Advertisement

தமிழகத்திற்கு போதாத காலம்!

நம்மை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் அடையாளம் தான் ஓட்டுரிமை. அந்த ஓட்டுரிமையை தங்களுக்குப் பிடித்த தலைவருக்கு மக்கள் செலுத்துகின்றனர். அந்தத் தலைவர் தங்களை ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர்.

அவர் ஆட்சி செய்தால் நாடு நன்றாக இருக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை செய்வார் என்று விரும்புகின்றனர். அந்த விருப்பத்தின் அடையாளமாகத்தான் கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு பெரும்பான்மையானோர் ஓட்டளித்தனர். அவரும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று முதல்வராக பொறுப்பேற்றார். செல்வி ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணம், அவர் துணிச்சலாக முடிவெடுப்பவர். காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற பிரச்னைகளில், தமிழகத்தின் நலனை விட்டுக் கொடுக்காதவர். அமைச்சர்கள், அதிகாரிகள் தவறு செய்தால், அடுத்த நொடியே துாக்கி வீசுவார். புகழுரைக்கு மயங்க மாட்டார், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவார், குடும்ப அரசியலை விரும்பாதவர், ரவுடிகளை ஒடுக்குபவர், மத்திய அரசுக்கும் பயப்படாதவர். இப்படி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் வேரூன்றி இருந்தது. அதன் காரணமாக அவருக்கும், அவர் கட்சிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் ஓட்டளித்தனர்.

முதல்வர் நாற்காலியில் அவரும் ஆறாவது முறையாக அமர்ந்தார்.எதிர்பாராத விதமாக முதல்வர் இறந்து விட்டார் என்பது தமிழகத்துக்கு பெரும் அதிர்ச்சி தான். அவரின் இடத்தை இனி எந்த ஒரு பெண் அரசியல்வாதியாலும் நிரப்ப முடியாது. காபி சரியில்லை, ரசம் சரியில்லை என்று கணவன் திட்டினாலே முகம் சுருங்கி மூக்கைச் சிந்தி அழும் பெண்கள் மத்தியில், தன்னை நோக்கி எத்தனைப் பிரச்னைகள் வந்த போதும், அரசியலில் இருந்து பின் வாங்காமல், எல்லா பிரச்னைகளையும் எதிர்கொண்டு துணிவுடன் போராடியவர். அவர், பெண்களின் முகமாய், பெண்களின் பிரதிபலிப்பாய் இருந்தவர். ஆண் அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்.

இப்போது அவர் இல்லை; அவர் இடத்தை நிரப்புவதற்கு அவர் சார்ந்த கட்சி உறுப்பினர்கள் யாரை வேண்டுமானாலும் தலைவராக நியமிக்கலாம்; அது உட்கட்சி பிரச்னை. அதில் பொது மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அது, அ.தி.மு.க., விசுவாசிகளுக்கு, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகளை இத்தனைக் காலம் நம்பி இருந்த தொண்டர்களின் பிரச்னை, வேதனை. ஆனால், தமிழகத்தின் முதல்வராக இவர் தான் வரவேண்டும் என்று விரும்பி, செல்வி ஜெயலலிதாவிற்குதானே மக்கள் ஓட்டளித்து, 134 எம்.எல்.ஏ.,க்களை சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் மனவிருப்பத்திற்கு மாறாக, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவையும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பெயரை முதல்வர் நாற்காலிக்கு முன்னிறுத்துவதைப் பார்க்கும் போது, வேதனையாகத்தான் இருக்கிறது.

காரணம், சசிகலா முதல்வர் என்பதை அவர் குடும்பமும், அவர் சார்ந்த சமூகமும், அவரால் நன்மைபெற துடிக்கும் கட்சியினர் வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால், தமிழக மக்கள் ஒரு போதும் அதை விரும்ப மாட்டார்கள். காரணம், அவரின் முகத்துக்காக இங்கே யாரும் ஓட்டு போடவில்லை; ஜெயலலிதாவிற்காகவே ஓட்டு போட்டனர். அவர் இல்லை என்றால் வேறு யாரோ ஒருவர்தான் மக்களின் விருப்பமாக இருக்க முடியும். அப்படி இருக்க, அ.தி.மு.க., பிரமுகர்கள், தமிழக அமைச்சர்கள் எந்த அடிப்படையில், சசிகலா முதல்வர் என்று முன்னிறுத்துகின்றனர்?

