Advertisement

இளைஞனே...நீ பாதை மாறலாமா

'காயமே (உடல்) இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” என்பர். அத்தகு உடலினை வைத்துக் கொண்டு மனிதன் செய்யும் செயல்கள் அளவிட முடியாதது. நமது உடலில் உள்ள அசுத்தங்கள் வியர்வையாக வெளியேறுகின்றன. மனதில் இருக்கும் அசுத்தங்களான கோபம், எரிச்சல் போன்றவை நம்மை மாயவலைக்குள் சிக்க வைக்கிறது. நல்ல எண்ணங்களை மறக்கடிக்கச் செய்கிறது. வயிற்றுப் பசிக்கு உணவு, வாலிபப் பசி மனிதனை தகாத செயல் செய்யத் துாண்டுகின்றது. குழந்தையாக இருக்கும் பொழுது அதன் குறும்பு, தாய்க்கு மகிழ்வைத் தருகிறது. குழந்தைத்தனமான வளர்ச்சி நிலையிலிருந்து குறும்புத்தனமான நிலைக்கு மாறும்போது பிள்ளைகளின் செய்கை கண்டு தாய் பெருமை கொள்கிறாள். அப்படி வளரும் குழந்தை, குறிப்பிட்ட வயதுக்கு மேல் அவனுக்குள் இளமைத் துடிப்புத் துளிர்விடுகின்றது. நிலைகுலைந்து போகின்றான். காற்றில் அலையும் காகிதம் போல சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றான். பெற்றோரிடம் ஒன்றுவிடாமல் எல்லா விஷயங்களையும் பேசி வந்த மகன், இப்போது எதையும் பேச மறுக்கின்றான். இல்லை மறைக்கின்றான். நிம்மதி இழக்கின்றான். அந்த வாலிபப் பருவம் அவனை வதைக்கின்றது. மனதை எங்கோ கொண்டு போய் புதைக்கின்றது. புரியாத புது உலகத்தைக் காண்பதாக நினைக்கின்றான். அரும்பு மீசை, குறும்புப் பார்வை, கேலிச்சிரிப்பு, கிண்டல் பேச்சு, இதுதான் வாழ்க்கை என்று துள்ளித்திரிகின்றான். பெற்றோர் இவனிடம் என்ன பேசுவது எனத் தயங்குகின்றனர்.
நண்பன் என்னும் நட்பு
சரியான வழிகாட்டுதல் இல்லாத போது, தன் சொந்தப் புத்தியை இழக்கின்றான். இளமையின் வனப்பில் தன்வயம் இழந்து தான்தோன்றித்தனமாக அலைய ஆரம்பிக்கின்றான். அப்படி ஆரம்பிக்கும் வாழ்க்கையில் முதலில் கிடைப்பது நண்பன் எனும் நட்பு. நட்பு வட்டம் சரியில்லாத பட்சத்தில் திக்குத் தெரியாது திசைமாறிய பறவையாக மாறிப் போகின்றான். கெட்டப் பழக்கங்களால் குட்டிச்சுவராகிப் போகின்றது அவன் வாழ்க்கை. அந்த இளமைக்காலத்தில் வருவது தான் ஒருதலைக்காதல். அது அவனை உருப்படாமல் ஆக்கிவிடுகின்றது. ஒருதலைக் காதல் என்பதை விட இனக்கவர்ச்சி என்றே சொல்லலாம். இந்த ஒருதலைக் காதல் பெண்களின் உயிரை அல்லவா குடிக்கின்றது.
பெண்ணின் நிலை
காலங்காலமாக பெண்களின் நிலை என்ன? ராவணன் கவர்ந்து சென்றான் என்பதற்காக ராமனே சீதையின் கற்பில் சந்தேகம் கொண்டு தீயில் இறங்கச் செய்தான். சிரித்தாள் என்பதற்காக பலரும் கூடி இருக்கும் அவையில், மானபங்கப்படுத்தப்பட்டாள் திரவுபதி. கணவன் உயிரை மீட்பதற்காக எமனிடமே போராடியவள் சத்யவான் சாவித்திரி. தொழுநோயாளியான தன் கணவனை கூடையில் சுமந்து கொண்டு, அவன் விருப்பத்திற்காக விலைமாது வீட்டிற்குக் கொண்டு சென்றாள் நளாயினி. கணவன் தவறு செய்த போது அதனைத் தட்டிக் கேட்காமல், பொருளையெல்லாம் இழந்த பின்பு, கணவனை கொலை செய்தார்கள் என்ற உடன் கொதித்து எழுகின்றாள் கண்ணகி. இறுதியாக மதுரையையே அழித்து விடுகின்றாள். இன்னும் இது போல் எத்தனையோபெண்கள், கணவனுக்காகவே வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இவ்வாறு காலங்காலமாகப் பெண்ணை, கணவனுக்காகவே வாழச் செய்தது நம் சமுதாயம். இன்றும் அதே நிலைதான் என்றாலும், கல்வி கற்ற பெண்ணால் கடைத் தெருவிற்குக் கூடப் போய் வர முடியவில்லை. ஒருதலைக் காதல் இன்று பெண்களின் உயிருக்கே உலை வைக்கின்றது.
ஒருதலைக்காதல்
சங்க இலக்கியத்தில் தலைவியை விரும்பும் தலைவன், தன்னைத் தலைவி விரும்பவில்லையே? என்று அவளைக் கொல்லவில்லை. ஒரு பெண் மீது கொண்ட மிகுந்த காதலால் அவன் என்ன செய்கிறான் தெரியுமா? பனங்கருக்கால் (பனைமட்டை, ஓரங்களில் கூர்மையாக முள் போன்றிருக்கும்) குதிரை செய்து, அக்குதிரை மீது ஏறி கையில் அவள் (காதலி) படத்தை வரைந்து வைத்துக் கொண்டு, தலைவி வீடு இருக்கும் முச்சந்தியில் போய் நிற்கின்றான். பனங்கருக்கு அவனுடைய உடம்பைப் பதம் பார்க்கும், அவன் உடம்பிலிருந்து ரத்தம் வடியும், தன் காதலியைக் காண்பதற்கு அல்லது அவளைஅடைவதற்கு தன்னை வருத்திக் கொண்டான். இதனைத் தான் சங்க இலக்கியம் ஒரு தலைக்காதல் என்று கூறுகின்றது. இதனை மடலேறுதல் என்றும் கூறுகின்றது. தனக்குப் பிடித்த காதலி கிடைப்பதற்காக தன்னைத் தானே வருத்திக் கொண்டான்.
உனக்கென்ன உரிமை
ஆனால் இன்று..? உனக்கு காதலி கிடைக்கவில்லை என்றால், யாருக்கும் பயன்படக் கூடாது என்று கொல்வதற்கு உனக்கென்ன உரிமை இருக்கின்றது. அவள் ஒன்றும் உன் சொத்து கிடையாது. இளைஞனே! உன் உயிரை மாய்த்துக் கொள்ள உனக்கே உரிமை இல்லாத போது, முன்பின் தெரியாத ஒரு பெண்ணை நீ எப்படிக் கொலை செய்யலாம். ஆறறிவு படைத்த நாம் இந்த உலகத்தில் சாதிக்கப் பிறந்தவர்கள். சமுதாயத்தில் பெண்ணாகப் பிறப்பது பாவமா? காலங்காலமாகப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இன்றைய சூழலில், தனக்குக் கிடைக்காத பெண்ணைத் தைரியமாக கொலை செய்யுமளவிற்கு மனிதாபிமானம் செத்துப் போய்விட்டது.
அன்பு இதயம்
அன்பு கொண்ட இதயம் தொலைவில் இருந்தால் என்ன? அருகில் இருந்தால் என்ன? தொலையாமல் இருந்தால் சரி. அதனை நாம் தொலைத்து (கொன்று) விடக்கூடாது. வாழ்வின் தேவைகள் நம்பிக்கை. அது நம்மை வெளிச்சத்தை நோக்கி நகர வைக்கிறது. இளைஞர்களே! முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை இருந்தால் நதி மீதும் நடைபோடலாம்; வெம்பி விழாமல் விதியையும் வெல்லலாம்; எம்பிக் குதித்து நிலவுக்கும் ஒரு முத்தம் கொடுக்கலாம். அன்பெனும் பிடிக்குள் அகப்பட்ட கரும்பாய் இருக்க பழகிக் கொள். எதிர்காலத்தில் இந்தியாவை வல்லரசாக்க நினைக்கும் இளைய சமுதாயமே! காதல் வைரசால் கலங்கிப் போகக் கூடாது. உங்கள் மனதில் இருக்கும் வக்கிரங்களை துாக்கித் துார எறிந்து விடுங்கள். காதல் எனும் துன்ப வலைக்குள் விழுந்து விடாது இன்பமாய் இருக்கப் பழகிக் கொள்.வெறுமையான வாழ்க்கைப் பெருமை அடைய வேண்டுமென்றால், திறமையை வளர்த்துக் கொள்.
உன்னை நேசிப்பவள்
நீ நேசிப்பவளை விட, உன்னை நேசிப்பவளே உன்மேல் உயிராக இருப்பாள். அதனால்உன் வாழ்க்கை உயர்வு பெறும். சங்க இலக்கியத்தலைவன் ஒருதலைக் காதலால் தன்னை வருத்திக் கொண்டானே தவிர, பெண்ணைத் துன்புறுத்தவில்லை. ஒரு நல்ல ஆண் மகன் பெண்களைத் துன்புறுத்துவதை அவமானமாக நினைப்பான். தனது வீரத்திற்குச் சமமான வீரம் படைத்தவர் யாரோ? அவர்களிடம் தான் தன் வீரத்தைக் காட்டுவான். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனுடன் ராமன் போர் செய்யும் போது, ராவணனின் ஒவ்வொரு ஆயுதத்தையும் வீழ்த்தினான். இறுதியில் ஆயுதம் இல்லாது நிராயுதபாணியாக நிற்கும் ராணவனைப் பார்த்து 'நீ இன்று போய் நாளை” (போருக்கு) வா என்று அனுப்பி வைத்தான். கையில் ஆயுதமில்லாதவனைக்கொல்வது வீரத்துக்கு இழுக்கு என்று நினைக்கும் வீரர்கள் பிறந்த பூமி, வீரத்தின் விளைநிலமானத் தமிழகத்தில் பிறந்த நாம், எதிர்ப்பே தெரிவிக்காத, யாரென்றேதெரியாத ஒரு பெண் மகவைக் கொன்றால், அது ஆண்களின் ஆண்மைக்கு (வீரம்) அழகல்ல. அழகை ஆராதிக்க வேண்டும். அதை அழிக்க நினைக்கக் கூடாது. காதலிப்பவர்கள் எல்லோரும் ஒரு நாளில் வருந்துகின்றனர். எதற்கு என்றால்? சிலர்பிரிந்ததற்காக, சிலர் சேர்ந்ததற்காக அழுகின்றனர். இது தான் வாழ்க்கை. உண்மையான அன்பு (காதல்) இருந்தால் உலகமே தலைகீழாக சுழன்றாலும் உன்னை விட மாட்டாள். உன் மீது காதல் இல்லை என்றால் உலகமே மாறினாலும் உன்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாள்; அது தான்பெண். உன்னை நினைக்காதவர்களை நினைத்து நினைத்து உன்னையே நீ இழந்துவிடாதே. ஆசைப்படும் மனம் கேட்பதையெல்லா, நாம் நிறைவேற்றிவிடாமல் அறிவின் துணை கொண்டு ஆட்சி செய்ய வேண்டும். வாழ்க்கை சிறக்கும்.
முனைவர்.கெ.செல்லத்தாய் இணைப்பேராசிரியர் அருப்புக்கோட்டை. 94420 61060

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    நீ நேசிப்பவளை விட, உன்னை நேசிப்பவளே உன்மேல் உயிராக இருப்பாள். அதனால்உன் வாழ்க்கை உயர்வு பெறும் இதுதான் என்னவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை, பெருமையாய் இருக்கு

  • Elangovan - Tirupur,இந்தியா

    இந்த மாதிரி நல்ல விசையத்துக்கு எல்லாம் யாரும் கமெண்ட்ஸ் போட்டு எங்கரேஜ் பண்ண மாட்டாங்க சும்மா அரசியல் என்கிற பெயரில் மக்களை முட்டாள்தனம் பண்றவங்களுக்கு மட்டும் கமென்ஸ் போடுவாங்க... இதுக்கு என்னை மாதிரி சும்மா இருக்கிறது மேல்.........

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement