத்திரிகைகளுக்கு கதைகள் அனுப்பியிருக்கிறேன். ஆனால் வெளியாகவில்லை. என் படைப்புலக பாத்திரங்கள் அனைவரும், எனக்கு தெரிந்த, நான் பழகுகிற, என்னை கடந்துபோகிறவர்கள்தான். அவர்கள் இன்னமும் நான் நேரில் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். நான் என் தாய்வழிப்பாட்டியால் வளர்க்கப்பட்டேன். அந்த வகையில் நிறைய பெண்கள் சூழ்ந்த வாழ்க்கை. இதையெல்லாம் நான் படைப்பாக்கிக்கொண்டேன்.* உங்கள் தந்தை, இடதுசாரி இயக்கத்தை சேர்ந்த எழுத்தாளர் என்பதால் உங்களுக்கு எழுத்து எளிதில் வாய்த்ததா..என் தந்தை பெரும்பாலும் இயக்கப்பணிகள் என வெளியூர்களில் இருப்பார். ஆனால் அவர் சேகரித்த, அவரது சமகால படைப்பாளர்களின் புத்தகங்கள், குறிப்பாக சோவியத் இலக்கியங்கள் என்னை வாசிக்க துாண்டின. அப்பா ஒரு போதும், எனது சிறுகதைகளை வாசித்துவிட்டு கருத்து சொன்னதில்லை. இதைப் படி, அதைப் படி என்றும் கூறியதில்லை. எங்கள் வீட்டிற்கு வருபவர்களில், என் கவிதையை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை அந்த நேரத்தில் கல்யாணி என்றழைப்பார். ஒரு வேளை சிறுகதை தெரிந்தவர்களாக இருந்தால், வண்ணதாசன் என்று குறிப்பிட்டு பேசுவார். என் தந்தைக்கு விருது கிடைக்கும்போது எனக்கு வயது 55. இருப்பினும் கூட இலக்கியம் குறித்தோ, படைப்புகள் குறித்தோ நாங்கள் பகிர்ந்து கொண்டதில்லை. நான் கதை எழுதுவதில் என் தந்தைக்கு மிகுந்த மகிழ்ச்சி என்பதை பல்வேறு தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.* வல்லிகண்ணன், அழகிரிசாமி போன்ற உங்கள் முந்தைய எழுத்தாளர்கள் நீங்கள் எழுதுவதற்கு எத்தகைய துாண்டுதலாக இருந்தார்கள்..?'நான் எனது 38 வயதில்தான் புதுமைப்பித்தனை முழுமையாக படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அதற்கு முன்பாகவே எனக்கு அழகிரிசாமியை பிடித்திருந்தது. நான் வல்லிக்கண்ணனுக்கு எழுதிய கடிதங்கள் ஒரு துவக்கப்புள்ளி எனலாம். எனது படைப்புகளில் ஆண், பெண் உறவுகளின் நுட்பத்தை சொல்கிறேன். எழுத்தாளர் தி.ஜானகிராமனின் சாயலை உள்வாங்கிக் கொண்டேன் எனலாம். எனது மன உலகம் தி.ஜா.,வின் உலகத்திற்கு நெருக்கமானதாக இருக்கிறது.* 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதை தொகுப்புகள் ஆனால் ஒரே ஒரு குறுநாவல்தான்..ஏன் நாவல் மீது ஈடுபாடு இல்லையா..?எனக்கு பிடித்த வடிவம் சிறுகதைதான்.. ஒவ்வொரு சிறுகதையிலும் ஒரு நாவலின் கரு இருக்கிறது. என்னால் அதனை ஒரு நாவலாக விவரிக்க முடியும்..ஓவியம் வரைய தெரிந்தவனுக்கு சிறிய ஓவியம் என்றாலும், பெரிய திரைச்சீலையில் வடிப்பதும் ஒன்றுதான். * உங்களின் சமகால படைப்பாளிகள் கலாப்பிரியா, வண்ணநிலவன், விக்கிரமாதித்தன் போன்றோரின் பாராட்டு எப்படியிருந்தது..?விருது கிடைத்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. 60களில் என்னோடு எழுதத் துவங்கியவர்களில் சிலர் எழுத்தை தொடரவில்லை. வண்ணநிலவன் தொடர்ந்து எழுதிவருகிறார்.* சாகித்ய அகாடமி விருது குறித்து சமூகவலைதளங்களில் உங்களுக்கு நிறைய பகிர்வுகள், பாராட்டுக்கள் இருந்தன. முந்தையவர்களுக்கு இல்லாத பாராட்டு தங்களுக்கு எப்படி கிடைத்தது..மற்றவர்களைப்பற்றி தெரியவில்லை. ஆனால் நானும் சமூகவலைதளத்தில் பகிர்வுகளை மேற்கொள்வதாலும், நட்பு வட்டங்களினால் இருக்கலாம்.பேஸ்புக் போன்ற தளங்களில் லைக் போடுகிறவர்கள்,பகிர்கிறவர்கள் எல்லோரும் என் கதைகளை முழுக்க படித்தவர்கள் என நம்பவில்லை. இருப்பினும் ஏதோ ஒரு கவிதையில், படைப்பில் நான் பார்க்கிற உலகத்தை சக வாசகனும் பார்க்கிறான் என்றால் அதுவே போதும் என மனநிறைவடைகிறேன்.பேஸ்புக்கில் பெரும்பாலும் 'அருமை', 'சூப்பர்..' ஒரு ஸ்மைலிகளை வைத்தே புரிந்துகொள்ளலாம். அவர்கள் எத்தகைய மேம்போக்கானவர்கள் என்று.. அதற்காக நாம் யாரையும் குறைபட்டுக்கொள்ளக்கூடாது. இருப்பினும் படைப்புகளை படித்து உள்வாங்கிக்கொண்டு, கருத்து சொல்பவர்களைத்தான் எழுத்தாளர்கள் எல்லோருக்குமே பிடிக்கும் என்பது என் கணிப்பு..எனக்கு பிடித்த ஒரு வரியை கண்டு பிடிக்கிற வாசகனை எனக்கு நிச்சயம் பிடிக்கும். சமூகவலை தளங்கள் பலரையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. எனக்கு புதிய வாசகர்கள் நிறைய பேர் அதன் மூலமே கிடைத்திருக்கிறார்கள். இருப்பினும் எனக்கு ஒரு டியூப் லைட் வெளிச்சம்போதுமானது. ஆனால் சமூகவலைதளங்களில் ஒளி பாய்ச்சப்படுகிறது. அது என் கண்களை கூசச்செய்கிறது.* சாகித்ய அகாடமியை எதிர்பார்த்தீர்களா..? அந்த சந்தோஷத்தை யாரிடம் பகிர்ந்து கொண்டீர்கள்..?நான் இத்தகைய விருதுகளை எதிர்பார்த்திருக்கவில்லை என்றால் நீங்கள் நம்பப்போவதில்லை. நான் வங்கிப்பணியாற்றி ஓய்வுபெற்றேன். அதன் உச்சாணிக்கொம்பை எட்டிப்பிடிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து பதவி உயர்வுகளுக்கான தேர்வுகள் எழுதியதில்லை. அதே போலதான் எழுத்தும். என் திருப்திக்காக எழுதுகிறேன்.வாழ்க்கையை அதன் போக்கில், இயல்பில் ரசிக்கிறவன் நான். எதற்காகவும் முயற்சித்து பெறுகிறவன் அல்ல.* இளம் படைப்பாளிகளுக்கு என்ன டிப்ஸ் தர விரும்புவீர்கள்..?படைப்பாளிகளுக்கு அறிவுரை தந்துதான் எழுதவேண்டும் என்பதில்லை. படைப்பாளிக்கு அது தேவையும் இல்லை. நான் சிறுவயதில் பார்த்த விஷயங்கள்தான் இன்றளவும் மனதில் நிற்கின்றன. வாசிப்பை மட்டுமே கொண்டு எழுதப் படுவது நீண்ட நாட்கள் நிற்காது. நிறைய பேச வேண்டும். நிறைய பேரிடம் பழகவேண்டும். கி.ரா.,போன்றவர்கள் அந்த காலத்தில் கிராமத்தினரிடம் பேசிக்கொண்டிருந்த விஷயங்களைத்தானே படைத்தார்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் யாரிடமும் பேசுவதில்லை. உள்ளங்கை உலகில் ஸ்மார்ட் போன்களில் மூழ்கிகிடக்கிறார்கள்.* தந்தையை தொடர்ந்து நீங்கள் எழுதுகிறீர்கள்.. உங்கள் மகன், மகள் எழுத்தில் ஆர்வம் காட்டுகிறார்களா..எப்படி தந்தை என்னை, எதையும் படிக்க கட்டாயப்படுத்தியதில்லையோ.. அதைப்போலவே நானும் மகன், மகளை கட்டாயப்படுத்தியதில்லை. என் மகனுக்குத்தான் எழுத்தின் மீது பிரியம். நிறைய வாசிக்கிறான்..அதுவே எனக்கு மகிழ்ச்சிதான். இவ்வாறு பதிலளித்தார். 54 ஆண்டுகள் எழுதிவரும் வண்ணதாசனை ஓரிரு பக்கங்களில் தீட்டிவிட இயலாது தான்.'வண்ணதாசன் வாழ்க்கையைப் பார்க்கிறாரா? வாழ்க்கை சித்திரங்களைப் பார்க்கிறாரா? புறஉலகத் தோற்றங்கள் இவரை வெகுவாக ஆகர்ஷிக்கின்றன. இவற்றை கிரகித்துக் கொள்ளும் பொறிகள் அவருடையவை. வெகு நுட்பமாக இந்த நுட்பங்களை வெகு நேர்த்தியாகச் சொல்லத் தெரிந்தவர் அவர். இவை திறமைகள். இது ஒரு சம்பத்து..'இந்த வரிகள் 1978ல் வெளியான, வண்ண தாசனின் 'தோட்டத்திற்கு வெளியேயும் சில பூக்கள்' புத்தகத்தின் முன்னுரையில் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி குறிப்பிட்ட வரிகள்...வண்ணதாசனின் நுட்பங்கள், நேர்த்திகள் தொடர்கிறது..வாழ்த்துக்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

Advertisement