இன்னொருபெரிய அபத்தம், தீபாவிற்கு சிலர் போஸ்டர் அடித்து ஒட்டுவது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற காரணத்திற்காக அவரின் சொத்துக்களை பெறுவதற்கு, அனுபவிப்பதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால், தமிழக மக்களின் ஓட்டுகளை கள்ளத்தனமாக, குறுக்கு வழியில் அபகரித்து, முதல்வர் நாற்கலியில் உட்கார, இந்த இரு பெண்களுக்குமே உரிமை இல்லை.

ஜெயலலிதா இருந்தபோது இரண்டு முறை முதல்வராக இருந்தவர் பன்னீர்செல்வம் என்ற காரணத்திற்காக ஏற்க வேண்டி இருக்கிறது. ஆனால், அவரின் பெயரும் ஊழல் செய்தவர்களின் பெயருடன் வருவதைப் பார்த்தால், தமிழக அரசியல் தடுமாறுகிறது என்றுதான் தோன்றுகிறது. வலிமையான தலைமை இல்லாது போனால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக ஆகிவிட முடியும் என்பதற்கு தற்போதைய தமிழக ஆளும் கட்சியை உதாரணமாகக் கூறலாம்.

ஆளும் கட்சி பலகீனமாக இருக்கிறது என்றால், எதிர்க்கட்சியான, தி.மு.க.வின் நிலைமையும் அதே நிலையில்தான் இருக்கிறது. அங்கே, அதன் தலைவர் உடல் நலம் குன்றி இருப்பதால் அவர்களும் உற்சாகம் குன்றியே இருக்கின்றனர். கட்சியின் தலைமைப் பொறுப்பை இன்னும் ஸ்டாலினுக்கு கொடுக்காமல், தன் தலையிலேயே சுமந்தபடி மருத்துவமனைக்கும், வீட்டுக்கும் அல்லாடிக்கொண்டிருக்கிறார் கருணாநிதி. மொத்தத்தில் தமிழக அரசியலுக்கு இது போதாத காலமாகவே தோன்றுகிறது.
இ.எஸ்.லலிதாமதி,
எழுத்தாளர்
இ - மெயில்: eslalithagmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • kundalakesi - VANCOUVER,கனடா

  நன்றாக சொன்னீர்கள். எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி, தலையை சொரிந்து கொள்ள, என்பதுபோல் ஆகிறதே.

 • Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்

  அதனால் சசிதான் முதல்வாரகனும் என்றால் கேனத்தனத்தின் உச்சமே இதுதான் , பின்னாடி இருப்பவை எல்லாம் காசுதான் பணம் தான் சொத்துக்களேதான் எல்லாமே தப்பான வழியே அம்மாவின் பெயரையே மிஸ்யூஸ் பண்ணியே சேர்த்துட்டுருக்கா சசி என்பதுவே உண்மை

 • K,kittu.MA. - Anna Nagar,இந்தியா

  சிலர் எடுக்கும் அரசியல் முடிவுகள் தற்காலிகமானவை அவை அடுத்து வரும் தேர்தல்களில் மாறலாம் அது பஞ்சாயத்து தேர்தலாக கூட இருக்கலாம்.இது தான் கடந்த கால சாவுகள் கொடுத்த முடிவு..ஆட கூடாது..

 • Anushya Ganapathy - Bangalore,இந்தியா

  இதை நானும் வழிமொழிகிறேன் ... சசிகலா வேண்டாம் என்பதற்கு காரணங்கள் சரி ... தீபா ஏன் வர வேண்டும் என்று ஒரு சிலர் சொல்லும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. தமிழன் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுத்தே நாசமாகிப் போனான்.

 • bell - coimbatore,இந்தியா

  ஒட்டு மொத்த மக்களின் உள்ளக்குமுறல்களை அப்படியே பிரதிபளித்துள்ளீர்கள் மேடம், மக்கள் தாங்கள் போட ஓட்டுக்களை திரும்ப பெரும் அதிகாரம் இருக்குமானால் எப்படி ஜால்ரா அடிச்சு சம்பாதிக்கறவங்கள அரசியலில் இருந்து ஒதுக்க முடியும்.

 • mrsethuraman - Bangalore,இந்தியா

  என்ன செய்வது ஏதாவது ஒரு பெண்மணிக்கு முன்பு மண்டியிட்டு தான் வாழ்வோம் என்ற ஒரு வீரத்தனமான முடிவை எடுத்து விட்டார்கள் நம் கட்சிக்காரர்கள் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement